கம்பனின் அறிவியல் ஆழம்: மேற்கே உதித்த சூரியன்!


வால்மீகி எழுதிய இராமயணத்தை தமிழில் தந்த நமது கம்பர், இந்தப் பூமி ஒரு பந்து வடிவம் என்ற உண்மையை  அனுமான் என்னும் பாத்திரத்தினூடாக என்ன அழகாக விளக்கம் கொடுக்கின்றார் என்பதைப் பார்ப்போம்.

இராவணனின் வஞ்சனையினால், ராம லட்சுமணர்கள்  உட்பட ஒட்டுமொத்த வானர சேனைகளும் மாண்டுபோயினர். இவர்களை உயிர்ப்பிக்க, மருந்து மலையிலிருக்கும் மூலிகையை விடியுமுன் கொண்டுவந்தால்தான் முடியும் என்ற அவசர நிலை. அம்மூலிகையைக்  கொண்டு வருவதற்காக அனுமான் புறப்படுகிறான். 

இலங்கையில் இருந்து வட திசையில் மிகப் பெரிய தொலை தூரம் ஐந்து பெரு மலைகளைத் தாண்டிப்  போயாகவேண்டும். முதலில் இமயமலை (9,000 யோசனை தூரம்), பொன்மலை (11,000 யோ.), செம்மலை (9,000 யோ.), மேருமலை (9,000 யோ.)  எல்லாம் தாண்டி உத்தரகுரு நாடு என்னும் போக பூமியை அடைகிறான். 

இன்னும், நெடுத மலையைத் தாண்டினால்தான் மருந்து மலையை அடையலாம். ஆனால் அந்நாட்டில் சூரியன் தனது மேற்குத் திசையில் உதயமாகி எழுவது கண்டு அதிர்ந்து போனான். ஐயையோ, பொழுது விடிந்து விட்டதே! தனது முயற்சி தோல்வியில் முடிந்ததே! என்று ஒரு கணம் மனம் கலங்கினான். அடுத்த கணமே, தான் மறை வல்லோரிடமிருந்து கற்றுததெரிந்த உண்மை ஒன்று நினைவில் வரவே அவன் சாந்தமானான். 

இதை விளக்க, முதலில் ஒரு அறிவியல் உண்மை ஒன்றை ஆராய்வோம்.

நமது பூமி உருண்டை வடிவானது என்று நமக்குத் தெரியும்.-ஆனால், கம்பனுக்குமா?-. நாம் மேற்குப் பக்கமாகப் பயணம் செய்யும்போது, நமக்கு முன்னால் மேற்கு, பின்னால் கிழக்கு, வலப்பக்கம் வடக்கு, இடப்பக்கம் தெற்கு. இது பூமியை மேற்கு நோக்கிச் ஒரு முழுச் சுற்று,  சுற்றி வந்தாலும் மாறாது. 

சரி, இப்போது பூமத்திய ரேகையில் இருந்து இப்போது வடக்கே போவோம். இப்போது, நமக்கு முன்னால் வடக்கு, பின்னால் தெற்கு, வலப்பக்கம் கிழக்கு, இடப்பக்கம் மேற்கு. அனுமான் வெளிக்கிடும் போது  இடப்பக்கம் சூரியன் மறைவதை கண்டான். வடதிசை மேலே செல்லச்செல்ல அட்ச ரேகையின் சுற்றளவு குறைந்து கொண்டே போவதால் கிழக்கு, மேற்கு திசைகள் என்று சொல்லக்கூடிய தூரங்களின் அளவு குறைந்து கொண்டே போகும். கடைசியில் வடதுருவத்தை அடைந்து, அதையும் தாண்டி மறு பக்கம், திரும்பாமலேயே  இறங்கி, தாண்டிச் சென்றால் என்ன நடக்கும்?  

அப்போது, அங்கு இருப்பவர்களுக்கும், அனுமானுக்கும் - அவன் திரும்பிப்பாமல் நின்றால் - முன்னால் இருப்பது தெற்கு (வடக்கல்ல!), பின்னால் வடக்கு, இடப்பக்கம் கிழக்கு, வலப்பக்கம் மேற்கு. அனுமான் வடமுனை தாண்டி மறு பக்கம் சேர்ந்ததும், ஊரில் வெளிக்கிடும்போது  இடப்பக்கம் மறைந்த சூரியன் அடுத்த பக்கத்தில் உதயமாகுவது அவனது இடப்பக்கம் என்பதால், முதலில் அது மேற்கில் உதிப்பதாக எண்ணிவிட்டான். பின்புதான் அந்த உத்தரகுரு நாட்டில் - அதைத் தாண்டிய மேருமலையிலும் - அது கிழக்குத் திசையே என்று தெளிவுற்று, பூமியின் மறு பக்கத்தில்தான் அப்பொழுது பொழுது விடிகின்றது, இலங்கையில் சூரியன் உதிக்க இன்னமும் பல நாழிகைகள் ஆகும் என்று அமைதி கொண்டு தன்  பயணத்தைத் தொடரலானான். 

அப்பாடா! இப்படி ஒரு விளக்கம், மூலப் பிரதியான வால்மீகி இராமாயணத்தில் காணப்படவே இல்லையாம்! இது கமபனின் சொந்தக் கற்பனை! கற்பனையல்ல, அறிவியல் உண்மை!
இதற்கான பாடலையும் அதன் பொருள் விளக்கத்தையும் காண்க:

கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் கதிரின் செல்வன்
மேல்திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன் வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் என்னத் துன்பம் தணிந்தனன் தவத்தின் மிக்கான். - (கம்ப.8891) 

தவத்து மிக்கான் - தவத்தாற் சிறந்தவனும்;  
கால் திசை சுருங்கச்செல்லும்  கடுமையான்  -  காற்றின் வேகம்  குறையுமாறும் திசையின் தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய அனுமன்; 
கதிரின் செல்வன்  மேல்  திசை  எழுவான்  அல்லன் - கதிரினைச் செல்வமாக உடைய  சூரியன்  மேற்குத் திசையில் எழுகின்ற இயல்புடையவன்  அல்லன்;  
விடிந்ததும்  அன்று - இப்போது    விடியற்காலமுமில்லை;
மேருமாற்றினன் -  மேருவில்  தன்   செலவை மாற்றினவனாய்; 
வடபால் தோன்றும் என்பது  மறைகள் வல்லோர் சாற்றினர்  - வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்)   தோன்றும் என்பது, வேதம்  பயின்றவர்கள்  கூறியுள்ளனர்;  
என்ன,   துன்பம் தவிர்ந்தனன் - என்று எண்ணித் துன்பம் தணிந்தான்.

அடே அப்பா, என்னே கம்பனின் அறிவியல் ஆழம்!

அன்புடன்,
செல்வதுரை சந்திரகாசன் 

பி.கு.

இலங்கையில் இருந்து  வடதுருவம் 9000 கி.மீ. ஆகும். அனுமன் 38000 யோசனை தூரம் சென்றால் அது எத்தனை கி.மீ.?  

சில இலக்கிய ஆராய்வுகளில், ஒரு யோசனை தூரம் என்றால் 13, 15, 27, அல்லது 67 கி.மீ. என்று பலவாறு ஊகிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவன் சென்ற தூரம் 2900, 2500, 1400 அல்லது 570 கி.மீ. தானே வருகின்றது?

நல்லறிஞர் யாராவது விளக்கம் தருவார்களா?