.
பேய் படங்களுக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் தற்போது டிரண்டில் இருப்பது ரீமேக் படங்கள் தான். அதிலும் குறிப்பாக மலையாள படங்களின் தாக்கம் அதிகம் என்றே சொல்லலாம். அவ்வகையில் Vellimoonga எனும் மலையாள படத்தின் தழுவலே இப்படம்.
கதைக்களம்
தனது தாத்தா, அப்பா என யாரும் அரசியலில் சாதிக்காததை தான் சாதிக்க நினைக்கும், அதே சமயம் 40 வயதை தாண்டியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு முத்தின கத்திரிக்காயான நாயகன், எப்படி அரசியல், கல்யாணம் என இரண்டிலும் வெற்றி அடைய போராடுகிறார் என்பதே கதை.
படத்தை பற்றிய அலசல்
நாயகன் சுந்தர் சி முத்தின கத்திரிக்கா பாத்திரத்தில் நச் என பொருந்துகிறார். அரசியல் தில்லு முல்லு, லேட் பிக்கப் காதல் என அனைத்திலும் சூப்பர். பூணம் பாஜ்வா பார்க்க லட்சணமா இருக்காங்க, ஆனால் அவ்வளவு பெரிய வாய்ப்பில்லை நடிப்பதற்கு. சதீஸ் புது கெட் அப்பில் பட்டையை கிளப்பும் குறும்பு தனமான வசனங்கள் மூலம் கை தட்டல்களை அள்ளுகிறார். விடிவி கணேஷ், சிங்கம் புலி இரு அரசியல் கட்சிகள் சார்ந்த அண்ணன் தம்பியாக வந்து ரசிக்க வைக்கிறார்கள். இவர்களை தவிர யோகி பாபு, ரவி மரியா, ஸ்ரீமன், சிங்கப்பூர் தீபன், கிரண் என அனைவரும் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.
ஆர் ஜே பாலாஜியின் கலகலப்பான வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கிறது, பின் சற்று மெதுவாக பிக்கப் எடுக்கிறது இந்த காமெடி எக்ஸ்பிரஸ். அரசியல் சார்ந்த படம் என்பதால் இயக்குனர் வெங்கட் ராகவனுக்கு விளையாட களம் பெரிது, அதை நன்றாக பயன்படுத்தி திரைக்கதையில் நகைச்சுவையை தாராளமாக வைத்திருக்கிறார். குறிப்பாக சுந்தர் சி தர்ணா செய்யும் காட்சி, யோகி பாபு சுந்தர் சியை கடத்தும் காட்சி, பூணம் பாஜ்வாவை பெண் கேட்கும் காட்சி அதில் வரும் குட்டி பிளாஷ் பேக் என சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை.
அரசியலை சாடி வரும் அனைத்து வசனங்களும், காட்சிகளும் நம் இயல்பு வாழ்க்கையில் ஒப்பிட்டு கொள்ளும் படி இருந்தது படத்தின் பெரும் பலம். ஆனால் சுந்தர் சி யின் கட்சி சின்னமே டக் என மாறும் அளவிற்கா லாஜிக் மீறல் வைப்பது. சில காட்சிகள் ஏற்கனவே பார்த்தவை என்பதால் சற்று சுவாரஸ்யம் குறைகிறது. என்னதான் முதல் பாதி அளவிற்கு 2ம் பாதி இல்லை என்றாலும் க்ளைமேக்ஸில் வரும் டுவிஸ்ட்கள் ரசிக்க வைக்கிறது.
டெக்னிக்கலாக பெரிதாக இல்லை என்றாலும் அவ்வளவாக குறை சொல்வதற்கு இல்லை. சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். கானா பாலாவின் குரலில் ஒலிக்கும் அரசியல் பாடல் வரிகள் ரசிக்க வேண்டியவை.
க்ளாப்ஸ்
அரசியல் சாடல் வசனங்கள், சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போகும் அளவிற்கு நகைச்சுவையான திரைக்கதை, ரசிக்க வைக்கும் திருப்பங்கள்.
பல்ப்ஸ்
லாஜிக் மீறல்கள், சில பார்த்து பழகிய காட்சிகள், சில இடங்களில் அடுத்தது என்ன என்று யூகிக்க கூடிய காட்சிகள்.
மொத்தத்தில் இந்த முத்தின கத்திரிக்கா நகைச்சுவை ரசிகர்களுக்கு செம விருந்து!