.
ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான சிவா சுப்பிரமணியம் கடந்த 29-05-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில், கோண்டாவிலில் தமது இல்லத்தில் காலமானார்.
ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்திருந்த இவர், கட்சியின் உத்தியோகபூர்வ இதழ்களான புதுயுகம், தேசாபிமானி ஆகியவற்றில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்.
ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை இவருக்கிருந்தமையால் அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இவர் இயங்கிய காலத்தில் சங்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகளில் பல சிங்களத்தலைவர்கள், எழுத்தாளர்களின் உரையை அழகாக தமிழில் மொழிபெயர்த்தவர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அதிருப்தியுற்று வி.பொன்னம்பலம் வெளியேறி செந்தமிழர் இயக்கம்
என்ற அமைப்பை
உருவாக்கிய வேளையில் வி. பொன்னம்பலத்துடன் இணைந்து இயங்கியவர்.
இலங்கை அரசசேவையில் பணியாற்றியிருக்கும் சிவா சுப்பிரமணியம் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் முதலானவற்றையும் சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் மல்லிகை இதழில் எழுதியவர்.
குணசேனவிதான என்ற பிரபல சிங்கள எழுத்தாளரின் பாலம என்னும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய பிரபல்யமான சிங்களச் சிறுகதையை
தமிழில் மொழிபெயர்த்தவர். இதே சிறுகதையை ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்நாட்டில் ஜெயகாந்தன் மொழிபெயர்த்து தமது கல்பனா இதழில் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அவுஸ்திரேலியாவில் முன்னர் வெளியான உதயம் இதழிலும் இலங்கை
அரசியல் விவகாரங்கள் பற்றிய பத்திளை எழுதியிருக்கும் சிவா சுப்பிரணியம் இறுதியாக
தினகரன் பத்திரிகையிலும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். கொழும்பு தினக்குரலில் மனக்காட்சி என்ற தலைப்பில் அரசியல் விமர்சன பத்திகளையும் அண்மைக்காலத்தில் எழுதியவர்.
அமரர் சிவாசுப்பிரமணியத்தின் இறுதி நிகழ்வுகள் கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
(
தகவல்: முருகபூபதி - அவுஸ்திரேலியா
)