.
‘என் பெயர் சீஸர்’ உயிர்மை டிசம்பர் 2015 இதழில் சாரு நிவேதிதாவின் சிறுகதை.
‘என் பெயர் சீஸர்’ உயிர்மை டிசம்பர் 2015 இதழில் சாரு நிவேதிதாவின் சிறுகதை.
நாம் சிறு வயதில் “ஒரு வாழைப்பழம் தன் வரலாறு கூறுதல்” , “ஒரு கோபுரம் தன் வரலாறு கூறுதல்” என்று எழுதச் சொல்லுவார்கள். அதற்கு என ஒரு முன் மாதிரி துவக்கம் வேறு என் நண்பர்கள் எல்லோரும் எழுதுவார்கள் “இந்த உலகில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருளுக்கும் தத்தமெக்கன ஒரு வரலாறு உண்டு ” எனக்கு ஒரு மேஜைக்கான தன் வரலாறு கூறும் கட்டுரை. நான் மரம் எந்த வனத்தில் இருந்தது அங்கே மான்,குயில், மயில் எனத் துவங்கி கொஞ்சம் அதிகமாகவே கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டேன். தமிழ் ஐயா காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி விட்டார். “உன்னை என்ன எழுதச் சொன்னேன்? நீ என்ன எழுதிக் கொண்டு வந்திருக்கிறாய்?”
சிறுகதை விமர்சனம் என்று துவங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் இது என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். சரிதான். ஆனால் கதையில் வரும் நாய் ஷீனா போரா கொலை வழக்கு முதல் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ரமணர், குடும்ப நல நீதிமன்றம் என்று உதிரியாகப் பல விஷயங்களைப் பேசுகிறதே. மனித இன ஜாதி வித்தியாசம் முதல் நாய இன ஜாதி வித்தியாசம் வரை விளக்குகிறதே. தன் அப்பா (வளர்க்கும் எழுத்தாளர்)வுக்கு அவர் வாசகன் எழுதும் மின்னஞ்சலை ஒரு வார்த்தை பிசகாமல் சொல்லுகிறதே. ஒரு நாய்க்கு என்னென்ன மாதிரி மன்னிக்கவும் ஒரு உயர்ஜாதி நாய்க்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டும் அது காலைக்கடன் கழிக்கும் நித்தியப்படி எவ்வாறானது மருத்துவர் எப்படி மருத்துவம் செய்வார் என்பது ஒன்று மட்டும்தான் அது தன் சம்பந்தமாகப் பேசுவது.
கதையின் முடிவில்தான் அந்த வாசகர் மின்னஞ்சல் வருகிறது. அதில் நாயை அடித்துக் கொல்வது விளையாட்டாக ஒரு குரூரமான கேளிக்கையாகத் தனக்கு இருந்ததை அந்த வாசகர் பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு உயர்ந்த ஜாதி நாய்க்கு உண்டான உணவு, மருத்துவம் தந்து தன் சக்திக்கு மீறி வளர்க்கும் எழுத்தாளரையும் அதை அடித்துக் கொல்லும் ஒரு இளைஞனையும் நாம் கதையில் பார்க்கிறோம். நாய் இனத்துக்கு இல்லாத சிக்கல்கள் மனித உறவுகளுக்குள் இருப்பதையும் நாம் காண்கிறோம். அந்தக் காலத்தில் ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ பாட்டில் கூட இந்தக் கதையில் வரும் சில கருத்துக்கள் உண்டு.
நவீனத்துவ காலத்துக்கு முன்பு யதார்த்தவாதம் மட்டுமே இருந்தது. அது தண்டவாளம் போன்றது. ஆனால் பயணம் மிகவும் சௌகரியமானது. நவீனத்துவம் வாசிப்பைப் பெரிய சவாலாக்கி விட்டது என்று கூக்குரலிட்டு ஒதுங்கியவர் தான் பெரும்பான்மை. ஆனால் அதை வாசித்த பின் மட்டுமே நாம் புனைவின் தேவைகளை, உச்சத்தை நவீனத்துவம் மட்டுமே சாத்தியமாக்குகிறது என்று எந்த ஒரு வாசகரும் புரிந்து கொள்ளுவார். அப்படிப் புரிந்து கொண்டு இந்திய உலக இலக்கியங்களை வாசிக்கும் தீவிர வாசகர் நிறைய.
நவீனத்துவ காலத்தில் யதார்த்தம் அல்லது அதன் எளிய வடிவில் எழுதக் கூடாது என்பதில்லை. அது புனைவாசிரியரின் உரிமை. அதன் மறுபக்கம் ஒரு எழுத்தாளர் இவ்வளவு தூரம் இலக்கியம் வந்து விட்டதால் இப்படியும் எழுதி இருக்கலாமே என்று சொல்லலாமா? சொற்சிக்கனமும் நுட்பமும் இன்றைய எந்தப் படைப்பிலும் எதிர்பார்க்கப் படுகிறது என்று சொல்லலாமா? அதுவும் சாரு நிவேதிதாவின் கதையைப் பற்றியே சொல்லலாமா?
சொல்லலாமே. விமர்சகனுக்கு அந்த உரிமை உண்டு.