கவி விதை - 14 - நாயிற் கடையாய்க் கிடந்து.......-- விழி மைந்தன் --

.

சின்னஞ்சிறு கிராமந்தான் அது. ஆனால், உலகத்துச் செல்வங்கள் எல்லாம் கொட்டிக் கிடந்த கிராமம்.

பொன்னை அள்ளிச் சொரிந்தன, பூத்துக் குலுங்கிய கொன்றை மரங்கள்.

வெள்ளிப் பந்தல் போட்டன, வேலியில்  படர்ந்த முல்லைச் செடிகள்.

மாணிக்கக் கம்பளம் விரித்தன, காற்றில் அசைந்த கடம்ப மரங்கள்.

மரகதப் போர்வை போர்த்தின, வயலில் விளைந்த பச்சைப் பயிர்கள்.

பொன்னையும் வெள்ளியையும் மாணிக்கத்தையும் மரகதத்தையும் கொடுத்துப் பெற முடியாத செல்வமும் இருந்தது அங்கே -  அது அந்தக் கிராமத்து மக்களின் மனங்களில் இருந்த நிறைவு.


அந்தக் கிராமத்துக்குத் தலைவரென இருந்தவர் சிவசேகரனார். அமைதியும் அன்பும் அருளும் நிறைந்த அவரது வழி காட்டலில், ஆனந்த வாழ்வு வாழ்ந்தனர் அக்கிராமத்து மக்கள்.

சிவசேகரனார்  வீட்டில், அவரது மகன் மூத்த குமரேசன், ஏனைய மக்கள், உறவினர்கள், பந்துக்களுடன், அவர் செல்லமாக வளர்த்த வீமன் என்ற நாயும் இருந்தது.

அந்தக் கிராமத்திற்கு யுத்தம் வந்து விட்டது.

ஒரு கையில் குருதி தோய்ந்த வாளும் மறு கையில் உயர்த்திப் பிடித்த தீப் பந்தமுமாய் எதிரிகள் அந்தக் கிராமத்தை நோக்கி முன்னேறி வருவதாகத் தகவல் கிடைத்தது.

கிராமத்து மக்கள் யாவரும் கொஞ்சம் பாதுகாப்பான அயல் கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர்.

சிவசேகரனார் குடும்பம் வெளியேறிய போது, வீமண் என்ற நாயும் அவர்களுடன் கிராமத்து எல்லை வரை வந்தது.

அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகள், தோட்டம் துரவுகள், குச்சு ஒழுங்கைகள் அனைத்தும் அந்த நாய்க்கு அத்துப்படி.

ஆனால், கிராமத்து எல்லை தாண்டி அது என்றும் வெளியேறியதில்லை.

மக்கள் எல்லாம் ஏன்  தனது கிராமத்தை விட்டு ஓடுகிறார்கள் என்று அதற்குப் புரியவில்லை.

சிவசேகரனார் எவ்வளவு அழைத்தும், அது கிராமத்து எல்லையைத் தாண்டவில்லை.

ஏக்கம் நிறைந்த பார்வையை வெளியேறும் மக்கள் மீது வீசியவாறே, எல்லைப் புளியடியில் சற்று நேரம் நின்றது.

திரும்பி வீட்டுக்குப் போய்  விட்டது.

ஊர்த் தலைவர் சிவசேகரனார் குடும்பம், அயல் கிராமத்து வீடொன்றில், அவ்வீட்டார் இரக்கப்  பட்டு அளித்த  அறையொன்றில் வாழலாயிற்று.

சிவசேகரனார் இடைக்கிடை சென்று, தனது நாய்க்கு உணவு அளித்து வந்தார்.

எதிரிகள் நெருங்கி வந்த பின் போக முடியவில்லை.

வீமன் தனது வளவைக்  காத்து நின்றது.

வீட்டுப் படலையைத் திறந்த எதிரிகள் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. இரண்டு மூன்று பேரைக் கடித்துக் குதறி விட்டது.

சுட்டுப் போட்டு விட்டார்கள்.

வாளால் தலையை வெட்டி எறிந்து  விட்டார்கள்.

கொஞ்சம் கருணை உள்ள ஒருவன் -  அல்லது நாறத் தொடங்கினால் தங்களுக்கு அசௌகரியம் என்ற முன் யோசனை உள்ளவன், சிவசேகரனார் வீட்டு முன்றலில் நின்ற வேப்ப  மரத்தடியில் கிடங்கு கிண்டி உடலைப் புதைத்து விட்டுப் போனான்.

காலம் உருண்டது.

தமது கிராமத்தை மறுபடியும் காணச் சிவசேகரனாருக்கு  முடியவில்லை. இரண்டு மூன்று வேற்றூர்களில் ஒண்டி  வாழ்ந்த பிறகு மகன் குமரேசனோடு பெரிய நகரம் ஒன்றுக்கு வந்தார்.

பெரிய நகரத்தில் இருந்த சிறிய அடுக்கு மாடி வீடொன்றில் சில காலம் முடங்கிக் கிடந்த பிறகு விடை பெற்றுக் கொண்டார்.

குமரேசன், பெரிய நகரத்தில் பெரியவனாகப் பெரிதாய் முயன்றான்.

ஓயாது உழைத்தான்.

பெரிய வீடொன்று வாங்கினான். 

கடைகள் சிலவற்றை நடத்தினான்.

அவனது வளர்ச்சியும், அவனைப் போன்றவர்களின் வளர்ச்சியும் அந்த நகரத்தைத் தமதென்று சொன்னவர்களுக்குப் பொறுக்கவில்லை.

'பாஷை வேறு. சமயம் வேறு. பரதேசி எம் நகரில் பலமடைவதா?' என்று பொங்கினார்கள்.

ஒரு நாள் இரவு திரண்டு வந்தார்கள்.

கடைகளைக் கொளுத்தி விட்டார்கள்.

வீட்டை அடித்து நொறுக்கி விட்டார்கள்.

உடலில் இருந்த உடைகளும் உயிருமே எஞ்சின.

பெரிய நகரத்திலிருந்து பெரிய நாடொன்றுக்கு ஓடினான் குமரேசன்.

ஆனால் உழைக்க முடியவில்லை. உடலும் உள்ளமும் தளர்ந்து விட்டான்.

அவனது பிள்ளைகள் உழைத்தனர்.

படித்தனர். பதவிகள் பெற்றனர். பணம் படைத்தனர்.

குமரேசன் உள்ளம் குளிர்ந்தான்.

சில வருடங்கள் சென்றன அமைதியுடன்.

புகை வண்டியில் ஒரு நாள் ஏறிய  போது, யாரென்றே தெரியாத ஒருவன் குமரேசனை வம்புக்கு இழுத்தான்.

அவன் சொன்ன பல வார்த்தைகள் குமரேசனுக்குப் புரியா விட்டாலும், ஒன்று புரிந்தது.

அவன் நிறம் வேறு. தன்  நிறம் வேறு.

குமரேசன் தன்  ஊருக்குப் போனான்.

அவன் ஊரில் இப்போது எதிரிகளில்லை. அவன் மக்களும் இல்லை. புயலுக்குப் பின்னான அமைதியுடன் பாழ் பட்டுக் கிடந்தது கிராமம்.

வீமன் நாயைப் புதைத்த வேப்ப  மரத்தடியில்  பச்சைப் புல்  மண்டி வளர்ந்திருந்தது.

குமரேசன் தோண்டிப் பார்த்தான்....எலும்புகளையாவது எடுத்து மரியாதையை செய்வோம் என்று!

கிடைக்கவில்லை.

தோண்டத் தோண்ட, வேப்ப  மரத்தின் ஆழமான வேர்கள் மட்டும் அவனோடு கூட வந்து கொண்டிருந்தன.