தலைநிமிர்ந்து நிற்கின்றார் !" ஞானமிதழின் " ஆசிரியர்

பவளவிழா நாயகர் " ஞானமிதழின் " ஆசிரியர் 
                          திரு ஞானசேகரன் அவர்களை வாழ்த்திப்பாடிய 
                                    பிறந்தநாள் வாழ்த்துப்பாமாலை
           
    
                எழுபதைத் தாண்டினாலும் இளமையாய் இருக்குமெங்கள் 
                முழுநிறை ஞானமண்ணா முன்நிலை செல்வோமானால்
                அழகுடை சிரிப்பைப்பார்ப்போம் அறிவுடை பேச்சைக்கேட்போம்
                விழிகளில் கருணைபார்ப்போம் வியந்துமே நிற்போமங்கே !

                வைத்தியம் பார்த்தபோதும் வண்ணமாய் தமிழைப்பார்த்தார்
                எழுத்திலே பலதும்சொல்லி எல்லோரும் நினைக்கவைத்தார்
                அழுத்தமாய் கதைகள்சொல்லி அளவிலாபரிசும் பெற்றார்
                அவர்வாழ்வு சிறந்துநிற்க அன்பினால் வாழ்த்துகின்றேன் !

                தமிழிலே ஞானம்தந்து தலைவனாய் உயர்ந்தேவிட்டார்
                தமிழிலே எழுதுவார்க்குத் தக்கதோர் துணையுமானார்
                அளவுடன் எழுதுகின்றார் அமுதமாய் அனைத்தும்சொல்வார்
                புவியிலே நிலைத்துநின்று  புகழுடன் வாழ்கவாழ்க !

                ஏழைகளின் துயர்கண்டு எழுச்சியுடன் எழுதிநின்றார்
                சாதிமதம் பாராமல் சமத்துவமாய் உலவுகின்றார்
                போதிமரம் போலவவர் பொறுமையுடன்  நிற்பதனால்
                சாதனையின் நாயனாய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் !

                 ஞானத்தின் தலைவாவாழ்க நற்றமிழ்ப் புதல்வாவாழ்க 
                 ஈனத்தை எதிர்த்துநிற்கும் எழுதுகோல் உடையாய்வாழ்க
                 வானத்துத் தேவரெல்லாம் வாழ்த்தவுன் பிறந்தநாளை
                 வையத்தில் மக்களோடு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன் !

                
        பிரம்ம ஸ்ரீ எம் . ஜெயராமசர்மா                          மெல்பேண் 
                    15 - 04 - 2016                              அவுஸ்திரேலியா.