தமிழ் சினிமா - இறைவி


இறைவி

இறைவி (வீடியோ இணைப்பு) - Cineulagam


தமிழ் சினிமா ஏ,பி,சி என ரசிகர்களை பிரித்து வைத்துள்ளது. இந்த மூன்று தரப்பு ரசிகர்களை திருப்தி படுத்தி ஒரு படம் எடுப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு சி செண்டர் ஆடியன்ஸையும் தன் கிளாஸ் படைப்புகளால் கவர்ந்து இழுத்த ஒரு சில இயக்குனர்களில் இந்தமாடர்ன் டே மணிரத்னம் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர்.
பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிகளை தொடர்ந்து அடுத்து ஒரு உன்னதமான படைப்பான இறைவியை கையில் எடுத்துள்ளார் கார்த்திக். இதில் தன் பேவரைட் கூட்டணியான விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா வர, புதிதாக உள்ளே வந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இப்படம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

கதைக்களம்

ஒவ்வொரு பெண்களின் வலி, இன்பம், துன்பம் அனைத்தையும் சில ஆண்கள் வழியாக உணர்த்தியிருப்பதே இந்த இறைவி. இயக்குனர்கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோளுக்கு இனங்க படத்தின் கதை பற்றி எதையும் விரிவாக தெரிவிக்கவில்லை.

படத்தை பற்றிய அலசல்

‘மழை நல்லாருக்குல...நனையலாமா....ஹிம்ம்...நனையலாம் ஆனால், நனைந்திடுவோமே' என்று அஞ்சலி கூறும் வசனத்தோடு படம் தொடங்குகிறது. இந்த ஒரு வசனம் தான் படத்தின் மொத்த கதையும் கூட. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சுதந்திரத்தை ஏதோ ஓர் ஆணிடம் எதிர்ப்பார்க்கிறார். அது அவர்கள் தவறு இல்லை, அவர்களுடைய அம்மா, அம்மாவுடைய அம்மாவின் வளர்ப்பில் உள்ள தவறு என உரைக்க சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
எஸ்.ஜே.சூர்யா இப்படி ஒரு நடிகனை தான் நாம் இத்தனை நாட்கள் தொலைத்துக்கொண்டு இருந்தோம் என பின்னி பெடலெடுத்து இருக்கிறார். ஏன் இப்படி கூறினோம் என்றால் அத்தனை லோக்கலாக குடித்துவிட்டு, ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டு அதை வெளியிட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரம். படத்தின் கதையே கிட்டத்தட்ட இவரை வைத்து தான் நகர்கின்றது. அதிலும் கிளைமேக்ஸில் போனில் அவர் அழுகையை அடக்கி கொண்டு பேசும் இடத்தில் எத்தனை விருது கொடுத்தாலும் ஈடு ஆகும்.
பெண்களுக்கான சுதந்திரத்தை நாம் இன்னும் 30%, 50 % என கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்கள் யார் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க, எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக்கொள்வேன் என்பது போல் ஒரு கதாபாத்திரம் பூஜா. விஜய் சேதுபதி தன்னை திருமணம் செய்துக்கொள் என தன் சித்தாப்பாவுடன் வர, அவர் ‘என் கணவன் இறந்து விட்டான், அதற்கு பின் இவனோட கொஞ்ச நாள், இனி அவன் வாழ்க்கையில் வர மாட்டேன். ஆனால் வெளியே போய் என்னை விபச்சாரி என்பீர்கள், அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை’ என அவர் பேசும் இடம் இப்படி ஒரு அழுத்தமான தைரியமான காட்சியை பார்த்து பல வருடம் ஆகிவிட்டது கார்த்திக்.
படத்தின் பல காட்சிகள் ஆண்களை கைக்கட்டி தலைகுனிய வைக்கின்றது. என் பாட்டி யாரை கையை காட்டினாலும் திருமணம் செய்துக்கொள்வேன் என்று அஞ்சலி கூறினாலும், திருமணத்திற்கு பிறகும் வேறு ஒருவரின் மீது காதல் வரலாம். ஆனால், வேறு வழி என்ன? எத்தனை கொடுமை வந்தாலும் உங்களுடன் தான் வாழ வேண்டும் என அஞ்சலி விஜய் சேதுபதியுடன் கூறும் காட்சிகள் சபாஷ்.
எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக கமாலினி முகர்ஜி, குடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வந்தாலும் சண்டைப்போட்டு அத்தனையும் சகித்து கொண்டு அவருடனே குடும்பம் நடத்துகிறார். பெண்கள் எத்தனை மாடர்னாக மாறினாலும் அவர்களுக்கு என்று ஒரு வட்டம் அமைத்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள் என்பதை கமாலினி முகர்ஜிகதாபாத்திரம் காட்டுகிறது.
பாபி சிம்ஹா என்ன கெஸ்ட் ரோல் போல் வருகிறார், போகிறார் என்று பார்த்தால், கிளைமேக்ஸில் பெரிய திருப்பமே இவரால் தான் வருகிறது. ஜிகர்தண்டாவிற்கு பிறகு தடுமாறிய பாபியை மீண்டும் கார்த்திக் கரையேற்றிவிட்டார்.
படத்தின் டெக்னிக்கல் விஷயத்தில் கார்த்திக் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார். பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன்வழக்கம் போல் உயிர் கொடுக்கிறார். சிவகுமார் விஜயனின்ஒளிப்பதிவு குறித்து சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஷாட் போதும்,எஸ்.ஜே.சூர்யா, பாபி, விஜய் சேதுபதி குடிக்கும் போது ஒரு லைட்டின் வெளிச்சம் பாட்டிலில் பட்டு பிரதிபலிப்பதை கூட அத்தனை அழகாக காட்டியுள்ளார்.
எத்தனை பேர் நன்றாக நடித்தாலும் கேப்டன் ஆப் தி ஷிப் கார்த்திக் சுப்புராஜ் பற்றி கூறாமல் இருக்க முடியுமா? நம்மெல்லாம் யார் சார், ஆண் நெடில், இவர்கள் பெண் குறில், ஆண்கள் என்கின்ற திமிரு, உலகத்திலேயே கேவலமான படைப்பு ஆண் என்று சொல்லும் போது படம் பார்க்கும் அத்தனை ஆணும் கைத்தட்டுகிறார்கள். இதுவே உங்களுக்கு வெற்றி தான். மாடர்ன் டே மணிரத்னம் மட்டும் இல்லை, பாலச்சந்தரும் கூட. படத்தில் ஒரு வசனம் வரும் ‘நாம படம் எடுத்தா நாம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்’ கண்டிப்பாக பேசும் கார்த்திக் சுப்புராஜ்.

க்ளாப்ஸ்

எஸ்.ஜே.சூர்யா ஒட்டு மொத்த படத்திலும் இவர் மட்டும் தனியாக தெரிகிறார்.
படத்தின் வசனம், ஒவ்வொன்றும் அத்தனை ஆழம்.

இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் டீம் அனைத்தும்.

பல்ப்ஸ்

அனைத்து தரப்பினருக்கும் படம் சென்றடையுமா என்றால்.....??????

மொத்தத்தில் இறைவி பார்த்த அனைத்து ஆண்களும் ஓர் குற்ற உணர்ச்சியூடன் தான் திரையரங்கை விட்டு வெளியே வருவான், அந்த வகையில் இறைவி ஜெயித்துவிட்டாள்.

ரேட்டிங்- 3.5/5