தமிழர்தம் ஆவணக்காப்பாளரை இழந்தோம் - முருகபூபதி

.
மௌனத்தின்   நாயகனாகவே   நிரந்தரத் துயிலுக்குச்சென்ற  செங்கைஆழியான்
பூகோளச்சுற்றுச்சூழலையும்  ஈழத்தமிழர்களின் வரலாற்றையும்  ஆய்வுக்கண்ணோடு   பதிவுசெய்த பன்னூல்   ஆசிரியர்
    
               

          
 கடந்த  சில  வருடங்களாக  எதுவும் பேசாமல் - எழுதாமல் மௌனத்தின்  நாயகனாகவே  வாழ்ந்திருக்கும்  செங்கை ஆழியான் தனது  பவளவிழா  வயதையும்  நிறைவுசெய்துகொண்டு  தனது மௌனத்தை  நிரந்தரத்துயிலின்  ஊடாக  நிரந்தரமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
அனைவரும் சொல்வதுபோன்று  செங்கைஆழியான்  மறைவு ஈடுசெய்யப்படமுடியாத  இழப்பு  அல்ல.   ஈடுசெய்யப்படவேண்டிய பாரிய  இழப்பு.
அவரால்  தோன்றியிருக்கும்  பாரிய  வெற்றிடத்தை  இனியார்தான் நிரப்புவார் ?

செங்கைஆழியான்  சிறுகதை,   நாவல்,   விமர்சனம், இலக்கியத்தொகுப்புகள்,   கட்டுரைகள்  என  ஏராளமாக எழுதிக்குவித்தவர்.    அவருடைய  சிறுகதைகள்,   நாவல்கள் சர்ச்சைகளையும்  உருவாக்கியது.   குறிப்பாக  வாடைக்காற்று,  காட்டாறு  முதலான  நாவல்கள்.
அவரது  அரச  உயர்பதவிகளுக்கும்  ஆப்புவைத்திருக்கிறது.  ஆயினும் அவர்  சோர்வடையாமல்  தொடர்ந்து  வேறு  ஏதாவது  ஒரு  பணியில்   தன்னை  இணைத்துக்கொண்டு  தீவிரமாக  இயங்கும் இயல்புகொண்டிருந்தவர்.
நோய்  உபாதை  அவரை  முடக்கியிராவிட்டால்,  மேலும்  பல பதவிகள்   அவரை நோக்கிவந்திருக்கும்.   தொடர்ந்தும்  படைப்பு இலக்கியத்துடன்   பூகோளச்சுற்றுச்சுழல்,   ஈழத்தமிழர்  வரலாறு பற்றியும்  கட்ட கட்டமாக  வளர்ந்திருக்கும்  ஈழத்தமிழ் இலக்கியத்துடன்   புகலிடத்தவர்களின்  படைப்பு  இலக்கியங்களையும் மதிப்பீடு செய்திருப்பார்.
சுருக்கமாகச்சொன்னால்   அவர்  ஒரு  நடமாடும்  நூலகம்.    நடமாடிய என்சைக்கிளோபீடியா.
இந்தப்பதிவில்  செங்கைஆழியான்  எழுதிய   இலக்கியப்புதினங்கள் பற்றிச்சொல்ல வரவில்லை.
ஈழத்தவர்   சரித்திரம்,   புவியியல் சார்ந்து  அவர்   எழுதிய  பாடநூல்கள்யாழ்ப்பாண   அரச பரம்பரை,   விண்ணையும்  மண்ணையும்  பற்றி எழுதிய   பல  நூல்கள்  என்பன  தமிழ்  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்   நிறைந்த  பலனைத்தந்தவை.
அத்துடன்  - பல்கலைக்கழக  - ஆசிரிய   கலாசாலை விரிவுரையாளர்களுக்கும்  உசாத்துணை   நூல்களாக  விளங்கியவை.
எமது   தமிழ்  மாணவர்களுக்கும்  ஆசிரியர்களுக்கும்  அவர் விட்டுச்சென்றுள்ள   நூல்கள்  மிகவும்   பெறுமதியானவை.
 The Jaffna Dynastyஅபிவிருத்திப் புவியியல் ,  
ஆரம்பப் புவியியல்:  (எட்டாம் வகுப்புக்குரியது)   இடவிளக்கவியற் படங்கள்,  இலங்கைப் ,   இலங்கையின்  புவிச்சரிதவியல்
ஈழத்தவர்  வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)  ஐக்கிய  அமெரிக்காவின் புவியியல்ஐக்கிய  இராச்சியம் -  சுனாமி கடற்கோள்
சுற்றாடற்  புவியியல்  - சுற்றுச் சூழலியல்சூரியனின் கதை
ஞாயிற்றுத் தொகுதி  - நல்லை நகர் நூல்படவரைகலையில் எறியங்கள்பிரபஞ்சம்  - புள்ளிவிபரப்  படவரைகலையியல்


புவியியல்  தேசப்படத் தொகுதி  - புவியியல்  புள்ளிவிபரவியல்
பூதத்தம்பி - பூமித்தாய்  - பூமியின் கதை  - பெளதிகச் சூழல் நிலவுருவங்கள் - பெளதிகப் புவியியல்: (.பொ. உயர்தரம்)
பெளதீகச்சூழல்  காலநிலையியல்பொது அறிவு  - பொது உளச்சார்புபொருளாதாரப்   புவியியல்  - மகாவம்சம் தரும்  இலங்கைச் சரித்திரம்  - மானிடப் புவியியல்  - யாழ்ப்பாண  அரச  பரம்பரை - யாழ்ப்பாணக் கோட்டை  வரலாறு.
மேற்குறித்த  செங்கைஆழியான்  நூல்களின்  பட்டியலிலிருந்து  அவர் எமக்காக  விட்டுச்சென்றுள்ள    ஆவணப்பதிவுகள்   எவ்வளவு பெறுமதியானவை   என்பது  எம்மவருக்கு  புரியலாம்.
இதுவரையில்  நூலுருவில்   வெளிவராத  செங்கைஆழியான்  நூல்கள் பல  இருப்பதாக  அறியக்கிடைக்கிறது.   நூலகம்  திட்டம் இருப்பதனால்   அவருடைய   பல  நூல்களை   எம்மவர் பார்வையிடமுடிகிறது.
மேற்குறித்த   நூல்களின்  பட்டியலை   பதிவுசெய்வதற்கும்   நூலகம் திட்டம்தான்   உதவியது.


-------------
ஒரு  பெறுமதியான  மனிதர்  மறைந்தவுடன்  நாம்  மேற்கொள்ளும் எந்தவொரு   நிகழ்வும் -  பணிகளும்  அவர்களை   நினைவுகூர்வதாக மாத்திரம்   இல்லாது  எம்மை  நாமே  திருப்திப்படுத்திக்கொள்வதாக வும்தான்  இருக்கிறது.
அவர்களின்   மறைவினால்  ஏற்பட்டுவிடும்  வெற்றிடத்தை  நாம் எவ்வாறு  நிரப்புவதற்கு  முயற்சிசெய்கின்றோம் ?  என்ற  வினா எழுகிறது.
வாழும்பொழுது   அவர்களைப்பற்றி  எழுதாமல் -  மறைந்தபின்னர் எழுதித்தான்   எம்மை  நாம்  திருப்திப்படுத்திக்கொள்ளும்   மரபில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
மறைந்த  பின்னர்  கௌரவப்படுத்துவதும்  - பட்டங்கள்  சூட்டி -விருதுகள்   வழங்கி  சிறப்புசெய்வதையும்  மறைந்தவர்களின்  ஆத்மா எங்கேயிருந்தாவது  பார்த்துக்கொண்டிருக்கும்  என்ற  நம்பிக்கையின் விளைவா   அந்த  நிகழ்வுகள் -    நினைவரங்குகள்  என்றும் யோசிக்கின்றோம்.
அஞ்சல்  ஓட்டத்தில்  ஒருவரிடம்  பெற்றுக்கொள்ளும்  கோலை மற்றவர்  கையில்    ஒப்படைக்கும்  வரையில்  அந்த  அஞ்சல்  ஓட்டம் தொடரும்.    இறுதியில்  ஓடுபவர்  அதனை   முடித்துவைப்பார்.   அதில் வெற்றியும்   காண்பார்.   அதனால்  இறுதியில்  ஓடி  முடித்தவருக்கு மாத்திரமல்ல   அந்த  வெற்றியின்  பெருமை.


அஞ்சல்  ஓட்டத்தில்  ஒரு  அணியில்  இணைந்திருந்த  அனைவரும் அந்த   வெற்றிக்குரியவர்கள்தான்.
செங்கைஆழியானும்   இலக்கியம்,   ஆய்வு,  தொகுப்பு,   வரலாறு, புவியியல்,   சுற்றுச்சூழல்  முதலான  பல்துறைகளில்  அஞ்சல்  ஓட்டம்  ஓடி  ஓய்ந்தவர்தான்.
அவர்   விட்ட  இடத்திலிருந்து  வேறு  எவரேனும்,  அல்லது  மேலும் பலர்  தொடரவேண்டும்.   அதுவே   அவருக்கு  செய்யும்  சிறந்த அஞ்சலியாகும்.
பெறுமதியானவர்களினால்   உருவாகும்  வெற்றிடங்களில்  பயனுள்ள விதை   நட்டு  விருட்சங்களை   வளர்க்க  முயற்சிப்போம்.


------------
செங்கைஆழியானின் துணைவியார் கமலா அவர்கள், கணவரின் பணிகளுக்கு உற்றதுணையாகவிருந்தவர். கமலம் பதிப்பகத்தின் சார்பிலும் செங்கைஆழியானின் நூல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, அனுதாபம் தெரிவிக்கையில், செங்கைஆழியானின் ஒரு புதல்வி ரேணுகாவுடனும் கமலா செங்கைஆழியானுடனும் உரையாடினேன்.
ஒரு சாதனையாளரின் படைப்புகள் என்ற மகுடத்தில் பல பாகங்களாக செங்கைஆழியானின் படைப்புகளை தொகுக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் கமலா செங்கைஆழியான் தெரிவித்தார்.
எங்கள் செங்கைஆழியானின் பூதவுடல் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பி த்தாலும்  அவர் விட்டுச்சென்றுள்ள பெறுமதியான பதிவுகள் தனது பயணத்தை தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
----0----