தமிழக சட்டசபையின் 18 ஆவது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்
பல்லுஜா நகர்வாழ் மக்கள் மீது ஐ.எஸ் தாக்குதல்
மரண அஞ்சலியிலும் சர்ச்சை : முகமது அலி.!
200 குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ; ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன்
பங்களாதேஷில் இந்து மதகுரு படுகொலை
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகியதால் அமெரிக்காவில் புதிய வரலாறு படைத்த ஹிலாரி கிளின்டன்
மலேசிய எம்.எச்.370 விமானத்தின் சிதைவுகள் மடகஸ்காரில் மீட்பு
தமிழக சட்டசபையின் 18 ஆவது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்
06/06/2016 தமிழக சட்டசபையின் 18 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளார்.
முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளதாலும்,தமிழக சட்டசபையில் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சியாக தி.மு.க தெரிவாகியுள்ளமையால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன.
நன்றி வீரகேசரி
பல்லுஜா நகர்வாழ் மக்கள் மீது ஐ.எஸ் தாக்குதல்
06/06/2016 ஈராக்கின் பல்லுஜா நகரத்தை விட்டு தப்பிச்செல்ல முற்படும் பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈராக்கின் கோட்டையான பல்லுஜா நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக ஈராக் இராணுவமானது இறுதி கட்டத்தாக்குதலை கடந்த மாதம் ஆரம்பித்திருந்தது.
குறித்த தாக்குதல்களானது தற்போது தீவிரமான நிலையில் காணப்படுகின்றது.
பல்லுஜா நகரமானது 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, இந்நகரில் 50 ஆயிரம் பொதுமக்கள் சிக்கியிருக்கக் கூடுமென நம்பப்படுகிறது. நன்றி வீரகேசரி
மரண அஞ்சலியிலும் சர்ச்சை : முகமது அலி.!
07/06/2016 குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய விவகாரம் ஒன்று அமெரிக்காவில் ஒரு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அவர்களும், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டனும் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில், முகமது அலி மரணம் குறித்து டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள தனது அஞ்சலி குறிப்பில், ”ஒரு உண்மையான மற்றும் மகத்தான சாம்பியனான முகமது அலியின் இழப்பை அனைவரும் உணர்வர்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், ”டொனால்ட் டிரம்ப் போலி தனத்தை கடைப்பிடிக்கிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன், ’டிரம்பை அவரது வார்த்தைகளையும், செயல்களையும் கொண்டே எடை போட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் வருகை புரிவதை தடை செய்ய வேண்டுமென்றும், அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சேகரிப்பதுடன் அவர்களின் முகவரிகள், பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்களையும் கணக்கெடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
மேலும், ’தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், இதனை கட்டாயமாக செயல்படுத்துவேன்’ என்றும் கூறியிருந்தார். டொனால்ட் ட்ரம்பின் இந்த கருத்து அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இஸ்லாமியரான முஹமது அலியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருப்பது சம்பிரதாயத்திற்கே என்றும் அலியின் மரணத்தை வைத்து டிரம்ப் அரசியல் செய்வதாக அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். நன்றி வீரகேசரி
200 குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை
07/06/2016 மலேசியா நாட்டில் 200 க்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரித்தானிய நாட்டு ஆசிரியரொருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள கெண்ட் நகரை சேர்ந்தவர் 30 வயதுடைய ரிச்சார்ட் ஹக்கல், மதபோதகராகவும் ஆங்கில ஆசிரியராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு மலேசியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூரில் தங்கிய ரிச்சார்ட் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகளாக ரிச்சார்ட் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக 6 மாதக் குழந்தை முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள், சிறுமிகள் என 200 க்கும் அதிகமான குழந்தைகளிடம் இவர் அத்துமீறி நடந்து வந்துள்ளார்.
9 ஆண்டுகளாக எல்லை மீறி நடந்துவந்த ரிச்சார்ட்டின் காம லீலைகள் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது, குழந்தைகளிடம் ரிச்சார்ட் நடத்திய அத்துமீறல்களை அவரே வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னரே பொலிசாருக்கு ரிச்சார்ட்டின் உண்மை முகம் தெரியவந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரித்தானியா திரும்பிய ரிச்சார்ட்டை பொலிசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விவாதம் நேற்று பிரித்தானிய நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
பிரித்தானிய நீதிமன்ற வரலாற்றில் இவ்வளவு மோசமான பாலியல் குற்றங்களை செய்த ஒரு குற்றவாளியை இப்போது தான் சந்திக்கிறேன் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த சமுதாயத்திற்கு ரிச்சார்ட் ஒரு பயங்கரமான அச்சுறுத்தல். எனவே, குற்றவாளிக்கு பிணையில் வெளியே வர முடியாதளவிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ; ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன்
07/06/2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரி கிளின்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும், அமெரிக்க முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட 2383 வாக்குகளை பெறவேண்டும் என்ற நிலையில், தேவையான வாக்குகளை பெற்றதால் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பங்களாதேஷில் இந்து மதகுரு படுகொலை
08/06/2016 பங்களாதேஷில் இந்து மதகுரு ஒருவர் தீவிரவாத சந்தேக நபர்களால் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் பெரும் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஜெனெய்டாஹ் பிராந்தியத்திலுள்ள ஆலயத்துக்கு அருகில் ஆனந்த கோபால் கங்குலி என்ற மேற்படி 70 வயது மதகுருவின் சடலம் காணப்பட்டது.
அவரது தலையானது கழுத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
அவர் இரு நாட்களில் இத்தகைய மதவாத தாக்குதலில் பலியான மூன்றாவது நபராக விளங்குகிறார்.
இந்நிலையில் இந்த மதவாத படுகொலைகள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையொன்றின் போது 3 சந்தேகநபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா நகரிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொணடதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் மூன்றாவது சந்தேகநபர் மேற்கு ரஷாகி மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற மதவாத படுகொலைகளுக்கு தாமே காரணம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ள நிலையில் அதனை பங்களாதேஷ் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமது நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இல்லை என அந்த அரசாங்கம் வாதிட்டு வருகிறது. நன்றி வீரகேசரி
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகியதால் அமெரிக்காவில் புதிய வரலாறு படைத்த ஹிலாரி கிளின்டன்
09/06/2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கான உட்கட்சித் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளமை அமெரிக்க வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாகுவதற்கு அக்கட்சியின் தேர்தலில் 2,383 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற வேண்டும். ஜூன் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அந்த இலக்கை அவர் அடைந்தார். அத்தினம் அமெரிக்காவில் பாலின சமத்துவத்துக்கு ஒரு பொன்னாளாக வர்ணிக்கப்படுகிறது.
ஏனெனில் இதுவரை அமெரிக்காவில் இதுவரை பெண்கள் எவரும் ஜனாதிபதியாக பதவி வகிக்கவில்லை. 1789 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதியாக ஜோர்ஜ் வோஷிங்டன் பதவியேற்றார். இதன் மூலம் ஜனாதிபதி ஒருவரின் தலைமையில் அரசை நிறுவிய உலகின் முதல் நாடாகியது அமெரிக்கா. பராக் ஒபாமா வரை 44 பேர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். எனினும் இவர்களில் பெண்கள் எவரும் இல்லை.
1960 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராக தெரிவு செய்ததன் மூலம், உலகில் பெண்ணொருவரை பிரதமராக தெரிவுசெய்த முதல் நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றுக்கொண்டது. அதன்பின், இந்தியா, இஸ்ரேல், மத்திய ஆபிரிக்க குடியரசு, பிரிட்டன், போர்த்துகல், டொமினிக்கா, நோர்வே, யூகோஸ்லாவியா, பாகிஸ்தான், லித்துவேனியா, போலந்து, பங்களாதேஷ் என பல நாடுகளில் பெண்கள் பிரதமராக நியமிக்கப்பட்டனர். 1974 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவில் ஜனாதிபதியாகத் தெரிவாகியதன் மூலம் உலகின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார். ஸ்ரீமாவின் புதல்வியான சந்திரிகா பண்டாரநாயக்க 1994 ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியானார்.
தற்போதும் ஜேர்மனி, பங்களாதேஷ், நமீபியா, போலந்து மியன்மார், தாய்வான் உட்பட பல நாடுகளில் பெண்கள் அரசாங்கத் தலைவர்களாக பதவி வகிக்கின்றனர்.
ஆனால், அமெரிக்கப் பெண்களுக்கு மாத்திரம் இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அமெரிக்க சட்டத்தில் பெண்கள் ஜனாதிபதியாக வகிப்பதற்குத் தடை எதுவும் இல்லை. ஆனால், மாறி மாறி இப்பதவியைக் கைப்பற்றும் குடியரசுக் கட்சியோ ஜனநாயகக் கட்சியோ தமது ஜனாதிபதி வேட்பாளராக பெண்களை நியமிக்கவில்லை. போட்டியிட்டால் தானே வெற்றி பெற முடியும்!
விக்டோரியா கிளஃபின் வூட்ஹுல் எனும் பெண் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் ஆவார். அவர் 1872 ஆம் ஆண்டு சமத்துவ உரிமை கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் பிரதான கட்சிகளின் உப ஜனாதிபதி வேட்பாளராக பெண்கள் நியமிக்கப்பட்டபோதிலும் அத்தேர்தல்களில் அக்கட்சிகளுக்கு தோல்வியே கிடைத்தன.
பிரதான கட்சிகளில் முதல் தடவையாக 1984 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லில் ஜெரால்டின் பெராரோ ஜனநயாகக் கட்சியின் சார்பில் உப போட்டியிட்டார். அவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வோல்டர் மன்டேலும் அப்போது பதவியிலிருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் ரொனால்ட் ரீகன், ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் ஆகியோரிடம் தோல்வியுற்றனர்.
2008 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கெய்னுடன்இ உப ஜனாதிபதி வேட்பாளரகா அலாஸ்கா மாநில ஆளுனர் சாரா பாலின் போட்டியிட்டார். இவர்கள் ஜனநாயகக்கட்சியின் பராக் ஒபாமா, ஜோ பிடென் ஆகியோரிடம் தோல்வியுற்றனர்.
இதனால், அமெரிக்காவில் பெண்கள் ஜனாதிபதியாகத் தெரிவாகுவது சாத்தியமே இல்லாதது என்ற கருத்து பெரும்பாலானோரிடம் பரவியிருந்தது. அமெரிக்காவில் சிறுமிகள் யுவதிகளிடம் 'நீங்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகலாம்' என கூறுவது அபூர்வம். எழுத்தாளர் எமிலில டெரிபியூஸ் இது தொடர்பாக கூறுகையில் 'நான் சிறுமியாக இருந்தபோது என்னிடம் எவருமே 'நீ என்றாவது ஒரு நாள் ஜனாதிபதியாகலாம் எனக் கூறியதில்லை. ஆனால் எனது சகோதரர்களிடம் அவ்வாறு கூறினார்' என்கிறார்.
2008 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியானார். இப்போது அதே கட்சியின் சார்பில் முதலாவது பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி நியமிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் அமெரிக்க அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் 1919 ஜூன் 4 ஆம் திகதிதான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்துக்கு 97 ஆண்டுகள் பூர்த்தியாகி 3 நாட்களின் பின் கடந்த 7 ஆம் திகதி ஹிலாரி கிளின்டன், 2383 எனும் வாக்கு இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை வரை 2,777 பிரதிநிதிகளின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றிருந்தார். அவருக்கு அடுத்ததாக உள்ள பேர்னி சாண்டர்ஸ் 1876 வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால், ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
உத்தியோகபூர்வ மாதங்களுக்கு முன்புவரை இத்தகையதொரு நிலை நம்ப முடியாத ஒன்றாகவே பலரால் கருதப்பட்டது. இதனால் ஹிலாரி கிளின்டனின் வெற்றியை பாலின சமத்துவத்துக்கான வெற்றியாக பலரும் கொண்டாடுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் மனைவியான ஹிலாரி கிளிண்டன் செனட்டராகவும் இராஜாங்க செயலாளராகவும் பதவி வகித்தவர். அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக சாதனை படைப்பதற்கு இன்னும் ஒரு படியை ஆனால், மிக முக்கிய படியை, அவர் தாண்ட வேண்டும். எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்தால் ஹிலாரி கிளின்டன் மற்றொரு புதிய வரலாறு படைத்தவராகி விடுவார். நன்றி வீரகேசரி
மலேசிய எம்.எச்.370 விமானத்தின் சிதைவுகள் மடகஸ்காரில் மீட்பு
10/06/2016 காணாமல்போன மலேசிய எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரால் மடகஸ்காரில் அந்த விமானத்தினுடையவை என நம்பப்படும் புதிய சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிளைன் கிப்ஸன் என்ற மேற்படி நபர் ஏற்கனவே அந்த விமானத்தினுடையவை என கருதப்படும் சிதைவுகளை மொஸாம்பிக்கில் கண்டுபிடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது வடகிழக்கு மடகஸ்காரில் நொஸி பொரஹா தீவிலுள்ள றியக் கடற்கரையில் புதிய சிதைவுகளை கண்டுபிடித்துள்ளார்.
அவர் அந்த சிதைவுகள் தொடர்பான புகைப்படங்களை காணாமல்போன விமானம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மலேசிய எம்.எச்.370 விமானம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி கோலாலம்பூர் நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் பயணித்த வேளை காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.