ஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை - ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்

.
" ஈழத்தமிழ்  இலக்கியமானதுபுகலிடத்  தேசியத் தமிழ்  இலக்கியத்தினூடாக உலகத்  தமிழ்  இலக்கியம்  என்ற  பரிமாணத்தை  எய்தியுள்ளது "


(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து 04-06-2016 அன்று  நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)

இந்தத் தலைப்பு  பரந்துபட்ட  ஈழத்து இலக்கிய வளர்சிப்போக்கினை உள்ளடக்கியது. எனக்குத் தரப்பட்ட 30 நிமிடத்தில் இதனை அடக்குவது என்பது இலகுவான  காரியமல்ல.
ஈழத்து இலக்கிய வரலாறு 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட காலப் பரப்பினைக்  கொண்டது என்பதை  பழந்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன.
ஈழத்துப் பூதந்தேவனார்  ஈழத்துக்குரிய தனி அடையாளத்தை வழங்கிய முதல் புலவராவார். இவரது ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.
அதன்பின்னர் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது.



தற்போது ஈழத்திலே கிடைக்கின்ற பழைய நூல் போசராசப் பண்டிதர் எழுதிய  சரசோதிமாலை  என்ற  சோதிட நூல் ஆகும். இது கி. பி. 1309 இல் வெளிவந்தது.
15 ஆம் நூற்றாண்டிலே நான்காவது தமிழ்ச் சங்கத்தை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் அமைத்தார்கள்.
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் காவியம், சோதிடம், வைத்தியம், வரலாறு, தல புராணங்கள், பள்ளு, உலா, மொழிபெயர்ப்பு எனப் பல்வகை நூல்கள் எழுந்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பெரும் பாய்ச்சல்  நிகழ்ந்துள்ளதைக் காணலாம்.
தமிழ்மொழிபற்றிய தேடல்களும் ஆய்வுகளும் மேல்நாட்டார் வருகையின்பின் தொடங்கின.
செய்யுள் மரபு கைவிடப்பட்டு  உரைநடை  மரபு  செல்வாக்குப் பெற்றது.
அச்சு  இயந்திரத்தின் வருகை தமிழ் இலக்கியங்கள் நூல்பெற உதவின.
ஈழநாட்டில் இடம்பெற்ற  இலக்கிய முயற்சிகளை சில புலவர்கள் அக்காலத்தில் பதிவு செய்தனர்.
தமிழ் நாட்டுக்குச் சென்று  தமிழ்வளர்த்து ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர்கள் ஏறத்தாழ 20 பேர் உள்ளார்கள். இவர்கள் செய்யுள் நூலாக்கம், உரைநடை நூலாக்கம், உரை நூலாக்கம், நூற்பதிப்பு, மொழிபெயர்ப்பு நூலாக்கம், தமிழ்ச்சொல் அகராதி நூலாக்கம் ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.


ஈழத்து நவீன தமிழ் இலக்கியம்
மங்களநாயகம் தம்பையா எழுதிய ஈழத்தின் முதல் தமிழ் நாவல் நொறுங்குண்ட இதயம் 1954ல் வெளியாகியாகியது. ஈழத்து நவீன இலக்கியம் 1930 களிலிருந்து  உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது எனலாம்.
மறுமலர்ச்சி ஈழத்தின் முதலாவது நவீன இலக்கிய சஞ்சிகை.
 “முற்போக்கு இலக்கியம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது ஏற்கனவே இருந்த சூழல்ஆந்தச்சூழல் மறுமலர்ச்சி இயக்துக்குள்ளால் வந்தது. ஈழத்தின் தன்மைகளைக் கொண்டு இலக்கியம் வளருகின்ற  ஒரு தன்மையைக் காண்கிறோம்எனப் பேராசிரியர் சிவத்தம்பி ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.
1956 ல்  சோஷலிச அரசாங்கம் பதவிக்கு வந்தது.
மார்க்சியக் கோட்பாட்டுடன் இலக்கியம் படைத்தல் அறிமுகமாகி வளர்ச்சி பெற்றது.
இதன் பிதாமகர்களாக பேராசிரியர்கள், கைலாசபதி சிவத்தம்பி ஆகியோர் விளங்கினர்.
நமது நாட்டுக்கே உரிய இலக்கியம் மண்வாசனையுடன் நமது மொழியில் படைக்கப்படவேண்டும் என்ற கருத்து முனைப்புப் பெற்றது.
வர்க்கம், சாதியம், இலங்கைத் தேசியம் போன்றவை கருத்தியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றன.
இதனை முற்போக்கு இலக்கியம் என்றனர்.
_____________________________________________________________________
ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் ஈழத்து இலக்கியச் செல்நெறியில் மாற்றம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தை தமிழ்த் தேசிய உணர்வுக் காலகட்டம்எனச் செங்கை ஆழியான், பேராசிரியர் சிவத்தம்பி முதலியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இக்காலகட்த்தில் போர் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் ஆகிய புதுவகை இலக்கியங்கள் தோன்றின.


உள்நாட்டில் போர் இலக்கியங்கள் உருவாகிய போது, புலம் சிதறிச் சென்ற இலங்கையர்கள் புலம்பெயர் இலக்கியங்ளைப் படைத்தனர்.
 ‘போர் இலக்கியம்என்ற பகுப்புமுறை முதலாம் உலக மகாயுத்தத்திலிருந்தே ஆரம்பமாகியது எனலாம்.
ஏனஸ்ற் எமிங்வே எழுதிய
            ‘போரே நீ போ(FAREWELL TO THE ARMS)
            ‘யாருக்காக மணி அடிக்கிறது?’ (FOR WHOM THE BELL TOLLES)
போன்ற நாவல்கள் உலக அரங்கில் போர் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
            போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அதன் ஆவணத் தன்மையாகும்.
     அவை போரின் சாட்சியங்கள் ஆக விளங்குகின்றன.

போர் இலக்க்கியத்தின் பண்புகள்

          நிகழ்வுளை ஆவணப்படுத்தல்
          போர்ச் சூழலை ஆவணப்படுத்தல்
          மனித அவலங்கள்
          போர்க்களம்
          பெண் போராளிகளின் படைப்புக்கள்     
          உளத்தாக்கங்களை வெளிப்படுத்தல்
          பாலியல் வன்முறைகள்
          அகதி வாழ்க்கை
          இடப்பெயர்வு
          எதிர்ப்பு இலக்கியங்கள் போன்றனவாகும்

தற்போது போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஈழத்து இலக்கியச் செல்நெறியின் இன்றைய நிலை
போருக்குப்பின்னரான இலக்கியம் (POST WAR LITERATURE)
உலக அரங்கில் போர்முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை விபரிக்கும் இலக்கியங்கள்  பல வெளிவந்துள்ளன. இத்தகைய இலக்கியங்களில் வியட்னாம் யுத்ததிற்குப்பின்னர் வெளிவந்த இலக்கியங்கள் முக்கியமானவை. THE SARROW OF WAR என்ற நாவல் வட வியட்னாம் போராளியால் எழுதப்பட்டது. VIETNAM: THE TEN THOUSAND DAY WAR என்ற நாவல் MAC LEAR என்பவரால் எழுதப்பட்டது. 2001ல் THE GIRL IN THE PICTURE   வியட்னாம் போரில் அகப்பட்டு குண்டுத்தாக்குதலினால் எரிகாயங்களுடன் உடம்பிலே உடுப்புகள் ஏது மின்றி ஓடிவரும் 7 வயதுச் சிறுமி பற்றிய நாவல். அவள ஓடிவரும் காட்சியை உலகு எங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள்  TELE VISION ல் பார்த்தார்கள். அதன்பின்னர் மேற்குலக மக்களின் அபிப்பிராயம் போருக்கெதிராக மாறியது. போர்நிறுப்பட்டது.
போருக்குப்பின்னரான இலக்கியங்கள் மக்களின் மனச் சாட்சியை த்தூண்டி போரனால் சீரழிந்த நாட்டை சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்து கின்றன.
நமது நாட்டிலும் போருக்குப்பின்னரான பாதிப்புகள், அவல நிலைகள் குறித்த இலக்கியங்கள்  உருவாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது எவ்வித சுய தணிக்கைகள் எதுவுமின்றி தமது படைப்புகளை எழுதக் கூடய சூழ்நிலை அங்கு உள்ளது. போரில் இடம்பெற்ற தவறுகளை விமர்சிக்கும் எழுத்துக்கள் வருகின்றன. போராளிகள் சிலர் வெளிப்படையான தமது எண்ணங்களை எழுதுகின்றனர்.
அகதி நிலை, சிறை வாழ்க்கை, கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், தாய்தந்தையரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்தந்தையர், ஊனமுற்ற போராளிகளின் வாழ்க்கைப் போராட்டம், போராளிப் பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சொந்த நிலங்களை இழந்து பிறிதோர் இடத்தில் வாழ நேரிடும் அவலம், இராணுவப்பிரசன்னம், போரின் பின்னர் சமூகத்தில் ஏற்படும் சமூகச் சீரழிவு, பண்பாட்டுச் சீரழிவு போன்றவை  இன்றைய  ஈழத்து இலக்கியச் செல்நெறியின் பாடு பொருளாகியுள்ளன. இவை போருக்குப்பின்னரான இலக்கியங்கள்.
ஏராளமான சிறுகதைகளும் கவிதைகளும் சிலநாவல்களும் வெளிவந்துள்ளன.
குறிப்பாக அதிக கவிதைத் தொகுதிகள் போருக்குப் பின்னரரான விடயப் பரப்பைக் கொண்ட  தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
கருணாகரன் யுத்தகளத்தில் போராளியாக இருந்தவர். தற்போது அவரது அந்ந நிலைமை மாறி போரின் சரி பிழைகளை விமர்சிக்கும் கவிதைகளை எழுதிவருகிறார். யுத்தம் பற்றிய சிறந்த ஆவணமாக இவரது பலி ஆடு, எதுவுமல்ல இதுவும் போன்றவை திகழ்கின்றன.
தீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை, கிளிநொச்சிபோர்தின்ற நகரம், பாழ்நகரத்தின் பொழுது ஆகியவை முக்கியமான தொகுதிகள்.
கி. பி. நிதுன் எழுதிய துயரக்கடல் தொகுதியில் யுத்தம் இடம்பெற்றபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பட்ட அவலங்கள், இழப்புகள், போருக்குப்பின்னான  முகாம் வாழ்க்கை, மீள் குடியேற்றம் போன்றவை பாடுபொருளாயுள்ளன.
சேரனின் காட்டாற்று ஒரு முக்கியமான தொகுதி.
2010ல் குட்டி ரேவதியால் தொகுக்கப்பட்டமுள்ளிவாய்க்காலுக்குப் பின்’ முக்கியமான ஒரு தொகுதி.
சித்தாந்தனின் துரத்தும் நிழல்களின் யுகம் இறுதி யுத்தம்பற்றிய சிறந்ததொரு ஆவணமாகத் திகழ்கிறது.
மன்னார் பெனில் எழுதிய ஈரநிலத்தை எதிர்பார்த்து என்ற தொகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், மாவீரர் இல்லங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டமை  தொடர்பான கவிதைகளும் அடங்கியுள்ளன.
நிலாந்தனின் யுகபுராணம்,குணேஸ்வரனின்மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’
பெரிய ஐங்கரனின் கறுப்பு மழை
கு. றஜீபனின் பேசற்க
. அஜந்தகுமார், யாத்திரீகன், செ.சுதர்சன், . சு. முரளிதரன், . வரதராசன்பெ.கை. சரவணன், . ஜேயசீலன், ஸ்ரீபிரசாந்தன், .சத்தியசீலன், றஷ்மி. . யேசுராசா, வே. குமாரசாமி, சோ. பத்மநாதன், . சத்தியபாலன்வெற்றி  துஷ்யந்தன், மருதம் கேதீஸ், மகாலிங்கசிவம், கோகுலராகவன், புலோலியூர் வேல்நந்தன், அல்வாயூர் சிவநேசன், பா. அகிலன்தானா விஷ்ணு, . மயூரரூபன், போன்றோரின் கவிதைகள் பல போருக்குப் பின்னரான அவலங்களைச் சித்திரிக்கும் கவிதைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
போருக்குப் பின்னரான சிறுகதைகளை அடக்கிய தொகுதிகள் பலவும் வெளிவந்துள்ளன. கடவுளின் மரணம் கருணை ரவி என்பவர் எழுதியது. போர்நடைபெறும் களத்தில் இடம்பெறும் கதைகள் சிலவும் இத்தொகுதில் அடங்கியுள்ளன. போரின் மூலத்தையும் அதன் இயங்கு தளங்களையும் நுட்பமாகத் தெரிவிக்கும் கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
யோ. கரணன் போராளியாக இருந்தவர். இவர் எழுதிய சேகுவேரா இருந்த வீடு சிறுகதைத் தெகுதியில் 13 கதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கதைகளைத் தவிர்ந்த ஏனைய கதைகள், இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும், முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள் அகப்பட்ட மக்களின் துன்பங்களையும் பேசுகின்றன. சில போராளிகளை மக்கள் எதிர் கொண்ட வரலாற்றையும் மக்கள் இறுதி யுத்ததில் அனுபவித்த கொடுமைகளையும் பேசும் கதைகள்.
வன்னிவலி இரா உதயணன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுதி. போருக்குப்பின்னரான இழப்பின் துயரங்களும் உளநெருக்கீடுகளும் சுரண்டல்களும் இலக்கிய வெளிக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இவர்களைவிட இராகவன், மருதம்  கேதீஸ், சித்தாந்தன், இராஜேஸ்கண்ணன், சீனா உதயகுமார், தாட்சாயணி, சாரங்கா, வி ஷ்ணுவர்த்தனி, இயல்வாணன், தெணியான், குப்பிழான் . சுண்முகன், நந்தினி சேவியர், குந்தவையோகேஸ்வரி சிவப்பிரகாசம், சட்டநாதன், கே. ஆர் டேவிட், . கலாமணி, அநாதரட்சகன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், மு. பொன்னம்பலம், சூசை எட்வேட் ஷெல்லிதாசன், வி.என். சந்திரகாந்தி  ஆகியோர் அவ்வப்போது போருக்குப்பின்னரான அவலங்களைக் கதைகளாக வெளிக்கொணர்கின்றனர்.
 போருக்குப்பின்னரான நாவல்கள் என்று பார்க்கும்போது தமிழ்க்கவியின் ஊழிக்காலம் நாவல் முக்கியமானது.
 குணா கவியழகன் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடியவர். இவரது முதலாவது நாவல் நஞ்சுண்டகாடு. தன் இன மக்களால் மீட்பர்களாக, போரளிகளாக மதிக்கப்பட்டு உலகத்தால் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு, எதிரியால் கைதியாக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் தத்தளிக்கும் போராளிகளை கதாபாத்திரங்களாக்கியுள்ளார். போருக்குப்பின்னரான போராளிகளின் பாடுகளே இந்நாவலின் பாடுபொருள்.
இவரது இன்னுமொரு நாவலான விடமேறிய கனவு போராளியாக போராடவந்தவர்கள் தொடக்கம் கட்டாய ஆட்சேர்ப்பில் போராளிகளாக்கப் பட்டவர்கள் வரை சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டவர்களின் கதை.
சிவ ஆரூரன்  என்ற சிவலிங்கம் ஒரு பொறியியல் பட்டதாரி. மெகசீன் சிறையில் 9 வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் எழுதிய யாழிசை நாவல் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிக்கிறது. இந்தப்பெண்கள் சமூகத்தில் படுகின்ற துன்பங்களையும் கஷ்டங்களையும் கதையினூடாக காட்டிச் செல்கிறார்.
 இத்தகைய சில நாவல்கள்  சமீபகாலமாக புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்ந வகையில் சயந்தனின் ஆறாவடு ஒரு முக்கிய நாவல். சயந்தன் தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்கிறார். இந்ந நாவல் எதிர்ப்பு அரசியல் பேசுவதாகவும் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. ஷோபாசக்தியின் BOX, இர. உதயணன் எழுதிய  பனிமலர் மற்றும் சமீபத்தில் வெளிவந்த வலியின் சுமைகள் தமிழினி ஜெயக்குமாரன் எழுதிய கூர்வாளின் நிழல் போன்ற நாவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சிறுகதைகளைப்பொறுத்தவரை கே. ஏஸ் சுதாகர் கற்றுக்கொள்வதற்கு என்ற சிறுகதையை எழுதியுள்ளார். கதை வியட்நாமில் நடைபெறுகிறது. நூஜ்ஜின் வியட்நாம் நாட்டவன் அவுஸ்திரேலியாவில் வேலை செய்கிறான். அவன் தனது நாட்டுக்கு ஸ்ரீலங்கா நண்பனை அழைத்துச் செல்கிறான். வியட்நாமியரின் தோற்றம் பழக்க வழக்கங்கள் கதையில் விபரிக்கப்படுகின்றன. அமெரிகர்களின் வியட்நாம் போர் ஆங்காங்கே ஈழப்போருடன் ஒப்பிடப்படுகிறது. நூஜ்ஜின் தந்தை ஒரு விவசாயி. ஒரு போராளி. எங்கள் நாட்டுப் பிரச்சினையும் கிட்டத்தட்ட வியட்னாமின் பிரச்சினைக்கு ஒப்பானதுதான்.
வெளியிலிருந்து பார்ப்பவர்கள் போர்முடிந்து விட்டது என்றுதான் சொல்வார்கள். ஆனால் போர் அதற்குப்பிறகுதான் ஆரம்பமாகிறது. எங்கள் நாட்டைக்கட்டி எழுப்ப வேண்டும்.” எனக்கூறும் நூஜ்ஜின் அதற்காக உழைக்கிறான். தனது நாட்டிலும் அவுஸ்திரேலியாவிலும் உழைக்கிறான்.
இக்கதையில் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, போரின் பின்னரான சமூகப்பிரச்சினைகளில் ஒன்றான விதவையாகிப் போனவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும் எழுப்பப்படுகிறது.
. ஜீவகுமாரன் தவம் என்றொரு கதை எழுதியிருக்கிறார். அக்கதையில்  ஜேர்மனியில் வாழும் தந்தை தனது மகனைப் போருக்கு அனுப்பிவிட்டு போர்முடிந்த நிலையில் அவரது மகன் சிறையில் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் அவன் வரும் வரை சோறு சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்து  மரக்கறிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலை விபரிக்கப்படுகிறது. மேலும் இக்கதையில் தனது மகனை சிறை மீட்டுத் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களின் பணம்பறிக்கும் தில்லு முல்லுகளும் விபரிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் இலக்கியம்
போர்காரணமாக உள்நாட்டில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றவர்கள் தமது நாட்டினைப் பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட துன்பம் நிறைந்த அனுபவங்களையும் பதிவு செய்யும் இலக்கியங்கள்  புலம்பெயர் இலக்கியம்.
இவர்கள் படைக்கும் இலக்கியங்கள் DIASPORA LITERATURE என்று வழங்கப்பட்டது. இதனையே தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்றனர்.
பாரம்பரிய மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கி எறியப்பட்டவர்கள் படைத்த இலக்கியம்.
இது ஈழத்தமிழ் இலக்கியத்தின்  நீட்சி எனக்கொள்ளலாம். எவ்வித சுய தணிக்கைகளுமின்றி சுதந்திரமாக புலம்பெயர் இலக்கியவாதிகள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
புலம்பெயர் இலக்கியத்தின் நிலை மாற்றம்
புலம் பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. ஆயுதப் போராட்டச் சூழல் முடிவுக்கு வந்து விட்டது.
பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள்இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம்தொழில் நுட்பத்தேர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு ஏற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவருகின்றன.
புலம்பெயர் இலக்கியம்  டயஸ்போறா என்பதன் அடையாளத்துடன் தொடர்வதற்கான சூழல் இன்றில்லை.
இலக்கியங்கள் தேசிய புவியியல் பண்பாடு மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப  பெயர்கொண்டு சுட்டும் மரபே  வழக்காக இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் பெருந்தொகையாக வாழ்கின்ற கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் புவிச் சூழல்களை மையப்படுத்திய எழுத்துக்கள் அந்தந்த நாடுகளின் அனுபவங்களின் பதிவாக அமைவதைக்காண முடிகிறதுஇவற்றை அடையாளப்படுத்த அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம், ஐரோப்பியத் தமிழ் இலக்கியம், வட அமெரிக்கத் தமிழ் இலக்கியம், கனடியத் தமிழ் இலக்கியம் முதலிய தொடர்களைப் பயன்படுத்துவதே பொருத்தமாயுள்ளது.
உதாரணமாகக் கூறுவதானால் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து  மலேசியா சென்றவர்கள் அங்குள்ள சூழலை மையப்படுத்தி படைக்கும் இலக்கியங்கள் மலேசிய இலக்கியம் என்று கூறப்படுவதுபோல, தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் இலக்கியம் படைப்பவர்களின் இலக்கியங்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் எனக் கூறப்படுவதுபோல, தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் படைக்கும் இலக்கியங்கள் இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம் எனச் சுட்டப்படுவதுபோல புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாம் சென்றடைந்த நாடுகளின் புவிச்சூழலுக்கும், அங்கு தமது சமகால வாழ்வியல் அனுபவங்களுக்கும் அமையப் படைக்கும் இலக்கியங்கள் அந்த அந்த நாட்டின் தமிழ் இலக்கியம் என்று சுட்டப்படுவதே சரியானது.
உலகத்தமிழ் இலக்கியம்  
தற்போது அடுத்த கட்டமாக தமிழ் இலக்கியப் பரப்பானது உலகத்தமிழ் இலக்கியம் என்ற பொதுஅடையாளத்தைப் பெற்றுவிடுவதற்கான  சாத்தியப்பாடுகளையும்  காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு நாட்டின் தேசிய புவியியல் பண்பாடு மற்றும் அங்குள்ள  வாழ்வியல் அமைவுகளையும் தாண்டி  இலக்கியங்கள் புலம்பெயர் நாடுகளில் படைக்கப்படுவதைக் காண்கிறோம்.
இந்நிலையில் .முத்துலிங்கம் மற்றும் ஆசி கந்தராஜா போன்றோர் தமது தொழில் நிமித்தம் தாம் பன்னாடுகளிலும் பெற்ற அனுபவங்களை தமிழ் உலகுக்கு கொண்டுவருகின்றனர். இது சமகால தமிழ் இலக்கிய உலகுக்குப் புதிய பரிணாமங்களைத் தருகின்றது. . முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் யாவற்றையும் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற பரப்புக்குள் அடக்கிவிடமுடியாது. அதுபோல ஆசி கந்தராஜாவின் படைப்புகள் யாவற்றையும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியப்பரப்புக்குள் அடக்கிவிட முடியாத நிலை உள்ளது.
. முத்துலிங்கம் பூகோள ரீதியாக இடத்துக்கு இடம் மாறுபடும் மொழி இனம் நிறம், உணவுப்பழக்கங்கள், சடங்குகள், சமய வழிபாடுகள், போன்ற இயல்பான வேறுபாடுகளினால் உருவாகும் முரண் தன்மைகளைப் பதிவு செய்கிறார். வம்சவிருத்தி என்ற சிறுகதைத் தொகுதியில் இந்தியா, சூடான், பாகிஸ்தான், சியராலியோன், சுவீடன், அமெரிக்கா கதைக் களங்களாகின்றன.
ஆசி. கந்தராஜாவின் சிறுகதைகள் சிலவும் உலகத்தமிழ் இலக்கியம் என்ற  வகைமைக்குள் வரக்கூடியன. ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில் அவரது தலைமுறை தாண்டிய காயங்கள் கதை முதலாவது கதையாக அமைந்துள்ளது.
இங்கே அவுஸ்திரேலியாவில் வாழும் ஆசி கந்தராஜா லெபனான் பல்கலைக்கழகப் பின்னணியில் கதையை நகர்த்தி ஆர்மேனியர்களின் வரலாற்றை விபரித்து அதனை ஈழத்தமிழர் போராட்த்துடன் இணைத்து கதையைப் பின்னியிருக்கிறார்.
இக்கதை அவுஸ்திரேலியாவின் தமிழ் இலக்கியத்தில் அல்ல உலகத் தமிழ் இலக்கியத்தில் அடங்க வேண்டிய சிறுகதை.
இன்று உலகளாவிய ரீதியில் போரின் பாதிப்புகள் இருக்கின்றன. நான் குறிப்பிட்ட சில கதைகள் உலகத் தளத்திலிருந்து போரின் பின்விளைவுகள் பற்றியும் அவை தீர்க்கப்படவேண்டிய முறைமை பற்றியும் பேசுகின்றன.
ஜேர்மன் எழுத்தாளர் பார்த்திபன் எழுதிய தெரியவராதது சிறுகதையில் ஜேர்மனியில் தஞ்சமடைந்த பாலகிருஷ்ணன் தொழில்கஷ்டம் போதிய சம்பளம் கொடுக்கப்படாமை காரணமாக கனடா செல்ல முயற்சிக்கிறான். பலமுறை முயன்று கைதாகி பின்னும் ஆசை தீராது அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பிலிப் என்பவரின் அடையாளத்துடன்கூடிய பாஸ்போட் தயாரித்து  பிராங்போட் எயர் போட்டில் ஏறி பயணம் செய்த விமானம் லண்டனில் தரித்து மீண்டும் பறந்தபோது ஆகாயத்தில் வெடித்ததுச் சிதறி பரிதாபமாக மரணம் அடைகிறான்.
இத்தகைய கதைகள் உலகத்தமிழ் இலக்கியம் என்ற வகைமைக்குள் வைத்துப் பார்க்கப்படவேண்டியன. இத்தயைய கதைகள் வேறு சில எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டுள்ளன. நேரக்கட்டுப்பாடு கருதி அவற்றை என்னால் இங்கு விபரிக்க முடியவில்லை.
நாவல்களைப் பொறுத்தவரையில் நடேசனின் அசோகனின் வைத்திய சாலை உலகத்தமிழ் இலக்கியம் என்ற வகைமைக்குள் வைத்து நோக்கப்பட வேண்டியது.
அசோக மன்னர்  மிருகங்களுக்காக  ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஓர் அம்மையார் தர்மத்துக்கு அமைத்த வைத்திய சாலையில் சிவாவின் அனுபவங்களாக இந்த நாவல் விரிகிறது.
மிருகங்களின் நோயுலகத்துக்கு சமாந்தரமாக அந்த வைத்திய சாலையின் ஊழியர்களின் பலதரப்பட்ட இயங்கு நிலைகள் இந்தநாவலில் பரந்து செல்கின்றன. இவர்களின் வாழ்க்கைப் பின்புலத்தை இவர்களது வரலாற்றை விளக்கிச் செல்கிறது. நாவல். அராபியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் இந்த நாவலின் மாந்தர்களாகின்றனர். இந்தக் கதாமாந்தர்களின் பண்பாட்டுக் கோலங்கள் சங்கமித்து உருவாகும் ஒரு கலவைப் பண்பாட்டின் தரிசனத்தை இந்த நாவலில் காணமுடிகிறது. ஒரு அந்நிய நாட்டின் சமூக இயங்கியல் பண்பாடு ஆகியவை மிக நேர்த்தியாக விவரணம் ஆகின்றன.
இந்த நாவல் புதுமையானது வழக்கமான தமிழ் நாவல் இலக்கியப் போக்கிலிருந்து மாறுபட்டது.
இத்தகைய உலகத் தமிழ் இலக்கியம் என்று சுட்டக்கூடிய நாவல்களாக ஷோபாசக்தியின் BOX, தேவகாந்தனின் கனவுச்சிறை, நோர்வே .தியாகலிங்கத்தின் திரிபு, கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள், ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு, விமல் குழந்தைவேலின்  வெள்ளாவி, கஜகறணம், மாத்தளை சோமுவின் நான்காவது உலகம் மற்றும் பார்த்திபன், . கிரிதரன், அகில், குரு அரவிந்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் நாவல்கள் சிலவற்றில் உலகத்தமிழ் இலக்கியம் சார்ந்த பார்வைகள் உள்ளன.
இலங்கையில் வாழும் எனக்கு முழுமையாகப் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களின் படைப்புகள் யாவும் கிடைப்பதில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். எனவே இங்கு நான் குறிப்பிட்ட பட்டியல் முழுமையான தல்ல.
அடுத்து வெளியீட்டுத் தளங்கள் பற்றி குறிப்பிடுதல் முக்கியமானது.
அச்சு ஊடகத்திலிருந்து படைப்பிலக்கியத்தின் பிரசுரகளத்தை மின்னியல் ஊடகத்துக்கு மாற்றிய பெருமை புலம்பெயர் தமிழருக்கு உரியது.
இணைய இதழ்கள்மின்னிதழ்கள் இணையத்தளங்கள், வலைப்பூக்கள் முதலியவற்றினூடாகப் பலர் தமது படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இத்ததைய  மின்னியல் ஊடகங்களுக்கு ஊடாக புலம்பெயர்ந்து வாழும் இலக்கிய வாதிகள் படைக்கும் இலக்கியத்தைப் பற்றிய மிகப்பெரும் உரையடல் வெளியை ஈழத்தமிழர்கள் ஏற்படுத் தியிருக்கின்றனர். கணத்துக்குக் கணம் நிழும் மாறுதல்களை, வெளிவரும் படைப்புகளை, சிந்தனைகளை மின்னியல் ஊடகங்களினூடாகப் பகிர்ந்து உலகத்திழ் இலக்கியப்பரப்பில்  தமது வகிபாகத்தை உணரச்செய்து வருகிறார்கள்.
 மொழிபெயர்ப்புகளினூடாக வேற்றுமொழி  நிலைப்பட்ட இலக்கியப் பரிமாற்றம்
புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் சிலர் புகலடைந்த நாடுகளின் மொழியை பண்பாட்டை வாழ்வியல் அம்சங்களை உள்வாங்கி மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழ் நிலைப்பட்ட அனுபவம் வேற்று மொழிக்குக் கையளிக்கப்படுவதும் வேற்று மொழி நிலைப்பட்ட அனுபவம் தமிழ் மொழிக்குக் கையளிக்கப்படுவதுமான இலக்கிய நிலைப்பட்ட அனுபவப்பகிர்வாகும். இதனால் தமிழ்ப்படைப்புலகின் புவியியல் மற்றும் அனுபவ எல்லைகளைத்தாண்டி விரிவடைந்து சர்வதேச மயப்பட்ட தமிழ்ப்படைப்புலகப் பரிமாணத்தை தமிழ் எட்டியுள்ளது.
புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிப் போக்குகள் பற்றி இங்கு நான் கூறிய கருத்துக்கள் ஏற்கனவே ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழின் (டிசம்பர் 2014 – 175 ஆவது இதழ்) முன்னுரையில் என்னால் குறிப்பிடப்பட்டுள்ளன.
நிறைவாக, ஈழத்தமிழ் இலக்கியமானது, புகலிடத் தேசியத் தமிழ் இலக்கியத்தினூடாக உலகத் தமிழ் இலக்கியம் என்ற பரிமாணத்தை எய்தியுள்ளது என்பதே இன்றைய நிலையாகும்.
----0----