யோசித்தவின் பதவி, தொழில் தற்காலிகமாக இடைநிறுத்தம்
கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார் மஹிந்த
இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல்
காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்சியம்
6 தேரர்கள் உட்பட 11 பேருக்கு பிணை
லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்
விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் உரிமையாளர்களிடம் வழங்கப்படவேண்டும் : அமெரிக்கா வலியுறுத்தல்
வித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு
எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை
கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
பேராதனைப் பல்கலைக்கழக கலை பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யோசித்தவின் பதவி, தொழில் தற்காலிகமாக இடைநிறுத்தம்
29/02/2016 பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் பதவி மற்றும் தொழில் ஆகியன பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யோஷித்தவின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் எல்லாம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும். அவர் கடற்படை தலைமையகம் அனுமதி இல்லாமல் எந்த கடற்படை வளாகத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார் மஹிந்த
29/02/2016 சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிக்கை மனுக்கள் மீண்டும் இன்று கடுவெல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் வழமையாக அணியும் தேசிய ஆடைக்கு மேலாக சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார்.
மேலும் இன்று யோஷித்த ராஜபக்ஷ வின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் சமூகமளித்திருந்தார்.
இந் நிலையில் குறித்த பிணை மனு விசாரணை இம்மாதம் 17 ஆம் திகதிக்கு அன்று இடம்பெற்றவேளையிலும் மஹிந்த ராஜபக்ஷ கறுப்பு நிற கோட்டினை அணிந்து நீதிமன்றதிற்கு சமுகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல்
01/03/2016 எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்கு-ழுவின் விசாரணைகள் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் நேற்றைய தினம் இடம்பெற்றபோதே தமது உறவுகளை தொலைத்து விட்டு தவிக்கும் மக்கள், ஆணைக்குழு அதிகாரி களிடம் இந்த கோரிக்கையை விடுத்தனர்.
இந்த விசாரணை அமர்வில் சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான ஸ்ரீஸ்வரி புஸ்பராசா என்ற தாய் சாட்சியமளிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வினை அடுத்து வன்னி நோக்கி நாம் குடும்பத்துடன் இடம்பெயர்ந்திருந்தோம். இந்நிலையில் காணாமல்போன புஸ்பராசா அஜிந்தன் (வயது 18) என்ற எனது மகன் மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்தார்.
இதன்போது 2008 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி விடுதலைப்புலிகள் எனது மகனை பிடித்துச் சென்றிருந்தனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் மீண்டும் எம்மிடம் தப்பித்து வந்திருந்தார். இதனையடுத்து இரண்டாவது தடவையும் விடுதலைப்புலிகளால் எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டு மீண்டும் தப்பித்து வந்த நிலையில் உறவினர் வீட்டில் சுமார் ஒரு வருடம் அவரை மறைத்து வைத்திருந்தோம். எனினும் மூன்றாம் தடவையாகவும் விடுதலைப்புலிகள் எனது மகனை கைது செய்திருந்தனர் . இந்நிலையில் அவர்களிடமிருந்து மீண்டும் தப்பித்து வந்த எனது மகனை முள்ளியவளை புதுமாத்தளன் பகுதியில் 200-9ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இறுதியாகக் கண்டிருந்தோம். அதன்போது அவருடன் கதைப்பதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர் எமது உறவினர் ஒருவர், 2009 மே மாதம் புதுமாத்தளன் பகுதியில் எனது மகனை இராணுவம் பிடித்து வைத்திருந்ததை கண்டதாகத் தெரிவித்திருந்தார்.
2013, 2014 ஆண்டுகளில் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் எனது மகனுடன் பலர் நிலத்தில் இருத்தி வைக்கப்பபட்டுள்ளதுடன் சுற்றிவர இராணுவத்தினர் நிற்பதாக புகைப்படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பத்திரிகையின் ஆதாரத்தோடு எனது மகனை மீட்டுத்தருமாறு மனித உரிமை ஆணையகத்திலும் வேறு பல இடங்களிலும் முறையிட்டிருந்தேன்.
எனினும் இதுவரை எந்தப் பதிலும் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. தயவு செய்து எனது மகனை திருப்பித் தாருங்கள். எனது மகன் உயிருடனேயே உள்ளார் என குறித்த தாயார் சாட்சியமளித்திருந்தார்.
சிவில் காரியாலயத்தில் வைத்து எனது மகன் காணாமல்போயுள்ளார்
இதேவேளை கையெழுத்து வைக்கப்படவேண்டுமென இராணுவத்தால் கொடிகாமம் சிவில் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்ட மகன் காணாமல்போயுள்ளதாகவும் இதன் பின்னனியில் தமது ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் செயற்பட்டுள்ளதாகவும் எழுதுமட்டுவாள் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பரிமளம் எனும் தாய சாட்சியமளித்தார்.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி காணாமல்போன கந்தசாமி ஹரிகரன் (வயது 18) என்ற தனது மகன் தொடர்பில் ஆணைக்குழு முன்னிலையில் மேலும் சாட்சியமளிக்கையில்
என்னுடைய மகனை விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி கொடிகாமம் இராணுவ சிவில் காரியாலயத்திற்கு வந்து கையெழுத்து இடுமாறு அழைக்கப்பட்டடிருந்தார்.
இதன் போது அவரை அழைத்துக் கொண்டு நானும் ஆரம்பத்தில் சென்றிருந்தேன். பின்னர் என்னை அங்கு வரவேண்டாம் எனவும் மகனைமட்டும் அனுப்பி வைத்தால் போதும் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருந்தனர். கையெழுத்து இடுவதற்கு மட்டுமே என எண்ணி கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தனியாக எனது மகனை அனுப்பி வைத்திருந்த நிலையில் அவர் அன்றைய தினம் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில் அவர் அங்குள்ள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். எனது மகனின் கைதின் பின்னனியில் எமது ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் செயற்பட்டுள்ளமை தெரியவந்தது. எனினும் அவர் தற்போது எமது ஊரில் இல்லை. எங்குசென்றார் என்பதும் தெரியாது.
அத்துடன் குறித்த சிவில் காரியாலயத்தில் குமார, நரையன் என இரண்டு இராணுவ அதிகாரிகளையும் எனக்குத் தெரியும் எனத் தெரிவித்தார்.
மேலும் தனது மகன் சாவகச்சேரி சரசாலைப் பகுதியிலேயே தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை அங்கிருந்து மீட்டுத் தருமாறும் குறித்த ஆணைக்குழு அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோவிலில் தங்கி நின்ற மகன்களை இராணுவமே பிடித்துச் சென்றது
கொடிகாமம் இராமச்சந்திரன் செல்லம்மா என்ற தாய் சாட்சியமளிக்கையில்,
இராமச்சந்திரன் இராசகுமார் (வயது 24) என்ற எனது மகன் கோவிலில் இரவுவேலைக்காக தங்கி நின்றுள்ளார். இதன்போது அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரணி இராணுவ முகாமிற்கு சென்ற நாம் எமது பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரியிருந்தோம். இதன்போது எமது பிள்ளைகளை தாங்கள் பிடிக்கவில்லை எனவும் இப்பகுதிக்குள் மீண்டும் மீண்டும் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என வும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நாம் பொலிஸிலும் முறைப்பாடு செய்திருந்தோம். அவர்களும் இடையிடையே விசாரணை என எம்மோடு வந்து கலந்துரையாடிவிட்டுச் செல்வார்கள்.
எனினும் காணாமல்போன எனது மகன் உட்பட எட்டுப்பேர் தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
மல்லிகா தேவி என்ற தாய் காணாமல் போன சிவானந்தம் (வயது 24) என்ற மகன் தொடர்பில் சாட்சியளிக்கையில்,
காணாமல் போன தன்னுடைய மகனின் பெயர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ளதாகவும் அவரை கடத்தியவர்கள் தற்போது வரை உயிருடனேயே வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து மந்துவில் வடக்கைச் சேர்ந்த கந்தசாமி லோகநாயகி என்ற தாய் காணாமல்போன கந்தசாமி பரிமேலழகர் (வயது 29) என்ற மகன் தொடர்பில் சாட்சியம் அளிக்கையில்
என்னுடைய மகன் கோவிலில் நின்றிருந்த அன்று இரவுவேளை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதனையடுத்து அதிகாலை எனது மகனைத் தோடி குறித்த கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு எனது மகன் உட்பட எட்டுப்பேரின் கைகளும் வயர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதன்போது அங்குவந்த "பவல்" வாகனத்திற்குள் இராணுவத்தினரால் எமது பிள்ளைகள் தூக்கிப் எறியப்பட்டதையடுத்து வரணியை நோக்கி பவல் வாகனம் சென்றதாக கண்ணீர்மல்க சாட்சியமளித்திருந்தார். நன்றி வீரகேசரி
காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்சியம்
01/03/2016 வன்னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டிருந்தேன். அப்போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் என தாய் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்கு-ழுவின் விசாரணைகள் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் நேற்றைய தினம் நடைபெற்றன. இதன்போது கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அங்கு சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் சாட்சியமளிக்கை யில்,
எனது மகள் அனுசியா கிளிநொச்சியில் அரச துறையில் பணிபுரிந்து கொண்டு எனது சகோதரியோடு வாழ்ந்து வந்தார். இந் நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு இருக்கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு பதிவு ஒன்றை மேற்கொள்வதற்காக நான் சென்றிருந்தேன். இதன்போது எனது மகளை அங்கு கண்டேன். எனினும் எனது மகள் என்னைக் காணவில்லை. அவர் சற்று தூரத்திலேயே நின்றிருந்தார். அப்போது அவர் வெள்ளை நிற உடையணிந்திருந்ததுடன் வெள்ளை நிறத்தில் மாலையும் அணிந்திருந்தார். இந்நிலையில் எனது மகள் உட்பட சிலரை அங்கு வந்த அதிகாரிகள் வாகனமொன்றில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அங்கு நின்ற அதிகாரிகளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்லப்படு கிறார்கள் எனக் கேட்டபோது நீதிமன்றத்துக்கு கூட்டிச் செல்வதாக அந்த அதிகாரி பதில் வழங்கியிருந்தார். இதன்போது அந்த அதிகாரியிடம் எனது மகளின் பெயர் விபரத்தை கூறி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுபவரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறினேன். அதற்கு அந்த அதிகாரி அத்தகைய பெயர் இல்லை எனத் தெரிவித்தார்.
அவருடைய கூற்று அவ்வாறாக அமைந்திருந்தாலும் நான் கண்டது எனது மகளைத் தான். அது எனக்கு நன்றாக தெரியும்.
அத்தோடு எனது மகள் மற்றும் அவரோடு சேர்த்து மேலும் பலர் நிற்பதாக இருக்கும் படத்தை முகப்புத்தகம் ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்த்தேன். எனவே என்னுடைய மகள் உயிரோடுதான் உள்ளார். தயவுசெய்து அவரை என்னிடம் மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழு அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை தன்னுடைய பிள்ளை உட்பட எட்டுப் பேரை இராணுவமே சித்திரவதை செய்து படுகொலை செய்தது என ஆணைக்குழு முன்னிலையில் தந்தை ஒருவர் சாட்சியமளித்ததுடன் மகனின் படுகொலைக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எனது மகன் சந்திரசேகரம் யாழ்ப்பாணம் காட்டுக்கந்தோர் வீதியில் இருந்த கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். 1996 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 19 திகதி அன்று இரவு அரியாலையில் இருந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எனது மகனையும் அவரோடு சேர்த்து வேறு எட்டுப் பேரையும் பிடித்து சென்றனர்.
இதனையடுத்து நான் எனது மகனை தேடி குறித்த இராணுவ முகாமிற்குச் சென்ற போது அங்கிருந்த இராணுவத்தினர் என்னை தாக்க வந்ததுடன், உங்களது மகனை தேட வேண்டாம் அவர் இங்கு இல்லை என கூறினர்.
காலப்போக்கில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எனது மகன் உட்பட எண்மர் இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.
எனவே எனது மகன் உயிரோடு இல்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். அத்துடன் எனது மனைவியும் இன்னொரு மகனும் விமானத் தாக்குதலில் உயிரிழந்து விட்டனர். எனவே வறுமை நிலையில் இருக் கும் எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். நன்றி வீரகேசரி
6 தேரர்கள் உட்பட 11 பேருக்கு பிணை
01/03/2016 ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில் ஆறு தேரர்கள் மற்றும் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்
01/03/2016 பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன் தன்னை அப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதிற்கான கடிதம் கிடைத்துள்ளதாகவும்,எனினும் பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி
விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் உரிமையாளர்களிடம் வழங்கப்படவேண்டும் : அமெரிக்கா வலியுறுத்தல்
01/03/2016 இதுவரை மீள் வழங்கப்படாதுள்ள பொது மக்களின் காணிகள் உரிய காணி உரிமையாளர்களிடம் மிக விரைவாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வொஷிங்டனில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்குடமை கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையிலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலும் சில முக்கிய விடயங்கள் வருமாறு,
இலங்கையின் ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும் நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், நீதி மற்றும் நல்லிணக்கம், பாராளுமன்ற செயற்பாடுகள் போன்றவற்றை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இதேவேளை கடந்த வருடத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்கின்றது.
விசேடமாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கியமை, விசாரணைப் பொறிமுறையொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை போன்றவற்றை குறிப்பிட்டுக் கூற முடியும்.
அந்த வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவை வழங்கும். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான நட்புறவு கட்டியெழுப்பப்படுவதை இரண்டு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்கா மிக அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை இதுவரை மீள் வழங்கப்படாதுள்ள பொது மக்களின் காணிகள் காணி உரிமையாளர்களிடம் மிக விரைவாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் பயங்கரவாத தடைச் சட்த்திற்கு பதிலாக சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக மாற்றீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ள இலங்கை அரசாங்கத்தின் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும்.
மேலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு கூட்டுறவை பலப்படுத்த வேண்டுமென இரண்டு நாடுகளும் திட்டமிடுகின்றன. நன்றி வீரகேசரி
வித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு
02/03/2016 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு
03/03/2016 நாட்டிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப் பாணத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகு ஜன அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நன்றி வீரகேசரி
எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை

எமில்காந்தனுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை மற்றும் சிவப்பு அறிக்கை என்பன வெளியிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜராக தயாரென, அவர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து பிடியாணை மற்றும் சிவப்பு அறிக்கை என்பன நீக்கிக்கொள்ளப்பட்டன.
எதுஎவ்வாறு இருப்பினும், சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபர் எச்சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
03/03/2016 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இது தொடர்பில் முன்னரும் சில தடவைகள் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பேராதனைப் பல்கலைக்கழக கலை பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
03/03/2016 பேராதனைப் பல்கலைக் கழக கலை பீட மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் இன்று எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கலைப்பீட விசேட பாட நெறிகளுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர் தொகையை எல்லைப் படுத்தியுள்ளதுடன் பாடநெறியின் தரத்தை பேணுதல் என்ற ரீதியில் ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகள் திணிக்கப்பட்டு அதனை ஒரு காரணமாக வைத்து சிலர் பாட நெறியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் மாணவர் சங்கத் தலைவர் ஜே.பிரசன்ன சம்பத் தெரிவித்தார்.
பல்கலைக் கழகக் கல்விக்கு இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை உட்படுத்தி தனியார் கல்வித்துறையை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இது விடயமாக நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்க வில்லை எனவும் தெரிவித்து அவர்கள் கலைப்பீட வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நன்றி வீரகேசரி