சொல்லி விடாதீர்கள் - முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

.
பேன்ட் சட்டை அணிந்த
அனைவருமே
அவன் கண்களுக்கு
கோடீஸ்வரர்கள் தான்
நானும் அப்படித்தான்
தெரிந்திருக்கக் கூடும்!
நான் அவனைக்
கடந்துபோன அந்த சில
நொடிகளில்…
நடைபாதையில்
அமர்ந்திருந்தான் அவன்
கைகளை நீட்டி
என்னிடம் எதையோ
எதிர்பார்த்தபடி…
நிச்சயமாய்
என்னிடம் அவன்
பணத்தையோ உணவையோ தான்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
கல்வி வணிகமாகிப் போன
எங்கள் பண(ஜன)நாயக நாட்டின்
விலைவாசி ஏற்றத்தால்
இப்பொழுதெல்லாம்
நானுங்கூட அவனைப்போல்
ஒரு நாளைக்கு ஒருமுறையோ
இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான்
அரைகுறை வயிறோடு
உணவருந்துகிறேன்
என்ற உண்மையை
யாரும் அவனிடம்
சொல்லிவிடாதீர்கள்…

முனைவென்றி நா சுரேஷ்குமார்