உலகச் செய்திகள்


வந்துவிட்டது பேராபத்து .!

இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி

அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்து வருவது ரஷ்யாவுக்கு அதிருப்தியை உண்டாக்கும்; சீனா எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உலகிலேயே வயதான மனிதர் 145 வயது என ஆவணங்களில் தகவல்
வந்துவிட்டது பேராபத்து .!

31/08/2016 பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இந்த புயலினால் அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 110 உள்நாட்டு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டின் பிரபலமான டோயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. 
ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இங்குள்ள புகுஷிமா அணு மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தியும் பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக, தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள கிழக்கு ஜப்பான் பகுதியில் 1000 இற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. 
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி தாக்கிய பகுதிகளை இந்த ‘லயன்ராக்’ புயல் இன்று மணிக்கு சுமார் 170 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையினர் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.    நன்றி வீரகேசரி 

இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி

30/08/2016 நோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது
நோர்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன. 
இச்செய்தி நேற்று காலை நோர்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன.
பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.    நன்றி வீரகேசரி அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்து வருவது ரஷ்யாவுக்கு அதிருப்தியை உண்டாக்கும்; சீனா எச்சரிக்கை
31/08/2016 இந்தியா-அமெரிக்கா இடையே இன்று ராணுவ தளவாடங்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை விமர்சித்து சீன அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' கட்டுரை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:-அமெரிக்காவுடன் ஒன்று ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதன் எதிரொலியாக ராஜாங்க சுதந்திரத்தை இந்தியா இழக்க வேண்டிய நிலை உருவாக வாய்ப்புள்ளது. அமெரிக்காவுடன் தொடர்ந்து நெருக்கத்தை அதிகரித்து வருவது சீனா, பாகிஸ்தான் நாடுகளை மட்டுமில்லாமல் ரஷ்யாவையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் செயலாகும். அமெரிக்காவை சார்ந்து இருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானதாகும். ஆசியாவில் அரசியல் ரீதியான பிரச்சனைகளையும் இந்தியா சந்திக்க வேண்டிவரும். இங்கிலாந்து காலனிய ஆதிக்கத்திற்கு பிறகு இந்தியா தனக்கு என ஒரு சுதந்திரத்தையும், இறையாண்மையையும் கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் திகழ்ந்து வருகிறது. அணிசேராக் கொள்கையின்படி, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட அனைத்து வல்லரசு நாடுகளிடமும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை இந்தியா அதிகரித்து வருகிறது.இவ்வாறு அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது   நன்றி தேனீ 

இந்தோனேசியாவில் உலகிலேயே வயதான மனிதர் 145 வயது என ஆவணங்களில் தகவல்
29/08/2016 இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகoldmanவல் வெளியாகி உள்ளது.  அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145.  இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் வசிக்கிறார். ஆவணங்களின்படி அவரது பிறந்த தேதி 1870-ம் ஆண்டு, டிசம்பர் 31 ஆகும். இது  உண்மையானால், உலகிலேயே வயதான நபர் என்ற பெயரை மபஹ் தட்டிச்செல்கிறார். உலகளவில் பிரான்சை சேர்ந்த ஜென்னி கால்மென்ட்தான் வயதான நபர் என கூறப்பட்டு வந்தது. இவருக்கு வயது 122. மபஹ், தனது 10 உடன்பிறப்புகள், 4 மனைவிகள், அவரது குழந்தைகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் மரணம் அடைந்து விட்டனர். பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக்குழந்தைகள் மட்டுமே வாழ்கிறார்கள்.  இவர் தற்போது மரணம் அடைய விரும்புகிறார். தனது கல்லறைக்கு தேவையான தளவாட பொருட்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்து விட்டார். தற்போது பலவீனமாக உள்ள மபஹ், பெரும்பாலும் உட்கார்ந்து கொண்டே இருப்பதாகவும், வானொலி கேட்பதாகவும் அவரது பேரக்குழந்தைகள் கூறுகின்றனர். எல்லாவற்றிலும் பொறுமையைக் கடைப்பிடித்துத்தான் இத்தனை நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். இந்த தகவல்களை ‘தி சன்’ ஏடு வெளியிட்டுள்ளது.   நன்றி தேனீ 
No comments: