இருதலைக் கொள்ளி எறும்பு - தேவகி கருணாகரன்

.


இரண்டு நாட்களுக்கு முன் வைத்திய கன்ஃபொரன்சுக்காக நைஜீரியாவின் தலை நகர் லேகொசுக்குச் சென்ற என் கணவர் இன்றைக்கு நாலு மணிக்கெல்லாம் வந்திருக்க வேணும் . இப்போது எட்டு மணியாகியும் வரவில்லையே!! திறந்திருந்த வாசற் கதவுக்கு நடப்பதும் பாதுகாப்பு மெஷ் கதவினூடாக வெளியே எட்டிப் பார்ப்பதும்இ; திரும்பி வந்து அமர்வதுமாக இருந்த என் மனதில் பல எண்ண அலைகள் வந்து மோதின. இந்த ஆபிரிக்கா கண்டத்திலே அவருக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளை நினைத்தும் உடல் நடுங்கி வியர்த்தது.
            ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு. நைஜீரியாவின் கடுனா பிரதேசத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். எமது தாய் நாட்டில் நடந்த போரின் தாக்கத்தால் எம் போன்ற பல தமிழர் உயிருக்குப் பயந்துஇ பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நினைத்து ஊரை விட்டுப் பல நாடுகளிற்கு வெளியேறி விட்டார்கள்.  ‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்ற நிலைமை போய் இப்போ ‘உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஓடு’ என்ற நிலை ஆகிவிட்டது. தமிழரின் விதிக்கு அமைய என் கணவரும் கடுனா மாநிலப் போதனா வைத்தியசாலையில் வேலை பெற்றுக் கொண்டுஇ எம்மையும் கூடவே அழைத்துக் கொண்டு நைஜீரியா வந்து விட்டார்.
திரும்பவும் வாசற் கதவடிக்குச் சென்று மெஷ் கதவின் மேல் மூக்கை அழுத்தியபடி வாகனம் ஏதாவது வருகிறதா என பார்த்தேன். இது மார்கழி மாதம்இ; ஹமட்டான் காலம். பனியுடன் சஹாரா பாலைவனத்து தூசியும் சேர்ந்த புகார் மூன்று அடிக்கு மேல் எதுவுமே தெளிவாகத் தெரியாமல் மூடியது. உற்று உற்றுப் பார்த்தேன் வீட்டைக் கடந்து ரோட்டிலே மோட்டார் வண்டிகளின் வெளிச்சம் தூசி படிந்த பனி மண்டலத்தின் ஊடாக ஒளி இழந்து மங்கலாக மின்னியது. ‘ஊம்’ பெருமூச்சு விட்டபடிஇ லேசாக கண்களில் துளிர்ந்த நீரை துடைத்தபடி திரும்பவும் சோபாவில் வந்து அமர்ந்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன்இ இரவு ஒன்பது மணி. தலைமைஇ புரொஃப்சர் அடிக்கேயையோஇ நண்பர்களையோ விசாரிப்பதற்கு அல்லது உதவி கேட்பதற்கு அந்தக் காலத்தில் கடூனாவில் வீட்டுக்கு வீடு தொலைபேசி இருக்கவில்லை. கையடக்க தொலை பேசியைப் பாவனைக்கு  வராத காலம் அது.


“அம்மா! அப்பா எப்ப வருவார்……? பசிக்குதுஇ” எனச் சிணுங்கிக் கொண்டு வந்து என்னை கட்டிப் பிடித்தாள் சின்னவள் வருணி.
“ ஐயோ வருணி! அப்பா இன்னும் வரல்லை என்ற கவலையிலே சாப்பாட்டை மறந்திட்டேன். வாங்கோ சாப்பிடுவோம்இ” என மூத்தவள்இ கவிதாவையும் அழைத்துஇ அவர்களுக்கு உணவைப் பரிமாறி நானும் கொஞ்சம் ஏதோ வாயில் போட்டுக் கொண்டேன்.
“பத்து மணியாகிறது நாளைக்குப் பள்ளிக்கூடம். போய் படுங்கோஇ” என அவளையும் மூத்தவள் கவிதாவையும் படுக்கைக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் காலை ஸ்டுவேர்ட் (ளவநறயசன) வந்து கழுவ வேண்டிய பாத்திரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வைத்துஇ குசினியையும் ஒதுக்கி விட்டுஇ ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். ஆனால் என மனமோ பலதையும் நினைத்து கலங்கியது.
எங்கள் ஊரிலே நடக்கிற போரிலிருந்து தப்புவதற்காக இங்கே வந்தோம். ஆனால் இப்போ ஏன் வந்தோம் என்று இருக்கிறது. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்ற பழ மொழி எமக்கு பொருந்துமோ என்னவோ.  நல்ல சம்பளம் அதிலே பாதியை ஊருக்கு அனுப்பலாம்இ குடியிருப்பதற்கு தளபாடங்களோடு பெரிய வீடு. பாவிப்புக்கு வாகனம்இ முக்கியமாக எங்களைஇ தமிழரை குறி வைத்து தாக்க ஒருவருமில்லை. ஆனால்…. எங்கட ஊரைப்போல வருமா…..? இங்கே எங்கட சொந்தங்கள் இல்லையே. இங்கு வாழும் இனத்தின் பழக்க வழக்கங்கள் எமக்கு ஒத்துப் போக வேணுமே. 
            வடக்கு நைஜீரியாவின் கானோ  சர்வதேச விமான நிலையத்தில் முதன் முதலில் வந்திறங்கிய போது எங்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. விமான நிலையத்தின் கட்டிடத்தை விட்டு வெளியே வரவும்  எங்களை முதலில் அன்போடு சூழ்ந்துஇ கொஞ்சி குத்தி வரவேற்ற பெருமை அந்த நாட்டு நுளம்புகளுக்குத் தான் சேரும். ’’ வசந்தி முன் காப்பாக தடுப்பு மருந்து எடுத்திருக்கிறோம் அல்லது அதோ கதி தான்இ” என்றார் என் கணவர்இ சபேசன்.

இருநூற்றி முப்பது கிலோ மைலுக்கு அப்பால் இருந்த கடூனா மாநிலத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல என் கணவர் வேலை பெற்றிருந்தஇ அகமது  பெலோ  ஆஸ்பத்திரி அதிகாரி ஒருவர்  வாகனத்துடன் வந்திருந்;தார். எனக்கு ஒரே குதூகலம். புது இடம்இ புது மனிதர்இ புது அனுபவங்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் சந்தோஷமாக குடும்பத்துடன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
வாகனமும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நைஜீரியாவின் இயற்கை காட்சிக்ளை ரசிப்போம் என ஆவலோடு வெளியே பார்த்தேன். ஆனால் அங்கே வழி நெடுக விபத்துக்குள்ளானஇ வாகனங்கள் குவிந்து குவிந்து கிடப்பதைத் தான் கண்டேன். ”விபத்துக்குள்ளான வாகனங்களை ஏன் அப்புறப்படுத்தாமல் இங்கேயே விட்டிருக்கிறார்கள்இ” என வண்டி ஓட்டுநரிடம் என் கணவர் கேட்டார். அதற்கு அவர்இ ”அதுவா இங்கே ரோட்டுகளில் வண்டி ஓட்டும் வேகத்திற்கு கட்டுப்பாடு இல்லை. அதோட இரட்டை வண்டிப் போக்கு வரத்து வசதி இல்லாததால் இந்த விபத்துக்கள் நடக்கிறதுஇ இந்த விபத்துக்குள்ளான வண்டிகளைக் கண்டாவது மனிசர் வண்டியைக் கவனமாக ஓட்டுவார்கள் என்பதற்காகத்தான்……ஹா அல்ஹா!!” என தோளைக் குலுக்கியபடி சர்வ சாதாரணமாக பதிலளித்தான் ஓட்டுநர்.  நான் முன்னால் எட்டி வண்டியின் ஸ்பீடோ மீட்டரை பார்த்தேன்.  நூற்றி ஐம்பது காட்டியது. வண்டியின் குளிர் ஊட்டி போட்டிருந்தாலும் எனக்குப் பயத்தில் உடம்பு பட்டென்று வியர்த்தது. முன்னால் அமர்ந்திருந்த கணவர் சபேசனின் முதுகில் தட்டினேன். திரும்பிப் பார்த்த அவர் கண்களிலும் பயம் தெரிந்தது.  வண்டி ஓட்டுநரிடம் ’’ஸ்லோ டவுன்இ” என மெதுவாகச் சொன்னார். அவனும் ”நோ ப்ரோப்லம்” என்று சொல்லி விட்டு அதே விசையில் வாகனத்தை ஓட்டினான்.. என்னையறியாமல் எனக்குத் தெரிந்த தேவாரங்களைப் பாடத் தொடங்கினேன்இ மகள்மாரும் என்னுடன் சேர்ந்து பாடினார்கள். கடவுள் அருளால் அன்று பத்திரமாக கடூனா வந்து சேர்ந்தோம்.  அந்த நாட்டில் கால் பதித்த முதல் அனுபவமே அப்படி.
நைஜீரியா இனத்தவர்கள் எம் இனத்தவர்களை விட தோற்றத்தில் உயரமாகவும் பருமனாகவும் இருந்தார்கள். சுருங்க சொன்னால் அந்த நாட்டின் உயிரினங்கள் எல்லாமே பெரிதாகவே இருந்தன. நுளம்புஇ பல்லி. ஓணான்இ அட்டைஇ ஈஇ கரப்பான் பூச்சி எல்லாமே தான்.  இதனால் தான் என்னவோ; ஆறு மாதத்திற்கு முன் இரண்டு மாத லீவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போய் இறங்கிய வேளைஇ கவிதாவும் வருணியும்இ; ”என்னம்மா ’கலிவர் போன லிலிப்புட்டுக்கு’ வந்திட்டோமோ?” என ஆச்சரியத்துடன் கேட்டார்கள். இங்கு பெரும்பாலோரின் நடத்தையில் செருக்கும் இறுமாப்பும் தொனித்தது. அதை அரசாங்க அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் வேலை பார்ப்பவர்களின் நடத்தையில் உணர்ந்தேன். ஒரு நாள் காலியாக இருந்த இடத்தில் ஒரு வெள்ளைக்கார பெண்மணி தனது காரை நிறுத்தவும்இ பின்னால் வந்த அந்த ஊர்க் காரன் இறங்கி வந்துஇ ”காரை எடுஇ இது என்ட ஊர். நீ முதல் வந்தாலும் இங்கே காரை நிறுத்த எனக்குத் தான் உரிமை உண்டு!” எனக் கத்தினான். அந்த அம்மாவும் பாவம் எதுவுமே பேசாது தன் வாகனத்தை  நிறுத்திய இடத்திலிருந்து ஓட்டிக் கொண்டு போய் விட்டார். இது மட்டுமா பட்டப் பகலிலே துப்பாக்கியைக் காட்டி கொள்ளை அடிப்பார்கள். மறுத்தால் அல்லது எதிர்த்தால் சுட்டுத்தள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நாடு நைஜீரியா   
கடிகாரத்தைத் திரும்பவும் பார்த்தேன்இ பன்னிரெண்டு மணி. இந்த நடு சாமத்திலே யாரைப் போய்ப் பார்ப்பதுஇ எப்படிப் போவது. படுக்கைக்குப் போகுமுன் பல்லைத் துலக்கிஇ முகத்தைக் கழுவிஇ சாமிக்கு விளக்கேற்றினேன். ”கடவுளே என் கணவருக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளப்பாஇ” என மனதார வேண்டினேன். கணவரைப் பற்றிய கவலையில் படுக்கையில்  புரண்டு கொண்டு கிடந்தேன். நான் கண்ணயர்ந்திருக்க வேணும்இ  ’அல்லாஹு அக்பர்’இ பள்ளிவாசலின் தொழுகை அழைப்புக் கேட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். 
குளித்துஇ சேலையை உடுத்திக் கொண்டேன். மகள் மாரின் அறைக் கதவைத் தட்டி அவர்களை எழுப்பிவிட்டு காலை உணவை தயாரித்தேன். மத்தியானம் இரண்டு மணிக்கெல்லாம் பிள்ளைகள் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள். ஆகையால் அவர்களுக்குப் பழமும் பிஸ்கட்டும் அவர் அவர் பெட்டிகளில் போட்டுக் கொடுத்தேன். மகள்மாரைப் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லும் காரில் நானும் ஏறி ஓட்டுநரிடம் பள்ளிக்கூடம் போகும் முன் என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போகச் சொல்லுவோமா?  அங்கே போனால் டொக்டர் அடிக்கேவிடம் இவர் இன்னும் வந்து சேராததைச் சொல்லலாம்.........  ஐ ஐயோ! இதனால் பிள்ளைகள் பள்ளிகூடத்திற்கு நேரத்திற்குப் போய் சேர மாட்டார்கள்.  ஒரு நாள் பிந்திப்போனதால் தண்டனையாக பள்ளிக்கூடம் விட்ட பின் தோட்டத்துப் புல்லைஇ வளைந்த வாளால் வெட்ட வைத்திருக்கிறார்கள். பாவம் சின்னவள் உள்ளங்கை கண்டிச் சிவந்துப் போய்இ நோ தாங்க மாட்டாது அழுது கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். அடுத்த தரம் பிந்தி வந்தால் புளாலாவாள் (சவுக்கு) அடி கொடுக்கப்படும் என எச்சரித்திருக்கினம். ”அம்மா நான் இங்குள்ள சவுக்கைப் பார்த்திருக்கிறேன்இ அதுக்கு இரண்டு நாக்குஇ” அழுகைக்கிடையே குரல் நடுங்க மகள் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆகையால் அந்த எண்ணத்தை விட்டு விட்டு அவர்களை நேரத்திற்கு பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தேன்.
அவர்கள் போன கையோடு வீட்டைப் பூட்டிக் கொண்டுஇ ஒரு டக்சியை மறித்து ஏறிப் போகலாம் என்று ரோட்டுக் கரையிலே போய் நின்றேன். சேலை அணிந்த ஒரு இந்தியப் பெண் ரோட்டுக் கரையில் நிற்பதைக் கண்டு வாகனத்திலிருந்தவர்கள் வினோதமாக எட்டிப் பார்த்தார்கள். எனக்குத் சங்கடமாகவும் கூச்சமாகவும் இருந்தது. சேலைத் தலைப்பால் தோளை போர்த்துக் கொண்டேன். இந்த ஊரிலே என் கணவரில்லாமல் வெளியே எங்கும் போவதில்லை. கார் ஓட்டப் பழகியிருந்தால் இப்படி வந்து நின்றிருக்கத் தேவையில்லை. என்னையே கடிந்து கொண்டேன்.  ஒன்றுஇ இரண்டு ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திஇ ’எங்கே போக வேணும்? நான் காரிலே கொண்டு போய் விடவா?’ என அக்கறையாக ஆங்கிலத்திலே கேட்டார்கள். ’வேண்டாம். நா கொடேஇ” என என் மனப் பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நன்றியைத் தெரிவித்தேன். ஒரு அரை மணித்தியாலத்திற்குப் பின் டக்சி வரவும்இ மறித்து ஏறிக் கொண்டுஇ ஆஸ்பத்திரி விலாசத்தை  கொடுத்தேன். இங்கு டக்சிகளில் மீட்டர் இல்லை. ஏற முன் எவ்வளவு என கேட்டுத் தான் ஏற வேணும்.  ஆஸ்பத்திரி முன்னால் இறங்கினதும் அவன் கேட்ட இருபது நயராவை கொடுத்து விட்டு விறு விறுவென உள்ளே நடந்தேன். 
வாசலில் நின்ற கூர்க்காஇ அந்த ஊர் வழக்கம் போலஇ”சனு மடம்! நீங்கள் சுகமாஇ கணவர் சுகமாஇ பிள்ளைகள் சுகமாஇ ஊரிலே எல்லாரும் சுகமா?” என அடுக்கிக் கொண்டுப் போனான். நான் குறுக்கிடாவிட்டால்இ வீட்டில் வளர்க்கும்  கால் நடைஇ பறவைகள் சுகமா என இழுத்துக் கொண்டு போயிருப்பான். நான் குறுக்கிட்டுஇ ”குட். நா கொடேஇ” என பதிலளித்து விட்டு தாமதியாது டொக்டர் அடிக்கேயை தேடிப்போய் கணவர் வீடு வந்து சேராத விசயத்தைச் சொன்னேன்.
            ”நேற்றே வீடு வந்து சேர்ந்திருக்க வேணுமேஇ” என்றவர் தொலை பேசியை எடுத்து விமான நிலைய அதிகாரி்களுடன் கதைத்தார். பின்பு லேகொசில் என் கணவர் தங்கியிருந்த ஹோட்டல் மனேஜருடன் கதைத்து விட்டுஇ “வசந்தி உங்களுடைய கணவர்இ சபேசன் லேகொசில் பிளேன் ஏற வில்லையாம். ஹோட்டலில் இருந்து செக்கவுட் பண்ணவுமில்லையாம்.  ஆகையால் அவர் இன்னும் லேகொசில் தான் இருக்கிறார்.  கவலைப்பட வேண்டாம் அவரைத் தேடிப்பிடித்திடலாம்இ” என்றவர் ஆறுதலாக என் தோளை அழுத்தினார்.
”வாங்கோ பொலிஸ் ஸ்டேசன் போகலாம்இ” என்றவர் தன் காரில் என்னை ஏற்றிக் கொண்டுஇ முதலில் எங்கள் வீட்டுக்குப் போய் என் கணவருடைய புகைப் படம் ஒன்றை எடுத்துக் கொண்டு கடூனா போலீஸ் ஸ்டேசனுக்கு போனோம்.  அங்கே நின்றுஇ டொக்டர் அடிக்கேஇ லேகொஸ் போலீசுடனும் பேசினார். கடைசியில் “கவலைப்பட வேண்டாம் வசந்திஇ அவரை தேடிக் கண்டுப் பிடித்து விடுவார்கள்.” என்றார்.  எனக்கு உலகமே இருண்டு விட்ட உணர்வு. அவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்தோ என நினைத்ததும் அழுகை பீறிக்கொண்டு வந்தது. ’’நிச்சயம் அவருக்கு ஒன்றும் ஆகியிராது. உங்களுக்காக நான் கர்த்தரைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறி என்னை வீட்டில் இறக்கி விட்டார்.  
கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் போன நான் நேரே சாமி அறைக்குப் போய்இ ’கடவுளே என் கணவருக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்று. இந்த இருண்ட கண்டத்திற்கு வந்த எங்களின் வாழ்க்கையையும் இருட்டாக்கி விடாதே.’ வேண்டிகொண்டு கண்ணைத் திறக்கவும் நேரே கண்ணனின் சிலை கண்ணில் பட்டது. வீட்டு வேலைகளை செய்கிற ஸ்டுவர்ட் கண்ணன் சிலையைப் பார்த்து இது நாங்கள் கும்பிடும் ஃபொலானி கடவுள்இ எனக் கூறியது நினைவுக்கு வந்தது. என் கணவரைக் காப்பாத்து எனக் கண்ணனிடம் வேண்டிக் கொண்டேன்.
பசியோடு பிள்ளைகள் வரப் போகிறார்களே என பட படவென ஒரு பருப்புக் கறியை வைத்துஇ ப்ரீசரில் இருந்த பாணையும் வெளியே எடுத்து வைத்தேன். சரியா இரண்டு மணிக்குஇ ’’அம்மா! அப்பா வந்திட்டாரா” என கேட்டபடி உள்ளே வந்தார்கள் என் பெண்கள். அவர்களோடு காரில் வந்த பக்கத்துத் தெருஇ சிநேகிதி கிரிஸ்டிஇ ”வசந்திஇ ஆன்டி அங்கில் இன்னுமா வரல்லே?... நான் அம்மாவை கூட்டிக் கொண்டு வாரேன்இ” எனப் புத்தக பையோடு தன் வீட்டுக்கு ஓடினாள். வாசலில் என்னைப் பார்த்ததும்இ பக்கத்து வீட்டு கரீமாஇ
”வசந்தி!!” என அழைத்தபடிஇ வீடுகளுக்கிடையே வேலி இல்லாதபடியால் கட கடவென புற் தரையைக் கடந்து வந்தார்.  கூடவே நைஜீரிய பொலீஸ் உடையில் ஒருவரும் வந்தார்.
 ”உங்கட கணவரைப் பற்றி கேள்விப்பட்டனான். ஏதாவது உதவி வேணுமா?   இவர் மூசா எனது சகோதரன்இ ஒரே அப்பாஇ வேறு அம்மா. பொலீஸ் இலகாவிலே வேலை.” என்றார் ஆங்கிலத்தில். 
”ஹலோஇ மூசா எப்படி இருக்கிரீங்கள்? சந்தித்ததில் சந்தோசம். கரீமாஇ இப்பதான் டொக்டர் அடிக்கேயோடு பொலீஸ் ஸ்டெசன் போட்டு வாறேன். கேட்டதற்கு நன்றி.  அன்றைக்கு ஒருவரை உங்க வீட்டிலே சந்தித்தேனே அவர் யார்?”
”அவரா அவரும் சகோதரன் தான் ஒரே அப்பா ஒரே அம்மாஇ” என்றார். 
முஸ்லீம் நாடென்றபடியால் கடூனா மாநிலத்தில் பலமண முறை வழக்கத்தில் இருந்தது. சில மாதங்களுக்கு முன் வருணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு கணவருக்குத் தெரிந்த அல்ஹாஜியையும் அவருடைய பிள்ளைகளையும் அழைத்திருந்தோம். அவர் காரிலும்இ அவருடைய  பிள்ளைகள் ஒரு இருபத்தி ஐந்து பேர் இருக்கும்இ பஸ்சிலும் வந்திருந்தார்கள்.  வந்திருந்த  எல்லோருடைய பெயர்களும் தனக்குத் தெரியாது என்று மூத்தவர்களுடைய பெயரை மட்டும் கூறி அறிமுகம் செய்து வைத்தார். .  எனக்கு இது ஒரு விநோதமான விசயமாகவிருந்தது. 
சிறிது நேரத்திலே கிரிஸ்டியின் பெற்றோர் தோசை சாம்பாருடன் வந்து சேர்ந்தார்கள். கிரிஸ்டியின் அப்பா மரியதாஸ் காரிலே போய் எங்கள் நெருங்கிய நண்பர் மருதநாயகத்திடம் சொல்ல அவர் எங்கள் மற்ற நண்பர்களிடம் சொல்ல எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள்.  துக்க வீடு போல எல்லோரும் கூடிக் கூடி அமர்ந்திருந்தார்கள். என் கணவருக்கு என்ன ஆகியிருக்குமோ என நினைத்து அழுது கொண்டிருந்த எனக்கு சிலர் ஆறுதல் சொன்னார்கள். சிலர் கூடிக் கூடி கதைப்பதும்இ கிசு கிசுப்பதும் என் காதில் விழுந்தது.
”சிரீலங்காவிலே இருந்து வந்த நல்லையாவோ நாகேந்திரமோ பெயர் சரியா நினைப்பில்லை இப்படித்தான் லேகொஸ் போனாராம் அதற்குப் பிறகு இன்று மட்டும் அவர் திரும்பி வரவே இல்லையாம்.”
“ஓம் ஓம் கேள்விப்பட்டனான். இந்த நாட்டிலே ஒரு குலத்தின் தலைவர் இறந்து போனால் அவரைப் புதைக்கேக்கே நூறு மனிதத் தலைகள் சேர்த்துத் தான் புதைப்பார்களாம். இவரையும் கடத்தி தலைக்காகச் சாக்கொல்லி  இருப்பாங்களோ!”
”அப்படி இருக்கமுடியாது. புதைக்கும் தலை இந்த நாட்டவனாக இருக்க வேணும்.  அதோட இந்த இருபதாம் நூற்றாண்டிலே அப்படி நடக்க வாய்ப்பில்லை. சும்மா விசர் கதை கதையாதேங்கோ. வசந்தின்ட காதிலே விழுந்தா…………? கதைத்தது போதும்.” என ஒருவர் அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 
இப்போ என்ன ஆகியிருக்குமோ என்ற நினைப்புப் போய்இ அவரைக் சாக்காட்டிப் போட்டாங்களோஇ என்ற கவலை என்னைப் பீடித்துக் கொண்டது. ஓவென அழவும் தொடங்கி விட்டேன்.
இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது வந்தவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.  கிரிஸ்டியின் அம்மா மட்டும் எங்களுக்குத் துணையாக வீட்டிலே படுத்துக் கொண்டா. எனக்கு நித்திரையே வரவில்லை. இரவு நெடுக காயத்திரி மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தேன். குளித்துஇ நெற்றியில் திருநீறு இடவும் காலை நிசப்தத்தின் ஊடாக பள்ளி வாசலின் தொழுகை ஒலி கேட்டது.
காலை ஒன்பது மணிபோல டொக்டர் அடிகே முகமெல்லாம் மகிழ்ச்சி பரவ உள்ளே வந்தார். ” வசந்திஇ உங்கள் கணவர் சுகமாக இருக்கிறார். மதியம் ஃப்லைட் எடுத்து வந்து சேர்ந்திடுவார்.” என்றார்.
எனக்குள் சந்தோசமும் நிம்மதியும் பொங்கி வழிந்தது. அவர் கையைப் பிடித்து. ”தாங்யு தாங்யு” என என் நன்றியைத் தெரிவித்தேன்.
”நோ வொரிஸ் நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு காரை அனுப்புகிறேன் நீங்கள் கடூனா விமான நிலையத்திற்குப் போய் உங்க கணவரை அழைத்து வரலாம். இந்தாங்கோ ஃப்லைட் டீடெயில்ஸ்.” என ஒரு கடுதாசித் துண்டை என் கையில் கொடுத்தார்.
விமான நிலையத்தில் என் கணவர் வெளியே வரவும்இ பிள்ளைகளும் நானும் ஓடிச் சென்று அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டோம். அவரும் கண்கள் கலங்க எங்களை அணைத்துக் கொஞ்சினார். நான் அழுதே விட்டேன்.
காரில் ஏறி புறப்படவும் என் கணவரின் மணிக்கட்டில் இருந்த கட்டுகளைக் கவனித்தேன். “என்னப்பா கையிலே? ஏன் வரவேண்டிய நாளிலே வரவில்லை?” கேள்விகளை ஒன்றின் பின் ஒன்றாகக் கேட்டேன். இதுவரை  எதுவுமே சொல்லாதிருந்தவர் அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுப்பது  போலஇ ”ஐயோ வசந்தி நாங்கள் ஏன் தான் இந்த ஊருக்கு வந்தோமோ! நான் சாவின் விளிம்பை எட்டிப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். ஒரு இன்சுரன்ஸ் கூட எடுக்காமல் இருந்திருக்கிறேனே!!”
”ஐ ஐயோ என்னப்பா நடந்தது?  சொல்லுங்கோஇ” என அவர் தோளைப் பிடித்து உலுக்கினேன்.
”வசந்திஇ இப்படியும் நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.  கன்ஃபெரன்செல்லாம் முடித்து விட்டு ஒரு டக்சியை மறித்து ஹோட்டல் ஹில்டென் போகச்சொல்லி விட்டு பின் சீட்டில் ஏறிஇ அப்பாடா என சாய்ந்து கொண்டேன். டக்சி  நிற்கவும் ஹோட்டல் வந்து விட்டது என இறங்கப் போகவும் இரண்டு காப்பிலிகள் ஒவ்வொரு பக்கமாக டக்சியில் ஏறி விட்டார்கள். என் மூக்கு மேல் துணியை வைத்து அமுக்கவும் நான் உதறித்   தள்ளப் பார்த்தேன்இ முடியவில்லை.  அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.  கண்முழித்துப் பார்த்த போது ஒரு இருட்டு அறையில் கையும் காலும் கட்டப் பட்டு தரையிலே கிடந்தேன். காலையா மத்தியானமா என்று கூடத் தெரியவில்லை. கை வொட்ச்சையும் எடுத்திட்டாங்கள். மேலுக்கு ஒரு பக்கத்து சுவரில் உயரத்தில் இருந்த சிறு யன்னல் வழியே கொஞ்சம் வெளிச்சம் உள்ளே சிந்திக் கொண்டிருந்தது. கைக்கட்டை ஒரு கூர் தகட்டிலே உரசிஇ தேய்த்துக் கழட்டப் பார்த்தேன் அப்பதான் இந்தக் காயம்இ’’ என மணிக்கட்டைத் தடவிக்கொண்டார். ”எப்படி இங்கே வந்து மாட்டிக் கொண்டேன் என தெரியாமல்இ ’யார் அங்கே என’ ஆங்கிலத்திலே பெலமாக கத்தினேன்.  அறைக் கதவைத் திறந்து கொண்டுஇ ’உஷ் ஷ்’ என்றபடி உள்ளே வந்த ஒரு காப்பிலிஇ ’சேர் சத்தம் போடாதேங்கோ. என்னைத் தெரியில்லையா?’ என ஆங்கிலத்திலே கேட்டான். நான் திகைத்து நிற்கஇ ’சேர் ஆறு மாததிற்கு முன் நான் ஓட்டி வந்த மோட்டார் வண்டி அடிபட்டுச் சாகக் கிடந்த எனக்கு ’ஒ நெகடிவ்’ என்ற அரிய வகை இரத்தம் கிடைக்கவில்லை. உங்கட இரத்தத்தை குடுத்துஇ அறுவைச் சிகிச்சையும் செய்து காப்பாத்தினீங்க. என் பெயர் முக்தாஇ நினைவில்லையா?”  தாழ்ந்த குரலில் கதைத்துக் கொண்டே என் கைஇ கால் கட்டுகளை அவிழ்த்து விட்டுஇ”சேர் வாங்கோ” என அவசரமாக கூட்டிக் கொண்டுப் போய் ஒரு காரிலே ஏத்தி ஹில்டன் ஹோட்டல் விலாசத்தைக் குடுத்தான். போகும் வழியில்இ தான் பணக்காரர்களைக் கடத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்கிற கும்பலைச் சேர்ந்தவன் என்றும் சக கூட்டாளிகள் என்னைப் பிடித்து அறையில் அடைத்தபின் தான் என்னைக் கண்டதாகவும்இ கூட்டாளிகளுக்குத் தெரியாமல் என்னைத் தப்ப வைத்ததாகவும். உடனேயே கடூனா போகச் சொல்லி ஹோட்டலில் இறக்கிவிட்டான். என்னைக் கண்டதும் ஹோட்டல் மனேஜர் பொலீஸ் காவலுடன் என்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். ஐயோ வசந்தி எப்படியான பயங்கர அனுபவம் நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது.”    
பிள்ளைகளும் நானும் அவரை அணைத்துஇ ” பத்திரமாக வந்து சேர்ந்திட்டீங்கஇ அதுவே போதும்இ” என அவரை சமாதானப்படுத்தினோம்.      
ஊருக்குத் திரும்பிப் போவோமென்றால் வட மாகாணத்திலே போரின் நிலைமை அவ்வேளை மோசமாகிக் கொண்டிருந்தது. போனால் நிம்மதியாக வாழ முடியுமா?  இரு தலைக் கொள்ளி எறும்பின் நிலை தான் எங்கள் நைஜீரியா வாழ்வு.