ஓமந்தையில் ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு
எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளை தமிழ் பாடசாலை அமைக்கப்படும்
இலங்கையினை இலக்குவைத்துள்ள அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு
மாணவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்
யோஷிதவின் பாட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்
கோத்தாபயவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தாக்கல்.!
கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளார்
ஓமந்தையில் ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு
30/08/2016 ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஓமந்தை - பாலமோட்டை பகுதியில் வீடொன்றை நிர்மானிப்பதற்காக நிலத்தை தோண்டிய போது குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததனையடுத்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது எம்.ஜி.எம்.ஜி. மற்றும் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கிகள் 30 கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மீண்டும் பயன்படுத்தமுடியாதவாறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆயுதங்கள் தொடர்பான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நன்றி வீரகேசரி
எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளை தமிழ் பாடசாலை அமைக்கப்படும்
29/08/2016 எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளையில் தமிழ் பாடசாலை அமைக்கப்படும். அத்திட்டம் கைவிடப்பட மாட்டாது என உறுதியுடன் தெரிவித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க தேசிய நல்லிணக்கமே அரசின் இலக்கு. அதனை சீர்குலைக்க இடமளிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
வத்தளை ஒலியமுல்லையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வத்தளை தமிழ் பாடசாலை அமைப்பது நிச்சயமாகும். எத்தனை தடைகள் வந்தாலும் சவால்கள் வந்தாலும் இது கைவிடப்படமாட்டாது. இத் திட்டத்தை நடைமுறைப்படுவத்துவதை தடுக்க முடியாது. எமது கடமையை நாம் நிறைவேற்றுவோம். நாட்டில் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது திட்டமாகும்.
இதனை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம். இத்திட்டத்தை முன்னெடுப்பதை தடுத்து சீர்குலைக்க முயற்சித்து சேதங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இனங்களிடைலேயே நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள். சேதங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
நன்றி வீரகேசரி
இலங்கையினை இலக்குவைத்துள்ள அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு
29/08/2016 ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தலும் அவர்களின் நகர்வுகளும் இலங்கையில் உள்ளதாக சர்வதேச புலனாய்வுகள் தொடர்ச்சியாக எச்சரித்துவரும் நிலையில் தற்போது இலங்கை இந்தியா ஆகிய நாடுகளை அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இலக்குவைத்துள்ளதாக புதிய தகவல்களை இந்திய புலனாய்வு வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . தென் இந்தியா மற்றும் இலங்கையில் அல் கொய்தா தீவிரவாதிகள் இளைஞர்களை தமது இயக்கத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அல் கொய்தா இயக்கம் தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்த செய்தி வெ ளிவந்துள்ள நிலையில் இலங்கையின் ஆங்கிலப்பத்திரிகைகள் இந்த செய்திகளை பிரசுரித்துள்ளன.
ஐ.எஸ் பயங்கரவாத நகர்வுகளும் அவர்களது தளமாக இலங்கையை பயன்படுத்தி வருவதாகவும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அவர்களது ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதேபோல் வடக்கில் இருந்து அவர்கள் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இலகுவாக பயணிக்க முடிகின்றது என்ற தகவலையும் இந்திய பாதுகாப்பு தரப்பு அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து பலர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையில் இருந்து சென்றதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஐ. எஸ். தீவிரவாதிகளினால் ஆசிய வலயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்வுகளைப்போலவே அல் கொய்தாவும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் அல் கொய்தா இயக்கம் தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பிரசூரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைப்பின் காணொளிகள் , செய்திகள் போன்றவற்றை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய தமது இயக்கத்து உறுப்பினர்களையே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாகவும் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகள் பலபடையும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக இந்திய புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதே நிலையில் இலங்கையில் இருந்து நாற்பத்து ஐந்து நபர்கள் கடந்த காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் இணைந்துகொண்டதாகவும் இந்தியாவில் இருந்து முப்பதுக்கும் அதிகமான பயங்கரவாத அமைப்பில் இணைந்துகொண்டதாகவும் இலங்கை மற்றும் இந்திய புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மாணவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்
31/08/2016 அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து காலி வீதியை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது குறித்த கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நன்றி வீரகேசரி
யோஷிதவின் பாட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்
31/08/2016 யோஷித ராஜபக்ஷவின் பாட்டி இன்று (31) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜாகியிருந்தார்.
இந்நிலையில் அவரை இன்றைய தினம் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி இன்று ஆஜரான யோஷிதவின் பாட்டி வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
கோத்தாபயவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தாக்கல்.!
31/08/2016 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூபா 11.4 பில்லியன் இலாபம் ஈட்டித்தந்துள்ளார்கள் என்றும் இதனால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல்சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளார்
31/08/2016 ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊடாக இலங்கையின் 37 இணையத்தளங்கள் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டள்ளது.
இந்த பேஸ் புக் கணக்கானது 'யக்கடயா போரம்" (yakadaya forum) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இந்த 'யக்கடயா போரம்" மேலதிகமாக ரத்து உகுஸ்ஸா, சுமேதா தன விஜய, கோயா ஹெக்கர் (goyahacker) ஆகிய பெயர்களிலும் பேஸ்புக் கணக்குகள் உள்ளமையும் அவையனைத்தும் இணையத்தள தகவல் ஊடுருவல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டன என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment