இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை
44 இலங்கை அகதிகளை சந்திக்க ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது இந்தோனேசியா
மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு.!
மாணவி பலாத்காரம்: ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த அதிபர், ஆசிரியைகளுக்கு விளக்கமறியில்
சரத் பொன்சேகாவின் அமெரிக்கா விசா நிராகரிப்பு.!
தேசிய அடையாள அட்டையில் இனரீதியாக பாரபட்சம்
அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் வீடுகள் வேண்டாம் : கூடாரங்கள் பாதுகாப்பற்றவை : களுப்பான மக்கள் விசனம்
மாணவிகளுடன் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது ; அதிபரை கைதுசெய்ய நடவடிக்கை (காணொளி இணைப்பு )
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
ஜனாதிபதி பிரதமரை சந்திக்கிறது கூட்டமைப்பு.!
மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்
வெலிக்கடை சம்பவம் : ஐ.நா. அலுவகத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானம்
கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலை : கடையடைப்பு கைவிடப்பட்டது
மாணவர்களின் ஆர்பாட்டத்தில் கண்ணீர் புகை பிரயோகம்
வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்
யாழில் ஒன்றரை கிலோ கேரள கஞ்சா மீட்பு
இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை
20/01/2016 இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் சில புகைப்படங்களையும் வெளியடிட்டுள்ளது.
அதாவது இராணுவப் படையினர் சிவிலியன்கள் மீது கொத்தணி குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணி குண்டுகளை மீட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் யுத்த சூன்ய வலயத்தில் இவ்வாறு கொத்தணி குண்டுகளின் பாகங்களை காணக் கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய மீட்புப் பணியாளர் ஒருவர் கொத்தணி குண்டு குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தில் காணப்படும் கொத்தணி குண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் அதற்கு முன்னர் ஆட்சி செய்த அசராங்கங்களும் நிராகரித்து வந்தன.
கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுப் பகுதியில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஆணையிறவு பாச்சிளாப்பள்ளி என்னும் இடத்தில் கொத்தணி குண்டுகளின் 42 பாகங்களை மீட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
44 இலங்கை அகதிகளை சந்திக்க ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது இந்தோனேசியா
20/06/2016 இந்தோனேசிய கடற்கரையில் தத்தளித்த 44 இலங்கை அகதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இம்மாதம் 11ஆம் திகதி இலங்கை அகதிகள் 44 பேர் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக தஞ்சம் புக முயற்சி செய்துள்ளனர்.
இதன்போது இவர்கள் சென்ற படகு இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
இதை அவதானித்த இந்தோனேசிய கடற்படை வீரர்கள் அகதிகளின் படகை இந்தோனேசிய கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தரையிறங்க கடற்படை அனுமதியளிக்கவில்லை.
பசியாலும், நோய்வாய்ப்பட்டும் அவதியுற்ற அவர்களை, கரையில் இறங்க, இந்தோனேஷிய பொலிஸார் தொடர்ந்து அனுமதியளிக்காமல் இருந்தமையால் சிலர் படகில் இருந்து கீழே குதிக்க முற்பட்டுள்ளனர்.
இதன் போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை மிரட்டி, மீண்டும் படகிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அப்பாவி அகதிகளிடம், இந்தோனேஷிய அரசு கொடூரமாக நடந்ததற்கு, உலகின் பல பகுதிகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. சர்வதேச பொது மன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்புகள், இந்தோனேஷிய அரசிடம், கண்டனங்களை பதிவு செய்தன.
அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறும் கடற்படை அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 18 ஆம் திகதி இலங்கை அகதிகள், இந்தோனேஷிய ஏசெஹ் மாகாண கடற்கரையோரம் தரையிறக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும், அங்குள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுடன், அடையாளங்களையும், இந்தோனேஷிய அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இந்நிலையின் குறித்த அகதிகள் தொடர்பான விபரங்களை பெற்றுகொள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த படகில் 20 ஆண்கள், கர்ப்பிணி உட்பட 15 பெண்கள், ஒன்பது குழந்தைகள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு.!
20/06/2016 மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வளவொன்றில் இருந்து நேற்றிரவு பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வளவினுல் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்;ட நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, ரி 56 துப்பாக்கிகள் நான்கும் மகசின்கள் எட்டும் ரி-56 துப்பாக்கிகளுக்கான ரவைகள் 210வும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப்பொலிஸ் மா அதிபர் டபிள்யு ஜெ.ஜாக்கொட ஆராய்ச்சி, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் இப்பகுதிக்கு குறித்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
நன்றி வீரகேசரி
மாணவி பலாத்காரம்: ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த அதிபர், ஆசிரியைகளுக்கு விளக்கமறியில்
20/06/2016 வரணி பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிபர் உட்பட மூன்று ஆசிரியைகளை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவியை கடந்த சில வாரங்களுக்கு முன் அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். அதனையடுத்து பாடசாலைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் இது பற்றி முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
அவ்வேளை அதிபர் மற்றும் அங்கு இருந்த மூன்று ஆசிரியைகளும் இந்த விடயத்தை இத்துடன் விட்டு விடுங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என அச்சுறுத்தும் பாணியில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பிரதேசவாசி ஒருவர் இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றுள்ளார்.
அது தொடர்பில் நடவடிக்கை எடுத்த சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி சம்பவத்தை உறுதிப்படுத்திய பின்னர் , கொடிகாமம் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிசார் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியரை கைது செய்ததுடன் , இந்த சம்பவத்தை மறைக்கும் நோக்குடன் செயற்பட்டார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை மிரட்டினார்கள் எனும் குற்றசாட்டில் பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகளை கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அதிபர் உள்ளிட்ட ஐவரையும் ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் ஐவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சரத் பொன்சேகாவின் அமெரிக்கா விசா நிராகரிப்பு.!
21/06/2016 முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமெரிக்கா செல்வதற்காக அண்மையில் சமர்பித்த வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் தனது மகள்களை பார்க்கச் அமெரிக்கா செல்வதற்காக சரத் பொன்சேகா கோரிய அமெரிக்க நுழைவிசா விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தேசிய அடையாள அட்டையில் இனரீதியாக பாரபட்சம்
21/06/2016 தேசிய அடையாள அட்டையில் இன ரீதியாக பாரபட்சம் காணப்படுகின்றதென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள “X” என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட அட்டைகளுக்குப் பதிலாக அனைவருக்கும் ஒரே வகையிலான தேசிய அடையாள அட்டைகளே வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்பதிவு திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இந்த நாட்டில் உள்ள அனைவரும் பதிவு செய்யப்படவேண்டுமென்பது மிகவும் முக்கியமானதொரு விடயம்.
இந்த நாட்டில் ஆட்களை பதிவு செய்தவதில் இனரீதியான பாரபட்சம் காணப்படுகின்றது. குறிப்பாக எமது நாட்டு பிரஜைகளான மலையக வாழ் சகோதரர்களின் தேசிய அடையாள அட்டைகளில் தற்போதும் “X” என்ற ஆங்கில எழுத்து காணப்படுகின்றது.
அவர்களும் இந்த நாட்டவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் தற்போது வரையில் ஏனையவர்களின் அடையாள அட்டைகளில் காணப்படும் “V” என்ற எழுத்து மலையக மக்களின் அடையாள அட்டைகளில் பொறிக்கப்படவில்லை. இது பாரபட்சமான செயற்பாடாகும். ஆகவே இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் ஒரே வகையிலான அடையாள அட்டை வழங்கப்படவேண்டுமென்பது முக்கியமாகின்றது. நன்றி வீரகேசரி
அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் வீடுகள் வேண்டாம் : கூடாரங்கள் பாதுகாப்பற்றவை : களுப்பான மக்கள் விசனம்
21/06/2016 புதிய வீடுகளை அமைத்து தருவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடம் மிகவும் ஆபத்தான பிரதேசமாகும். குறித்தப் பகுதியில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டால் மண்சரிவில் எஞ்சிய சிலரும் மடிந்து போகும் நிலை ஏற்படும் என கவலை தெரிவிக்கும் களுப்பான தோட்ட மக்கள், தமக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள கூடாரங்கள் மிகவும் பாதுகாப்பு அற்றவை எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
களுப்பான தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தோட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நாம் இருக்கின்ற கூடாரங்களில் மின்சார வசதி இல்லை. மின்சார வசதிகளை வழங்க எவ்வித ஏற்பாடுகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. மழை நேரங்களில் மழை நீர் கூடாரத்துக்குள் வருகின்றது. இந்த கூடாரங்கள் பாதுகாப்பற்றதாக உள்ளது.
புதிய வீடுகளை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட பிரதேசமும் மண்சரிவு அபாயமிக்கதாகும். எனவே கூடாரங்கள் அமைத்திருக்கும் இந்த இடத்திலேயே எமக்கு வீடுகளை அமைத்து தரவேண்டும். இல்லாவிட்டால் எஞ்சிய சிலரும் மீண்டும் ஒரு மண்சரிவில் சிக்கி உயிரிழக்க நேரிடும் என்றனர்.
நன்றி வீரகேசரி
மாணவிகளுடன் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது ; அதிபரை கைதுசெய்ய நடவடிக்கை (காணொளி இணைப்பு )
22/06/2016 யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகளுடன் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்துள்ளதாக யாழ் .மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ்லெஸ் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியாக தகாத முறையில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த ஆசிரியரை கைது செய்து சட்டநடவடிக்கையூடாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களும் பழைய மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படுகின்ற வேறு இரு ஆசிரியர்கள் மற்றும் சம்பவம் தொடர்பாக தெரியவந்திருந்த நிலையிலும் அது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்காது குறித்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட அதிபர் ஆகியோர் தொடர்பாக நீதிமன்றத்தின் அழைப்பாணை ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்டவர் தொடர்பாக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுவருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இது போன்றதொரு சம்பவம் யாழ்ப்பாணம் வரணி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்று அதனோடு தொடர்புடைய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
22/06/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 14 நாட்கள் எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005.12.25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதி பிரதமரை சந்திக்கிறது கூட்டமைப்பு.!
22/06/2016 நல்லிணக்க அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றவேண்டும். குறிப்பாக காலதாமதமின்றி மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சித் தலை வரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
இந்த வாரமளவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதியின் விஜயம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்புத் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்வதாகவே ஜனாதிபதியின் விஜயம் அமைந்திருந்தது. இதில் அவர் பல அறிவிப்புக்களைச் செய்வார் என்பது நியாயமாகாது. எனினும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் எமது மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக விரிவாக எடுத்துரைத்துள்ளேன். குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவித்தேன். மேலும் நல்லிணக்க அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப்போகின்றது.
இதுவரையில் எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காணிகள் விடுவிப்பு குறைந்தளவே நடைபெற்றுள்ளது. முழுமையாக விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட காணிகள் மக்கள் குடியிருப்பிற்கு ஏற்ற காணிகள் அல்ல. இந்நிலையில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். இனியும் இழுத்தடிப்புக்கு இடம் இல்லை. அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினேன்.
எமது மக்கள் ஜனாதிபதியின் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மக்களது பிரச்சினை தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் எமது மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்து போராடப் போவதாக எனக் கூறுகிறார்கள். இதனை மாற்றமுடியாது. அவர்க ளது கோரிக்கை நியாயமானது என்பதையும் அவருக்கு எடுத்துரைத்தேன்.
இதேவேளை, இந்த வாரமளவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றார். நன்றி வீரகேசரி
மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்
23/06/2016 யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன் இக் கோரிக்கையை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்றையும் அவர்கள் நடாத்தியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த ஆசிரியரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உறுதிமொழி அளித்ததன் பின்னர் அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைதுசெய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முட்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இவ் வழக்கு விசாரணையில் குறித்த ஆசிரியரை எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வெலிக்கடை சம்பவம் : ஐ.நா. அலுவகத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானம்
23/06/2016 கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்காதமையால் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்தால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலை : கடையடைப்பு கைவிடப்பட்டது
23/06/2016 வவுனியா,வவுனியாவில் செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்ட வர்த்தகர் செல்வராஜா கடத்தல்காரர்களினால் நேற்று புதன்கிழமை பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பூவர சங்குளம் பகுதியில் கடத்தல்காரர்கள் இவ ரைக் கொண்டுவந்து வாகனம் ஒன்றில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலையாகிய வர்த்தகரிடம் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவருடைய கடத்தலைக் கண்டித்தும், வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் வ்வுனியா வர்த்தகர் சங்கம் வெள்ளியன்று நடத்தவிருந்த கடையடைப்பு கைவிடப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் ஆர்பாட்டத்தில் கண்ணீர் புகை பிரயோகம்
23/06/2016 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணியில் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த ஆர்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொள்ளுபிட்டி சந்தியில் வைத்து குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை இந்த ஆர்பாட்ட பேரணி காரணமாக பம்பலபிட்டியில் இருந்து கொள்ளுபிட்டி வரையான பாதை வாகன நெரிசலுக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாலபே மருத்துவக் கல்லூரியினை இரத்து செய்தல் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்
23/06/2016 யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.
இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்த சென்ற போது அதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா போலி பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வங்கியில் இருந்த சீ.சீ.டிவி. வீடியோவை பரிசோதித்து பார்த்ததில் குறித்த நபர்கள் வங்கியில் பணத்தை பெற்றுக்கொண்டு பையினுள் வைத்து செல்வது பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிகமான பூரண விசாரனைகளை மேற்கொள்வதற்காக இவ் வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
யாழில் ஒன்றரை கிலோ கேரள கஞ்சா மீட்பு
23/06/2016 யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் ஒன்றரை கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்றைய தினம் காலை கஞ்சா கடத்தப்படுவதாக மாதகல் கடற்படையினரால் தகவலொன்று கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து இக் கடத்தல் நிகழ்வை முறியடிக்கும் வகையில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே இளவாலையிலுள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள காட்டு பகுதியில் இருந்து இந்த கஞ்சா பொதி மீட்கப்பட்டது.
இதனை வேறொருவருக்கு கைமாற்றுவதற்காக காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி