.
தமிழ் மூத்த பிரஜைகளுடன் ஒரு பகல் நேரப்பொழுது
மெல்பன் கே.சி. தமிழ் மன்றத்தின்
தலைமுறை சார்ந்த ஆக்கபூர்வமான பணிகள்.
முருகபூபதி
" நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன், என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன் " என்ற பழைய திரைப்படப்பாடல் அந்த மண்டபத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அதனைப்பாடிய பெண்மணிகள் 60 வயதையும் கடந்துவிட்டவர்கள். புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வதியும் தமது பிள்ளைகளின் குழந்தைகளை
பராமரிக்க அழைக்கப்பட்ட பல மூத்த பிரஜைகளும் அந்தச்சபையில் இருந்தனர். தமிழ் முதியோர் மத்தியில் நடந்த மாதாந்த ஒன்று கூடலில் அந்தப்பெண்கள் மேலும் சில பாடல்களைப்பாடி மூத்தவர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பாடிய பாடல்கள் யாவும் 1970 காலகட்டத்திற்கு முன்பின்னானவை. பி. சுசீலா, எம். எஸ்.ராஜேஸ்வரி, ரி.எம். சவுந்தரராஜன், ஜமுனாராணி, ராஜா - ஜிக்கி காலத்துப்பாடல்கள். அந்தக்கால நினைவுகளை அவர்கள் தமது பாடல்களினூடாக அழைத்துக்கொண்டிருந்தனர்.
அவுஸ்திரேலியா மெல்பனில் கே.ஸி. தமிழ்
மன்றம் என்ற அமைப்பு கடந்த சில வருடகாலமாக இயங்கிவருகிறது. பத்தோடு பதினொன்றாக இந்த தமிழ் அமைப்பு இயங்காமல், இளம்தலைமுறையையும் குறிப்பாக குழந்தைகளையும் அதே சமயம் வயதால் மூத்த தமிழ்ப்பிரஜைகளையும் கவரும் வகையில் அடிக்கடி ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.
இந்த அமைப்பு நடத்திய தைப்பொங்கல் விழா, கிறிஸ்மஸ் விழா, ஆடிக்கூழ்
விழா முதலானவற்றில் ஏற்கனவே கலந்துகொண்டிருக்கின்றேன். இந்த அமைப்பு இளவேனில் என்னும் சிறுவர் இலக்கிய இதழையும் வெளியிட்டுவருகிறது.
இதில் அங்கம்வகிப்பவர்கள் எனது இனிய நண்பர்கள் என்பதனால் நேரம்
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கும் செல்வேன்.
கடந்த 28 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பன் கே.சி. தமிழ் மன்றம் ஒரு தமிழ் நூலகத்தை தொடக்கவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் எனக்கு மின்னஞ்சல் ஊடாக அழைப்பு வந்தது.
நான் மெல்பனிலிருந்து சற்று தொலைவில் இருப்பதனால் எனது குடும்ப
நண்பர் பட்டயக்கணக்காளர் ஏ. வி.முருகையா அவர்களின் இல்லத்திற்கு முதல் நாளே சென்று தங்கியிருந்து, அவருடன் மறுநாள் முற்பகல் இம்மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கு சென்றேன்.
எனக்கும் 65 வயது நெருங்குகின்றமையால் இந்த அமைப்பின் மூத்த பிரஜைகள் சங்கத்தில் இணைந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பமும்
வந்துள்ளது.
வயது செல்லச்செல்ல குழந்தைகளுடனும் மூத்த பிரஜைகளுடனும் நேரத்தை செலவிடவேண்டும் என்ற எண்ணம்தான் மனதில் துளிர்விட்டுக்கொண்டிருக்கிறது.
வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அங்கு சில மாதங்கள் விளம்பரப்பிரிவிலும் வேலை செய்திருக்கின்றேன்.
வீட்டு வேலைக்கு சமையல் வேலைக்கு ஆள் தேவை முதலான விளம்பரங்களை பதிவுசெய்துள்ளோம்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் லண்டனில் வதியும் எனது நண்பர் ஈ.கே.ராஜகோபால் வெளியிட்ட தமிழன் இதழில் வந்த ஒரு விளம்பரம் என்னை துணுக்குறச்செய்திருந்தது.
" காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையில் ஒரு வயதான அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்க ஒரு பெண் தேவை. உரிய சம்பளம் தரப்படும்"
நான் புரிந்துகொண்டேன். வீட்டிலிருப்பர்கள் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பிள்ளைகள் பாடசாலைக்கு போய்விடுவார்கள். தனியே இருக்கும் வயோதிபத்தாயை பார்ப்பதற்கும் அவருக்கு உணவு, சூப் எடுத்து கொடுப்பதற்கும், தொலைக்காட்சி, வானொலியை இயக்கிவிடுவதற்கும், குளியலறைக்கு கைத்தாங்கலாக அழைத்துச்செல்வதற்கும்தான் ஆள் தேவை. எனவே " பேசிக்கொண்டிருப்பதற்கு
" என்ற வார்த்தைக்குள் இவை அத்தனையும் அடங்கிவிடும்.
வாழ்க்கை இன்று அவ்வளவு பிஸியாகிவிட்டது.
வெளிநாடுகளில் முதியோர் இல்லங்கள் பெருகியிருப்பதுபோன்று இலங்கை இந்தியாவிலும் பெருகிவிட்டன. வெளிநாடுகளில் நிரந்தரவதிவிட உரிமைபெற்று வாழும் எம்மவர்களின் குழந்தைகளை பராமரிக்கவும், அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கவும் தாத்தாவும் பாட்டியும் தேவைப்படுகின்றனர்.
இவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தின் பின்புலத்தை வெளிப்படுத்தி பல வருடங்களுக்கு முன்னர் அம்மியும் அம்மம்மாவும் என்ற சிறுகதையும் எழுதியிருக்கின்றேன்.
நாம் இனிமேல் கடக்கவிருக்கும் பாதையைத்தான் எம்மைவிட மூத்தவர்கள் கடந்துகொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் அவர்கள் விரும்பும் தமிழ் நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்காக வாகன வசதிகேட்டு தொலைபேசிகளுடாக உரையாடும் பல தாத்தா பாட்டிமார் வசிக்கும் வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கும். ஆனால், அந்தக்கார்களுக்கு வேறு வேலைகள் இருக்கும்.
வயது செல்லச்செல்ல நனவிடை தோய்தலில் ஈடுபடும் முதியோருக்கு பேச்சுத்துணை அவசியம். ஆனால், இவர்களின் பேச்சைக்கேட்க இளைய தலைமுறை தயாராக இல்லை. அவர்கள் முகநூல்களில் பேசிக்கொண்டிருப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால், குழந்தைகளின் கதை வேறுவிதமாகவே இருக்கும். தாத்தா பாட்டிமாருக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடைய நீடிக்கும் உறவு காவிய நயம் மிக்கது என்று முன்னரே எனது சொந்த அனுபவத்தில் பதிவுசெய்துள்ளேன். இந்த உறவு தொடர்பாக பல திரைப்படங்களும் சிறுகதைகளும் வெளியாகியுள்ளன.
கடந்த 28 ஆம் திகதி நான் கலந்துகொண்ட கே.சி. தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகளுக்கான ஒன்றுகூடல் இரண்டு அமர்வுகளாக ஒரு முழுநாள் பகல்பொழுதில் நடந்தது.
முற்பகல் நிகழ்ச்சியில் தலைமைதாங்கிய பெரியவர் நவரத்தினம் வைத்திலிங்கம் அவர்கள் சங்கத்தின் தகவல்களை உறுப்பினர்களுக்குத்
தெரிவித்தார். அத்துடன் மூத்தபிரஜைகளை கவரத்தக்க THE CARER என்னும் ஆங்கில மேடை நாடகத்தினை பார்க்க விரும்புபவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்துகொடுக்கவிருப்பதாகவும் சொன்னார்.
சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்காக அரசு வழங்கும் மானியங்கள் பற்றியும் விபரித்தார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த என்னருகில் அமர்ந்திருந்த அண்மையில் மெல்பனில் தனது பேரக்குழந்தைகளை பார்க்கவந்து, விரைவில் திரும்பவிருக்கும்
மூத்த எழுத்தாளர் இர. சந்திரசேகரன், " பூபதி இந்தமாதிரியான வசதிகள் இலங்கையில் இல்லை" என்று கவலைப்பட்டார்.
" அய்யா இங்கிருப்பது அங்கிருக்காது, அங்கிருப்பது இங்கிருக்காது " என்று இரத்தினச் சுருக்கமாகச் சொன்னேன்.
அவரும் இந்த ஒன்று கூடலில் அன்னையர் தினம் பற்றி உரையாற்றினார்.
வெளிநாடுகளில் வதியும் எமது குழந்தைகளை தமிழில் பேசவைக்க என்ன செய்யலாம் ? என்ற கவலைதான் பேச்சிலும் அவருடைய கலந்துரையாடலில் ஈடுபட்டவர்களின் உரைகளிலும் தொனித்தது.
தலைவர் நவரத்தினம் வைத்திலிங்கம், என்னருகே வந்து, விரைவில் நடத்தவிருக்கும் ஒன்றுகூடலில் ஒரு பட்டிமன்றம் ஒழுங்கு செய்திருப்பதாகவும், அதில் கலந்துகொள்ளவிருக்கும் மூத்த பிரஜைகள் வெளிநாட்டு வாழ்க்கை மகிழ்ச்சியானதா ? இல்லையா
? என்ற தலைப்பில் வாதிடவிருப்பதாகவும் அந்தப்பட்டிமன்றத்திற்கு சில தகவல்களை தந்து உதவும்வகையில் என்னையும்
சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார்.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு நான் வந்திருப்பதனால், இந்த விவகாரம் பேசிப்பேசி அலுப்பேற்படுத்திய ஒரு விடயம்தான் என்பதை எப்படி அவர்களிடம் சொல்வது. தலைமுறை இடைவெளிபற்றி தொடர்ந்து பேசிவிட்டோம்.
"முகநூல் தேவையா, இல்லையா ? " என்ற தலைப்பிலும் விரைவில் பட்டிமன்றங்கள் நடக்கலாம்
" தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்திடுவோம். தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்வோம் " என்று மார்தட்டிய மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி மீராவுக்கே தமிழில் பேசமுடியவில்லை. ஆனால், இன்றும் புகலிட நாடுகளில் பாரதியையும் தமிழையும் மறக்காமல் அந்த மார்தட்டிய வசனத்தை சொல்கின்றோம். அத்துடன் வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழியும் பாடுகின்றோம். பாரதியின் கொள்ளுப்பேத்தி அமெரிக்காவில் வசிக்கிறார். எங்கள் குழந்தைகள் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியா, கனடா உட்பட அய்ரோப்பிய நாடுகள் யாவற்றிலும் வசிக்கிறார்கள். விடயம் அவ்வளவுதான்.
இலங்கையிலும் எமது தமிழ்க்குழந்தைகள் தங்களுக்கு அ. ஆ. இ அரிச்சுவடியை
ஐபேடில் சொல்லித்தரமாட்டீர்களா ? என்று கேட்கின்ற
காலத்தில்தான் நாம் வாழ்கின்றோம்.
தாம்பாளத்தில் பச்சை அரிசியை பரத்திவிட்டு, அதில் எழுதப்பழக்கி அரிச்சுவடியை செல்லிக்கொடுக்க முனைந்தால், " அது அரிசி சோறாக்குவது " என்று துடுக்குடன் பேசிய குழந்தைகள் பற்றி எனது அனுபவத்தில் சொன்னேன்.
முதியோரின் ஒன்றுகூடலில் அவர்கள் பாடிய பாடல்களும் நிகழ்த்திய உரைகளும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்தியது.
தொலைத்துவிட்டதை தொலைத்த இடத்தில் தேடுவதுதான் அந்தத்தெளிவு. ஆனால், அதற்கும் அப்பால் சில மணிநேரங்கள் மனம்விட்டு
உரையாடுவதற்கும், கேட்டு ரசித்து சிரிப்பதற்கும் முதியவர்களுக்கான இந்த சந்திப்பு அரங்கு பெறுமதியானதுதான்.
அவர்களின் உலகம் தனித்துவமானது.
நடுத்தரவயதினர் தமது இளமைக்காலத்தை அடிக்கடி நினைத்து பரவசப்படுவார்கள். தமது முதுமைக்காலம் எப்படி இருக்கும்
என்பதை இந்த முதியவர்களை கண்டுதான் தெரிந்துகொள்ளமுடியும். எனவே முதியவர்களின் ஒன்றுகூடல்களை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்துவோம்.
மதிய உணவுக்குப்பின்னர் அந்த மண்டபத்தில் ஒரு சிறிய தமிழ் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.
கே.சி. தமிழ் மன்றத்தின் தலைவர் டொக்டர் மதியழகன் நூலகத்தினை
தொடக்குவதற்கு சில வருடங்கள் காத்திருந்த செய்தியை சொன்னார். அந்தக்கால யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும், பழகும் தமிழ்ச்சொற்களில் மொழிமாற்று அகராதி முதலான
நூல்களை எழுதியிருப்பவரும் இலங்கை திரைப்படங்கள் குத்துவிளக்கு, நிர்மலா முதலானவற்றில் நடித்திருப்பவரும் இலங்கை வானொலி புகழ் சக்கடத்தார் ஒலிச்சித்திரத்தக் கலைஞருமான கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்கள் நூலகத்தை நாடா வெட்டி திறந்துவைத்தார்.
அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 95 வயது பிறக்கிறது. தற்பொழுது இடது கண்பார்வையை முற்றாக இழந்திருக்கும் அவர், தாம் வெளியிடவிருக்கும் அகராதியின் இரண்டாம் பாகம் பற்றி என்னுடன் பேசும்பொழுது சொன்னார். முதுமையின் தளர்ச்சி அவரிடத்தில்
தென்பட்டாலும், அவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டது மற்றவர்களுக்கு முன்னுதாரணமானது.
மெல்பனில் தமிழ் நூலகங்கள் இவ்வாறு அமைக்கப்படுதல், இதுதான் முதல் தடவையல்ல. ஏற்கனவே தமிழ் ஆர்வலர் மருத்துவர்
பொன். சத்தியநாதன் தமது சொந்தச்செலவில் ஒரு நூலகம் அமைத்தார். விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம் CLAYTON என்னும்
இடத்தில் அமைத்தது. Brim bank என்ற ஊரிலும் மாநகர நூல் நிலையத்தில் தமிழ்ப்பிரிவு இயங்குகிறது.
மாவை நித்தியானந்தனின் ஊக்கத்தினால் இயங்கிய மெல்பன் கலை வட்டமும் பாரதி பள்ளியும் முயற்சியெடுத்து Oakleigh நூல் நிலையத்தில் தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்டது.
பொதுவாக மாநகர நிருவாகத்தின் நூல் நிலையங்களில் இடம்பெறும் நூல்கள் நகரவேண்டும் என்பதுதான் விதிமுறை. அதாவது வாசகர்களினால் ஒரு நூல் நீண்டகாலம் கவனிக்கப்படாவிட்டால் அதனை அடுக்கிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு , வாயிலில் மிகமிகக்குறைந்த விலைக்கு விற்பனைக்கு வைத்துவிடுவார்கள்.
அவ்வாறு வைக்கப்பட்ட சில நூல்களை ஒரு வெள்ளிக்கும் ஐம்பது சதத்திற்கும் வாங்கியிருக்கின்றேன்.
கனடாவில் வதியும் படைப்பாளி அ. முத்துலிங்கம், ஷேக்ஸ்பியரின் ஒரு பெறுமதியான நூலை அவ்வாறு மிகமிக குறைந்த விலையில் வாங்கியிருப்பதாக சுவாரஸ்யமான கட்டுரை ஒன்று முன்னர் எழுதியிருக்கிறார்..
தமிழ் அமைப்புகள் இவ்வாறு நூலகங்களை தொடக்கும்பொழுது நூல்களை நகரச்செய்தல் வேண்டும். மாதாந்த ஒன்றுகூடல்களில் தாம் அண்மையில் படித்த நூல் பற்றிய தமது வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மற்றவர்களிடத்திலும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டமுடியும் என்று எனது கருத்துரையில் தெரிவித்தேன்.
மொத்தத்தில் அன்றைய தினத்தின் பகல்பொழுது இனிமையாக கழிந்தது.
அந்தச்சகோதரிகள் பாடிய " நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன் " காதுகளில் ஒலிக்கிறது.
நாம் தனித்துத்தான் வந்தோம். தனித்தே விடைபெறுவோம். ஆனால் அந்த நாயகன் பாடியதுபோன்று " உனைப்பார்க்க ஓடோடி வருவேன் " என்பதுதான் எம்மவர்களின் வாழ்க்கையாகியிருக்கிறது. ஒன்று கூடலுக்காக முதியோர் ஓடோடி வருவதன் தாற்பரியத்தில் அவர்கள் தொலைத்துவிட்டதை தொலைத்த இடத்திலேயே தேடுவதை அவதானிக்கின்றோம்.
----0----