.
பார்வையற்றோர் குறையெதையும் பார்க்காது இருந்திடுவர்
செவிப்புலனை இழந்தவரோ குறைகேட்கா இருந்திடுவார்
கையற்றோர் தீயவற்றை தொட்டுவிடா திருந்திடுவார்
இத்தனைகள் குறையிருந்தும் இவர்நிறைவா யிருப்பார்கள் !
அழகான கண்ணிருக்கும் அகன்றபெரும் செவியிருக்கும்
திடமான கையிருக்கும் திரண்டபெரும் உடலிருக்கும்
வரமாக இவையிருந்தும் வண்ணமுற இருக்காது
வசைபாடிக் குறைசொல்லி வாழ்நாளைக் கழித்திடுவார் !
ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு எம்படைப்பே
பகுத்தறியும் பேரறிவை படைக்கையிலே புகுத்திவிட்டான்
குறையற்ற உடல்கிடைத்தும் குறைசொல்லி இருந்துவிடின்
எமைப்படைத்த இறைவனுக்கே ஏற்குமா எண்ணிடுங்கள் !
குறைகள்பல கொண்டிருப்போர் குறைபற்றி நினைக்கவில்லை
குறையற்ற உடலுடையோர் குறைகளிலே உறைந்துவிட்டார்
கறையற்ற வாழ்வினைநாம் காணவேண்டு மெனநினைத்தால்
நிறைவாக நினைப்பதற்கு எமைமாற்றல் வேண்டாமோ !
வெள்ளத்தின் நிலையுயர மெள்ளமெள்ளப் பூவுயரும்
உள்ளமது உயர்வுபெறின் கள்ளமுடை நிலையகலும்
நல்லதென பார்க்கின்ற நற்பார்வை வளர்ந்துவிட்டால்
கள்ளமது கழன்றகன்று கண்ணியமே வந்துநிற்கும் !
ஊனமுற்றோர் என்றுசொல்லி ஒதுக்கிவிட முயலுகின்றோம்
உடலினால் ஊனமுற்றோர் ஊனமுற்றோர் ஆகார்கள்
ஆணவத்தின் வசமாகி அறம்தவறி நடப்பவரே
மாநிலத்தில் ஊனமுற்றோர் ஆகிடுவார் வாழ்வினிலே !