சுகமுடன் என்றுமே வாழலாம் ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
   
   சிரிப்பு ஒரு மருந்து
   தினமும் அதைநீ அருந்து
   அகத்தில் சிரிப்பு எழுந்தால்
   முகத்தில் சிரிப்பு மலரும் !

  குழந்தைச் சிரிப்பு குதூகலம்
  குருவின் சிரிப்பு பெருமிதம்
  தந்தை சிரிப்பு மனநலம்
  தாயின் சிரிப்போ தனித்துவம் !

 நட்பின் சிரிப்பு நற்கொடை
 நாட்டின் சிரிப்பு விடுதலை
 கற்பின் சிரிப்பு கண்ணகி
 கயவர் சிரிப்போ காரிருள் !

 அஹிம்சையின் சிரிப்பு காந்தியில்
 ஆன்மீகச் சிரிப்பு ரமணரில்
 மெளனத்தின் சிரிப்பு புத்தரில்
 வாழ்விலே சிறந்திடச் சிரித்திடு !


ஆணவச் சிரிப்பு அழிவினில்
ஆத்திரச் சிரிப்போ கொலையினில்
நீதியின் சிரிப்பு தண்டனை
நிம்மதி வேண்டினால் சிரித்திடு !

பக்தியின் சிரிப்பு பக்குவம்
பாவத்தின் சிரிப்பு  தண்டனை
சத்தியச் சிரிப்பே உத்தமம்
சாந்தியாய் இருந்திடு சிரித்திடு !

நித்தமும் வாழ்க்கையில் சிரித்துநில்
நிம்மதி உன்னிடம் வந்திடும்
சொத்தென சிரிப்பினை நினைத்திடு
சுகமுடன் என்றுமே வாழலாம் !
No comments: