இந்தியாவின் கானக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு சிட்னியில் நூற்றாண்டு விழா (1916 -2004) - சந்திரிகா சுப்ரமண்யன்

.

அண்மையில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா சிட்னியில் நாட்டியாஞ்சலி மற்றும் தமிழ் கலை பண்பாட்டு கழகம் ஆகிய அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் முதல் பாதியில் எம் எஸ்சின் பாடல்களை சங்கீதா ஐயர் பாடி மகிழ்வித்தார். பின் பாதியில் எம் எஸ்சின் பாடல்களுக்கு ராதிகா சுரஜித் வடிமைத்து காயத்ரி கிருஷ்ண மூர்த்தியின் நாட்டியாஞ்சலி மாணவர்கள் வழங்கிய நடனமும் இடையில் வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன் வழங்கிய எம் எஸ். பற்றிய காட்சி உரையும் இடம் பெற்றன.

எம்.எஸ்.சுப்புலட்சுமி -   மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி . இவர் 16.09.1916ல் மதுரையில் சண்முகவடிவு அம்மாள் என்பவருக்குப் பிறந்தார். இவர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவரது தாயார் சண்முகவடிவு அம்மாள் வீணை இசைக் கலைஞர் ஆவார். இவரது பாட்டி அக்கம்மாள் பிடில் வாத்திய கலைஞர்.

இவர் தனது சிறுவயதில் கர்நாடக இசையை செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடமும், இந்துஸ்தான் இசையை பண்டிட் நாராணயராவ் வியாஸ் என்பவரிடமும் கற்றார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு 9 வயதாக இருக்கும்போது “ஆனந்த ஜா” என்ற மராட்டிய பாடலைப் பாடினார். இதுவே அவரது அரங்கேற்றம்.
பின் 10 வயது சிறுமி எம் எஸ் மரகத வடிவும் செங்கதிர் வேலும் என்ற  பாடல் எம்.எஸ் பாட 1926ல் வெளியிடப்பட்ட எல்.பி.இசைத்தட்டானது.
எம்.எஸ். குரல் வளம் காரணமாக சேவாசதனம் என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் பாடி நடித்தார். 1938ல் இப்படம் வெளியானது.
பின் 1940ல் சகுந்தலை என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் மிகப் பெரிய வெற்றியை தந்தது. இப்படத்தல் எம்.எஸ், கோகில கான இசைவாணி என விளம்பரப்படுத்தப்பட்டார்.


பின்னர் 1941ல் சாவித்திரி படத்தில் நாரதராக நடிப்பதற்கு எம்.எஸ் க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஆண் வேடத்தில் நடிக்க முதலில் மறுத்து விட்டார். பின் தன் கணவன் சதாசிவம் கல்கி பத்திரிக்கை ஆரம்பிப்பதற்காக நாரதராக நடித்தார். இது அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.
1945ல் மீரா என்ற படத்தில் மீராவாக நடித்தார். இதுவே எம்.ஜி.ஆரும்,எம்.எஸ்-ம் சேர்ந்து நடித்த திரைப்படமாகும். இப்படத்தில் வரும் காற்றினிலே வரும் கீதம் பாடல் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. படத்திற்கான பாடல்களை கல்கி கிருஷ்ணமூர்த்தியும், பாடல்களை பாபநாசம் சிவனும் எழுதினர்.
மீரா இந்தியில் மறு பதிப்பு செய்யப்பட்டது. இப்படத்தில் எம்.எஸ்.இந்தியில் பாடினார். இந்தியில் மீரா படத்தைப் பார்த்த நேரு “இசை ராணிக்கு” முன்னால் நான் சாதாரண பிரதமர் என்று கூறினார்.  
1940ல் சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மும்பைக்கு கச்சேரி செய்யச் செல்லும் போது சதாசிவம் அறிமுகம் ஆனார்.பின் தன் வாழ் நாளை இசைக்கே அர்ப்பணித்தார்.

1966-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக இருந்த ஊ.தாண்ட் விடுத்த அழைப்பை ஏற்று எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஐ.நா. மன்றத்தில் ஒரு இசைக் கச்சேரியை நிகழ்த்தினார்.. உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய மே தி லார்ட் பர்கிவ் என்ற பாடலையும், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மைத்ரீம் பஜத உலக நன்மை பிரார்த்தனை சுலோகத்தையும் பாடினார்.

சரோஜினி நாயுடு இவரை “இந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அழைத்தார். எம்.எஸ் சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா ஆகிய 4 படங்களில் மட்டும் நடித்தார்.பின் இசையே இவரது. வாழ்க்கை ஆனது.பஜகோவிந்தம், சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே ஆகியவை எம்.எஸ். பாடியவற்றில் சிகரத்தை தொட்டவை. 1997ல் தனது கணவரின் மறைவுக்குப் பின் இசை நிகழ்ச்சிகள் எதையும் எம்.எஸ்.நடத்தவில்லை. எம்.எஸ் டிசம்பர் 2004 இல் உடல் நலக்குறைவால் தனது 88 வயதில் காலமானார்.1957ல் பத்மபூஷன், 1956ல் சங்கீத நாடக அகாதமி விருது, 1968 ல் சங்கீத கலாநிதி, 1970 இசைப் பேரறிஞர், 1974ல் ராமன் மகசேசே, 1975 பத்மவிபூஷன், 1975 சங்கீத கலாசிகாமணி, 1990ல் இந்திராகாந்தி விருது 1998ல் பாரத ரத்னா, 2002ல் சென்னை மியூசிக் அகாடமி வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. திருப்பதியில் எம்.எஸ்- க்கு வெண்கலச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில். இசைஅரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு  தபால் தலை வெளியீடு நடைபெற்றது..


No comments: