செங்கை ஆழியான்!! - வி.ஜீவகுமாரன்

.

ஒரு வளரும் வடலியை வாழ்த்திய
வளந்த அந்த ஒற்றைப் பனை!
செங்கை ஆழியான்!!
இயல்விருந்து மறந்து போன இலங்கை எழுத்தாளன்!!!
வாடைக்காற்று – வாசனையும் மக்களின் வாழ்வும்…
காட்டாறு – பிரதேச வாசனையும் மக்களின் எழுச்சியும்…
இரவின் முடிவில் – தொழிலாளர் குடும்பங்களின் அன்றாடப் போராட்டங்கள்…
எனது 9ம் 10ம் வகுப்புகளில் என் மனதில் பதிந்து விட்ட நாவல்கள்.
வரலாற்று நாவல்கள்….நகைச்சுவை நாவல்கள்… சாதிய நாவல்கள்… புலம் பெயர் நாவல்கள்… அரசியல் நாவல்கள்… தமிழ் தேசிய இன நாவல்கள்… போர்க்கால நாவல்கள்… என 34 நாவல்களின் சொந்தக்காரன்.
பல ஆராய்ச்சித் தொகுப்புகளின் நூலகம்…


மொத்தத்தில் சாகித்திய ரத்னா, சாகித்திய விருது போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரனான அவருக்கு உலக அரங்கில் ஒரு கௌரவம் கிடையாமை மனக்கவலையான விடயமே!
ஆனால் இலங்கையில் அவரைத் தொடர்ந்து எழுத எத்தனையோ எழுத்தாளருக்கு அவரின் எழுத்துகள் ஒருவகையான இன்ஸ்பிரேசனை (Inspiration – அருட்டுணர்வை) கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.
அன்னாரை என் வாழ்வில் ஒரேயொரு தடவை இந்தியாவில் மித்ரா அலுவலகத்தில் திரு. எஸ். பொ.வுடன் சந்தித்தேன்.
அப்பொழுது எனது முதல் தொகுதியான “யாவும் கற்பனை அல்ல” தயாராகிக் கொண்டிருந்த நேரம்.
எஸ். போ. எனது வெள்ளம் என்ற கதையை எடுத்து அவரிடம் நீட்டினார்.
ஐரிஸ் எழுத்தாளரான ஜேம்ஸ் ஜேய்சின் வெள்ளம் என்ற சிறுகதையில் நான் பெற்ற அருட்டுணர்வை அடிப்படையாக வைத்து அதனை எழுதியிருந்தேன் என அடிக்குறிப்பிட்டு இருந்தேன்.
அமைதியாக வாசித்துவிட்டுப் மிகவும் பாராட்டினார். அப்பாராட்டின் இடையே சொன்னார் நான் எழுதிய அடிக்குறிப்பை நீக்குங்கள் என்று.
ஏன் என்று கேட்டேன்.
நீங்கள் மொழிமாற்றமோ பிரதியோ பண்ணவில்லை. ஆனால் அவ்வாறு எதும் பொழுது வாசித்து முடித்த பின்பு வாசனுக்குள் எழும் பெரும் எழுச்சியை அது கவிழ்த்து விடும் என்று.
ஒரு வளரும் வடலிக்கு அந்த ஒற்றைப் பனையின் அறிவுரை என்னை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
ஒவ்வோர் தடவையும் இயல்விருது அறிவிக்கப்படும் பொழுது இவருக்கும் கிடைத்திருக்க கூடாதோ என ஆதங்கப்பட்டேன்.
போராட்டக்காலங்களிலும்… அதற்குப் பின்பும் அவரின் அரசியல் நிலைப்பாடுகள் அதனைத் தடுத்ததோ நானறியோன்!
ஆனால் இலங்கை முழுக்க கலங்கும் ஒரு பிரிவாக இன்று அவரின் பிரிவு பார்க்கப்படுவதே அவருக்க கிடைத்த மிகப் பெரிய விருதாகும்!!
நன்றி:http://jeevakumaran.com/