அகல் விளக்கு - சேரன்

.

கடவுளர்க்கு நிழல் உண்டா?
இருந்தாலும் யார் கண்டார்?
எம்
நெருப்புக்கும் கண்ணீருக்கும்
இல்லை.


சுக்கிலத்தாலும் குருதியாலும்
வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக
நாம் அனுப்பும் கணை
எதுவெனத் தேடிக் காட்டுக்குள்
போக முடியாது. காடும் எரிகிறது.
ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது
இருப்பதே ஒரு கால்


உருவற்ற கவிதையின் உயிரை
தேடாதே
தீ பெருகும் என்றாள்
பெருகுவது எல்லாம் நன்மைக்கே
எனத் தொடர்ந்து நடந்தேன்
கடலோரம்
வழி விடா நீர்
வழி தரும் மொழி




குருதிப்பணம் திரட்டி
பொய்யில் நினைவேந்தல் செய்தால்
கண்ணீர் நிறையாது
மழை பெய்து
தீபத்தை இருளாக்கும்
அலைகளிலா ஒலியில்
ஓலம் எழுந்து புலம்பெயர் உலகின்
காற்றில்
வியர்வையில்
குளிரில் கரையும்


அகக் காற்றில் ஆடும் விளக்கு
நிலையற்றுச் சுழலும் ஒளி
மறந்தாலும் வன்மமுடன்
மீண்டும் வரும் கொடுங்கனவு
எழுத்தால் அழியுமா சொல்?
nantri kalachuvadu.com