இலங்கைச் செய்திகள்


Jetwing Jaffna ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

புத்தர் சிலையை கடலில் நிர்மாணிக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கவில்லை.!

ரத்துபஸ்வல சம்பவம் : நஷ்ட ஈடாக 4.68 மில்லியன் ரூபா

இலங்கையை பாராட்டிய அவுஸ்திரேலியா

பனாமா ஆவணக்கசிவில் மஹிந்த குடும்பத்தாரும் சிக்கினரா ?

பனாமா ஆவணக்கசிவில் இலங்கை அரசியல்வாதிகள் மூவர்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மீண்டும் நீரில் மூழ்கின்றது விகாரை

ஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.!

ஊடகவியலாளர்களிடம் சந்திரகாந்தன் வேண்டுகோள்..!

இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணக்கம்

பிரதமர் ரணில் சோ தாவோவை சந்தித்தார்
கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் இரகசிய 'டீல்' : 100 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளார் : அதிர்ச்சி தகவல்
பயங்கரவாத தடைச் சட்டம், ஏனைய சட்டங்களின் கீழ் 18 படைவீரர்கள் கைது 








Jetwing Jaffna ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

04/04/2016 யாழ்ப்பாண நகர மத்தியில் அமைந்துள்ள Jetwing Jaffna ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் குறித்த ஹோட்டல் யாழ்நகர மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Jetwing ஹோட்டல் குழுமத்திற்குச் சொந்தமான இந்த ஹோட்டல் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
இங்கு 55 அறைகள் உள்ளன. ஜெட்விங் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் (JYDP) ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 67 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இங்கு நடைபெற்றது. 
இவர்களுக்கான சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். அமைச்சர் ஜோன் அமரதுங்க, வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் Jetwing ஹோட்டல் குழுமத்தின் தலைவர் ஹிரான் குரேயும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி 










புத்தர் சிலையை கடலில் நிர்மாணிக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கவில்லை.!


05/04/2016 யாழ்.நாக­வி­கா­ரை­யினால் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் கட்­டப்­ப­ட­வி­ருந்த புத்தர் சிலை  கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி வழங்­கப்­ப­டா­ததால் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி இல்­லாமல் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் எந்­த­வித கட்­டு­மா­னமும் மேற்கொள்ள முடி­யாது என்­பது யாழ். நாக­வி­காரை அதி­ப­திக்கு தெரிந்திருக்க வேண்டும் என தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்குக் கூட்­டணித் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,
புத்தர் சிலை நிர்மாணம் தடை செய்­யப்­பட்­ட­தா­னது, நாட்டின் இன மத சக­வாழ்­வுக்கு ஏற்­பட்­டுள்ள தடை என என்­னிடம் முறை­யிட்ட ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் தேசிய அமைப்­பாளர் நிஷாந்த வண­சிங்­க­விடம் நான் இது பற்­றிய பதிலை தந்­துள்ளேன். இதை ஒரு கார­ண­மாக வைத்­துக்­கொண்டு சிங்­கள ஊட­கங்­களில் இன­வா­தத்தைக் கிளப்­பி­ய­வர்­க­ளுக்கும் பதில் கூறி­யுள்ளேன். இது சக­வாழ்­வுக்­கான தடை இல்லை. நாட்டின் சட்­டதிட்டங்­களை புரிந்­து­கொள்­ளா­மை­யினால் ஏற்­பட்ட சட்ட தடை என கூறி­யுள்ளேன். இந்த கரை­யோர பாது­காப்பு திணைக்­களம் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நேரடி கண்­கா­ணிப்பின் கீழ் வரு­கி­றது.
இந்த நாட்டில் ஒரு குறிப்­பிட்ட பிரி­வினர், விசேட வரம் பெற்­ற­வர்­க­ளைப் போல் நினைத்த நேரத்தில் சட்­டங்­களை மீறி எதுவும் செய்­யலாம் என்ற நிலைமை மாறி, இன்று சட்­டத்தின் ஆட்சி இயன்ற அளவில் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது. தென்­னி­லங்­கையின் பல்­வேறு இந்து ஆல­யங்­களில் வானு­யர்ந்த கோபு­ரங்கள் பல எழுப்­பப்பட்­டுள்­ளன.  எனவே வடக்­கிலும் விகா­ரை­களில் கட்­டு­மா­னங்கள் மேற்கொள்ளப்­ப­டலாம் என்­பது இயற்­கையே.  ஆனால், சட்­டத்தை மீறி கட­லிலும், வானிலும் கட்­டு­மா­னங்­களை நினைத்­த­படி எவரும் மேற்கொள்ள முடி­யாது. இந்த நிலைப்­பாட்டின் அடிப்படையிலேயே யாழ்.அரச அதிபர் வேதநாயகன் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே சட்டத்தை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை சிங்கள ஊடகங்களில் குறை கூறுவது பிழையானதாகும் என்றும் கூறினார்.    நன்றி வீரகேசரி








ரத்துபஸ்வல சம்பவம் : நஷ்ட ஈடாக 4.68 மில்லியன் ரூபா


05/04/2016 ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த 33 பேருக்கு நஷ்ட ஈடாக 4.68 மில்லியன் ரூபாவை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவத்தினால் பூரண அங்கவீனமுற்ற, பகுதியளவில் அங்கவீனமுற்ற மற்றும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பஹா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 பேருக்கும் மஹர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 பேருக்கும் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் கரங்களினால் இவ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











இலங்கையை பாராட்டிய அவுஸ்திரேலியா



06/04/2016 இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலை தடுக்க இலங்கை முன்னெடுத்து வருகிற  முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. 
இலங்கை கடற்படை தளபதியை அவுஸ்திரேலியாவின் ஆட்கடத்தல் குறித்து ஆராயும் ஆணையாளர் சந்தித்த போதே இதனை குறிப்பிட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.    நன்றி வீரகேசரி









பனாமா ஆவணக்கசிவில் மஹிந்த குடும்பத்தாரும் சிக்கினரா ?

06/04/2016 பனாமா ஆவணக்கசிவில் வெளியாகிய  நாடுகளில் இலங்கையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனாமா ஆவணக்கசிவில் 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளதும் அது  சுமார் 2.6 டெரா பயிட்களாகும்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறது.
இந்த கணக்குகள் தொடர்பான தகவல்களை கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்கள் என்ற தலைப்பின் கீழ் வரைபடமொன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடங்குவதுடன் மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று வாடிக்கையாளர்களும் , 22 பங்குதாரர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து இந்தியா,அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இலங்கையில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் உட்பட உறவினர்கள் பெயர்கள் குறித்த கணக்கில் உள்ளடங்குகின்றதா என்று கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது






நன்றி வீரகேசரி











பனாமா ஆவணக்கசிவில் இலங்கை அரசியல்வாதிகள் மூவர்

06/04/2016 பனாமா ஆவணக்கசிவில்  இலங்கையைச் சேர்ந்த மூன்று அரசியல்வாதிகளின் பெயர்களும் உள்ளதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 
இதில் இலங்கையின் முன்னாள் தலைவர்களும் அதில் அடங்குவதாகவும், குறித்த கள்வர்கள் யார் என்பதை விரைவில் வெளியிட  வாய்ப்புள்ளதாகவும் அவர் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட  போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

நன்றி வீரகேசரி








பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

06/04/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 20ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்றங்ளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதனால் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இந்த விளக்கமறியல் நீடிப்பினை  வழங்கியுள்ளார். 
இன்று காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை  குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி







மீண்டும் நீரில் மூழ்கின்றது விகாரை




06/04/2016 வறட்சி காரணமாக நீர்நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வந்த நிலையில், கொத்மலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த  கொத்மலை, மொறபே பழைய நகர பௌத்த விகாரை அண்மை காலமாக வெளியே தென்பட்டு வந்தது. 
பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இவ் விகாரை மீண்டும் நீரில் சங்கமமாகி வருகின்றது.




நன்றி வீரகேசரி








ஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.!




06/04/2016 புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபற்றவிருந்த மாபெரும் இசைநிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 
கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறயிருந்த மாபெரும் இந்த இசைநிகழ்ச்சியை எதிர்வரும் 23ஆம் திகதி  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   நன்றி வீரகேசரி







ஊடகவியலாளர்களிடம் சந்திரகாந்தன் வேண்டுகோள்..!




06/04/2016 பிரதிப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜாவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் என ஊடகங்களில் எழுதவேண்டாம் என அக்கட்சி தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சந்திரகாந்தன் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர் எனவும் அக்கட்சியின் உறுப்பினர் என எழுதுமாறும் கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் போதே அவர் ஊடகவியலாளர்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.   நன்றி வீரகேசரி





இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணக்கம்




06/04/2016 வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இன்று சபையில் தனது இணக்கத்தை தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவினால் முன்வைக்கப்பட்ட ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தின் இரண்டாம், மதிப்பீடு மீதான விவாதத்தின் போது ஜே.வி.பி.எம்.பி  விஜித ஹேரத் உரையாற்றினார்.
இதன்போது இச் சட்ட மூலத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்காக ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
அக்கால அவகாசம் போதுமானதல்ல. எனவே அதனை இரண்டு வருடங்களாக அதிகரிக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உள்ளீர்க்க வேண்டுமெனத் தெரிவித்தார். 
இதற்கு சபையில் பதிலளித்த போதே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடமாக அதிகரிக்கும் திருத்தத்தை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.  நன்றி வீரகேசரி








பிரதமர் ரணில் சோ தாவோவை சந்தித்தார்


07/04/2016 சீன அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  சீன கமியூனிட்ஸ் கட்சியின் சர்வதேச துறை பொறுப்பாளர் சோ தாவோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவினை பலப்படுத்தும் நோக்குடன் சீன கமியூனிட்ஸ் கட்சியின் சர்வதேச துறை பொறுப்பாளர் சோ தாவ் என்பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 இந்த சந்திப்பின்  பிரதமர் ரணில் விக்கிரசிங்க தலைமையில் பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க , வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ,வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, நீர் வழங்கல் ,வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ,விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அமைச்சர்கள் உள்ளிட்ட 15 பேர் பங்கேற்றுள்ளனர்.  நன்றி வீரகேசரி








கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் இரகசிய 'டீல்' : 100 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளார் : அதிர்ச்சி தகவல்




07/04/2016 கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை மீள சீனாவிடம் கையளிப்பதற்காக ஐ.தே.க. முக்கியஸ்தர் ஒருவர் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பணமாக பெற்றுக் கொண்டுள்ளார் என இன்று சபையில் குற்றம் சாட்டிய ஐ.ம.சு.முன்னணி எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ சம்பூர் உடன்படிக்கையை இந்தியாவுடன் கையெழுத்திட்டது பிழையென்றால் ஏன் அந்தப் பிழையை நீங்கள் தொடருகின்றீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 
சீனாவின் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை எமது ஆட்சியில் முன்னெடுத்த போது எதிர்த்தீர்கள். 

ஊழல் மோசடிகள் என்றீர்கள். ஆனால் இன்று 33 ஏக்கரை அதிகமாக சீனாவுக்கு வழங்கி 99 வருட கால குத்தகைக்குத் திட்டத்தை சீனாவுக்கு வழங்கியுள்ளீர்கள். அத்தோடு இத்திட்டம் பல காலங்கள் இடைநிறுத்தப்பட்டு சீன நிறுவனத்துடன் நீண்ட “டீல்” களை நடத்திய ஐ.தே.கட்சி முக்கியஸ்தர் ஒருவர் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை தரகுப்பணமாக பெற்றுக் கொண்டுள்ளார் என்றார்.    நன்றி வீரகேசரி










பயங்கரவாத தடைச் சட்டம், ஏனைய சட்டங்களின் கீழ் 18 படைவீரர்கள் கைது 





07/04/2016 இவ்வருடம் ஜனவரி 14ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 10 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அன்றைய தினம் ஏனைய சட்டங்களின் கீழ் 8 படை வீரர்களும் கைது செய்யப்பட்டதாக சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சு தெரிவித்துள்ளது. 
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.ம.சு.முன்னணி எம்.பி.யான உதய கம்மன்பிலவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கே சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது. 
பிரகித் எக்னெலிகொடை என்பவர் காணாமல் போனமையுடன் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்டுள்ளனர். இராணுவ ஆளணியினருக்கு பொலிஸாரினால் தயாரிக்கப்பட்ட போலியான விடயங்களை உள்ளடக்கிய கூற்றுக்களில் கையொப்பமிடுமாறும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலவந்தப்படுத்துவதை நீதிமன்றத்திற்கும் பொலிஸ்மா அதிபருக்கும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என உதய கம்மன்பிலவினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 
இதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சினால் சபா பிடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலால் 
2016 ஜனவரி 14ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 7 தரைப்படை வீரர்களும் 3 கடற்படை வீரர்களுமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
அதே திகதியளவில் ஏனைய சட்டங்களின் கீழ் 4 தரைப்படை வீரர்களும் 4 பொலிஸாருமாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 
பிரகீத் எக்னெலிகொடை என்பவர் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள படை வீரர்களிடம் பலவந்தமாக பொலிஸார் கையொப்பம் பெற முயற்சிப்பதாக இதுவரை அவ்வாறானதொரு முறைப்பாடு பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை. 

கைது செய்யப்பட்டுள்ள படைவீரர்கள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடையாததால் அவர்களின் விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி