திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி - ஆத்மாவை பிரதிபலித்த பொன்மணி.

.
நான்கு  தசாப்தங்களுக்கு  முன்னர்  பாதையில்  எத்தனை ராதைகள்  பேதைகள்
ஈழத்து   வடமாகாணத்தின்  ஆத்மாவை   பிரதிபலித்த பொன்மணி.
   
                                                   
கனவு  காணும்  வாழ்க்கை  யாவும்  கலைந்துபோகும்  மேகங்கள் எனச்சொல்லப்பட்டிருக்கிறது.  தற்பொழுது  அவுஸ்திரேலியாவில் குளிர்காலம்.  இக்காலத்தில்  இரவில்  மட்டுமல்ல  பகலில் உறங்கினாலும்   கனவுகள்  சம்பந்தம்  சம்பந்தம்  இல்லாது வந்துகொண்டிருக்கிறது.
அண்மையில் வந்த  கனவில்  யாழ்ப்பாணத்தில் பண்ணைப்பாலமும்  கஷ_நோரா  பீச்சும்,  காவலூர்  அந்தோனியார் கோயிலும்   வந்தன.   இங்குதான்  பொன்மணி  படத்திற்காக இந்த இந்தக்காட்சிகள்  எடுக்கப்பட்டன  என்று  சொல்கிறார்  நண்பர் காவலூர் ராஜதுரை.   (அவர்   சிட்னியில்  மறைந்து  எதிர்வரும் ஒக்டோபர்  மாதத்துடன்  இரண்டு  வருடங்களாகப்போகிறது)



அத்துடன்  அதில்  நடித்த  எனது  நண்பர்களும்  எனக்கு  நன்கு தெரிந்தவர்களும்   தொடர்ச்சியாக  அக்கனவில்  வந்துசென்றனர்.
இக்கனவு  சுவாரஸ்யமானது.  ஆனால்,  சிறிதுநேரத்தில் கலைந்துவிட்டது.   அப்பொழுது  விழிப்புவந்து  நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை  4  மணியும்  கடந்துவிட்டது.
குளிர்கடுமையாக   இருந்தமையால்   ஹீட்டரை  இயக்கிவிட்டு ஆழ்ந்துயோசித்தேன்.
 இரண்டு   மணிநேரத்திற்கு  முன்னர்  பொன்மணி  திரைப்படத்தை முழுமையாகப்பார்த்தமைதான்   அக்கனவிற்கான  ரிஷிமூலம்.  இரவில்  தூக்கம்  அடிக்கடி  களையும்  உபாதையில்  காலத்தை கழிக்கும்  எனக்கு,   இந்தக்குளிர்காலமும்  சோதனை  தருகிறது.
எனது  கணினியை  அந்த நடுச்சாமவேளையில்    இயக்கினேன்.   ஒதுக்கவேண்டிய மின்னஞ்சல்களை    ஒதுக்கிவிட்டு,  அவசியப்பட்ட  மடல்களைப்  பார்க்கின்றேன்.


அடிக்கடி   எனக்கு  உருப்படியான  தகவல்ளையும்  ஆக்கங்களையும் தரமான  குறும்படங்கள்,   திரைப்படங்கள்,  ஆவணப்படங்கள் அனுப்பும்   நல்ல  நெஞ்சங்கள்  இருக்கிறார்கள்.
ஒரு  இலக்கிய  சகோதரி  அடிக்கடி  பயனுள்ள  தகவல்  அனுப்புவார். மற்றும்  ஒரு  சகோதரியும்  தனக்குப்பிடித்தமானவற்றை  அனுப்புவார்.
நடுச்சாம இரவில் நான்  பார்த்த  நண்பர்  மறைந்த  காவலூர் ராஜதுரையின்  பொன்மணி  படத்தை  அவர் அனுப்பியிருந்தமைக்குக்காரணம்   என்னால்  புரிந்துகொள்ளத்தக்கது. அதில்   நடித்திருந்த  சிலர்  அவருடைய  உறவினர்கள்.
அந்தப்படத்தை   காவலூர்  ராஜதுரை  தயாரிக்க  முன்னர்  அதனை  ஒரு   குறுநாவலாகத்தான்  எழுதியிருந்தார்.
காவலூர்  ராஜதுரை  எமது  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  மூத்த உறுப்பினர்.   அ.ந. கந்தசாமியின்  மதமாற்றம்  என்னும்  நாடகத்தை தயாரித்து   மேடையேற்றியவர்.   இலங்கை  வானொலியில் பணியாற்றியவர்.   அவருக்கும்  தமிழ்ப்படம்  எடுக்கும்  விஷப்பரீட்சை யோசனை   எவ்வாறு  வந்தது  என்பது  எனக்குத்தெரியாது.
                                           இலங்கையில்  தயாரிக்கப்பட்ட  தோட்டக்காரி   என்ற  முதல் தமிழ்த்திரைப்படத்தில்   பல  தொழில் நுட்பக்குறைபாடுகள் இருந்தபோதிலும்  தமக்கெல்லாம்  படம்  தயாரிக்கும்  ஊக்கத்தை அந்தப்படம்   தந்திருக்கிறது  என்று  ஒரு  தடவை  நண்பர் ' கோமாளிகள் ' ராமதாஸ்   சொல்லியிருக்கிறார்.
எமது  தாயகத்தில்  தமிழ்ப்படம்  எடுப்பது  என்பது  விஷப்பரீட்சைதான்.    தெரிந்துகொண்டும்  பல  படங்கள் வெளியாகியிருக்கின்றன.    நீண்டபட்டியல்  இருக்கிறது.   வி.பி. கணேசன்   சிலவேளை  தனது  கையை  சுட்டுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.   அவர்  எடுத்த  புதிய காற்று,   நான்  உங்கள் தோழன்,   நாடு போற்ற  வாழ்க  படங்கள்  அத்தகையன.
இலங்கை - இந்திய  கூட்டுத்தயாரிப்பு  என்ற பெயரில்  சில  படங்கள் வந்தன.    இலங்கையில்  பைலட்  பிரேம்நாத்  படம்  தயாரிக்கப்பட்ட காலத்தில்  - அதில்  தங்களுக்கும்  நடிப்பதற்கு  சந்தர்ப்பம்  வேண்டும் என்று   பல  ஈழத்துக்கலைஞர்கள்  பத்திரிகைகளில்  அறிக்கை விடுத்தனர்.
ஆனால்,   மணிமேகலை,  ஆபிரகாம்  ஆகிய  இரண்டு  கலைஞர்களுக்கு   மிகச்சிறிய  காட்சிகளில்  தோன்றுவதற்குத்தான் அதில்   சந்தர்ப்பம்   கிடைத்தது.
சிங்களத்திரையுலகில்   அன்று  மின்னிய  நட்சத்திரம் மாலினி பொன்சேக்காவுக்கு  அந்தப்படத்தில்  கதாநாயகி  அந்தஸ்து  வழங்கி  கூட்டுத்தயாரிப்புக்கு   அந்தப்படத்தயாரிப்பாளர்கள்  அர்த்தம் கற்பித்தனர்.
ஸ்ரீமாவின்   தலைமையில்  கூட்டரசாங்கம்  1970  இல்  வந்ததும்  சில முன்னேற்றங்கள்    நடந்தன.  அதில்  ஒன்றுதான் திரைப்படக்கூட்டுத்தாபனம்.   அதனால்  இலங்கையர்களால் இலங்கையில்   தயாரிக்கும்  படங்களுக்கு  கடன்  வசதியும்  தரப்பட்டது.    திரைப்படச்சுவடிகளை  தெரிவுசெய்யும்  குழுவில் எஸ்.பொன்னுத்துரையும்    இருந்திருக்கிறார்.
காவலூர் ராஜதுரையின்   நண்பர்  கலாநிதி  தர்மசேன  பத்திராஜா சிங்களத்திரையுலகில்   தரமான  இயக்குநர்.   அவருடைய  படங்கள் சர்வதேசத்தரம்   வாய்ந்தவை.   அத்துடன்  அவர்  தமிழ் அபிமானியாகவும்   யாழ்.பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாளராகவும்    இருந்தமையால்  பல  தமிழர்கள்  அவருடைய நண்பர்களானார்கள்.    பொன்மணி  திரைப்படத்திற்கு  தற்பொழுது  40 வயது.    1976  இல்  இப்படம்  வெளியானது.    இந்திய  திரைப்படவிழாவில்  (1980 இல்)    காண்பிக்கப்பட்டது.
பொன்மணி   படத்தில்  நடித்த  சிலர்  எனது  நண்பர்களாகவும்  எனக்கு நன்கு   தெரிந்தவர்களாகவும்  இருந்தமையால்  நேற்று  முன்தினம் நடுச்சாமத்தில்   மீண்டும்  ஒரு  தடவை   முழுமையாகப்பார்த்தேன்.
இத்திரைப்படம்   1976  இல்  கொழும்பில்  வெளியானபோது பார்த்திருக்கின்றேன்.    இரண்டாம்  தடவை   எமது  சங்கத்தின் வெள்ளிவிழா   கொள்ளுப்பிட்டியில்  1980  பெப்ரவரியில் நடந்தவேளையில்  அந்த  அரங்கில்  காவலூர்  ராஜதுரை காண்பித்தபொழுது   பார்த்திருக்கின்றேன்.
இந்தப்படம்   யாழ்ப்பாணத்தில்  தயாரிக்கப்பட்ட  காலப்பகுதியில்தான்   அவருடை  ஒருவகை  உறவு சிறுகதைத்தொகுதிக்கு  யாழ். வீரசிங்கம்  மண்டபத்தில் வெளியீட்டுவிழா   நடத்தினோம்.   ஆனால்,   காவலூர்  படத்தயாரிப்பில் பிஸியாக    இருந்தமையால்  அங்கு  வரவில்லை.
அவருடைய   மனைவியின்  சகோதரர்  இராஜசிங்கமும்   பணம் முதலீடு   செய்திருந்தார்.   திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கடனுதவியும்  இருந்தது.   தர்மசேன  பத்திராஜாவுக்கு  துணை இயக்குநராகவும்    இயங்கினார்.   இவ்வாறு  அவர்  சுமைகளுடனும் அழுத்தங்களுடனும்   அலைந்துதான்  அந்தப்படத்தை   வெளியிட்டார்.
அன்றைய   யாழ்ப்பாண  சமூக  அமைப்பை  சித்திரிக்கும் பொன்மணி,    மூன்று  மகள்மார்  கொண்ட   ஒரு நடுத்தரக்குடும்பத்தின்   கதை.  சீதனம்,  சாதி,  சமயம்,  பாரம்பரியம் முதலான   அம்சங்களை  பதிவுசெய்த  கதை.
ஒரு   இந்து  வெள்ளாள  சாதித்தடிப்பு  மிக்க  குடும்பத்தைச் சேர்ந்த  மூன்றாவது   இளைய  மகளுக்கும் (பொன்மணி ) கத்தோலிக்க மதத்தைச்  சேர்ந்த  மீன்  மொத்த  வியாபார  நிலையத்தில்  வேலை செய்யும்   இளைஞனுக்கும்  இடையே  மலரும்  காதலைச் சித்திரித்த படம்.   தனது  சமூகம்  ஏற்காது  எனத் தெரிந்தும்  அவள்  காதலனுடன் வந்துவிடுகிறாள்.   வீட்டில்  தேடுகிறார்கள்.
காதலன்   அவளை  தனது  நண்பர்  வீட்டில்  தங்கவைத்துவிட்டு திருமணத்திற்கு  ஏற்பாடு  செய்கிறான்.  அவளும்  தனது  குடும்பத்திற்கு  கடிதம்  எழுதுகிறாள்.
அவளைத்திருமணம்   செய்யவிருந்த  அவள்  அக்கா  கணவனின் தம்பியும்   அக்காவின்  கணவனும்  அவளுடைய  அண்ணனும் அவளைத்தேடுகின்றனர்.
இறுதியில்  ஒரு  கைக்கூலியிடம்  விவகாரம்  ஒப்படைக்கப்படுகிறது.
அந்தோனியார்   தேவாலயத்தில்  திருமணம்  நடக்கிறது. இந்துப் பெண்ணான   பொன்மணி  கத்தோலிக்க  தேவாலயத்தில்  காதலனை கணவனாக  மோதிரம்  மாற்றி  ஏற்கிறாள்.
மணக்கோலத்துடன்  வெளியே  வரும்பொழுது  அவள் சுட்டுக்கொல்லப்படுகிறாள்.
அவளின்   இரண்டாவது  அக்கா  இசைவகுப்புக்குச்சென்று  வருபவள். அவளுடைய  திருமணமும்  சீதனப் பிரச்சினையால்  தாமதிக்கிறது.
" பொன்மணி  இன்றுதான்  இறந்தாள்,  தான்   என்றோ  இறந்துவிட்டதாக "  விரக்தியில்  பேசுகிறாள்.
அவளுடைய   இசைவகுப்பில்  பாதையில்  எத்தனை  ராதைகள் பேதைகள்   பாடல்  ஒலிக்கிறது.
--------
பத்திராஜாவின்   இயக்கத்தில்  நந்தி  சிவஞானசுந்தரம்,  அவர்  தம்பி திருநாவுக்கரசு,   இவர்  மனைவி  பவாணி,   மௌனகுரு,  இவர்  மனைவி சித்திரலேகா,    சர்வமங்களம்  கைலாசபதி,   குழந்தை சண்முகலிங்கம்,   கமலா  தம்பிராஜா,   சோக்கல்லோ  சண்முகம், திருமதி   காவலூர்  ராஜதுரை  முதலான  எனக்குத்தெரிந்தவர்களும் நண்பர்களும்   நடித்த  படம்  பொன்மணி.
இத்திரைப்படம்   எத்தனை  நாட்கள்  திரையரங்குகளில்  ஓடின ?  என்ற புள்ளிவிபரத்தை   தம்பிஐயா  தேவதாஸ்   எழுதிய  ஈழத்து திரைப்படங்கள்  நூலில்  பார்க்கமுடியும்.
தமிழகத்திரைப்படங்கள்   இலங்கையில்  காண்பிக்கப்பட்டு  வாரம், மாதம்  ஏன்  வெள்ளிவிழா    என்றும்  ஓடிக்கொண்டிருந்த  வேளைகளில் ஈழத்துத்   திரைப்படங்கள்  திரையரங்குகளை  விட்டு  விரைந்து ஓடிவிட்டன.
திரைப்படக்கூட்டுத்தாபனத்தினாலும்  ஈழத்து  முயற்சிகளை காப்பாற்ற  முடியாது போய்விட்டது.
பொன்மணியால்   காவலூர்  ராஜதுரை  நட்டப்பட்டிருக்கலாம்.
ஆனால்,  ஈழத்தில்  கவனிப்புக்குள்ளான  திரைப்படங்களின் வரிசையில்  பொன்மணியும்  தங்கியிருக்கிறது.
வடமாகாண   சாதி  அமைப்பு  குறித்து  சிறுகதைகள்,   நாவல்கள்  பல படித்திருக்கின்றோம்.    அங்கு வாழ்ந்த  நடுத்தரமக்களின் பெண்பிள்ளைகள்   சீதனம்,   சாதி  அகம்பாவம்,   பொருளாதார  ஏற்றதாழ்வு   முதலான  காரணிகளினால்  எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்   என்பதற்கு  அங்கு  தயாரிக்கப்பட்ட  மூன்று படங்கள்   சான்றாகின்றன.
அவை:    பொன்மணி,    குத்துவிளக்கு,   வாடைக்காற்று.
இப்படங்களின்   பாடல்கள்  இன்றும்  காதுகளில்  ஒலிக்கின்றன.
பொன்மணியில்   கதாநாயகியாக  நடித்திருக்கும்  சுபாஷினிக்கு கமலினி   செல்வராஜன்  குரல்  கொடுத்திருக்கிறார்.   பாடல்களை சில்லையூர்    செல்வராஜன்  இயற்றியிருக்கிறார்.    பரராஜசிங்கத்தின் குரலிலும்    மேலும்  சில  பெண்களின்  குரல்களிலும்  அவை ஒலிக்கின்றன.
இதில்   நடித்த  எனக்குத் தெரிந்தவர்கள்  படித்தவர்கள்,  பேராசிரியர்கள்,   நாடகக்கலைஞர்கள்.   நந்தி,   திருநாவுக்கரசு, சில்லையூர்,   கமலினி,  காவலூர் ,  பரராஜசிங்கம்     ஆகியோர் மறைந்துவிட்டனர்.
 பவாணி ரீச்சர்   எங்கள்  ஊரில்  பணியாற்றியவர்.  தற்பொழுது கனடாவில்.   கமலா  தம்பிராஜா  வீரகேசரியிலும்  தகவல் திணைக்களத்திலும்   பணியாற்றியவர்.   இவரும்  தற்பொழுது கனடாவில்.   காவலூரின்  மனைவி  சிட்னியில்.  குழந்தை சண்முகலிங்கம்,    மௌனகுரு,  சித்திரலேகா ,  சர்வமங்களம் கைலாசபதி,    பத்திராஜா  இலங்கையில்.   சோக்கல்லோ  சண்முகம் வெளிநாடொன்றில்    இருப்பதாக  அறிகின்றேன்.   கதாநாயகனாக நடித்த   பாலச்சந்திரன்  பற்றிய  தகவல்  தெரியாது.
பத்திராஜா   எனது  இனிய  நண்பர்.   இவர்  பற்றியும்  இவர்  எடுத்த யாழ்ப்பாணம்  ( In Search of a Road)  பற்றிய  ஆவணப்படம்  பற்றியும்  முன்னர் எழுதியிருக்கின்றேன்.   அவுஸ்திரேலியாவுக்கு  அவர் வரும்பொழுதிலெல்லாம்  சந்திக்கும்வேளையில்  பொன்மணியும் எமது   உரையாடலில்  வந்துவிடுவாள்.
பொன்மணி   படத்தை  மீண்டும்  பார்க்கவேண்டும்  என்று  காவலூர் ராஜதுரை  இருந்த  காலத்தில்  பல தடவை  கேட்டிருக்கின்றேன்.  அவர் பத்திராஜாவைத்தான்    கேட்கவேண்டும்  என்பார். பத்திராஜாவைக்கேட்டால்    உதட்டைப்பிதுக்குவார்.
காவலூர்   சிட்னியில்  மறைந்த வேளையில்  அந்தப்படத்திலிருந்து  சில பாடல்களையும்   மற்றும்  சில  ஈழத்துப் பாடல்களையும்  மரண  இறுதி அஞ்சலி   நிகழ்வில்  ஒலிபரப்பினார்கள்.   திரைப்படக்கலைஞர்  ஈழன் இளங்கோ   அவர்கள்  மீண்டும்  பொன்மணியைத்தேடி  டிஜிட்டல் முறையில்   காண்பிக்க  முயற்சிகளை  மேற்கொண்டார்.
 எதிர்பாராத  விதமாக  நேற்று  முன்தினம்  நடுச்சாமத்தில்  பொன்மணி  எனது   கணினியிலும்  கனவிலும்  வந்தாள்.
கதையில்   அவள்  தனது  காதலனுடன்  ஓடியதுபோன்று,  அன்று திரையரங்குகளைவிட்டு   ஓடியது போன்று,  இன்று  அவள் எம்மைவிட்டு   ஓடவில்லை.    மனதில்    நிற்கிறாள்.    உலகெங்கும் வாழும்    ஈழத்துக்கலைஞர்கள்,    பொன்மணியில்    நடித்தவர்கள் திரைப்பட ரசிகர்கள்   மீண்டும்   பொன்மணியை   பாருங்கள்.
இன்றும்    எமது    ஈழத்தில் -  பாதையில்    எத்தனை   ராதைகள் பேதைகள்----?