உலகச் செய்திகள்


விண்வெளியில் 6 மாதங்களை கழித்து சாதனை படைத்து வெற்றிகரமாக பூமி திரும்பிய பிரித்தானிய விண்வெளிவீரர்

இந்தியாவுக்கு ஆதரவு தேடி சீனாவுக்கு இரகசிய பயணம்

பராக் ஒபாமாவாக்கு எழுந்து நிற்க உதவிய 4 ஆம் வகுப்பு சிறுவர்கள்

காபூலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ; 14 பேர் பலி

 கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவுக்கு அருகதை கிடையாது ; முதல்வர் ஜெ.

மெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள்- பொலிஸார் மோதல்; 6 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் மடக்கி பிடிப்பு : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம்

கச்சதீவை தாரை வார்த்தது நானா? ; ஏன் ஜெயலலிதாவால் மீட்க முடியவில்லை - கருணாநிதி

பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் குண்டு தாக்குதல் ; அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவி சாதனை (வீடியோ இணைப்பு)

வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

மரணத்தில் முடிந்த செல்பி ஆசை ; கங்கையில் மூழ்கி 7 பேர் பலி

முகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம் (காணொளி இணைப்பு)


விண்வெளியில் 6 மாதங்களை கழித்து சாதனை படைத்து வெற்றிகரமாக பூமி திரும்பிய பிரித்தானிய விண்வெளிவீரர்

20/06/2016 விண்வெளியில் 6 மாதங்களை கழித்து சாதனை படைத்து வெற்றிகரமாக பூமி திரும்பிய பிரித்தானிய விண்வெளிவீரர் அவருடன் அமெரிக்க, ரஷ்ய விண்வெளிவீரர்களும் திரும்புகின்றனர் 
பிரித்தானிய விண்வெளிவீரரான ரிம் பீக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாத காலம் தங்கியிருந்து சாதனை படைத்த பின்னர் பூமியை சனிக்கிழமை வந்தடைந்துள்ளார். 
சொயுஸ் வி.மெ்.ஏ. 19எம் விண்கலம் மூலம் ரிம் பீக்கும் (44 வயது) அமெரிக்க வி்ண்வெளிவீரர் திமோதி கொப்ரா மற்றும் ரஷ்ய விண்வெளிவீரர் யூரி மலென்சென்கோ ஆகியோர் சகிதம் கஸ்கஸ்தானில் பின்தங்கிய பிராந்தியமொன்றில் தரையிறங்கினார். 
அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கழித்த 186 நாட்களின் போது பூமியை 3,000 தடவைகள் வலம் வந்ததுடன் 250 பரிசோதனைகளில் பங்கேற்றிருந்தார். அத்துடன் விண்வெளியில் நடக்கும் செயற்கிரமத்திலும் மரதன் பயிற்சியொன்றிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
அவர் லண்டன் மரதன் ஓட்டப் போட்டிகளையொட்டியே மேற்படி மரதன் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 
1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானியா சார்பில் விண்வெளிக்குச் சென்ற முதலாவது விண்வெ ளிவீரராக அவர் உள்ளதுடன் விண்வெளியில் நடந்த முதலாவது பிரித்தானிய வீரர் என்ற பெயரையும் பெறுகிறார். 
அவரது சர்வதேச விண்வெளிநிலையத்திலான பூமியைச் சுற்றிய பயணம் 125 மில்லியன் கிலேமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாகும். 
அவர் நாசா விமானமொன்றின் மூலம் நோர்வேக்கு சென்று அங்கிருந்து ஜேர்மனி புறப்பட்டார். அங்கு அவர் கொலொன் நகரிலுள்ள ஐரோப்பிய விண்வெ ளி நிலையத்துக்கு செல்வுள்ளார். நன்றி வீரகேசரி 

இந்தியாவுக்கு ஆதரவு தேடி சீனாவுக்கு இரகசிய பயணம்

20/06/2016 அணுசக்தி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் இந்தியா இடம்பெறுவதை எதிர்த்துவரும் சீனாவை சமரசம் செய்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் சீனாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் அணு மூலப் பொருட்கள், அணுஉலை தொழில் நுட்பங்களை பிறநாடுகளுக்கு விநியோகம் செய்து கொள்கின்றன. இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, மெக்சிகோ, ரஷியா, மற்றும் ஸ்ட்விட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. 
ஆனால், இந்தியா என்.டி.பி.டி. (NTPT) எனப்படும் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாததால் இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி.யில் இடம் பெற வாய்ப்பளிக்கக் கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
இந்நிலையில், அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியா உறுப்பினராவதால் பாகிஸ்தானுடனான உறவில் உணர்வு ரீதியான சிக்கல் ஏற்படும் என சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் அடங்கிய தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என சீனா எச்சரித்துள்ளது. 
எதிர்வரும் 24ஆம் திகதி என்.எஸ்.ஜி. பேரவை கூட்டம் சியோலில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில்தான் இந்தியாவின் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்நிலையில், என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியா இணைவதை எதிர்த்துவரும் சீனாவை சமரசம் செய்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் சீனாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
சீனத் தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளரை கடந்த 17,18 திகதிகளில் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியா இணைவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் நேற்று தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


பராக் ஒபாமாவாக்கு எழுந்து நிற்க உதவிய 4 ஆம் வகுப்பு சிறுவர்கள்

20/06/2016 அமெரிக்காவின் மிகவும் இளமையான ஜனாதிபதிகளில் ஒருவராக விளங்கும் பராக் ஒபாமா நேற்று முன்தினம் சனிக்கிழமை கலிபோர்னியாவிலுள்ள யொஸிமைட் தேசிய பூங்காவில் நிலத்தில் அமர்ந்திருந்து பாடசாலைச் சிறுவர்களுடன் புகைப்படமெடுத்துக் கொண்டதையடுத்து , அவருக்கு எழுந்து நிற்பதற்கு சிறுவர்கள் உதவுவதை படத்தில் காணலாம். 
ஜனாதிபதி பதவியிலிருக்கும் போதான இறுதி தந்தையர் தின விடுமுறையை கழிக்கும் முகமாக பராக் ஒபாமா தனது மனைவி மிசெல் ஒபாமா மற்றும் மகள்மாரான மலிலா மற்றும் சஷா சகிதம் மேற்படி பூங்கா பிராந்தியத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்திருந்தனர். இந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை காலை பராக் ஒபாமாவும் மிசெல் ஒபாமாவும் அந்தப் பூங்காவில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான நிகழ்வில் பங்கேற்ற 4 ஆம் வகுப்பில் கற்கும் சிறுவர்களை சந்தித்து உரையாடி அவர்களுடன் நிலத்தில் அமர்ந்து புகைப்படமெடுத்தனர். 
புகைப்படமெடுத்த பின்னர் அதே நிலையில் அமர்ந்திருந்த பராக் ஒபாமா, அங்கிருந்த சிறுவர்களை நோக்கி யார் எனக்கு எழுந்திருக்க உதவப் போகிறீர்கள் என வினவினார். 
இதனையடுத்து சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருக்கு உதவ முன்வர அவர்களின் உதவியுடன் அவர் எழுந்து நின்றார்.
நன்றி வீரகேசரி 
காபூலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ; 14 பேர் பலி

20/06/2016 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்திற்கு இலக்குவைத்து நடத்தப்பட்ட  தற்கொலை குண்டுத்தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த தாக்குதலானது காபூலில் இருந்து ஜலாலாபாத்திற்கு செல்லும் வீதியில் நேபாள நாட்டு பாதுகாப்பு படையினர் பயணித்த  பஸ்ஸில் நடத்தப்பட்டுள்ளது. 
கனடா நாட்டு தூதரகத்தில் பணிபுரியும் நேபாள நாட்டு பாதுகாப்பு படையினர்  பஸ்ஸில் செல்லும் போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
நன்றி வீரகேசரி 

கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவுக்கு அருகதை கிடையாது ; முதல்வர் ஜெ.

21/06/2016 தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றபோது, தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. ஆட்சியில் இருந்த போதுதான் கச்சதீவு தாரைவார்க்கப்பட்டது. கச்சதீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்.
கச்சதீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சதீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சதீவை தாரை வார்த்தது தி.மு.க.தான். எனவே, கச்சதீவு குறித்த பேச தி.மு.க.வுக்கு அறுகதை கிடையாது. 
கச்சதீவு மீட்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை.  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க. இணைத்து கொள்ளாதது ஏன்? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கச்சதீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்து கொள்ளப்பட்டது என்றார். 
இதற்கு பதிலளித்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:கச்சதீவை மீட்க வேண்டும் என கடந்த 1974ஆம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சதீவு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக்கூறினார்.   நன்றி வீரகேசரி 


மெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள்- பொலிஸார் மோதல்; 6 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

21/06/2016 தென் மெக்ஸிக்கோவில் தொழிற்சங்க ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே இடம்பெற்ற மோதலில் 6 பேர் பலியானதுடன் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 
ஒயக்ஸகா மாநிலத்தில் அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு உயர் மட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 
மேற்படி அடிப்படைவாத செயற்பாட்டு வரலாற்றைக் கொண்ட சி.என்.ரி.ஈ. தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து அந்த தொழிற் சங்கத்தின் உறுப்பினர்கள் வீதிகளை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில் சம்பவ தினம் வீதிகளை மறித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கலைக்க முயன்ற போது அந்த வீதியின் இரு மருங்கிலுமிருந்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்தே அங்கு பெரும் மோதல் இடம்பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
நொசிக்ஸ்ட்லன் நகரில் இடம்பெற்ற மேற்படி மோதலின் போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் துப்பாக்கிகள் இருக்கவில்லை என மெக்ஸிக்கோ தேசிய பாதுகாப்பு ஆணையகம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. 
எனினும் அந்நாட்டு பொலிஸ் தலைவர் என்றிக் கலின்டோ பின்னர் தெரிவிக்கையில், இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட சூட்டையடுத்து அங்கு ஆயுதம் ஏந்திய பொலிஸ் படையணி அனுப்பப்பட்டதாக கூறினார்.
நன்றி வீரகேசரி 
டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் மடக்கி பிடிப்பு : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம்

21/06/2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
 இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப்புடன் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மோதுகிறார்.
இந்நிலையில், லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பெருந்திரளானோர் திரண்டிருந்தனர். 
இதன்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து டொனால்ட் டிரம்ப்பை கொலை செய் முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் குறித்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர்.
20 வயதுடைய பிரித்தானி நாட்டைச் சேர்ந்த மைக்கல் சான்ட்போர்ட் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 டிரம்ப்பை கொலை செய்யும் திட்டத்துடன் 18 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற மைக்கேல், நியூ ஜெர்சி, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளார். 
லொஸ் வேகாஸ் பிரச்சார கூட்டத்தின்போது டிரம்ப்பை  கொலை செய்யும் திட்டத்துடன் கலிபோர்னியாவில் இருந்து அலாஸ் வேகாஸ் நகருக்கு மைக்கேல் காரில் வந்துள்ளார். 
டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க அனுமதி சீட்டை வாங்கிய மைக்கேல், இதற்குமுன்னர் துப்பாக்கியை பயன்படுத்திய அனுபவம் இல்லை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்கு சென்று, அங்கு துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
ஒருவேளை, லொஸ் வேகாஸ் நகரில் தனது திட்டம் தோல்வியுற்றால் பீனிக்ஸ் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்பின் அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில்   கொலை செய்யும் எண்ணத்தில்   பிரச்சார கூட்டத்துக்கான அனுமதி சீட்டையும் மைக்கேல் வாங்கி வைத்துள்ளார்.
லொஸ் வேகாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார நிகழ்ச்சியில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் இருந்ததால் ஆயுதம் எதுவும் இன்றி உள்ளே நுழைந்த மைக்கேல், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயரதிகாரியான அமீல் ஜேக்கப் என்பவரின் துப்பாக்கியை எடுத்ததாக  மைக்கேல் வாக்குமூலமளித்துள்ளார்.
இதேவேளை தான் விடுதலை பெற்றால் மீண்டும் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சிப்பேன் என மைக்கேல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி 


கச்சதீவை தாரை வார்த்தது நானா? ; ஏன் ஜெயலலிதாவால் மீட்க முடியவில்லை - கருணாநிதி

22/06/2016 கச்சதீவை நான் தாரை வார்க்க வில்லை. இது தொடர்பில் பலமுறை விளக்கம் கொடுத்தப்பின்பும் ஜெயலலிதா என்னை சாடுகின்றார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 
“கச்சதீவு” பற்றி தமிழகச் சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சதீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறார். 1991ஆம் ஆண்டிலிருந்து அவர் இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன். தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? இருந்தாலும் இப்போது அவர் “கச்சதீவு” பற்றியும், என்னைப் பற்றியும் பேசியிருப்பதால், மீண்டும் அது பற்றிய விளக்கத்தை ஒரு முறை அளிக்கிறேன். 
தனது ஆட்சிக் காலத்தில் கச்சதீவைத் திரும்பப் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று அறிக்கை விடும் ஜெயலலிதா பதினைந்து ஆண்டுக் காலம் ஆட்சியிலே இருந்த போது - கச்சதீவை மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற உண்மையிலேயே அதில் உறுதியாக இருந்தால் அ.தி.மு.க. ஆட்சி இராஜினாமா செய்யும் என்று எப்போதாவது அறிவித்தது உண்டா? 
சுதந்திர தினவிழாவிலே கோட்டை கொத்தளத்திலே இருந்து கொண்டு வாய் சவடாலாக முழங்கி விட்டு, அந்தப் பேச்சு ஏடுகளில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்ததே தவிர வேறு என்ன செய்தார்? உச்ச நீதி மன்றத்திலே வழக்கைப் போட்டு விட்டு, என் கடமை முடிந்து விட்டது என்று இருந்தாரே தவிர வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதி விட்டு, பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததோடு சரி. ஆனால் நான் ஏதோ ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய்பொத்திக் கொண்டிருந்ததாக தற்போது எப்படியோ தப்பித் தவறி கரையேறி விட்டோம் என்ற இறுமாப்பில் வாய் நீளம் காட்டியிருக்கிறார். 
முதலில், மத்திய அரசால் கச்சதீவு தாரை வார்க்கப்பட்ட போது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா? 1974ஆம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21ஆம் திகதி தமிழக சட்டசபையில் நான் நிறைவேற்றிய தீர்மானம்,'' இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சதீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சதீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து,  தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது”. எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வில்லை. 
“கச்சதீவு பிரச்சினையை முடிந்து விட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதில் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்தக் கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதற்கு எந்தவகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன். 
தமிழக அரசை இது போன்ற பெரிய பிரச்சினைகளில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை.ஆக்க பூர்வமான  முறையில் பிரதமர் - முதலமைச்சர் இது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.அனைத்துக் கட்சியினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலே கூட - எத்தனை முறை இது பற்றி பிரதமரிடத்தில் தமிழக அரசின் சார்பிலே ஒரு முறையீடாக இந்த அரசு கச்ச தீவுப் பிரச்சினையில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை - கச்சதீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக் காட்டி யிருக்கிறேன். இவ்வாறு கச்சதிவை மீட்பதற்கான முயற்சியை தொடர்ந்து நான் மேற்கொண்டிருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரிபெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் குண்டு தாக்குதல் ; அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

22/06/2016 பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் வெடிபொருட்களைக் கொண்ட பட்டியை அணிந்திருப்பதாக நபரொருவர் செவ்வாய்க்கிழமை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   
இதனையடுத்து சம்பவ இடத்தை பொலிஸாரும் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரும் முற்றுகையிட்டனர். 
அத்துடன் அந்த 'சிற்றி 2' விற்பனை நிலையத்தை சூழ்ந்துள்ள வீதிகள் மூடப்பட்டன. 
தொடர்ந்து அந்நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். எனினும் அவரிடம் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அந்நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
 
மேற்படி சம்பவத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் சார்ள்ஸ் மைக்கேல் தெரிவிக்கையில், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். 
பெல்ஜயத்தில் தீவிரவாத எச்சரிக்கை மூன்றாம் நிலையிலுள்ளது. இது ஆகக் கூடிய எச்சரிக்கை நிலையான நான்காம் நிலையிலிருந்து ஒரு நிலை குறைவாகும். 
கடந்த மார்ச் மாதம் பிரஸல்ஸ் நகரிலுள்ள சுரங்கப் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 32 பேர் பலியாகியிருந்தனர். அந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.
நன்றி வீரகேசரி


பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவி சாதனை (வீடியோ இணைப்பு)

22/06/2016 ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.26 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் முக்கிய செயற்கைக்கோள் இஸ்ரோவின் கார்டோசாட்-2, வரைபடம், கடல்வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏனைய செயற்கைக்கோள்களில் அமெரிக்கா(13), கனடா(2), ஜெர்மனி(1), இந்தோனேசியா(1), சத்யபாமா பல்கலை(1), புனே பொறியியல் கல்லூரி(1) ஆகியவை அடங்கும்.
நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்.எல்., வகையில் 14-ஆவது ரொக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-34 ஆகும். இதன் எடை 320 தொன் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

22/06/2016 ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் வட கொரியாவிற்கு தமது கடுமையான கண்டனத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
வட கொரியா இன்று (22) அதிகாலை  பல கிலோ மீற்றர்கள் சென்று தாக்கக்கூடிய இரண்டு சக்திவாய்ந்த 'முசுடன்" ரக ஏவுகணைகளை வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் பரிசோதித்துள்ளது.
பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒரு ஏவுகனை 150 கிலோ மீற்றர் தொலைவில் விழுந்து தோல்வியடைந்தள்ளதாகவும், மற்றொரு ஏவுகணை தொடர்பான தெளிவான தகவல் வெளியாகவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.
குறித்த இரு ஏவுகணைகளும் செயலிழந்து ஜப்பானில் உள்ள மஞ்சள் கடல் பகுதியில் விழுந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
வட கொரியாவினால் இன்று பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகள் சுமார் 4000 கிலோ மீற்றர் வரை சென்று தாக்க கூடிய வல்லமை பொருந்தியதென தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சர்வதேசத்தின் நிலைப்பாட்டை மீறி அணு ஆயுத பரிசோதனை செய்வதை உடனடியாக நிறத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் இதற்கு முன்னரும், இன்றும் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை பரிசோதனைகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும், இதுபோன்ற செயற்பாடுகள் மூலம் தற்போது வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற செயல்களை கைவிட்டு, சர்வதேச நிர்பந்தங்களுக்கு இணங்கி, ஆக்கப்பூர்வமான வகையில் செயற்படுமாறு வடகொரியாவை கேட்டுக்கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத் துறை ஊடகப் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி


மரணத்தில் முடிந்த செல்பி ஆசை ; கங்கையில் மூழ்கி 7 பேர் பலி

23/06/2016 கங்கை நதியில் செல்பி எடுக்க முயன்றபோது அடுத்தடுத்து தவறிவிழுந்து நீரில் மூழ்கி நண்பர்கள் 7 பேர் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கலோனல் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சிவம். இவர் தனது நண்பர்களான சச்சின் குப்தா, போலு திவாரி, ரோஹித், மக்சூத், போலா, சத்யம், ஆகிய 6 பேருடன் நேற்று கங்கை நதியில் குளிக்கச் சென்றுள்ளார். 
சமீபத்திய மழை காரணமாக கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நதியில் குளித்துக் கொண்டிருந்த சிவத்திற்கு ஆற்றின் நீரோட்டம் அதிகமுள்ள பகுதியில் செல்பி எடுத்து தனது நண்பர்களை ஆச்சர்யப்படுத்த விரும்பினார். இதற்காக நதியின் நீரோட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றார். பின்னர் செல்பி எடுக்க தயாரானபோது எதிர்பாராதவிதமாக ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டார். 
அவரது அலறலை கேட்ட அவரது நண்பர் மக்சூத் அவரை காப்பாற்ற முயன்றார். இந்த முயற்சியில் அவரும் நீரில் மூழ்கினார். அடுத்தடுத்து நண்பர்கள் ஒருவரையொருவர் காக்கும் முயற்சியில் ஒவ்வொருவராக நீரில் குதித்தனர். ஆனால் வேகமான நீரோட்டத்தில் அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். 
அப்பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் நீர்மூழ்கி வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு 7 பேரின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. செல்பி எடுக்கும் ஆசையில் நண்பர்கள் உயிரை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி


முகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம் (காணொளி இணைப்பு)

23/06/2016 ஜேர்மனி திரையரங்கு ஒன்றில் முகமூடி அணிந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாகி சூட்டில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனால் இப்  பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில்  50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாகி சூடு நடத்திய நபர் கையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.
தற்போது திரையரங்கு முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
 இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
நன்றி வீரகேசரி