இலங்கைச் செய்திகள்


யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம பகுதி : தீ கட்டுபாட்டுக்குள் : இராணுவ வீரர் பலி, 47 பேர் படும் காயம் : நீரை பருகும் போதும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் : இரங்கல் வெளியிட்ட ஜனாதிபதி.!

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

 'குளியல் அறையில் இருந்தவாறு ஓடி வந்தேன்" கொஸ்கம விபத்து : திகில் சம்பவத்தை விளக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

 கொஸ்கமவுக்கு ரணில், சந்திரிகா விஜயம்.!

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் பசில் கைது

 பசில் பிணையில் விடுதலை

20 மணித்தியாலங்கள்  உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி

மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

புனித ரமழான் நோன்பு ஆரம்பம்.!

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

அனுரவை சந்திக்க மகனுடன் வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த

முகாமை ஏன் சாலாவில் அமைத்தோம்? : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்:  வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் :  கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள்

கொஸ்கம புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பம்

களுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்.!   

பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்.!

நல்­லி­ணக்கம் ஜன­நா­ய­கத்­துக்கு பிரிட்டன் உதவும்

முன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட  வாகனங்கள் மாயமாகிவிட்டன

வோக்ஸ்வாகன் கார் நிறுவனம்  2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம்

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்








யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம பகுதி : தீ கட்டுபாட்டுக்குள் : இராணுவ வீரர் பலி, 47 பேர் படும் காயம் : நீரை பருகும் போதும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசம் யுத்தம் களம் போன்று காட்சியளிக்கின்றது. மேலும் அவிசாவளை பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  
இதேவேளை கொஸ்கமவில் ஏற்பட்ட  தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுமாயின் 117 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விபத்தால் அப்பகுதியில் இருந்த பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேதமாகியுள்ளன.
மேலும் குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் படும் காயமடைந்துள்ளதுடன் 39 பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
மேற்படி வெடிப்புச் சம்பவத்தால் இராணுவ முகாமிலிருந்து 6 கிலோ மீற்றர் தொலைவு வரையில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுத களஞ்சியமானது இராணுவத்தின் பிரதான களஞ்சியங்களில் ஒன்றாகும். இங்கு ரீ - 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் முதல் ஆர்.பி.ஜி. மல்டி பெரல் தோட்டாக்கள் வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை 5.42 மணிக்கு ரீ 56 ரக தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் முதலில் இரு வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மறு பகுதியில் மேலும் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இந் நிலையிலேயே தீ பரவ ஆரம்பித்து பாரிய அதிர்வுகளுடன் தொடர்ச்சியாக வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் இலத்திரனியல் மற்றும் இயந்திர படைப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இந்த இராணுவ முகாம் உள்ளது.
இராணுவ உள்ளக தகவல் ஒன்றின் படி வெடிப்புக்கள் மற்றும் அதன் அதிர்வுகளால் நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன் 39 காயமடைந்துள்ளனர். 10 சிவில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாம்.
இந்தநிலையில் குறித்த தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
இதேவேளை வெடிப்புக்கு உள்ளான பொருட்கள் பிரதேசத்தின் பல பகுதிகளில் காணப்படுவதாகவும், அவற்றைக் கண்டால் கைகளால் தொட முயற்சிக்க வேண்டாம் என்று  மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன்,குறித்த பொருட்களை கண்டால் 0113818609 அல்லது 0112434251 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அவிஸாவலை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இன்றையதினம் மூடப்படுள்ளதுடன், வெடிப்பு நிகழ்ந்துள்ள பகுதி வீதிகள் மூடப்பட்டுள்ளமையால் வாகன சாரதிகளுக்கு மாற்று வீதிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் நிலவுவதால் குறித்த பகுதியில் சுவாசிப்பதால் சுவாசக்கோளாறுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் ஈரத்துனியால் முகத்தை மறைத்து சுவாசிப்பதே சிறந்தது அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி













இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் : இரங்கல் வெளியிட்ட ஜனாதிபதி.!

06/06/2016 அவிசாவளை கொஸ்கம - சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். 
பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை விரவாக செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 










தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு


06/06/2016 அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரித்த அவர்,
சிறிய வெடிப்புச் சம்பவங்கள்
முகாமில் ஆயுதங்கள் இருந்த பகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்னமும் குறித்த பகுதியில் சிறிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனினும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர படை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
விஷேட ரோந்து நடவடிக்கை
சலாவ இராணுவ முகாமின் உட்பகுதியிலும் கொஸ்கம பிரதேசத்திலும் இராணுவத்தினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளியேறுங்கள்
முகாமை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரதேசங்களில் சிதறுண்டு காணப்படும் வெடிப்பொருட்களை எக்காரணம் கொண்டும் கையில் எடுக்க வேண்டாம் என முக்கய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
வெடிப்பொருட்கள் கிடக்கும் இடத்திலிருந்து மிக நீண்ட தூரத்திற்கு அப்பால் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்கு
கொஸ்கம பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அவசர தேவைகள் இருக்குமாயின் 0112434251இ 0113818609  என்ற இராணுவத்தினரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
7500 பேர் இடம்பெயர்வு
சலாவ இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளிலிருந்து 7500 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு, தண்ணீர் உட்பட அனைத்து தேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம்
கொஸ்கம மக்கள் யாருக்காவது அவசர தேவைகள் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி பிரதமர் பணிப்பு
சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி 










நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!


06/06/2016 முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். 
தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று  தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது.
இது குறித்து, ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










 'குளியல் அறையில் இருந்தவாறு ஓடி வந்தேன்" கொஸ்கம விபத்து : திகில் சம்பவத்தை விளக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

06/06/2016 அவிசாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் தோட்டாக்கள் அடங்கிய ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பான திகில் அனுபவத்தை பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எமது வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட இராணுவ வீரர்கள் தகவல் தருகையில்,
நான் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென பெரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. உடனே வெளியில் வந்து பார்த்தபோது தீ ஏற்படுவதை கண்டு சத்தமிட்டுக்கொண்டு வெளியில் ஓடி வந்தேன் என்றார். 
மற்றுமொரு வீரர் குறிப்பிடுகையில், 
நான் குளியல் அறையில் இருந்தேன். தீப்பற்றியெரிவதாக விடுதியில் இருந்தவர்கள் கூச்சலிடும் சத்தத்தை கேட்டேன். செய்வதறியாது உடனே மேனியில் இருந்த ஆடையுடன் வெளியில் ஓடினேன் என்றார்.  
பாதிக்கப்பட்ட பொது மக்கள் கருத்து வெளியிடுகையில்,
நான் வீட்டுக்குள் இருந்தேன் திடீரென சத்தம் ஒன்று கேட்டது. வெளியில் வந்து பார்த்த போது இராணுவ முகாமுக்குள் இருந்து பெரும் புகையுடன் தீ எழும்புவதை கண்டேன். என்னவென்று அறியவில்லை. வீதியில் எல்லோரும் ஓடுவதை கண்டேன். நானும் ஓடினேன் என்றார். 
மற்றுமொரு பொது மகன் குறிப்பிடுகையில், 
இராணுவ வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் வீட்டை விட்டு வெளியேறுமாறு கோரினர். நாங்களும் கொழும்பு பிரதேசத்தை நோக்கி பிரதான பாதை வழியாக ஓடிவந்தோம். பெரும் புகை மூடிருப்பதை கண்டேன் என்றார்.  நன்றி வீரகேசரி 












கொஸ்கமவுக்கு ரணில், சந்திரிகா விஜயம்.!

06/06/2016 அவிசாவளை - கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களையும் பிரதமர் நேரில் சென்று சந்திக்கவுள்ளார். 
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  அத்தனகல்ல விகாரைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 











நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் பசில் கைது

06/06/2016 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி   அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்வானை  பகுதியில் 17 ஏக்கர்  காணி விவகாரம் தொடர்பில் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி 


 பசில் பிணையில் விடுதலை

06/06/2016 நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி   அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டார்.


பூகொடை நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.



மல்வானை  பகுதியில் 17 ஏக்கர்  காணி விவகாரம் தொடர்பில் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக  வந்த நிலையில்  இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது    நன்றி வீரகேசரி 










20 மணித்தியாலங்கள்  உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி

07/06/2016 கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.  
பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 20 மணித்தியாலங்கள்  உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். 
கர்ப்பணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என பலர் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ வசதிகளையும் உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன கோரிக்கை தெரிவித்தார்.  
அவிசாவளை கொஸ்கமுவ, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட விபத்தை நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் வெடி பொருட்கள் விழுந்துள்ள  நிலையில் அவை வெடிப்புக்குள்ளாகியுள்ளதா ? அல்லது வெடிக்காத ஆயுதங்களால் என்பது மக்களுக்கு தெரியாதுள்ளது. 
ஆகவே உடனடியாக இராணுவத்தினரை பயன்படுத்தி குறித்த பகுதியிலுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அப்புறப்படுத்தும் வேலையினையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.     நன்றி வீரகேசரி 












மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

07/06/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும்  நிதிமோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.    நன்றி வீரகேசரி 









புனித ரமழான் நோன்பு ஆரம்பம்.!

07/06/2016 நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றிலிருந்து புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
மேலும், ஓமான், ஈரான் மற்றும் மொரோக்கோ உள்ளிட்ட சில நாடுகள் இன்று முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 
இதேவேளை ஐக்கிய அரபு நாடுகள், சோமாலியா, கோமோரஸ் தீவுகள், எத்தியோப்பியா, இந்தோனேஷியா, மலேஷியா, துருக்கி, மாலைத் தீவு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 




கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

07/06/2016 கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டிற்கு  எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை சட்டத்தரணி பி. லியனாராச்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.



சம்பூர் மகா வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழாவின் போது கடற்படை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் அவமதித்த காரணத்திற்காக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி 










அனுரவை சந்திக்க மகனுடன் வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த

07/06/2016 றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில்,
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். 
கொஸ்கம சாலாவ வெடிப்புச்சம்பவம் குறித்து அவர் தெரிவிக்கையில், அரச பாதுகாப்பு தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் திடீரென தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 










முகாமை ஏன் சாலாவில் அமைத்தோம்? : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்:  வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் :  கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள்

08/06/2016 கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் களஞ்சியப்படுத்தும் பாதுகாப்பான இடமாக சாலாவ பகுதி காணப்பட்டது. யுத்த காலத்தில் இந்த இடத்தில் முகாமை அமைப்பதற்கு ஏதுவான சகல காரணிகளும் சிறப்பாக காணப்பட்டமையாலே இங்கு முகாமை அமைத்தோம். எனினும் இவ்வாறான ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு இராணுவத்தினரில் பக்கத்தில் சிறு தவறு காணப்படலாம். இதுதொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என என்று இராணுவ பேச்சாளர் பிரிகெடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
இதேவேளை சாலாவ பிரதேச மக்கள் வெடிப்பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்து செல்கின்றனர். இதனை யாரும் எடுத்துச் செல்ல கூடாது. மிகவும் ஆபத்தான விடயமாகும். இவ்வாறு எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் மேலும் குறிப்பிடுகையில், 
சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியம்  வெடித்தமை   தொடர்பில் பல மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.    முப்படையினர்  விசாரணை  குழு ஒன்றை அமைத்துள்ளனர். இராணுவ தளபதியும் இரகசிய பொலிஸாரைக் கொண்டு விசாரணை நடத்துகின்றார்.  சிவில் விசாரணiயும் நடைபெறுகின்றது. 
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றார்
கடந்த ஐந்தாம் திகதி 5.45 மணியளவில்   சாலாவ முகாமில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதும்   இராணுவ தளபதி  உடனடியாக  சம்பவ இடத்துக்கு சென்று  நிலைமையை ஆராய்ந்தார். 
உயிரிழப்புகள் குறைவு
இராணுவம்  கவனமாக செயற்பட்டமையினால் உயிரிழப்புக்கள் குறைவடைந்தன.   ஆனால் உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.  அவ்வாறு உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்குமாயின்   அதனை மறைக்கவும் முடியாது. முதலில் ஊடகங்களுக்கு செய்தி வந்திருக்கும். 
நினைவுச் சின்னமாக எடுத்து செல்கின்றனர்
  கொஸ்கம பகுதியில் சிதறிக்கிடக்கின்ற ஆயுதங்களை  மக்கள்   நினைவுச் சின்னமாக வைத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு செய்யவேண்டாம். இவை இராணுவத்துக்கு உரிய பொருட்கள்.    இராணுவம் உரிய முறைமைகளை பின்பற்றி  இவற்றை அழிக்கும்.  மேலும் சிதறிக்கிடக்கும் ஆயுதங்கள்  ஒருவேளை வெடிக்கலாம்.  
கேள்வி: மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடத்தில் ஏன் ஆயுத களஞ்சியம் அமைக்கவேண்டும்? 
பதில்  கடந்த இரண்டு வருடங்களாக  இதனை மாற்றியமைப்பதற்கு  நடவடிக்கை திட்டமிட்டிருந்தோம்.  யுத்த காலத்தில்  கப்பல்களிலிருந்து ஆயுதங்களை  உடனடியாக களஞ்சியப்படுத்த  இதனை விட சிறந்த இடம் வேறு எங்கும் காணப்படவில்லை.  அதனால்  அதனை அமைத்தோம். மேலும் முகாம் அமைப்பதற்கான சகல விதமான காரணிகளுக்கும் இந்த இடம் பொறுத்தமானதாக இருந்தது. எதிர்வரும் காலங்களில்  மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பிரதேசங்களில்   முகாம்களை அமைப்போம். 
கேள்வி தற்போதும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா?  
பதில் 
சிறு சிறு  வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. நேற்று மாலையும் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது. ஆனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. மேலும் இன்று குறித்தப் பகுதியில் புகை மண்டலம் காணப்பட்டது. எனினும் அங்கு முப்படை உள்ளது.   தேவையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
கேள்வி ஏன் உளவுப் பிரிவினர் விசாரணை செய்யவில்லை. 
பதில் முப்படையினர் விசாரணை நடத்தும்போது உளவுப் பிரிவும் அதில் உள்ளடங்கும். 
கேள்வி இதுதான் பெரிய ஆயுத களஞ்சியமா? 
பதில் சில விடயங்களை பொது மக்களுக்கு கூறுவது பொருத்தமில்லை. இது பெரிய  ஆயுத களஞ்சியமா? சிறிய ஆயுத கஞ்சியமா? என்று  கூற முடியாது.  அது  தேவையற்ற விடயமாகும்.   சம்பவம்  தொடர்பில் கவலையடைகின்றோம்.  தேவையான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக இரகியங்கள் இதன் மூலம் வெளியாவதோடு நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்குமு;.
கேள்வி இந்த வெடிப்பு சம்பவத்தால்  இராணுவம் பலவீனம் அடையுமா? 
பதில்  அவ்வாறு  இராணுவத்தினர் எந்தவகையிலும்  தளர்வடையவில்லை.  30 வருட யுத்தததை நாங்கள் முடித்தவர்கள்.  எமக்கு  சிறந்த மன தைரியம் காணப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் எந்த   சிக்கலும் இல்லை. அத்துடன் இந்த சம்பவத்தினால் தேசிய  பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும்  இல்லை. அவ்வாறு ஏதாவது பிரச்சனை ஏற்படுமென்றால் அரசாங்கம் நிச்சயம் எமக்கு உதவும்.
கேள்வி வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே? 
பதில்  வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு  கோரப்பட்டுள்ளது. நானும் அந்த செய்தியை பார்த்தேன்.  இங்கு ஒரு விடயத்தை  முக்கியமாக குறிப்பிடவேண்டும். 
அதாவது இராணுவத்தினர்  மக்களுக்கு சேவையாற்றும்போது  இனம் மதம் பார்ப்பதில்லை.  யார் ஆபத்து சந்தித்துள்ளனரோ  அவர்களை பாதுகாப்பதே எமது பொறுப்பாகும்.    உதாரணமாக  அரநாயக்கவில் அனர்த்தம் ஏற்பட்டபோது கேகாலை மாவட்டத்தில்  இராணுவ முகாம் இருந்ததால்   மீட்பு பணிகளை முன்னெடுத்து மக்களை காப்பாற்றினோம். 
எனவே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால்   அங்கு மக்களுக்கு ஏதாவது இடர் ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டாலோ யார் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது?  மக்களின் பாதுகாப்புக்காகவே நாங்கள் செயற்படுகின்றோம். 
கேள்வி ஆறு வருடங்களில் ஐந்து தடவைகள் ஆயுத களஞ்சியம் வெடித்துள்ளது?  என்ன காரணம்? 
பதில் ( ராஜித்த)    இந்தியாவிலும் இவ்வாறு  அண்மையில் இராணுவ ஆயுத களஞ்சியங்கள் வெடித்துள்ளன. இது எந்த நாட்டிலும் நடக்கும்.   ஆனால்  வெளிநாடுகளில் இவ்வாறு நடக்கும்போது யாரும் அரசாங்கத்தை விமர்சிக்கமாட்டார்கள்.  மாறாக  என்ன நடந்தது என்றே ஆராய்வார்கள். 
கேள்வி இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டவையா? 
பதில்  (ராஜித்த) அவ்வாறு அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை.  
கேள்வி பாதிக்கப்பட்ட வீடுகள் ? 
பதில் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தும். 
நன்றி வீரகேசரி











கொஸ்கம புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பம்

08/06/2016 கொஸ்கம பகுதியில்  சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள  குப்பைகளை அகற்றுதல், பாதிக்கப்பட்ட நீரினை சுத்தப்படுத்தல் மற்றும் சேதமடைந்த பொதுமக்களின்  சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் இடம்பெற்று வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த புனரமைப்பு பணிகளில் இலங்கை இராணுவம் உட்பட கடற்படையினர், பொலிஸார்,  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இலங்கை பொறியியலாளர் பிரிவு, மின்னியல் பொறியியலாளர் பிரிவு மற்றும் இயந்திரவியல் பிரிவு இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சேதமடைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காக இரண்டு இராணுவ  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     நன்றி வீரகேசரி











களுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்.!   

08/06/2016 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப் பட்டியணிந்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கே.தனபாலரெத்தினத்திடம் கிராம சேவை அதிகாரிகளினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.   நன்றி வீரகேசரி










பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்.!

08/06/2016 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 
இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 25.5.2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி











நல்­லி­ணக்கம் ஜன­நா­ய­கத்­துக்கு பிரிட்டன் உதவும்

08/06/2016 இலங்கை அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்தின் இலக்­கு­களை அடை­யவும் ஜன­நா­யகத்­தையும் மனித உரி­மை­யையும் பலப்­ப­டுத்­தவும் பிரிட்டன் தொடர்ச்­சி­யாக தனது முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்கும் என்று இலங்­கைக்கு வருகை தந்த பிரிட்­டனின் உயர் இரா­ஜ­தந்­தி­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.
பிரிட்­டனின் இரா­ஜ­தந்­திர சேவையின் பிர­தானி சேர் சீமன் மெக்­டொனல்; மற்றும் உயர் இரா$­தந்­திரி மாக் லவ்கொக் ஆகியோர் நேற்று முன்­தினம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த விஜ­யத்தின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க உள்­ளிட்ட பல்­வேறு அமைச்­சர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.
இந்­நி­லையில் இந்தப் பிர­தி­நி­தி­களின் விஜ­யத்தின் முடிவில் பிரிட்­டனர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அந்த அறிக்­கையில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:-
இலங்­கையின் நல்­லி­ணக்­கத்தின் முன்­னேற்றம் குறித்து ஆரா­யவே பிரிட்­டனின் உயர் இரா­ஜ­தந்­தி­ரிகள் இரு­வரும் இலங்கை வந்­தி­ருந்­தனர். இதன் போது இலங்­கையின் நல்­லாட்சி, ஊழ­லுக்கு எதி­ரான செயற்­பா­டுகள், கன்­னி­வெடி அகற்றும் நட­வ­டிக்­கைகள் மற்றும் பொலிஸ் மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டான சந்­திப்­பின்­போது இலங்­கையின் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் மற்றும் நல்­லி­ணக்­கத்தை நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விக்கும் திட்­டங்­களை பிரிட்டன் பிர­தி­நி­திகள் வர­வேற்­றி­ருந்­தனர். வர­வேற்றி அத்­துடன் இலங்கை தனது நல்­லி­ணக்க இலக்­கு­களை அடைந்­து­கொள்­வ­தற்கு பிரிட்டன் தொடர்ந்து ஆத­ரவு வழங்கும் என்று அவர்கள் உறு­தி­ய­ளித்­தனர்.
இதே­வேளை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனை சந்­தித்­தி­ருந்த பிரிட்டன் பிர­தி­நி­திகள் அர­சியல் தீர்வு தொடர்பில் தற்­போ­தைய நிலைமை குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்­கொள்ளும் சவால்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்­டனர்.
பிரிட்­ட­னா­னது பொலிஸ் மறு­சீ­ர­மைப்­புக்கு உதவி வழங்கி வரு­கி­றது. அதா­வது உள்ளூர் பாது­காப்பை ஊக்­கு­விக்­கவும். யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான ஸ்திர நிலையை உரு­வாக்­கவும், பிரிட்டன் உத­வு­கி­றது. இந்த விட­யங்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்­கவை பிரிட்டன் பிர­தி­நி­திகள் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.
அத்­துடன் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், மற்றும் இந்த சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­த­னு­டனும் பிரிட்டன் பிர­தி­நி­திகள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­த­துடன் காணி­களை மீள­ளிக்கும் விவ­காரம் மற்றும் மீள்­கு­டி­யேற்ற நிலை­மைகள் தொடர்பில் கேட்­ட­றிந்­து­கொண்­டனர். பிரிட்டன் அர­சாங்கம் கன்­னி­வெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்குதல் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் அரசாங்கம் நல்லிணக்கத்தின் இலக்குகளை அடையவும் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பலப்படுத்தவும் பிரிட்டன் தொடர்ச்சியாக தனது முழுமையான பங்களிப்பை வழங்கும்.   நன்றி வீரகேசரி









முன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட  வாகனங்கள் மாயமாகிவிட்டன

09/06/2016 முன்னைய ஆட்சியின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் மாயமாகவே உள்ளன. இது தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உண்மை தகவல்களை விரைவில் வெளிப்படுத்துவோம். . மேலும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி உள்ளடங்களாகவே அமைச்சர்களுக்கு கார் கொள்வனவு செய்வதற்கு 118 கோடி செலவிடப்படுவதாக  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னைய ஆட்சியின் போது அமைச்சுக்களினால் உபயோகித்த வாகனங்கள் இன்னும் உரிய இடங்களில் ஒப்படைக்கவில்லை. . ஒரு சிலர் வாகனங்களை ஒப்படைத்த போதிலும் அதனை உரிய முறையில் பாவனை செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. . இதன்காரணமாக  புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாகனங்கள் இல்லாமல் உள்ளது. இதன்காரணமாகவே புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்தோம். தற்போதைய சில அமைச்சர்கள் வாடகை அடிப்படையிலேயே வாகனங்களை பாவனை செய்கின்றனர். வாடகை அடிப்படையில் நோக்கும் போது அரசாங்கத்திற்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது. எனவே புதிதாக கார்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்தோம்.
அத்துடன் புதிய கார் கொள்வனவு செய்யப்படும் போது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தியே கார் கொள்வனவு செய்துள்ளோம். இதன்காரணமாகவே 118 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. . நாம் எதனையும் மறைமுகமாக. செய்யவில்லை. 
இதேவேளை முன்னைய ஆட்சயின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்களை மீள செலுத்தாதவர்கள்  தொடர்பில் தீவிரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இது தொடர்பிலான உண்மையான நிலைவரத்தை விரைவில் பகிரங்கப்படுத்துவோம். என்றார்.   நன்றி வீரகேசரி







வோக்ஸ்வாகன் கார் நிறுவனம்  2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம்

09/06/2016 வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி : முச்சக்கர வண்டிக்கான வரியை அதிகரித்துவிட்டு அமைச்சர்களுக்காக  கார் கொள்வனவு செய்வதற்கு கோடிக் கணக்கில் செலவிடப்படுகின்றதே இது நியாயமா?  
பதில் அவ்வாறு எண்ண வேண்டாம். யதார்த்ததை புரிந்துக்கொள்ள  வேண்டும். அமைச்சர்களுக்கு கட்டாயமாக வாகனம் இருக்க வேண்டும். இல்லையேல் தமது அன்றாட வேலைகளை செய்வது கடினமாகும். 
அமைச்சர்களுடன் கூடவே இருந்தால் உங்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடியும். அத்துடன் முச்சக்கர வண்டிக்கான வரி அதிகரித்தமைக்கு மாற்று வழிமுறையாகதான் 3 இலட்சம்   ரூபா பெறுமதியான கார்களை கொள்வனவு செய்வறத்கு தீர்மானித்துள்ளோம். 
நாட்டில் வாழும் அனைவரும் வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலின் பிரகாரமே நாம் பயணித்து கொண்டிருக்கின்றோம். 
இதன்பிரகாரம் குளியாபிட்டியவில் வோக்ஸ்வாகன்  கார் நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள்  இன்னும் இரண்டு மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்பின்னர் இலங்கையிலிருந்து கார் தயாரிப்பு செய்யப்படும். தற்போது  வோட்ஸ் வோகன் கார் நிறுவன நிர்மாணத்திற்கான  தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளன என்றார்.    நன்றி வீரகேசரி








யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது  கடமையை  இன்று காலை பொறுப்பேற்றார்.
இன்றைய தினம் சனிக்கிழமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.
இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர்  34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதலாவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஐ.ரி.கனகரட்ணத்தின் மருமகனே ஸ்ரனிஸ்லஸ் ஆவார்.
பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர் மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி