சேக்கிழார் திருப்பணி செய்த திருநாகேச்சுரம் திருப்புகழ் - Saravana Prabu

.
திருப்புகழ் 873 ஆசார வீனக்கு  (திருநாகேச்சுரம்)

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
     மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
          ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம்

ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
     நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
          ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங்

கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
     ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்
          கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை

கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
     ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
          கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே

வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி
     பேரார வாரச் சமுத்தி ரத்தினில்
          மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை

வேரோடு வீழத் தறித்த டுக்கிய
     போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்
          வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா

நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
     மாயாவி காரத் தியக்க றுத்தருள்
          ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான

நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
     யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்
          நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........


ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் ... ஆசார ஒழுக்கங்களில்
குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துஷ்டர்கள்,

மாதாபிதாவைப் பழித்த துட்டர்கள் ... தாய் தந்தையரை இழிவு
செய்யும் துஷ்டர்கள்,

ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் ... பசுவின் மாமிசத்துக்காக
அதைக் கொல்லும் துஷ்டர்கள்,

பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் ... பிறர்
மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த
துஷ்டர்கள்,

நானா வுபாயச் சரித்ர துட்டர்கள் ... பலவித தந்திரச் செயல்களைச்
செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள்,

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ... வெறியேற்றும் கள்ளைக்
குடித்த துஷ்டர்கள்,

தமியோர்சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் ... தனியாய்
அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி
எடுத்த துஷ்டர்கள்,

ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள் ... ஊரில் எல்லாரின்
ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துஷ்டர்கள்,

கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ... ஆரவாரத்துடன்
வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும்
துஷ்டர்கள்,

குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ... குருவின்
சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துஷ்டர்கள்,

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் ... மற்றவர்க்குக் கொடுக்காமல்
பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள்,

கோமாள நாயிற் கடைப்பி றப்பினில் உழல்வாரே ... இந்த
துஷ்டர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான
பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள்.

வீசாவிசாலப் பொருப்பெடுத்து எறி ... பெரிய மலை போன்ற
அலைகளை வீசி எடுத்து எறிகின்ற,

பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில் ... மிக்க ஓசையை உடைய கடலின்
மத்தியில்

மீளாமல் ஓடித் துரத்தி யுட்குறும் ஒருமாவை ...
திரும்பிவரமுடியாதபடி ஓடித் துரத்தி, பயம் கொண்ட ஒரு தனி மாமரமாக
ஒளிந்த சூரனை

வேரோடு வீழத் தறித்து அடுக்கிய ... வேருடன் விழும்படியாக
வெட்டிக் குவித்த

போராடு சாமர்த்தியத் திருக்கையில் வேலாயுதா ... போரினைச்
செய்த திறமைவாய்ந்ததும், உன் திருக்கரத்தில் உள்ளதுமான
வேலாயுதனே,

மெய்த் திருப்பு கழ்ப்பெறு வயலூரா ... உண்மை வாய்ந்த உனது
திருப்புகழை யான் ஓதி நீ பெற்றுக் கொண்ட வயலூர்ப்பதியின் இறைவா,

நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர் ... கேடு முதலிய தீயன
விளைவிக்கும் ப்ராரப்த கர்மம் (பழவினை காரணமாக இப்பிறப்பில்
தொடரும் துக்கம்) மிகுந்தவர்களுடைய

மாயாவிகாரத்து இயக்கு அ றுத்தருள் ... மாயை சம்பந்தமான
துயரம் தரும் மயக்கத்தை ஒழித்து அருளும்

ஞானோபதேசப் ப்ரசித்த சற்குரு வடிவான ... ஞான உபதேசம்
செய்த கீர்த்தியை உடைய சற்குரு வடிவமான

நாதாவெனா முன் துதித்திட ... நாதனே என்று முன்னொரு
காலத்தில் உன் தந்தை துதிசெய்ய

புவி ஆதார மாய்கைக்கு முட்ட முற்றருள் ... உலகோருக்கு ஒரு
ஆதாரச் சாதனம் (ப்ரமாணம்) ஆகும் பொருட்டு, ப்ரணவப் பொருள்
முழுவதும் நன்றாக நீ உபதேசித்து அருளி,

நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே. ... நாகேசன்
என்ற திருநாமத்தைக் கொண்ட உன் தந்தை சிவபெருமானால் மெச்சப்
பெற்ற பெருமாளே.