நூல் அறிமுகம்: "ஒரு கூர்வாளின் நிழலில்" - தெய்வீகன்

.
(மெல்பனில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் நடத்திய  அகில  உலகபெண்கள்  தினவிழாவில் அறிமுகமான   தமிழினியின்  புதிய  நூல். )


விடுதலைப்புலிகள்  அமைப்பின்  மகளிர்  அரசியல்துறை பொறுப்பாளரான  தமிழினி அவர்கள்  எழுதிய  தன்வரலாற்று  நூல் ஒரு கூர்வாளின்  நிழலில். சாவதற்கு  முன்புவரை  தான் எதிர்கொண்ட  போராட்ட  வரலாற்றையும்  தான்  நடத்திய போராட்டங்களையும்  சத்தியத்தின் வழிநின்று  சாட்சியமாக்கியிருக்கும்  பதிவு.

வாழ்வுக்கும்  சாவுக்கும்  இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த  உயிரின்  கடைசித்துளிவரைக்கும்  தான்  மிகவும்  நேசித்த மண்ணுக்கும்  மக்களுக்கும்  உண்மைகளை  சொல்லவேண்டும் என்பதற்காக  பல  விடயங்களை  எழுத்தில்  பதிந்துவிட்டு சென்றிருக்கும்   வரலாற்று  பொக்கிசம்.
 ஒரு இனத்தின்  அகமும்  புறமுமாக  முப்பதாண்டு  காலம்  பெரு நம்பிக்கையுடன்  மேற்கொண்ட  ஆயுதப்போராட்டமானது  எவ்வாறு கொடூரமாக  முடிவுக்கு  கொண்டுவரப்பட்டது  என்பதை உணர்வுபூர்வமாக  பேசியிருக்கும்  வரலாற்று  நூல்  என்று இதைக்கூறலாம்.






போர்  முடிவுற்ற  ஏழாண்டு  காலத்தை  எட்டிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில்  அது  ஏற்படுத்திய  எத்தனையோ  காயங்களையும்  வலிகளையும்  பல  எழுத்தாளர்கள்  தமது புனைவெழுத்துக்களின்  ஊடாக  இலக்கியமாக்கியிருக்கிறார்கள். போரிலக்கியத்தின்   நுண்கூறுகளைக்கூட  அவ்வப்போது  தொட்டும் சென்றிருக்கிறார்கள்.  ஆனால்,  தமிழினி  எழுதியிருக்கும்  இந்த நூலின்  ஒவ்வொரு  பக்கமும்  ஈழத்தமிழர்கள்  அனைவரும் வாசிக்கவேண்டிய  அவசியத்தை  தன்னகத்தே  கொண்டிருக்கிறது. அவர்  முன்வைக்கும்  நியாயங்கள்  அனைத்திலும்  உண்மையை தயங்காமல்  பேசியிருக்கிறார்.

 தன்னையும்  தான்  சார்ந்த  அமைப்பையும்  தங்களது  பிழைகளையும்  எந்த  சமரசமும்  இல்லாமல்  விமர்சித்திருக்கிறார். இதன்   மூலம்  தான்  நேசித்த  மக்கள்  எதிர்காலத்தில் கண்மூடித்தனமான  இறந்தகால  புனைவுகளுடன் பயணித்துவிடக்கூடாது  என்ற  கவனத்தை  பொறுப்புடன்  பதிவு செய்திருக்கிறார்.

என்னை பொறுத்தவரை,  ஈழத்தின்  போர்  இலக்கிய  வரலாற்றில் பலரது  படைப்புக்கள்  -  முன்னர்  கூறியது  போல -  புனைவுகளாக பதிவு  செய்யப்பட்டு  கவனத்தை  ஈர்த்திருக்கின்றன.   கோவிந்தனின் புதியதோர் உலகம்  முதல் ஐயர்,  செழியன்,  புஸ்பராசா, புஸ்பராணி என்று   பலர்  தாம்  சார்ந்த  இயக்கங்கள்  குறித்தும்  மக்கள்  குறித்து சாதகமாகவும்   எதிர்நிலைகளிலிருந்தும்  தத்தமது  நியாயப்பாடுகளை பதிவு  செய்திருக்கிறார்கள்.  ஆனால், தமிழினியின்  கூர்வாளின் நிழலில்  அவற்றிலிருந்து  தனித்து  நின்று  பேசுகிறது  என்றுதான் சொல்வேன்
  


சில இடங்களை  வாசிக்கும்போது, கைகள்  நடுங்கியது.  உயிரை  உருவி  எடுத்து  வெளியில்  எறிந்தது போன்ற  வெறுமையுடன் அடுத்த  பக்கத்துக்கு  செல்லவேண்டியதாகவும்  இருந்தது.   மக்களின் முன்னால்  தயங்காமல்  தன்  குற்றங்களை  ஒப்புக்கொண்டு கூற்றவாளிக்கூண்டில்  ஏறிநின்று  பேசுகின்ற  ஒப்புதல் வாக்குமூலமாகவும்   தனது  விசுவாசத்தினதும்  அதன்  வீரியத்தின் நீட்சியில்   புறக்கணிக்கப்பட்ட  பொதுக்கடமைகளையும் வெளிப்படையாக பேசுகின்ற  -  உண்மைக்கு  நெருக்கமான - படைப்பாகவும்  அது  காணப்படுகிறது