ஒரு சில நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் என்றால் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் திரையரங்கிற்கு சென்றுவிடுவோம். அப்படி ஒரு நடிகர் தான் அருள்நிதி, இயக்குனர் அறிவழகன்.
தொடர்ந்து மௌனகுரு, டிமாண்டி காலனி என தரமான படங்களில் நடித்து வரும் அருள்நிதி, ஈரம், வல்லினம் என தரமான படங்களை இயக்கிய அறிவழகன் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ஆறாது சினம்.
கதைக்களம்
மலையாளத்தில் க்ரைம் கதைகளுக்கு பேர் போனவர் ஜீத்து ஜோசப், இன்னும் நம் மக்களுக்கு தெரியும் படி சொல்லவேண்டும் என்றால்கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர். இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த மெமரீஸ் படத்தின் ரீமேக் தான் இந்த ஆறாது சினம்.
படத்தின் ஆரம்பத்திலேயே அருள்நிதி மிரட்டல் என்கவுண்டருடன் அறிமுகமாகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த என்கவுண்டர் ட்ராப் ஆக, வில்லனால் அவர் குடும்பத்தை இழக்கின்றார். இதன் பிறகு வாழ்க்கையே ஏதோ கடமைக்கு வாழ்வது போல், வெறும் குடியுடன் மட்டும் தான் அருள்நிதி வாழ்கின்றார்.
இத்தருணத்தில் இவர் வாழ்க்கையில் மீண்டும் ஒரு கடமை வர, அரை மனதுடன் அந்த வழக்கை விசாரிக்க சம்மதிக்கின்றார். தொடர்ந்து தேனி, சிவகங்கை பகுதிகளில் ஒரு சிலர் இறக்க, யார் இந்த கொலை செய்கிறார்கள் என அருள்நிதி தேடுகிறார்.
ஒரு கட்டத்தில் இந்த கொலைகள் தொடர்ந்து நடக்க, அவர் ஒரு சீரியல் கில்லர் என தெரிய வருகின்றது. அரை மனதுடன் உள்ளே வரும் அருள்நிதிக்கு விஷயம் அறிந்து சீரியஸ் ஆகின்றார். சின்ன சின்ன தடயங்களாக தேடி கிளைமேக்ஸில் வில்லனை நெருங்கும் தருணத்தில் அருள்நிதிக்கு ஒரு செக் வர, யார் அந்த கொலைகளை செய்பவர்? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்? என்பதை கடைசி வரை ரசிகர்களை நகம் கடிக்க வைத்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.
படத்தை பற்றிய அலசல்
6 அடி உயரம் போலிஸிற்கு உண்டான அத்தனை கம்பீரமும் இருக்க, படம் முழுவதும் போதை, அழுக்கு சட்டை என்றே அருள்நிதி உலா வருகின்றார். இவர் படம் என்றாலே இனி நம்பி போகலாம் என சொல்லும் அளவிற்கு மீண்டும் நிரூபித்து விட்டார். எப்போதும் போதையில் இருந்தாலும், தன் விசாரணையில் எந்த ஒரு இடத்திலும் கோட்டை விடாமல் கவனமாகவிருக்கின்றார். அதிலும், வில்லன் தொடர் கொலைகளை வைத்தே, இவர் இதன் தாக்கத்தால் தான் இந்த மாதிரி கொலை செய்கிறான் என்று கண்டுப்பிடிக்கும் இடமெல்லாம் சபாஷ்.
அருள்நிதியை தவிர வேறு யாருக்கும் பெரிதாக நடிக்கும் ஸ்கோப் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் படத்தின் மொத்த பலமும் திரைக்கதை தான், அதில் பலரும் வந்து போகிறார்கள், ஆனால், அருள்நிதியே தாங்கி செல்கின்றார். உயர் அதிகாரியாக வரும்ராதாரவி, உதவியாளராக வரும் சார்லி என இருவரும் அனுபவ நடிப்பை அள்ளி வீசுகின்றனர்.
ரோபோ ஷங்கர் காமெடி வேண்டும் என்பதற்காக திணித்தது போல் உள்ளது. 10 வசனம் பேசினால் 2 வசனம் மட்டுமே சிரிப்பு வருகின்றது. சேஸிங் சீனில் சிலர் குத்துப்பாட்டு வைப்பது போல், அறிவழகன் இதில் காமெடி காட்சிகளை வைத்துவிட்டார்.
படத்தின் மற்றொரு ஹீரோ கண்டிப்பாக தமனின் பின்னணி இசைதான், ஈரம் சாயல் தெரிந்தாலும், பல காட்சிகளில் தன் இசையால் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றார். அதிலும், கிளைமேக்ஸில் வில்லன் பற்றிய தொகுப்புகளை அருள்நிதி விவரிக்கும் இடத்தில் பின்னணி இசை நம்மையும் படத்திற்குள் அழைத்து செல்கின்றது.
இந்த மாதிரியான க்ரைம் திரில்லர் கதைகளுக்கே மிக முக்கியத்துவம், வில்லனின் முகத்தை காட்டாமல், ஹீரோ வீட்டில் வேலைப்பார்க்கும் வேலைக்காரன் வரை சந்தேக கண்ணோடு நம்மை பார்க்க வைப்பது தான். ஆனால், கடைசியில் அட இவர் தான் இந்த கொலையை செய்தாரா? என நமக்கே தோன்றி விடும். இதில் யார் மீதும் சந்தேகம் எழவில்லை, இருந்தாலும் படத்தின் சுவாரசியம் எங்கும் குறையவில்லை.
க்ளாப்ஸ்
அருள்நிதியின் யதார்த்தமான நடிப்பு, தனக்கு என்ன வரும் என்பதை மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.
அருள்நிதிக்கும் வில்லனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையென்றாலும், அதை கிளைமேக்ஸில் தொடர்புபடுத்தி அவரின் வேகத்தை அதிகப்படுத்திய காட்சிகள்.
தமனின் பின்னணி இசை, அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, ஒரு க்ரைம் த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை அழுத்தமாக செய்திருக்கிறார்.
அருள்நிதி வில்லன் குறித்து சேகரிக்கும் ஆதாரம் அதை வைத்து கண்டுப்பிடிப்பது ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும். மேலும், படம் முழுவதும் அருள்நிதி குடித்துக்கொண்டே இருந்தாலும், அந்த குடியால் அவர் வில்லனை தவறவிட்டு, அந்த குடியை விடும் காட்சிகள் கிளாஸ்.
பல்ப்ஸ்
என்ன தான் கதாபாத்திரம் குடும்பத்தை இழந்து நின்றாலும், அருள்நிதி சட்டைகூட மாற்றாமல் சுற்றுவது கொஞ்சம் ஓவர்.
ரோபோ ஷங்கர் காமெடி காட்சிகள் எங்கும் எடுபடவில்லை, தேவையில்லாத திணிப்பாகவே தெரிந்தது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சியமைப்புகள்.
மொத்தத்தில் ஆறாது சினம் அறிவழகன், அருள்நிதியை மட்டுமின்றி ரசிகர்களையும் பதட்டத்துடன் பயணிக்க வைத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்.