கவி விதை- 16 - காலங்கள் -- விழி மைந்தன் --

.

வெள்ளைக் கல்லில் கட்டிய அந்த அழகிய வீட்டின் முன்னால்  ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று நின்றது. மரத்தின் காலடியில் வளர்ந்து வந்தது சின்னஞ்சிறு  பூச்செடி.

பூமியின் மத்திய கோட்டை  விட்டு எட்டியே  நிற்கும் தேசம் அது. நான்கு பருவங்கள் மாறி மாறி வந்தன.


குளிர்காலத்தில் மரம் இலைகளை உதிர்த்து விட்டுத் தூங்கப் போய்விடும். தன்னுள் தானே ஒடுங்கி, பனிக்காற்றில் நடுங்கி நிற்கும் சின்னப் பூச்செடி. இவற்றைச் சுற்றி நிற்கும் மற்றத்  தாவரங்களும் ஆடையின்றி, வாடையில் மெலிந்து, நீண்ட இரவுகளில் மட்டுமின்றிப் பகலிலும் துயில்வன. வடக்கே இருக்கும் வானத்தின் வெளிகளில் விளையாடப்  போயிருக்கும் சூரியன் திரும்பி வருவது பற்றிக் கனவுகள் காணும்.


வசந்த காலம் வந்ததும் தாவரங்கள் விழித்துக் கொள்ளும். மரத்தில் இளம்பச்சை இலைகள் துளிர்விடும். பூச்செடியோ, இலைகளே தெரியாத அளவு மிளிர்கின்ற வெள்ளை நிறப்பூக்களால்  தன்னை மூடிக் கொள்ளும். பூக்களின் நறுமணம் நாசியை அள்ளுவதால் அந்த வீட்டு மனிதர்கள் அடிக்கடி பூச்செடியை வந்து பார்ப்பார்கள். இதனால், பூச்செடிக்கு வசந்த காலம் வருடத்தின் மிக விருப்பமான காலம்.


கோடை காலம் வருகிற போது மரத்துக்கு  அடிக்கடி தண்ணீர் விடுவார்கள். நல்ல வெப்பமும் தண்ணீரும் கிடைப்பதால் மரம் செழித்து வளரும். தனது உயரத்தை மரம் மிக வேகமாக அதிகரிக்கும் காலம் கோடை காலம். இதனால் மரத்துக்கு, கோடை என்பது ஆண்டில் மிக ஆனந்தமான காலம்.

அக்கம் பக்கமாக வளர்ந்த மரமும் செடியும், அடிக்கடி தமக்குள்ளே பேசிக் கொள்வது வழக்கம். இலைகளைச்  சரசரத்தும்  கிளைகளை ஆட்டியும் மனிதருக்குப் புரியாத மௌன பாஷையிலே அவை பேசும்.

அன்றொரு நாள் -  வழக்கத்தை விட அதிகமாகவே குளிர் நடுக்கிய  பின்பனிக் காலம் ஒன்றிலே, மரமும் செடியும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தன.

"இம்முறை கூதிர் போகவே போகாது போலத்  தோன்றுகிறதே! குளிர் காலம் எப்போது முடியுமோ? வசந்தம் எப்போது வருமோ? வசந்தமன்றோ வருடத்தில் மிகச் சிறந்த காலம்!" என்றது பூச்செடி.

"கூதிரை  விட வசந்தம் நன்றே! ஆனால் வசந்தத்தை விட நன்று கோடை!" என்றது மரம்.

" இல்லவே இல்லை! வசந்த காலத்தில் அன்றோ அழகிய பூக்கள் ஆயிரம் மலர்ந்து, வர்ண ஜாலம் மிகுந்த ரத்தினக்  கம்பளத்தால் பூமி போர்த்தப் படுகிறது! பூக்கள் வாசம் வீசும் காலம், புன்னகைகள் பூக்கும் காலம், பாக்கள் நாக்கள்  பாடும் காலம் வசந்த காலமே! பாரில் யாரும் மகிழும் நேரம் வசந்த நேரமே" என்றது பூச்செடி.

"ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்! கோடையில் அன்றோ அறுவடை நடந்து, களஞ்சியங்கள் எங்கும் தானியம் நிறைகிறது! உழவன் மகிழ்கிறான். சந்தை கூடுகிறது. திருவிழா நடக்கிறது. விடுமுறை வருகிறது. பாலர் யாரும் களிக்கும்  காலம், பரவைக்  கடலில் குளிக்கும் காலம், நீளப்  பயணம் போகும் காலம் கோடை காலமே! நேரங்களுக்குள் சிறந்த நேரம் கோடை நேரமே!" என்றது மரம்.

"வசந்த காலம் வந்து விட்டால் முல்லை பூத்திடும். வயலில் வந்து வானம்பாடி பாட்டுப் பாடிடும். அசைந்து செல்லும் ஓடை நீரின் அழகைக் காணலாம்! ஆலங்கிளையில் தேனும் சொட்டும் ஓசை கேட்கலாம். இருளும் விலக  ஒளியும் பரவும் காலம் வசந்த காலமே! எனக்கு ஆண்டில் மிகவும் பிடித்த காலம் வசந்த காலமே!" என்றது சின்னப் பூச்செடி.

"இல்லை! இல்லை!! கோடைக் காலப் பகலில், இலைகள் கூரை வேய்ந்திட, கோழித்தூக்கம் போடும் மரங்கள் கனவு கண்டிடும். ஓடைக்  கரையில் வாடைக் காற்றில் இலைகள் அசைந்திடும். ஊரில் எங்கும் பழங்கள் பழுத்துக்  கிளைகள் வளைந்திடும்.  இரவு சிறிது, பகல்கள் நெடிது, இன்பம் பெரிது கோடையில். எனக்கு  மிகவும் பிடித்த காலம் கோடை, கோடை, கோடையே !" என்றது மரம்.


இப்படி மரமும் செடியும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த பொழுது, சின்னஞ்சிறிய  பஞ்சவர்ணக்கிளி  ஒன்று பறந்து வந்தது அங்கே.

"கிளியே, கிளியே, இங்கே வா. எங்கள்  விவாதத்திற்குத் தீர்ப்புச் சொல். வருடத்தில் மிகவும் சிறந்த காலம், வசந்த காலமா? இல்லை கோடை காலமா?" என்று கேட்ட்து மரம்.

"வசந்தமே  சிறந்தது என்கிறேன் நான். கோடையே சிறந்தது என்கிறது மரம். உனக்குப் பிடித்த காலம் எது?" என்று கேட்டது  செடி.

"எனக்குப் பிடித்த காலம் இந்தக் காலம் தான். இப்போது நடைபெறும் குளிர் காலத்தின் பிற்பகுதி தான் " என்று கிளி சொன்னது, மரத்தையும் செடியையும் பெரு வியப்பில் ஆழ்த்தியது.

"இந்தக் குளிர் காலமா? குளிர் நடுக்கும், மரங்கள் ஆடையின்றி நிற்கும், செடிகள் பனியில் விறைத்து நிற்கும், எங்கெங்கு பார்ப்பினும் பசுமையோ பூக்களோ தெரியாத, இந்தப் பின் பனிக்காலமா? ஏன்?" என்று வியப்போடு கேட்டன  மரமும் செடியும்.

பச்சைக் கிளி புன்னகை செய்தது.

"வெளியிலே சந்தோசம் வீசும் காலங்களை விரும்புகிறீர்கள் நீங்கள். மனத்திலே நம்பிக்கையைக் கொண்டு வரும் காலம் மலர்த்துகிறது என்னை.

இலை உதிர் காலத்திலிருந்து, முன் பனிக்  காலம் வரை நாளுக்கு நாள் குளிர் அதிகமாகி வருகிறது. பகல் தேய்கிறது. இரவு நீள்கிறது. நம்பிக்கை சுருங்குகிறது. 

பிறகு ஒரு நாள், அதி உச்சக் குளிர் தாண்டிய பிறகு, காற்றில் ஒரு மாற்றத்தை உணர்கிறேன்.

நேற்றை விட இன்று குளிர் குறைந்திருக்கிறது.

சூரியன் என் காதலன். சிவப்புப் புரவிகள் பூட்டிய அவனது நெடுந்தேர் என் பக்கமாகத் திரும்பி விட்டதை என் மனம் எனக்கு உணர்த்தி விடுகிறது.

இன்னும் நெடுந்தூரத்திலேயே அவன் தேர் இருந்தாலும், அவன் என்னை நோக்கி வரத்  தொடங்கி விட்டான் என்பதே மனதுக்கு அதி மகிழ்வைத் தருகிறது.

நடுக்கும் குளிர் நிலவிய பல மாதங்களின் பின், மெல்லிய வெம்மை தாங்கிய காற்றொன்று முதன்முதலில் உடலில்  படும் சுகம் இருக்கிறதே! வசந்தத்தின் மெல்லிய வாசனை காற்றில் கலந்து நாசியில் படும்போது வரும் நம்பிக்கை இருக்கிறதே! அதற்கு அதுவும் ஈடாகாது. 

நீ இப்போது எங்கே இருக்கிறாய் என்பதல்ல முக்கியம். உன் பயணம் ஏறுமுகமாக இருக்கிறதா, இறங்குமுகமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.

இந்தப் பின் பனிக் காலம், பனி பின்வாங்கும் காலம். வருடத்தில் எனக்கு மிகப் பிடித்த நேரம். "

பச்சைக் கிளி பறந்து சென்றது. 

இன்னும் குளிர் இருந்த போதிலும், நிமிர்ந்து நின்றன செடியும் மரமும்.

No comments: