.
'அப்பா' படத்தை உருவாக்கியது ஏன் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சமுத்திரக்கனி விளக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அப்பா'. சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். ஜூலை 1ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் சமுத்திரக்கனியிடம் பேசிய போது, "இப்படத்தில் ஒரே ஒரு அப்பாவைப் பற்றி கூறவில்லை. 4 அப்பாக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். பையனின் ஆசை, ஏக்கங்கள் என்ன என்பதை அவனுக்கு தெரியாமல் அறிந்து, நிறைவேற்றும் ஒரு அப்பா, அம்மாவின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இப்படி எல்லா செய்ய வேண்டும், படிக்க வேண்டும் என்று திட்டமிடும் ஒரு அப்பா, உனக்கு என்ன தோணுதோ பண்ணுடா மகனே என்று வளர்க்கும் ஒரு அப்பா என காட்டியிருக்கிறேன்.
1040 மதிப்பெண் எடுத்த தைரியலட்சுமி என்ற பெண்ணின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது. அதிலிருந்து கிட்டதட்ட 3 நாட்களுக்கு என்னால் வெளியே வர இயலவில்லை. அப்போது என்னுடைய உதவியாளர்களை அழைத்து களப்பணியாற்ற சொன்னேன். அப்போது நிறைய தகவல்களைச் சொன்னார்கள். அதிகமாக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியா. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் இதில் முதலிடம் என்று பல்வேறு கணக்கெடுப்புகளை வைத்து சொன்னார்கள்.
உடனே பேப்பரில் குழந்தைகளைப் பற்றி வரும் செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சுமார் 4 வருடங்கள் செய்திகளை வைத்து பின்னப்பட்ட திரைக்கதைத் தான் இந்தப் படம். உடனே முழுக்க போதனையாக இருக்குமோ என்று நினைத்து விடாதீர்கள். முழுக்க போதனைகளாக இருக்கக் கூடாது என்று நினைத்து தான் திரைக்கதை எழுத 3 வருடங்கள் எடுத்துக் கொண்டேன். இக்கதையை நான் யாரிடம் போய் சொன்னாலும், ஏன் பாடல் வைக்கலாமே என்று சொல்வார்கள். இப்படத்தில் பாடல் வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆகையால் தான் நானே தயாரித்து நடித்திருக்கிறேன்.
10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் நாளில் இருந்து சுமார் 3 நாட்களுக்கு எந்த பேப்பரையும் படிக்க மாட்டேன். எனக்கு குழந்தைகள் தற்கொலை செய்தி படித்தாலே ஏதோ செய்கிறது. குழந்தைகள் நன்றாக தான் இருக்கிறார்கள். அவர்களை வளர்க்கும் பெற்றோர்கள் மற்றும் கல்வி முறையில் தான் சிக்கல் இருக்கிறது. இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப தயாராக இருக்கிறோம். அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும்" என்று தெரிவித்தார் இயக்குநர் சமுத்திரக்கனி.