அகவை எண்பத்தொன்பதில் ஆசியர் டொமினிக் ஜீவா - வாழ்ந்திடு பல்லாண்டு !

.
அகவை எண்பத்தொன்பதில் காலடி எடுத்துவைக்கும் மல்லிகை
        ஆசியர் டொமினிக் ஜீவா அவர்களை வாழ்த்திப்பாடிய வாழ்த்து

 மல்லிகையின் நாயகனே மனவுறுதி கொண்டவனே
         நல்லதமிழ் இலக்கியத்தை நாளுமே வளர்த்தவனே
         சொல்லவொணா துயரமெலாம் தோழிலே சுமந்தவனே
         வல்லவனே ஜீவாவே வாழ்வுனக்குச் சிறந்திடட்டும் !

         எளிமையாய் வாழ்ந்தாலும் இலக்கியத்தை நேசித்தாய்
         பழுதில்லா இலக்கியத்தை பரப்புதற்குத் துணையானாய்
         எழுதிநிற்பார் அனைவரையும் ஏந்திநின்றாய் மல்லிகையில்
         இப்போதும் அவரெழுத்தில் மல்லிகையே மணக்கிறது !



         பட்டம்நீ பெறாவிடினும் படித்தாரால் போற்றப்பட்டாய்
         பட்டம்பெற்ற பலபேரும் மல்லிகையை நாடவைத்தாய்
         கஷ்டமதில் இருந்தாலும் கருத்துடனே எழுதிநின்றாய்
         நஷ்டமவந்த போதினிலும் நடத்திநின்றாய் மல்லிகையை !

         தண்ணீரைப் பொருளாக்கி தகைவுடை பரிசுபெற்றாய்
         கண்ணீரைத்  துடைத்தபடி கதையெழுதி கலைவளர்த்தாய்
         உன்னரிய முயற்சினால் உயர்த்திநின்றாய் மல்லிகையை
         இன்றளவும் மணக்கிறது இலக்கியமாய் மல்லிகையும் !

         நீநடந்து தமிழ்வளர்த்தாய் நெடிதுநாள் வாழ்ந்திடுக
         நின்னுடைய தமிழ்ப்பணியை நெஞ்சார வாழ்த்துகிறேன்
         வாழ்நாளில் நீபடைத்த சாதனையால் வாழுகிறாய்
         மல்லிகையின் பிதாமகனே வாழ்ந்திடுக பல்லாண்டு !
           ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )