புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் மாட்டுச் சண்டை

.


புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் மாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது. இது அமீரகத்தின் பாரம்பர்யத்தை நிலை நாட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஜேரா கடற்கரை அருகில் உள்ள மைதானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் மாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மாட்டுச் சண்டையில் புஜேரா மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து மாடுகள் அதிக அளவில் பங்கேற்கின்றன.
இதனால் இந்த சண்டையை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் புஜேராவை நோக்கி செல்கின்றனர்.
இந்த மாட்டுச் சண்டை குறித்து புஜேராவைச் சேர்ந்த அமீரக வாசி ஒருவர் கூறியதாவது : இந்த சண்டை கடந்த 60 வருடமாக பாரம்பர்யமாக நடந்து வருகிறது. இந்த பாரம்பர்ய நிகழ்வு நடைபெறுவதற்கு அரசாங்கம் புஜேரா கடற்கரை அருகே இடத்தை வழங்கியுள்ளது. இந்த சண்டையானது ஐரோப்பாவில் இருப்பது போன்ற ரத்தம் வரும் விளையாட்டல்ல. இதில் ஜெயிப்பவர்களுக்கு எந்த வித பரிசுத்தொகையும் கிடையாது.
இந்த நிகழ்ச்சியான ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தில் நடைபெறாது.
இந்த சண்டையானது இரண்டு மாடுகளுக்கு இடையே நடைபெறும். இரண்டு மாடுகளும் ஒன்றையொன்று கொம்பை வைத்து முட்டி சண்டை போடும். மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்குள் இந்த சண்டை முடிவுக்கு வரும். எந்த மாடு பலம் வாய்ந்ததாக இருக்கிறதோ அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதற்குள் அந்த மாடு தன்னார்வ தொண்டர்களால் பிடித்து இழுத்து கட்டப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்து இரண்டு மாடுகளுக்கு இடையே சண்டை நடைபெறும்.
இந்த சண்டையை காண அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்க்க வருகின்றனர்.
மாடுகள் சண்டை போடும் போது காயம் ஏற்படாமல் இருக்க மாட்டின் கொம்பின் முனையானது வெட்டப்படும். இந்த சண்டையை கண்காணிப்பதற்கு என நடுவர் குழு ஒன்றும் உள்ளது.


இந்த சண்டை நடைபெறும் இடம் முழுவதும் கம்பி வேலி மற்றும் மரக்கட்டையால் ஆனது. இந்த அரங்கின் வெளியே இருந்து பொதுமக்கள் காரில் இருந்து நின்று கொண்டும் தங்களது குடும்பத்தினருடன் பார்த்து ரசிப்பர்.
இந்த சண்டையைக் காண்பதற்கு ஓமன் உள்ளிட்ட அருகில் உள்ள நாடுகளில் இருந்தும், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.
பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் கேரளா மற்றும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் நமது ஊரைப் போல் தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல் என விற்பனை செய்கின்றனர். கடலை பருப்பு, ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் விற்கப்படுகிறது.
வெற்றி பெறும் மாடுகளுக்கு நல்ல விலை நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் அந்த மாடுகள் 250,000 திர்ஹாம் அளவுக்கு விலை பேசப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.