02/06/2016 கொழும்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் இலட்ச கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியதோடு தாம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் இழந்தனர்.
தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வெள்ளதால் மூழ்கியிருந்த தமது வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
வெள்ளத்தால் மக்களின் அனைத்து உடமைகள் சொத்துகளும் மீளபெற முடியாதளவுக்கு நாசமாகியுள்ளதோடு பொருட்கள் அனைத்தும் இன்று குப்பையோடு குப்பையாகியுள்ளன.
இந்நிலையில் வெள்ளத்தில் மீதமாகிய வீடுகளை துப்புரவு செய்யும் பணியில் இலங்கை படையினர், சமூக நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த பணியில் அமெரிக்க இரா­ணுவ மீட்புப்படை­யினரும் இணைந்துள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான் என பல உலக நாடுகள்   நிவாரண உதவிகளை வழங்கி இருந்தன. 
ஆனால் அமெரிக்கா நிவாரண உதவிகளை மாத்திரம் வழங்கி விட்டுச் செல்லாமல் தனது நாட்டின் இரா­ணுவ மீட்புப்படை­யினரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் கொ­ழும்பில் வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்ட கொ­லன்­னாவை மற்றும் வெல்­லம்­பிட்டிய பகு­தி­களில் அமெ­ரிக்க இரா­ணுவ மீட்புப்படை­யினர் தற்போது துப்­பு­ரவு  பணி­களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(படப்­பி­டிப்பு: ஜே.சுஜீ­வ­கு­மார்)