சூ...,சூ...சுதி வாத்மீகம் (மலையாள சின்மா) கானா பிரபா

.



சூ....சூ....சுதி வாத்மீகம் (மலையாளம்)

தொண்ணூறுகளில் இருந்து மலையாள சினிமாவைச் சுவைத்து வந்ததாலோ என்னமோ இன்று கேரளத்தை ஆட்கொண்டிருக்கும் நவ யுகப் படைப்புகளின் அதீத ஆட்கொள்ளல் ஒரு வகையில் சலிப்பையும் கொடுப்பதை உணர்வேன். 

தன் ஆதார ஸ்ருதியான கேரளத்து வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களையும், உளவியல் சிக்கல்களையும் அபாரமான திரைக் கலைப்படைப்புகளாக எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் காட்டியது  இந்த மலையாளத் திரையுலகம்.
அந்த வகையில் மீண்டுமொரு ஆத்ம பந்தத்தை ஏற்படுத்திய ஒரு சினிமாவை இன்று தரிசிக்க நேர்ந்தது. அந்தப் படத்தின் பெயர் தான் சூ சூ சூதுவாத்மீகம் (Su...Su...Sudhi Vathmeekam).

திக்குவாய்க் குறை கொண்ட சுதி என்ற சுதி வாத்மீகம் என்ற கிராமத்து இளைஞன், தனக்குப் பிறவியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த வாய் திணறல் குறைபாட்டிலிருந்தும், சமூகத்தின் கேலிப் பேச்சினால் அவனைப் பீடித்த தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் மீண்டு வந்து தன்னை மீளக் கட்டியெழுப்பினானா என்ற வாழ்வியல் பயணமே இந்தப் படத்தின் கதைக்கரு.

அழகான கேரளத்துக் கிராமியப் பின்புலத்தில் இயங்கும் இந்தப் படம் "Sudheendran Avittathur" என்ற கேரள இளைஞனின் "Beautiful life story" நிஜ வாழ்வியலின் கதையை மையப்படுத்தி எழுதப்பட்டுத் திரை கண்ட சினிமா.
அந்த இளைஞனின் பேஸ்புக் பக்கம் இது

ஜெயசூர்யா நாயகனாக நடித்ததோடு இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டின் சிறப்புத் தேசிய விருது இவருக்குக் கிட்டியிருக்கிறது.

இம்மாதியான பாத்திரத்தை வைத்துக் கொண்டு சினிமா செய்தால் அது கேலிப் பொருளாகவே பெரும்பாலும் அமைந்து விடும். இதற்கு முன்னர் வெளிவந்த குஞ்சிக்கூனன் (தமிழில் பேரழகன்) பாத்திரப்படைப்பும் நகைச்சுவை கலந்தே பின்னப்பட்டது. 
ஆனால் வாய் குழறிப் பேசும், தன்னம்பிக்கை இழந்த ஒருத்தனின் கதையைச் சொல்லும் போது அதைக் கிண்டலாக்கும் மாமூல் சினிமாச் சமாச்சாரங்கள்றிப் பயணித்தது இந்தப் படத்தின் சிறப்பு. நாயகன் ஜெயசூர்யா வெகு இயல்பாகப் பண்ணிப் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
படம் முடிந்த பின்னரும் ஜெயசூர்யாவை மறைத்து அந்தப் பாத்திரமே நிலைத்து நிற்கின்றது.
படத்தில் சேர்த்த மற்றைய பாத்திரங்களும், நாயகி உட்பட வெகு சிறப்பு.

படத்தின் திரைக்கதையோட்டத்திலும் ஜாலமில்லை, இந்தக் கதைப் பின்னணியைக் கொஞ்சம் கூடுதலாகவோ, குறைச்சலாகவோ வெளிக்காட்டியிருந்தால் ஜனாதிபதி மட்டுமே பார்க்கக் கூடிய விருதுப் படமாகவோ அல்லது சாதா எள்ளல் சினிமாவாகவோ அமைந்திருக்கும்.

"சூ...சூ....சுதி வாத்மீகம்" தன் சுயத்தை மீள நிறுவும் மலையாள சினிமா.