யூனியன் கல்லூரியின் 200 வது விழா சிட்னியில் - செ.பாஸ்கரன்

.

சென்ற சனிக்கிழமை 28.05.2016 மாலை சிட்னி பஹாய் சென்டரில் உள்நுளைகின்றேன்  நேரம் மாலை 5.50  யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரின் 200வது ஆண்டு விழா. 200வது ஆண்டு விழா  கொண்டாடும் யாழ்ப்பாணத்து முதல் கல்லூரி இதுதான் என்ற பெருமையோடு பாடசாலை பழைய மாணவர்கள் புன்னகையோடும் கூப்பிய கரங்களோடும் எங்களை வரவேற்று ஊடக அனுசரனையாளர்களுக்கான இருக்கையில் அமரவைக்கின்றார்கள். ஏறக்குறைய மண்டபம் நிறைந்து காணப்படுகின்றது. இன்னும் பார்வையாளர்கள் வந்துகொண்டே இருக்கின்றார்கள். பல தொண்டர்கள் பல்வேறு திசைகளிலும் பறந்துகொண்டிருக்கின்றார்கள். பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு A.J.ஜெயச்சந்திராவையும்  செயலாளர் Dr.ஞானராஜனையும்  மூன்று நாட்களுக்கு முன்பாக ATBC  வானொலியில் பேட்டி கண்டபோது நிகழ்வு 5.59 மணிக்கு ஆரம்பமாகும்   என்று கூறியது ஞாபகத்தில்வர கடிகாரத்திலும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டேன் . 5.58 மணிக்கு ஒலிவாங்கியில் தட்டும் சத்தம் கேட்டது 







தொடர்ந்து நல்ல தமிழில் பெண்குரல் ஒன்று யூனியன் கல்லூரி சார்பாக சபையை வரவேற்றது. அழகு தமிழ் தரும் அணங்கு யாரென்று பார்க்கிறேன் அறிமுகமான பிரேமினி ராஜலிங்கம்தான். அப்பாடா இன்னுமொரு கல்லூரியின் பழைய மாணவர்கள் சரியான நேரத்தில் தொடங்குகின்றார்கள்  என்று மகிழ்வு கொள்கின்றேன் பாராட்டுக்கள் .

தொடர்ந்து அறிவிப்பாளராக மேடையில் தோன்றுகிறார் யூனியன் கல்லூரி பழைய மாணவர்களில் ஒருவரும் சிட்னியில் நன்கு அறிமுகமானவருமான கலாநிதி பிரவீனன் மகேந்திரராஜா. கம்பீரமான குரல் அழகு தமிழ் யூனியன் கல்லூரியின் திறமைக்கு கட்டியம் கூறியது.



மங்கள விளக்கேற்ற அழைக்கப்படுகின்றார்கள் யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு A.J.ஜெயச்சந்திரா, அவரது பாரியார் திருமதி ஆன் ஜெயச்சந்திரா, Julie Owens MP (Federal Member for Parramatta), Dr (Geoff) Geoffrey LEE (Member of the Legislative Assembly ம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்த பிரதம விருந்தினரும் யூனியன் கல்லூரி பழைய மாணவர்களில் ஒருவரும் 2006 ம் ஆண்டு அகில இலங்கையிலும் உயர்தர வகுப்பு பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல்தர மாணவனாக வந்தவருமான Prof.P.N.சுகந்தன் அவர்களும்.
விளக்கைச் சுற்றி இவர்கள் வந்துவிட்டபோதும்  மங்கள விளக்கேற்றுதல் ஒரு சிறு தாமதத்திற்குப் பின்புதான்  இடம் பெற்றது.என்ன காரணமோ அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

அவுஸ்திரேலிய தேசிய கீதம் காவியா ஜெயசங்கரினால் மிக அழகாக இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி பழைய மாணவிகளால் கல்லூரி கீதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து போரால் இறந்தவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.   
தலைவரின் வரவேற்புரையை தொடர்ந்து தபால் முத்திரை வெளியிடப்பட்டது. இதனை , Julie Owens MP யும்  Dr (Geoff) Geoffrey LEE யும் வெளியிட்டு வைத்தார்கள் . இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது .இந்த நிகழ்வுகள் மிக விரைவாக நடைபெற்று முடிந்தது.

இதனைத் தொடர்ந்து சபையோர் ஆவலோடு எதிர் பார்த்திருந்த சிட்னியின் புகழ் பெற்ற “EASTERN EMPIRE”  இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. உள்ளூர் இசைக் கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து  மிகவும் திறமையான இசைக்குழுவை உருவாக்கி உள்ளார்கள் என்பதே உண்மை. இவர்களோடு பல மேடைகள் கண்ட இளம் உள்ளூர் பாடகர்களும் இணைந்து கொண்டு நிகழ்ச்சியை உன்னத நிலைக்கு எடுத்து சென்றார்கள் நிகழ்வு தொடங்கும்போதே  கணீர் என்ற குரலோடு “ தோம் கருவில் இருந்தோம் “ என்ற பாடலோடு மேடையில் வந்தார் கோபிராம் ஸ்ரீரங்கநாத ஐயர். பின்னணி இசை மக்களை மயக்கிட கரகோஷம் மண்டபத்தை அதிர வைத்தது.
பாடல் நிறைவடைந்ததும் இசைக்குழுவின் அறிவிப்பாளராக அறிமுகமானார் பிரசன்னா அவர்கள். சுருக்கமாகவும் அழகாகவும்  நிகழ்ச்சியை தொடர்ந்து அழைத்துச் சென்றார். மெலோடி இசை மழைத்துளிகள் போல் சொட்டத் தொடங்கியதும் பெண் குரலொன்று  இனிமையாக காதில் வந்து கீதம் இசைத்தது சொட்ட சொட்ட நனையுது தாஷ்மகால் என்ற பாடலை பாடிக்கொண்டு வந்தார் இளம் பாடகி அபிஷாயினி பத்மஸ்ரீ அவர்கள் மீண்டும் கரகோஷம் கேட்காமலே கிடைத்தது.

இந்திய இசை நிகழ்ச்சிக்கு குறைந்ததல்ல என்பதுபோல் மிக அற்புதமாக தொடர்ந்துகொண்டிருந்தார்கள். பழமுதிர் சோலை என்ற பாடலோடு சபையை கட்டிப் போட்டு வைத்திருந்தார் கிரி கணேசராஜா  என்ற
பாடகன். நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆம் அது கேசிகா அமிர்தலிங்கம் பாடிய பாடல் இனிமையான குரலோடு அனைவருக்கும் தெரிந்தவரான கேசிகா இனிமையாக இசைத்தார் அந்தப் பாடலை. இசைக் கலைஞர்களுக்கு இந்த இடத்தில் மிகப் பெரிய பாராட்டுக்கள் சபையினரால் கொடுக்கப் பட்டது.


பாடல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது பார்வையாளர்கள் இன் இசையில் நனைந்து கொண்டே இருந்தார்கள் . ராஜாவும் காவியாவும் இணைந்து பூமாலை ஒரு பாவையனதோ பாடலை ரசிக்ககூடியதாக  பாடினார்கள் . மூன்று இளைஞர்கள் இணைந்து மக்களின் கரகோசத்தின் மத்தியில் அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும் என்ற கருத்தாளம் மிக்க பாடலை மிக நன்றாக பாடினார்கள். இசை காதில் தேனை வார்த்தது. இருந்தாலும் ஒரு கவலை பாடல் வரிகள் பல இடங்களில் தவறாக பாடப்பட்டது. இளைஞர்கள் தமிழில் பாடுவது பாராட்டப் படவேண்டிய விடயம் தான் இருந்தாலும். இப்படியான கருத்தாளம் கொண்ட பாடல்களில் கவனம் எடுத்து பாடுங்கள் என்பது என் வேண்டுகோள் .ராஜேஷ் என்ற இளைஞர் கீபோட்டில் பின்னி எடுத்தார் பாராட்டுக்கள்.
சௌமியாவும் கிரியும் இணைத்து நிலா காயும் நேரம் சரணம் என்ற பாடலை நன்றாக பாடினார்கள். சத்தியன் பாடிய உன்னோடு நானிருந்தால் அருமை . எங்கே இருந்துதான்  இந்த உயிர் மூச்சை நிறுத்தி பாடுகின்றார் என்று ஆச்சரிய பட வைத்து விட்டார்.  இடை வேளை என்று அறிவித்தல் வந்ததனால் விருப்பம் இல்லாமலே எழுந்து போகவேண்டி இருந்தது.


இனிய இசையை ரசித்த எமக்கு நல்ல உணவையும் மிக விரைவாக தொண்டர்கள் வழங்கியது பாராட்ட வேண்டியதே. முப்பது அங்கத்தவர்கள் மாத்திரம் உள்ள யூனியன் கல்லூரிக்கு இத்தனை தொண்டர்களா என்று எண்ணி வியந்தேன். மற்றவர்களையும் அரவனைத்து நடாத்திய குழுவினர் பாராட்டப்பட்ட வேண்டியவர்கள்தான். இதை மற்றவர்களும் பின்பற்றலாம்.

இடைவேளையின் பின்பு படலைக்கு படலை புகழ் சாருராமின் நெறியாள்கையில் கள்ளன் வருவான் கவனம் நாடகம் மிக நன்றாக இருந்தது பிரேமினி ராஜலிங்கம் கிருஷ்ணா நாராயணசர்மா சாரங்கன் ஆகியோர் நகைச்சுவையாகவும் சிந்திக்கக் கூடியதாகவும் சிறிது நேரத்தில் செய்து கரகோசத்தை பெற்றுக் கொண்டார்கள். பல மேடைகளில் இவர்கள் வரவேண்டும்.
ஒரு சிறிது நேரம் உதவி புரிந்தவர்களை பாராட்டினார்கள் நன்றி நவில்தலை மன்ற செயலாளர் கலாநிதி ஞானராஜன் மிக சுருக்கமாக வழங்கினார். வந்தவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இசை நிகழ்வை தொடர விட்டதற்காக யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு நன்றியும் பாராட்டும். இதை மற்றைய அமைபினரும் பின்பற்றினால் மக்கள் எந்த நிகழ்வுக்கும் விரும்பி செல்வார்கள்.


திரிலோசெனன் தியாகராஜா என்ற பாடகர் ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டார் . என்ன ஆட்டம் என்ன பாட்டு. அடுத்த மேடையில் இவரிடமிருந்து உப்புக் கருவாடு  ஊறவைத்த சோறு பாடல் கேட்க ஆசை .
இசை நிகழ்வு எந்த தொய்வும் இல்லாமல் மிக அருமையாக இருந்தது .அத்தனை இளம் இசைக்கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். எம்மிடையே ஒரு அற்புதமான இசைக்குழு இருக்கின்றது இந்த இசைக்குழு இசைக்கும் எந்த சபைக்கும் இசை ரசிகர்கள்  விரும்பி செல்வார்கள் என்பது என் அபிப்பிராயம்.
புல்லாங்குழலால் தழுவியவர் வெங்கடேஷ் ஸ்ரீதரன் , கிற்றார் ஹரிஷ் நாயர், வயலின் ஹரிஷ் நாயர் , வயலின் இசையில் வருடிசென்றார் கஸ்தூரி முருகவேள், கீபோட் யதூஷன் ஜெயராசா, கீபோட் ராஜேஷ் ரங்கமணி , பெர்குஷன் சாருராம் , ரதீபன் ராஜ்குமார் , ஜனகன் சுதந்திரராஜ் , பிரணவன் ஜெயராசா .தபேலா ஐங்கரன் கந்தராசா .இந்த கலைஞர்கள் பல வாத்தியங்களை கையாளுகின்றார்கள் என்பது குறிப்பிட தக்கது.


இசை நிகழ்வு நிறைவடைந்தும் ரசிகர்கள் எழுந்து செல்லாமல் இன்னும் பாடினால் ரசிப்போம் என்பதுபோல் அமர்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. நேரத்தைப் பார்த்தேன் ஒன்பது மணி ஐம்பது நிமிடம். குறிப்பிட்ட நேரத்திற்கு தொடக்கி குறிப்பிட்ட நேரத்திற்கு முடித்து வைத்தது மட்டுமல்லாது ஒரு நல்ல நிகழ்வை உள்ளூர்க் கலைஞர்களோடு நாடாத்திக்  காட்டிய யூனியன் கல்லூரி பழைய மாணவர்களுக்கும் அதன் தலைவர் ஜெயச்சந்திராவிற்கும் பாராட்டுக்கள்.
நிறைய நிறைகள் இருந்ததனால் சில குறைகளை தவிர்த்து விடுகின்றேன் .