ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்


DSC_4714-05ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கிலே இருக்கின்ற காங்கேசன்துறையில் ஜனவரி 9 ஆம் திகதி 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர்.  தனது பாடசாலைக்கல்வியைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார்.  இந்தியாவில் இருக்கின்ற உத்கல் என்கிற பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக கல்விகற்றவர்.  பின்னர் கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா தகைமைகளைப் பெற்றுக்கொண்டவர்.
தனது எழுத்துக்களின் ஊடாகவும் பேச்சுகளின் ஊடாகவும் பெண்களின் விடுதலைக்கும், சமத்துவத்துக்குமாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த குறமகள் கனடா வந்தபின்னரும் தொடர்ச்சியாகச் சமூகச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.  புலம்பெயர் வாழ்வின் பாடுகளின் ஊடாக தவித்த மக்களை தனது எழுத்துக்களாலும் செயற்பாடுகளாலும் ஆற்றுப்படுத்த தன்னால் இயன்றவரை முயன்றவர்.  தமிழ்ச் சமூகத்துக்கு அவரது முக்கிய பங்களிப்பாக அவரது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வி என்கிற ஆய்வுநூலைக் 


குறிப்பிடலாம்.  யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வியின் வரலாற்றையும், அன்றைய சமூகச் சூழலையும் ஆராயும் இந்நூலில் அன்றைய தலைவர்கள், சைவமும் தமிழும் என்று அன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கம் பற்றியெல்லாம் தன் கருத்துகளைக் காத்திரமாக முன்வைப்பதுடன் இக்கருத்தாக்கங்கள் எவ்வாறு பெண்ணடிமைத்தனத்தையும், சாதியத்தையும் பேண உதவின என்றும் விபரமாகப் பேசுகின்றார்.  குறமகள் என்கிற பெயர் சிறுவயதில் அறிமுகமானபோதும் அவரது எழுத்துக்களுனுடனான அறிமுகம் இந்நூலின் வாயிலாகவே எனக்குக் கிடைத்தது.   காலமும் முதிர்ச்சியும் அவரில் மெல்லிய தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சில விடயங்களை அவர் மறந்திருந்தாலும் இன்னமும் வசீகரிக்கின்ற ஓர் ஆளுமையாகவே இருக்கின்றார்.  பெண்விடுதலை, சாதிய ஒழிப்பு, சமத்துவ சமூகம் தொடர்பான அவரது கருத்துகள் இன்னமும் உறுதியாகவே ஒலிக்கின்றன.  இன்றும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருக்கின்றார்; எழுத இருக்கின்ற விடயங்கள் பற்றி திட்டமிடுகின்றார்.  உரையாடலுக்காக சந்தித்தபோதும் அடுத்து எழுத இருக்கின்ற கட்டுரை பற்றி உற்சாகமாக உரையாடுகின்றார்.  எம்மை உபசரிக்கின்றார்.  இன்னமும் கூட உபசரிக்கவேண்டும் என்று யோசிக்கின்றார்.  ஓர் உரையாடலுக்காக எல்லாவிதமான சரியான ஆயத்தங்களுடனும் எம்மை எதிர்கொள்ளுகின்றார்.
  1. உங்கள் பாடசாலைப் பராயம் பெண்கள் கல்விகற்பது மிகவும் குறைவாக இருந்த ஒரு காலப்பகுதியைச் சேர்ந்தது. எனவே எமக்குத் தெரிந்த ஒரு ஆளுமையின் சிறுபராயத்தை அறிவதில் இயல்பாகவே இருக்கக் கூடிய ஆவலுக்கு மேலாக உங்களது சிறுபராயத்தில் இருந்தும், குடும்பப் பின்னணியில் இருந்தும் தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கின்றது.  அதுபற்றிச் சொல்லுங்கள்?
நான் சிறுவயதில் காங்கேசன்துறையில் இருந்த நடேஸ்வராக் கல்லூரியில் கற்றேன்.   எனது தகப்பனார் ஒப்பந்தகாரராகப் பணிபுரிந்து வந்தார்.  அம்மாவின் வழியாக வந்த சீதனச் சொத்துக்களாலும், அப்பா ஒப்பந்தகாரராக உழைத்துச் சேர்த்த சொத்துக்களாலும் வசதியான குடும்பப் பின்னணியிலேயே பிறந்தேன்.  ஒப்பந்தகாரர் என்பதனை முக்கந்தர் என்று சொல்வார்கள்.  முக்கந்தர் என்பது ஒரு தெலுங்குச் சொல்.  அந்தக் காலத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டிமார் என்கிற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நாட்டின் பலபகுதிகளிலும் கடைகளை நிறுவி வியாபாரம்செய்து செல்வாக்குடன் இருந்தார்கள்.  இந்த வியாபாரத்திலேயே எனது தகப்பனார் ஒப்பந்தகாரராகப் பணியாற்றினார்.  அவரது உண்மையான பெயர் எம். ஏ. சின்னத்தம்பி.  அதே காலத்தில் பி.ஏ. சின்னத்தம்பி என்று ஒருவரும் இருந்ததால் ஊரவர்கள் அப்பாவை எம்ஏயர் என்று அழைப்பார்கள்.  அம்மாவின் பெயர் செல்லமுத்து.
அந்நாட்களில் அடிக்கடி அப்பாவும் நண்பர்களும் சின்னமேளம் பார்க்கவென்று கப்பலில் கோடிக்கரைக்குப் போய் அங்கிருந்து மதுரையின் வேதாரணியம் என்ற இடத்துக்குப் போவார்கள்.  அங்கிருந்து திரும்பும்போது சில பக்கங்களையே கொண்ட சிறுசிறு பிரசுரங்களைக் கொண்டுவருவார்கள்.  அதில் காந்தி, சரோஜினி நாயுடு, இந்திரா காந்தியின் தாய் கமலா நேரு என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களைப் பற்றி நிறைய செய்திகள் வரும்.  அப்போது எனக்கு மிகவும் சிறியவயது.  இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம்.  எனது ஆச்சி மற்றும் அவரது வயதை ஒத்தவர்களுக்கு (அம்மாவின் அம்மா) அந்தச் செய்திகளை படித்துக்காட்டுவது எனது பணி.  அதில் இருக்கின்ற அரசியல் செய்திகள் அனேகம் விளங்காது.  ஆனாலும் ஒருவிதமான பெருமித, பரவச உணர்வு இவர்களை ஒத்த தலைவர்களைப் பற்றி வாசிக்கின்றபோது ஏற்படுவதை உணர்ந்திருக்கின்றேன்.
நான் நடேஸ்வராக் கல்லூரியில் கற்றேன் என்று சொன்னேன் அல்லவா.  அதற்கு எதிர்ப்புறமாக நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் விட்டுச்சென்ற பண்டகசாலைகள் இருந்தன.  அவற்றைக் கிட்டங்கி என்று சொல்வார்கள்.  கிட்டங்கி என்பது ஒரு தெலுங்குச்சொல்.  இந்தக் கிட்டங்கிகளில் ஒரு தொகுதியினை எனது பாட்டனார் பணம் கொடுத்து வாங்கியிருந்தார்.  இவற்றில் ஓர் அடைவுக்கடை, ஒரு பொற்கொல்லர் கடை, ஒரு தேநீர்க்கடை, மற்றும் ஒரு பலசரக்குக் கடை என்பன இருந்தன.  தேநீர்க்கடைக்கும் பலசரக்குக் கடைக்கும் எனது பாட்டனார் பொறுப்பாக இருந்தார்.  அந்த அடைவுகடைக்கு அடிக்கடி மக்கள் போய்வருவதைப் பார்த்த நான் எனது அப்புவிடம், அவர்கள் அங்கே என்ன செய்கின்றார்கள் என்று கேட்டேன்.  வறுமை நிலையில் இருக்கின்ற மக்கள் தம்மிடம் இருக்கின்ற நகைகளைப் பொறுப்பாக வைத்துப் பணம் பெற்றுச் செல்கின்றார்கள்.  பின்னர் பணம் கிடைக்கின்றபோது பணத்தைச் செலுத்தி அந்த நகைகளை அவர்கள் மீளப் பெற்றுக்கொள்வார்கள் என்று அவர் கூறினார்.  அந்த நேரத்தில் வீரகேசரியில் பாலர் கழகம் என்கிற பகுதி வந்துகொண்டிருந்தது.  அதில் ஆபரணங்கள் அவசியமா என்பதை ஒட்டிக் கட்டுரை எழுதுமாறு ஆறாம் வகுப்பு மாணவர்களை நோக்கிக் கேட்கப்பட்டிருந்தது.  அப்போது நாலாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நான் ஆபரணங்கள் அவசியம் என்று மூன்று கருத்துகளையும், அவசியமில்லை என்று மூன்று கருத்துகளையும் கூறி, அவற்றைத் தொகுத்து “ஆனாலும் ஆபரணங்கள் செய்துவைத்திருப்பது கஷ்ட காலங்களில் அடைவு போன்றவற்றின் மூலம் அவசரத்தேவைக்கான பணத்தினைப் பெற உதவும்; எனவே அதிகமாக இல்லாவிட்டாலும் சிறிய அளவு நகைகளை செய்துவைத்திருப்பது அவசியம்” என்று வகுப்பறையில் வைத்து எனது கொப்பியில் எழுதியிருந்தேன்.  இதைப் பார்த்த எனது “முதல் வாத்தியார்” கந்தையா அவர்கள் பாராட்டிவிட்டு அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்து வீரகேசரிக்கு அனுப்பிவைத்தார்.  வீரகேசரியும் அதனைப் பிரசுரித்து இருந்தது.
எனது நாலாவது வகுப்பில் பிரசுரமான அந்தக் கட்டுரையே அச்சு ஊடகம் ஒன்றில் வெளியான எனது முதலாவது ஆக்கமாகும். அதற்குப் பிறகு சிறிய சிறியவையாக அடிக்கடி எழுதினேன்.  வீட்டில் அப்பா உள்ளிட்டவர்கள் அதனை வீரகேசரி போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள்.
வீட்டில் அம்மாவுக்கு நிறைய வாசிக்கின்ற பழக்கம் இருந்தது.  அவரைப் பார்த்து நானும் இது இது என்றில்லாமல் எல்லாவற்றையும் வாசிக்கத்தொடங்கினேன்.  அப்போது இலங்கையில் இருந்து வீரகேசரி வந்துகொண்டிருந்தது மட்டுமே நினைவில் இருக்கின்றது.  ஏனைய எந்த பத்திரிகைகள் வெளியாகின என்பது மறந்துவிட்டது.  அதேநேரம் அப்பாவின் சகோதரர் ஒருவர் இருந்தார்.  அவர் கல்கி, ஆனந்தவிகடன் போன்ற தமிழகத்தில் இருந்து வெளியாகின்ற இதழ்களைத் தொடர்ச்சியாக வாங்கிவந்தார்.  அவற்றையும் ஆர்வமுடன் வாசித்துவந்தேன்.  அந்தச் சிறுவயதில் நான் வாசித்த எல்லாவற்றையும் புரிந்துகொண்டுதான் வாசித்தேன் என்று சொல்லமுடியாது.  ஆனாலும் வாசிக்கவேண்டும் என்பதற்காகவே வாசித்தேன்.
  1. இவ்வாறு சிறுவயதில் வாசித்தவை, சிறுவர் பகுதிகளில் எழுதியவை தவிர, பின்னர் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
அதற்குப் பிறகு பதினேழுவயதில் சிறுகதைகள் எழுதி பிரசுரமாகின.  முதலில்….  (சற்றே யோசிக்கின்றார்) “போலிக் கௌரவம்” என்கிற ஒரு சிறுகதை ஈழகேசரியில் வெளியானது.  எனக்கு பன்னிரண்டு வயது இருக்கின்றபோது எமது அயலில் இருந்த ஒரு குடும்பத்தில் ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் இருந்தனர்.  அதில் ஒரு சகோதரிக்கு திருமணம் நடைபெற்றபோது வீட்டினை சொரியலாக, நிந்தப்படுத்தக் கூடாது என்று சொல்லி எழுதிக் கொடுத்தார்கள்
(அருண்மொழிவர்மன்: குறுக்கிட்டு, விளங்கவில்லை.  கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கோ என்று கேட்க, சொரியலாக என்றால் எல்லாருக்குமான பங்கு வீடு.  நிந்தப்படுத்துவது என்றால் ஒருவருக்கு தனி உரிமையாக எழுதிக் கொடுப்பது என்று விளக்கம் கூறுகின்றார்)
இதற்குப்பிறகு சகோதரியைத் திருமணம் செய்தவன் வீட்டைத் தனக்கு நிந்தப்படுத்தித் தரும்படி கேட்கின்றான்.  அதற்கு சகோதரன் மறுக்கவே அவன் கோபித்துக்கொண்டு அந்தச் சகோதரியைக் கைவிட்டுவிட்டு சென்றுவிடுகின்றான்.  அப்போது அவள் 6 மாத கர்ப்பிணியாக வேறு இருக்கின்றாள்.  சிறிதுகாலத்தில் அந்தப் பெண், சகோதரனிடம் நீதானே திருமணம் செய்து வைத்தாய், இப்ப கணவன் கோபித்துக்கொண்டு போய்விட்டான், நீ நிந்தப்படுத்தித் தந்தாவது என்னை அவனுடன் சேர்த்துவை என்று சண்டையிடவே அந்தச் சகோதரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துவிடுகின்றான்.  அந்த செத்தவீட்டுச் சடங்குகளுக்குக் கூட அந்த கணவன் வரவில்லை.  இதனால் மூன்று நாட்களின் பின்னர் அந்தப் பெண்ணும் தூக்குப் போட்டு தற்கொலைசெய்துவிடுகின்றாள்.  அப்போது வெறும் பன்னிரண்டு வயதேயான எனக்கு இந்தச் சம்பவம் பெரியளவில் பாதிக்கின்றது.   அத்துடன் மெல்ல மெல்ல சீதனம் பற்றிய கோபமும், எதிர்ப்புணர்வும் கூடவே வருகின்றது.  இதனால் சீதனம் கேட்காத ஆண் பற்றிய உயர்வான ஓர் அபிப்பிராயம் எனக்குள் தோன்றுகின்றது.
இதை வைத்தே “போலிக்கௌரவம்” கதையை எழுதினேன்.  இக்கதையில் சீதனம் பற்றிய பேச்சு வருகின்றபோது, நீங்கள் விரும்பியதைத் தாருங்கள் என்று சொல்வதாக ஆண் பாத்திரம் அமைந்திருக்கும்.  இந்தக் கதையை  எழுதியபோது எனக்கு பதினேழு வயது மாத்திரமே இருந்தது என்பதையும் கவனித்துப் பார்க்கவேண்டும்.  பிற்காலத்தில் ஏன் சீதனம் கொடுக்கவேண்டும் என்பதாகவே எனது எண்ணம் மாறியது என்பதையும் குறிப்பிடவேண்டும்.
  1. அப்பொழுது யார் யாருடைய புத்தகங்களை வாசித்தீர்கள்?
எனக்கு மீனாட்சி சுந்தரனாரின் தமிழ் நிறையப் பிடிக்கும்.  அதனால் அவரின் எல்லாப் புத்தகங்களையும் வாசிப்பேன்.  அதுபோலவே மு. வரதராசனின் புத்தகங்களும் பிடிக்கும்.  குறிப்பாக மு. வரதராசனின் புத்தகங்களில் அவர் மறுபக்கத்தில் நியாயத்தைப் பார்ப்பார்.  அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  அத்துடன் எனது சிந்தனை முறையிலும் அது பாதிப்புச் செலுத்தியிருந்தது.
அப்போது கே.கே.எஸ் ரோட்டில் இருந்த ஶ்ரீலங்கா புத்தகசாலையே பிரதான புத்தகக் கடையாக இருந்தது.  அவர்கள் எனக்கு விருப்பமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஏதும் புதிதாக விற்பனைக்கு வந்திருந்தால் -குறிப்பாக மு. வரதராசனின் புத்தகங்கள்- உடனே எனக்கு போஸ்ட் கார்ட் ஊடாகத் தெரிவிப்பார்கள்.
  1. நடேஸ்வராக் கல்லூரியில் ஆரம்ப வகுப்புகளில் கற்றதைப் பற்றிக் கூறினீர்கள். உங்கள் கல்வியை அங்கேயே தொடர்ந்தீர்களா?
சிறுவயதில் நான் படித்த பாடசாலை கலவன் பாடசாலையாக இருந்தது.  இதனால் நான் பருவமடைந்த பின்னர் குடும்பத்தினர் இளவாலை கொன்வென்றுக்கு கல்விகற்க அனுப்பினார்கள்.  அங்கே விடுதியில் தங்கி கற்றேன்.  அது ஒரு கலவையான அனுபவமாக இருந்தது.  ஒரு விதத்தில் கட்டாயமாக கிறிஸ்தவ பிரார்த்தனை போன்றவற்றில் ஈடுபடவேண்டி இருந்தது எரிச்சலூட்டியது.  எனக்கு நல்ல குரல்வளம் இருந்ததால் Singing Group இலும் என்னைச் சேர்த்துவிட்டார்கள்.  அதேநேரம் என்னை சாதிப்பிரிவுகளுக்கு எதிரான சமத்துவ நோக்குடையவராக்கியதிலும், பிற மதத்தினரோடு ஒவ்வாமையின்றி பழகுபவராக்கியதிலும் இந்த அனுபவங்களே காரணமாகின.  புறவயமாக உடை அணியும்முறை உட்பட பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.  பழக்கம் காரணமாக மற்றவர்கள் பேசும்போது “ஜீஸஸ்!” என்று அடிக்கடி கூறும் பழக்கம் இப்ப வரை உள்ளது.
எனக்கு சினிமாப் பாடல்கள் கேட்பதில் நல்ல ஆர்வம் இருந்தது.  குரல்வளமும் நன்றாக இருந்ததால் சினிமாப் பாடல்களை கிறிஸ்தவப் பாடல்களாக மாற்றி விடுதியில் சனிக்கிழமை நிகழ்வுகளில் பாடுவேன்.  உதாரணமாக “உலவும் தென்றல் காற்றினிலே..” என்பதை “கல்வாரிமலைக்கு வாருங்கள்…” என்று பாடுவேன்.  வாராய் நீ வாராய் என்பதை, “வாராய் நீ வாராய், கல்வாரி மலைக்குச் செல்வோம்…” என்று பாடுவேன்.  பாடசாலையிலும் விடுதியிலும் இருந்தவர்கள் நான் பாடும் முறை நன்றாக இருப்பதாக ஊக்குவித்தனர்.  ஒரு முறை பாத்திமா தேவாலயத்தில் இருந்து ஃபாதர் ஜெலாட் என்பவர் வந்தபோது என்னை அவர் முன் பாடச்சொன்னார்கள்.  அதன்பின்னர் ஞான ஒடுக்கம் என்கிற சடங்கில் பல்வேறு பாதிரிமார்கள் கலந்துகொண்டபோதும் என்னை மேடையில் இவ்வாறான பாடல்களைப் பாடச்சொன்னார்கள்.  அவர்களும் என்னை வெகுவாக ஆதரித்து ஏன் மற்றவர்களால் இவ்விதம் அழகாகப் பாடமுடியவில்லை என்றும் கேட்டார்கள்.  இதன்பின்னர் பல்வேறு கத்தோலிக்கப் பாடல்கள் சினிமாப் பாடல்களை ஒத்த மெட்டுக்களில் வெளியாகின.  இதை ஏன் சொல்கின்றேன் என்றால் எனது சுயமான தேடலையும் முயற்சிகளையும் அப்போதே அந்த கொன்வென்டில் ஆதரித்து ஊக்குவித்தது எனது ஆளுமையை வளர்த்தது.  ஏற்கனவே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான பார்வையும், பிற மதத்தவர் மீதும் மதங்கள் மீதும் வெறுப்பில்லாத போக்கும் என்னில் இதே காலப்பகுதியில் உருவாகியிருந்தன.  ஒரு விதத்தில் வள்ளிநாயகி, “குறமகளாக” மாற இந்தக் கொன்வென்ட் வாழ்க்கையே காரணமானது எனலாம்.
இதற்குப் பிறகு இந்தக் கொன்வென்டின் மூலமாக திருச்சியில் உள்ள Holycross Convent இற்கு அனுமதியும் கிடைத்தது.  துரதிஸ்டவசமாக நான் புறப்பட இருந்த அதே தினம் எனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  உறவினர்கள் இதனை, எனது பிரிவை எண்ணி வருந்தியே தந்தைக்கு மாரடைப்பு உருவாகியிருக்கும் என்பதாகக் கூறி எனது மேற்படிப்புக்கான பயணத்தை நிறுத்தும்படி எனது குடும்பத்தினரிடம் சொன்னார்கள்.  எனக்கு வேறுவழியேதும் இருக்கவில்லை என்பதால் மீளவும் இளவாலை கொன்வென்டுக்கே சென்று எனது நிலையை விளக்கினேன்.  அவர்களும் Training College இற்கான விண்ணப்பப் படிவங்களைத் தந்தார்கள்.
  1. அன்றைய எமது கல்விமுறை பற்றிய ஒரு பதிவிற்காகக் கேட்கின்றேன். அப்போது மேற்படிப்பை இந்தியா சென்று கற்பதுதான் மரபாக இருந்தது அல்லவா?
ஓம்.  இது நடந்தபோது 1951ம் ஆண்டாக இருந்திருக்கவேண்டும்.  அப்போது அதுவே வழமையாக இருந்தது.  University of Ceylon என்பது அப்போது இருந்த பல்கலைக்கழகம்.  அதன் இரண்டு வளாகங்கள் கொழும்பிலும் பேராதனையிலும் இருந்தன.  ஆனாலும் மிகக் குறைவான மாணவர்களே தேர்வானார்கள்.  அத்துடன் குறைந்த பாடத் தெரிவுகளே இருந்தன.  இதனால் அனேகமான மாணவர்கள் இந்தியா சென்று கற்பதே வழமையாக இருந்தது.
  1. பெண்கள் கல்வி கற்பது என்பதே மிகமிகக் குறைவாக இருந்த காலப்பகுதி. Training College சென்று கற்பது என்று நீங்கள் முடிவெடுத்தபோது உங்கள் குடும்பத்தினர் அதை எவ்விதம் எதிர்கொண்டனர்?
ஐந்து பெண்பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்தபிள்ளை நான்.  நிலைமை எவ்விதம் இருக்கும் என்பதை உங்களால் யோசிக்க முடிகின்றது தானே?  பெண்பிள்ளைக்கு படிப்புத் தேவையில்லை, உடனே திருமணத்தைச் செய்துவைக்குமாறு உறவினர்கள் தரப்பில் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள்.  ஆனால் வீட்டில் எனக்கு அப்பாவின் ஆதரவு ஓரளவு இருந்தது.  எனவே அவரிடம் பேசி, நீங்கள் திருமணப் பேச்சுகளில் ஈடுபட்டு திருமணம் உறுதிசெய்யப்படும்வரை நான் Training college சென்று கற்கின்றேன் என்று கூறி அனுமதியும் பெற்றுவிட்டேன்.   அதன் பின்னர் அனுமதிப் பரீட்சை எழுதித் தேர்வான 25 பேரில் முதலாவதாக தேர்வாகி கோப்பாய் Training College இற்குப் போனேன்.  கோப்பாய் Training College அப்போது மகளிர் கல்லூரியாகவே இயங்கியது.  பலாலி Training College இலேயே ஆண்கள் கற்றனர்.  இரண்டு கல்லூரிகளிலும் 25 பேரையே அம்முறை தேர்ந்தெடுத்தனர்.  இருக்கின்ற வெற்றிடங்களைப் பொருத்து இந்தத் தொகை மாற்றமடையும்.
அங்கு கற்கின்றபோது தமிழ் வகுப்பில் பிரதேச பண்டிதர் என்கிற சான்றிதழுக்கான பாடப்பரப்பை எமது தமிழ் வகுப்பிலேயே கற்றதனால் அந்தச் சான்றிதழையும் பரீட்சை எழுதிப்பெற்றுக்கொண்டேன்.  தொடர்ந்து பாலபண்டிதராகவும் தேர்வெழுதி சித்தியடைந்தேன்.
  1. உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது? நீங்கள் மேற்படிப்பு படிப்பதையும், தொடர்ந்து எழுதுவதையும், சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் அவர் எவ்விதம் எதிர்கொண்டார்?
நான் Training College ஐவிட்டு வெளியேறி நடேஸ்வராக் கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கிய நாட்களிலேயே எனது 24 வது வயதில் எனது திருமணம் நடைபெற்றிருந்தது.  அவரது இரண்டு மூத்த சகோதரர்களும், அவர்களது மனைவியரும் ஆசிரியர்களாகவே இருந்தனர்.  இந்தப் பின்னணி அவரைத் தயார்ப்படுத்தியிருக்கும் என்று நினைக்கின்றேன்.  அவர் அப்போது தபாலதிபராக நல்ல உத்தியோகத்தில் இருந்தார்.  இதனால் அவரது சில நண்பர்களும் உறவினர்களும் “அவ என்னத்தைப் படிப்பிக்கிறது?, வேலையை விட்டு நிப்பாட்டு” என்று சொன்னபோதும் கூட அவர் அவற்றுக்குச் செவிசாய்க்காமல் எனக்கு முழுமையாக ஆதரவளித்தார்.
எனது தந்தை ஆரம்பத்தில் எனக்கு நிறைய ஆதரவளித்தார்,  அதுபோல எனது கணவனிடமும் நான் முழுமையான சுதந்திரத்தை அனுபவித்தேன்.  எனது தேர்வுகளை நான் சுயமாக எடுக்கின்ற சுதந்திரம் எனக்கு இருந்தது.  அவர் எவற்றிலும் தலையீடு செய்ததில்லை.  அப்ப எல்லாம் நான் அடிக்கடி வெவ்வேறு கூட்டங்களிற்கு பேசச் செல்வேன்.  நிறைய எழுதுவேன்.  எல்லாவற்றுக்கும் அவர் ஆதரவளித்ததுடன் இயன்றவரை தானும் நான் செல்லும் கூட்டங்களில் கலந்துகொள்ளுவார்.  அப்படி ஒரு கணவன் கிடைப்பது கஸ்ரம்.  பிள்ளைகள் ஏதாவது கேட்டாலும் அம்மாவையும் கேளுங்கள் என்று சொல்வார்.  தன்னிச்சையாக முடிவெடுக்கமாட்டார்.
  1. ஓர் ஆசிரியராக நீங்கள் முதலில் கற்பித்த பாடசாலை எது?
நாட்டின் பலபாகங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 15 பாடசாலைகளிற்கு விண்ணப்பித்திருந்தேன்.  அவற்றில் பலவற்றில் இருந்து அழைப்பும் வந்திருந்தது.  ஆனாலும் பெற்றோர் வெளி இடங்களிற்குப் போக அனுமதிக்காமையால் ஊரிலேயே இருந்த நடேஸ்வராக் கல்லூரியிலேயே ஆசிரியையாக பணியைத் தொடங்கினேன்.  அங்கு 5 ஆண்டுகள் கடமையாற்றினேன்.  அதன்பின்னர் நடேஸ்வராக் கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பாக அரசாங்கத்துக்கும் முகாமைத்துவத்துக்கும் இடையே சில சிக்கல்கள் உருவானபோது நான் நடேஸ்வராக் கல்லூரியின் முகாமையாளர்களின் பரிந்துரையால் மானிப்பாய் சோதிவேம்படி வித்தியாசாலையில் சேர்க்கப்பட்டேன்.
  1. நீங்கள் நடேஸ்வராக் கல்லூரியில் கற்பித்த காலப்பகுதி எது?
……
(நீண்டநேரம் யோசிக்கின்றார்)  ஞாபகம் வருகிதில்லை.   அறுபதுகளில் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதால் 1956 அப்படி அங்கே இணைந்திருப்பேன் என நினைக்கின்றேன்.  ஆனால் சரியாக ஞாபகத்தில் இல்லை.
சோதிவேம்படியில் அப்போது 5ம் வகுப்பு வரையே இருந்தது.  நான் –அப்போது அரிவரி என்று சொல்வார்கள்- பாலர் வகுப்பிற்குப் படிப்பித்தேன்.  அவர்களுக்கு மத்தியானம் 12 மணி வரை கற்பித்துவிட்டு அதற்குப் பிறகு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் எடுப்பேன்.
அப்போது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லவேண்டும்.  ஒரு நாள் சோதிவேம்படி பாடசாலையில் மாணவர்கள் இவ்விதம் விளையாடிக்கொண்டிருக்கின்றபோது திடீரென்று கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது.  பாடசாலையில் இருந்த நான்கு ஆண் ஆசிரியர்களும் பயத்தில் பாடசாலையின் பின்பக்கத்தால் ஓடிவிட்டார்கள்.  ஒரு மாணவன் மீது கட்டட இடிசல்கள் விழுந்து பலத்த காயமுற்று காதாலும் மூக்காலும் இரத்தம் வடிகின்ற நிலையில் ஏனைய மாணவர்கள் அவனைத் தூக்கிவந்து கரையோரமாகக் கிடத்திவிட்டு அவர்களும் பயத்தால் ஓடிவிட்டார்கள்.  அப்போது என்னிடம் கார் காரில் ஏற்றி மானிப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றேன்.  இச்சம்பவம் நடைபெறும்போது நான் கர்ப்பிணியாக இருந்தேன்.  அந்தக் களைப்பு, மற்றும் படபடப்பினால் வைத்தியசாலையில் அந்த மாணவனைச் சேர்த்த கையோடு நானும் மயங்கிவிட்டேன்.  பின்னர் வைத்தியசாலையினர் எனது கணவருக்கு தகவல் அனுப்பி அவரை வரவழைத்தார்கள்.  அந்த மாணவனின் உயிரை எவ்வளவோ முயன்றும் காப்பாற்றமுடியவில்லை.  அத்துடன் எனக்கும் அபோர்ஷன் ஆகிவிட்டது.
(சற்று நேரம் யோசித்தபடி இருக்கின்றார்.  இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்காக மீண்டும் உரையாடலை ஆரம்பிக்கின்றேன்)
  1. அப்போது நீங்கள் கார் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டீர்கள். அந்த நாட்களிலேயே நீங்கள் கார் வைத்திருந்தீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.  எப்படி கார் ஓடத் தொடங்கினீர்கள்?
முன்னரே சொன்னதுபோல எனது தந்தை பல விடயங்களில் எம்மை ஊக்குவித்து வந்தார்.  பதினாறு வயது அளவிலேயே காங்கேசன்துறைக்கும் இளவாலைக்குமான பயணங்களில் தந்தை என்னை வாகனம் ஓட்டப் பழக்கினார்.  அதனால் அவருடன் செல்கின்றபோது நான் வாகனம் செலுத்துவது வழமையாகி இருந்தது.  ஆனால் சாரதி அனுமதிப்பத்திரத்தை கல்யாணத்தின் பின்னரே பெறவேண்டும் என்பதை அவர் நிபந்தனையாக வைத்திருந்தார்.  அவ்வாறே நான் திருமணத்தின் பின்னர் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டேன்.
(சிறிது நிறுத்திவிட்டு, முன்னர் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேசத் தொடங்குகின்றார்)
சோதிவேம்படியில் கற்பிக்கின்ற காலத்தில் வெளிவாரியாக எனது Degree ஐயும் நிறைவுசெய்திருந்தேன்.  அங்கு ஆரம்ப வகுப்புமாணவர்களுக்கே கற்பித்ததால் 12 மணிக்கு அவர்களது பாடசாலை நேரம் முடிய நிறைய நேரம் ஓய்வாகக் கிடைத்தது.  இதுவும் நான் தொடர்ந்து படிக்க உதவியது.  டிகிரியை முடித்த பின்னர் மேல்வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க பண்டத்தரிப்பு மகளிர் பாடசாலைக்கு மாற்றலானேன்.
பிறகு நான் Diploma in Drama தேர்ச்சிபெற்றவுடன் இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டேன்.  அதுவரை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலேயே கற்பித்து வந்தேன்.  ஆனால் அங்கே நாடகம் ஒரு பாடமாக இருக்கவில்லை.  இதனால் நாடகம் ஒரு பாடமாக இருந்த சென். ஹென்றிஸ் இற்கு மாற்றப்பட்டேன்.  அப்போது சென். ஹென்றிசில் இருந்த ஒரே ஆசிரியை நானே.
  1. நாடகவியலில் மேற்படிப்புப் படித்தது பற்றிக் குறிப்பிட்டீர்கள். நாடகம் பற்றிய உங்களது ஆர்வம் எவ்வாறு உருவானது?  உங்களுக்கு இயல்பாகவே நாடகங்கள் பற்றி இருந்த ஆர்வத்தால் அதனைத் தேர்ந்தெடுத்தீர்களா?
சின்னன்ல இருந்தே அதானே தொழில்… (சிரிக்கின்றார்)  இளவாலை கொன்வென்டில படிக்கும்போது நிறைய நாடகங்களில் நடித்திருக்கின்றேன்.  St. Maria Goretti பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அவர் கதையை நாடகமாகப் போட்டபோது சிறுவயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கின்ற அலெக்சாண்டர் என்கிற கதாபாத்திரத்தில் நானே நடித்திருந்தேன்.  மேடையில் நிற்கின்றபோதே ஆத்திரமுற்று பார்வையாளர்கள் கைகளில் அகப்பட்டவற்றையெல்லாம் என்மீது எறிந்தார்கள்.  அந்தக் கதாபாத்திரத்துக்குக் கிடைக்கக்கூடிய சிறந்த பாராட்டு அதுதானே.  அந்த நாடகம் பற்றி சொன்னேன் அல்லவா, அதில் மரியா கொரட்டியாக சிறுமியாக நடித்தவர் தற்போது கல்வி அதிகாரியாக இருக்கின்ற புவனேஸ்வரி இராமநாதன்.  இளவாலை கொன்வென்டில் பெண்கள் மட்டுமே கற்றதால் ஆண் கதாபாத்திரங்களையும் பெண்களே எடுத்து நடிக்கவேண்டியிருந்தது.  நான் உயரமாகவும் சற்று பெரிய தோற்றமாகவும் இருந்ததால் அனேகமாக நான் ஆண் பாத்திரங்களையே எடுத்து நடித்தேன்.
நாடகங்களுடனான எனது ஈடுபாடு தொடர்ந்துகொண்டே இருந்தது.  பின்னர் அளுத்கம Training College இல் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது நாடகங்களை பழக்கி நானும் நடித்து  மேடையேற்றினேன்.  அதுபோல தனி நடிப்புகளும் செய்திருக்கின்றேன்.  (சற்று யோசிக்கின்றார்…) பைபிளில் வருகின்ற ஜூடித் கதையை தனிநடிப்பாக முதலில் அழகிய ஆடைகளுடன் மேடையில் தோன்றியும், பின்னர் சாக்கினை உடையாக அணிந்தும் நடித்தது ஞாபகம் இருக்கின்றது.  ஆனால் கதை மறந்துவிட்டது.
  1. இளவாளை சென். ஹென்றிசில் ஆசிரியையாகப் பணியாற்றியதுபற்றிக் கூறினீர்கள். அதற்குப் பிறகு தான் நீங்கள் அளுத்கம training college இற்குப் போனீர்கள் அல்லவா?
ஓம்.  அங்கு கற்பித்தது மறக்கமுடியாது அனுபவம்.  அது முஸ்லிம் பெண்கள் கற்ற Training College.  எனவே முஸ்லிம் பெண்களுக்கு இருந்த நடனமாடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சமூகத் தடைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.  இதையும் எதிர்கொண்டு அங்கே நாடகங்களை இயக்கி, பழக்கி, நடித்தேன்.  அத்துடன் விளையாட்டுத் துறை சார்ந்த பயிற்சிகளையும் நானே வழங்கினேன்.  அங்கே அதிபராகக் கடமையாற்றியவர் மாற்றலாகிச் செல்ல என்னை அதிபராகவும் நியமித்தார்கள்.  மாணவர்கள் மத்தியிலும் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களிடமும் இதற்கு ஆதரவு கிடைத்தபோதும், அங்கே இருந்த ஒரு ஆண் ஆசிரியரும், ஆசிரியையும் பெற்றோர்களிடம் நடனம் பழக்குவது போன்ற எனது செயற்பாடுகள் மாணவிகளின் ஒழுக்கத்தைக் குலைக்கும் என்றும், நான் முஸ்லிம் அல்ல என்றும் முறைப்பாடுகளைச் செய்துவந்தனர்.  இதனால் சில சிக்கல்கள் எழவே எதற்கு வீண் வம்பு என்று நான் என்னை கோப்பாய் Training College இற்கு மாற்றும்படி கேட்டு, அங்கே விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன்.  அதற்குப்பின்னர் இன்னொரு பதவியுயர்வு பெற்று கொழும்புக்கு மாற்றலானேன்.  அதற்குப் பிறகு இளைப்பாறும் வரை… (நீண்ட நேரம் யோசிக்கின்றார்…..  எப்ப ஓய்வுபெற்றேன் என்பதை நினைவுக்குக் கொண்டுவர முயலுகின்றேன்.  முடியவில்லை என்று கூறுகின்றார்) கொழும்பிலேயே எனது பணி தொடர்ந்தது.
  1. ஓர் எழுத்தாளராக உங்களின் ஆரம்பகாலம் பற்றியே பேசி இருந்தோம். சிறுவர் எழுத்துகளாகவும், பின்னர் எழுதிய சில கட்டுரைகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்.  அதற்குப் பிறகு பின்னர் எப்பவும் புனைவுகள் எழுதத் தொடங்கினீர்கள்?
தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருந்தேன் என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக “கொள்கைத் தடாகத்தில்…” என்கிற கதையைக் குறிப்பிடலாம்.  எவ்வளவு சீதனம் வேண்டும் என்று கேட்கிற பெண்வீட்டாரிடம் “நீங்கள் விரும்பியதைக் கொடுங்கள்” என்று சொல்கிற மணமகனை வியந்து முன்னர் “போலிகௌரவம்” என்ற கதையை எழுதியதாகக் குறிப்பிட்டேன் அல்லவா.  பின்னர் சீதனம் பற்றிய என்னுடைய சிந்தனையில் மாற்றமொன்று ஏற்பட்டிருந்தது.  அதன் வெளிப்பாடே “கொள்கைத் தடாகத்தில்…” என்கிற சிறுகதை.  அதற்கு (சற்று யோசித்துவிட்டு) பெயரை மறந்துவிட்டேன், ஆனால் ஒரு போட்டியில் முதல்பரிசும் கிடைத்திருந்தது.  இந்தக் கதையில் சீதனம் எவ்வளவு வேண்டும் என்று கேட்கிற பெண்வீட்டாரிடம் சீதனமே வேண்டாம் என்று சொல்கிறவனாக மணமகன் இருப்பான்.
அப்போது எஸ்.பொ, கனக. செந்திநாதன் போன்ற ஈழத்துப் பிரபல எழுத்தாளர்கள் இணைந்து ஒரு குறுநாவலை எழுதினார்கள்.  அதில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அத்தியாயம் என்று எழுதுவார்கள்.  நானும் அதில் மஞ்சள் என்று ஒரு அத்தியாயத்தை எழுதினேன்.  1962 இல் இது வீரகேசரி வாரமலரில் தொடராகவும் பின்னர் நூலாகவும் வெளியானது.  அதுபோல கடல்தாரகை என்ற இன்னொரு குறுநாவலை அந்நாளில் இருந்த பத்து முக்கியமான எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதினேன்.  இது 1975 இல் நடந்தது.
  1. ஐம்பதுகளின் மத்தியில் நீங்கள் எழுதிக்கொண்டிருந்த சமகாலத்தில் இருந்த ஏனைய பெண் எழுத்தாளர்கள் சிலர் பற்றிச் சொல்லமுடியுமா?
எழுதிக் கொண்டிருந்தவர்கள் சிலர் இருக்கின்றார்கள்.  ஆனால்   எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும்படி எவருமே தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கவில்லை.  நான் உட்பட அனேகமானோர் எழுத்துடன் சேர்த்து மேடைப்பேச்சு, பட்டிமன்றம் போன்றவற்றிலும் சேர்த்தே ஈடுபட்டுவந்தோம்.  அப்போது சத்தியதேவி துரைசிங்கம் என்றொருவர் இருந்தார்.  அவர் காந்திய சிந்தனை தொடர்பான விடயங்களையே பேசுவார்.  அதுவும் மாநாடுகள் போன்ற பெரிய கூட்டங்களிலேயே அவர் பேசுவார்.  அடுத்தது வேதவல்லி கந்தையா என்கிற இடதுசாரி.  எனக்கு மிகவும் பிடித்தவர் இவர்.  இவரது வழிகாட்டலிலேயே நான் உருவானேன் என்று சொல்வது பொருத்தமானதாகும்.  ஆரம்ப காலங்களில் என்னை அதிகம் ஊக்குவித்ததோடு பலரிடம் அறிமுகம் செய்து நிறைய கூட்டங்களில் கலந்துகொள்ளவும் பேசவும் உதவினார்.  என்னை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காகவே நான் செல்லும் கூட்டங்களுக்குத் தானும் வருவார்.  அடுத்து, சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு என்கிற கோப்பாய் Training College விரிவுரையாளராக இருந்தவர்.  இவர்கள் மூன்றுபேரும் அன்றைய காலங்களில் எமக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த ஆளுமைகள்.
  1. அண்மையில் கலைச்செல்வி இதழ்களை மீளப் படித்துக்கொண்டிருந்தபோது 1960 இலேயே கலைச்செல்வி மகளிர் மலராக வெளியிட்டிருப்பதை அறியமுடிந்தது. அதனூடாக அப்போது நிறைய பெண்கள் எழுதிக்கொண்டிருந்ததையும் அறியமுடிந்தது.  அவ்வாறு எழுதிக்கொண்டிருந்த பெண்களுக்குள் ஏதாவது அறிமுகங்கள், சந்திப்புகள் நிகழ்வது உண்டா?
அப்படி எதுவும் நிகழ்வதில்லை.  ஒவ்வொருவரும் வெவ்வேறு    இடங்களில் இருந்ததால் எம்மிடையே அறிமுகம் கூட இருந்ததில்லை.  ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம்.  ஒரு சமயம் நான் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு – (யோசிக்கின்றார்…) கட்டுரையின் பெயரை மறந்துவிட்டேன், ஆனால் பெண்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவது பற்றியது என்று நினைவில் உள்ளது – இன்னொரு பெண் எதிர்வினையாற்றினார்.  பின்னர் அடுத்த இதழில் எனது கருத்தை ஆதரித்து ராஜம் புஷ்பவனம் என்கிற இன்னொரு பெண் எழுத்தாளர் எழுதினார்.  இவையெல்லாம் மிக அபூர்வமான நிகழ்வுகள்.
  1. எழுத்து, நாடகம், பேச்சு போன்றவற்றில் உங்களது பங்களிப்புப் பற்றிக் கூறினீர்கள். அரசியல் ரீதியாகவோ, அமைப்புச் சார்ந்தோ உங்கள் பங்களிப்புகள் எவ்விதம் இருந்தன?
(சற்றே உற்றுப் பார்த்தவர் கண்களில் நீர் திரள, சுவரில் இருந்த ஒரு படத்தைப் பார்க்கின்றார்.  துப்பாக்கி ஏந்தி, நேர்கொண்ட பார்வையுடன் ஒரு பெண்.  இரண்டு கைகளாலும் அதனை நோக்கிக் காட்டியவாறு) பங்களித்திருக்கின்றேன்.  புலிகள் இயக்கத்தின் நிறைய கூட்டங்களில் பேசினேன்.  அங்கே பெண்கள் மத்தியில் எமது போராட்டத்தின் தேவை பற்றியும் எமது சுதந்திரம் எவ்விதம் மறுக்கப்படுகின்றது என்றும் பேசுவேன்.  ஆட்சேர்ப்புகளுக்கான பிரசாரக் கூட்டமாக இல்லாமல் இதற்கு முன்னர் வெவ்வேறு நாடுகளில் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண்களை எல்லாம் உதாரணம் காட்டிப் பேசுவேன்.  புராண காலங்களில் இருந்து, ஜோன் ஒஃப் ஆர்க் போன்றவர்களில் இருந்து இந்திய சுதந்திரபோராட்ட காலம் வரை உள்ள பெண்களை முன்னுதாரணமாக்கி அதில் பேசுவேன்.
  1. சாதியம் பற்றிய காட்டமான விமர்சனம் உங்களுக்கு இருந்ததாகவும், சாதியொழிப்பு பற்றிய அக்கறை இருந்ததாகவும் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். நீங்கள் இயங்கிக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில் தான் ஈழத்தில் சாதியொழிப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.  சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு இயக்கம் போன்ற அமைப்புகளும் வளர்ச்சியடைந்தன.  இவற்றில் உங்கள் பங்களிப்பு ஏதும் இருந்ததா?
எனக்கு மிகவும் கடினமான ஒரு காலமாக அது அமைந்திருந்தது.  எனது நிலை சாதியொழிப்பை ஆதரிப்பதாகவும் அது மிக அவசியமானதும் என்றே இருந்தது.  கணவரும் அதற்குப் பெரிதாகப் பிரச்சனையில்லைத்தான்.  ஆனாலும் குடும்பம், உறவுகள் என்கிற தடைகளை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது.  கே. டானியலின் கூட்டங்களில் பேசி இருக்கின்றேன்.  எனது பேச்சுகளிலும் எழுத்திலும் சாதியொழிப்பை முன்வைத்திருக்கின்றேன்.  அதேநேரம் ஒரு விடயத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்.  எனது வீட்டை ஒட்டிய இடங்களில் நிகழும் நிகழ்வுகளில் பார்வையாளராக கலந்துகொள்வேன்.  ஒருங்கிணைப்பாளர்களை ஊக்குவிப்பேன்.  ஆனால் முன்னர் சொன்ன தடைகளுக்குப் பயந்து மேடையில் பேசுவதைத் தவிர்த்துவந்தேன்.  அன்றைய சூழல் அப்படித்தான் இருந்தது.
மாவிட்டபுரம் ஆலய நுழைவுப் போராட்டம் நடந்தபோது எனது மனநிலை அதற்கு ஆதரவாக இருந்தபோது அந்தப் போராட்டத்திலும் இந்தப் பயத்தினால் நான் கலந்துகொள்ளவில்லை.  அதேநேரம், மக்களில் ஒரு சாராரை உள்ளே நுழையவிடாத ஆலயத்தில் நுழையக்கூடாது என்று முடிவெடுத்து அதற்கு முன்னரே கூட நான் ஆலயத்தில் நுழைவதில்லை என்கிற முடிவினை எடுத்திருந்தேன்.  அவ்விதமே கடைப்பிடித்தும்வந்தேன்.
  1. ஈழத்தில் சாதி ஒழிப்புத் தொடர்பாகப் படிக்கின்றபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்ற விடயம் ஏன் பெரியார் பற்றிய அறிமுகம் அந்நேரம் ஈழத்தில் நிகழவில்லை என்பது. எனது தொடர்ச்சியான தேடல்களில் ஒன்றாகவும் அது இருக்கின்றது.  பெரியார் அந்த நாட்களில் உங்களுக்கு அறிமுகமாகி இருந்தாரா?
இப்ப யோசித்துப் பார்க்க எனக்கும் ஆச்சரியமாக இருக்கின்றது.  உண்மையில் எனக்கு அப்ப பெரியார் அறிமுகமாகவே இல்லை.
  1. அந்த நேரத்தில் காந்தியச் சிந்தனைகள் இலங்கையில் பரப்புரை செய்யப்பட்டிருக்கின்றன. கம்யூனிச சிந்தனைகள் பரப்புரை செய்யப்பட்டிருக்கின்றன.  ஆனால் அவர்களை விட எமக்கு நெருக்கமாக இருந்திருக்கக் கூடிய பெரியாரிய சிந்தனைகளும் பெரியாரும் எவ்வாறு சரியான கவனம் செலுத்தப்படாது போயிருந்திருக்கக் கூடும்?
உண்மைதான்.  ஆனால் அப்போது பெரியார் எமக்கெல்லாம் அறிமுகமாகவில்லை.  இப்போது யோசிக்கின்றபோது பெண்விடுதலை, சாதியொழிப்பு, சுயமரியாதை என்று பெரியாரியலில் தான் நிறையவிடயங்கள் எனக்கு நெருக்கமாக இருக்கின்றன.  ஆனாலும் அப்போது எங்களுக்கு பெரியார் அறிமுகமாகவே இல்லை.  இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் எமக்கு அண்ணாத்துரை, கருணாநிதி போன்றவர்களின் புத்தகங்கள் கூட அங்கே கிடைத்தன.  ஆனால் பெரியாரிய சிந்தனைகள் எமக்கு அறிமுகமாகவில்லை.  கனடா வந்தபின்னரே நான் பெரியாரைக் கற்றுக்கொண்டேன்.
  1. இவற்றுடன் சேர்த்து யாழ் வாலிபர் காங்கிரசையும் பேசவேண்டியிருக்கின்றது. யாழ் வாலிபர் காங்கிரசின் இயக்கம் நீங்கள் சிறுமியாக இருந்தபோதே இருந்தது என்றாலும், அதன் தலைவர்களாக இருந்த ஆளுமைகளுடன் உங்களுக்கு அறிமுகம் இருந்ததா?
ஹன்டி பேரின்பநாயகத்துடன் நல்ல அறிமுகம் இருந்தது.  அவர் ஒரு காந்தியவாதி.  காந்திய சேவா சங்கத்தில் அவர் தலைவராக இருந்த அதேகாலப்பகுதியில் நான் அன்னை கஸ்தூரிபாய் நிலையத்தில் தலைவியாக இருந்தேன்.  அப்போது காந்திய சேவா சங்கம் கிளிநொச்சியிலும் அன்னை கஸ்தூரிபாய் நிலையம் தருமபுரத்திலும் இயங்கியது.
  1. அன்னை கஸ்தூரிபாய் நிலையம் பெண்ணிய அல்லது பெண்விடுதலைக்கான அமைப்பு அல்ல என்றே அறிகின்றேன். இலங்கையில் பெண்ணிய சிந்தனைகளை அடியொட்டியதாக அமைப்புகள் கிட்டத்தட்ட எப்ப தோற்றம் பெற்றன என்று கூற முடியுமா?
அந்த நேரத்தில் அமைப்புகளாக எதுவுமே உருவாக்கம் பெறவில்லை.  எண்பதுகளில் தான் மெல்ல மெல்ல இடம்பெற்றிருக்கலாம்.  ஆனால் பெண்கள், பெண்விடுதலை பற்றிய அக்கறைகொண்டவர்களில் சிலருக்கு தனிப்பட நட்புரீதியான அறிமுகம் இருந்தது.  உதாரணமாக புஷ்பா கிறிஸ்ரி, பத்மா சோமகாந்தன் ஆகீயோருடன் எனக்கு நட்ட தொடர்புகள் இருந்தன.  அந்த வகையில் பல்வேறு கூட்டங்களிலும் பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டு பேசுவோம்.
  1. உங்களது மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வி” என்கிற ஆய்வு நூல். பெண்கள் கல்வி ரீதியாக எப்படி ஒடுக்கப்பட்டார்கள், ஆறுமுக நாவலரின் தேசியக் கல்விக் கொள்கை எப்படி பெண்கள் மீது இன்னமும் அதிகக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியது, பெண்கள் கல்விக்கு கிறிஸ்தவ பாடசாலைகளின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை துணிச்சலாக அலசி ஆராய்ந்திருந்தீர்கள்.  அந்த ஆய்வு பற்றி எதுவும் மேலதிகமாகக் கூறமுடியுமா?
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் எனது முதுமாணி பட்டத்திற்கான ஆய்வே அந்த நூலாக வெளியானது.  அந்த நேரத்தில் முதுமானி பட்டம் அவசியம் என்று உணர்ந்தேன்.  அதேநேரம் திருமணமாகி குழந்தைகளும் இருந்தனர்.  நான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுகின்றேன், நீர் படிப்பில் கவனம் செலுத்தும் என்று கணவர் ஊக்குவித்து படிக்கத்தூண்டினார்.  மற்றும்படி எனது நீண்டகால ஆய்வு, மற்றும் தேடலின் விளைவு அந்நூல்.  அந்த வகையில் மகிழ்ச்சிதான்.
  1. பெண்ணியச் சிந்தனை தொடர்பான உரையாடல்கள் பரவலாக இடம்பெற்று, அவை அமைப்பு வடிவம் பெற்ற காலப்பகுதி என்று தொன்னூறுகளைக் குறிப்பிடலாம். இவ்வாறான முக்கியச் செயற்பாட்டாளர்களுடன் உங்கள் அறிமுகம் எவ்விதம் இருந்தது?
நல்ல அறிமுகம் இருந்தது.  பங்களிப்புகளும் செய்துள்ளேன்.  ஒருமுறை லக்சபானாவுக்கு அருகாமையிலாக இருக்கவேண்டும்; அங்கே விடுதி ஒன்றில் குழுவாக சந்தித்து நிறைய உரையாடினோம்.  செல்வி திருச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக நினைவில் இருக்கின்றது.  பெண்விடுதலையே எல்லாருக்கும் நோக்கமாக இருந்தபோதும் சிந்தனையளவில் நிறைய மாற்றங்கள் இருந்தன.  பெண்களை தனித்து, பெண்களுக்கான உலகம் என்கிறதான பார்வை சிலரிடம் காணப்பட்டது.  அப்படியில்லாமால், பெண்களும் ஆண்களும் இணைந்தே பெண்விடுதலையை சாத்தியப்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது.  அதுபோல விதவா விவாகத்தை ஆதரித்து நான் பேசியதும் பலருக்குப் பிடிக்கவில்லை.   ஆனாலும் இப்படியான ஆரோக்கியமான உரையாடல்களின் வழியேதான் பெண்ணியச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்கிற மகிழ்ச்சி உண்டு.
  1. உங்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல இடங்களில் உங்களது கணவரது ஆதரவு உங்களுக்குத் தொடர்ந்து இருந்ததைக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் குடும்பம் பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்?
கணவரைப் பற்றி கூறி இருக்கின்றேன்.  கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்.  வேலுப்பிள்ளை இராமலிங்கம் என்பது முழுப்பெயர்.  அவர் தலைமைத் தபாலதிபராகப் பணியாற்றியவர்.  எமக்கு சசிகலா, கலாவாணி, குருமோகன், துளசிராம், குபாலிகா என்று ஐந்து பிள்ளைகள்.  குருமோகனை 3 வயதிலேயே இழந்துவிட்டோம்.  குகபாலிகா தான்… (சுவரில் மாட்டப்பட்டிருக்கின்ற புகைப்படத்தை மீண்டும் பார்க்கின்றார்.  கண்கள் கலங்கி தளதளக்கின்றார்.  மேஜையில் இருந்து ஈழத்து றோசா என்கிற புத்தகத்தை எடுத்து நீட்டுகின்றார்.  நூலின் அட்டையில் சீருடை அணிந்து ஆயுதம் ஏந்தியபடி மேஜர் துளசியாக சுவரில் இருந்த புகைப்படத்தில் இருந்த அதேபெண்.)
போரினால் எமது வாழ்விடம் நிலையில்லாததானது.  பலாலி ராணுவ நகர்வுகளாலும், அவ்வப்போது ராணுவம் தான்தோன்றித்தனமாக பொதுமக்களைச் சுட்டும், விசாரணை என்ற பெயரில் வீடுகளில் புகுந்து செய்யும் அட்டகாசங்களாலும் வாரத்தில் சில நாட்கள் முதல் சில சமயங்களில் பத்து நாட்கள் வரை எமது வீடுகளை விட்டு அயற்கிராமங்களிற்குச் சென்று நிற்கவேண்டி ஏற்பட்டது.  1987 இல் மாதக்கணக்காக வெளியில் உடுவிலில் நின்றோம்.  பின்னர் அமைதிப்படையின் வருகையோடு ஒரேயடியாகத் துரத்தப்பட்டோம்.  இதெல்லாம் கூட அவள் மனதில் பாதிப்புகளைச் செய்திருக்கலாம்.  விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு போன்றவற்றில் அங்கம் வகித்த அவள், 90 ஆம் ஆண்டு காலை கடிதம் எழுதி வைத்துவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முழுமையாக இணைந்துகொண்டாள்.  தாய் எட்டடி பாய்ந்தா, பிள்ளை பதினாறு அடி பாய்ந்திட்டிது என்று ஊரில் பேசினார்கள்….
(சற்று நேரம் யோசித்துவிட்டு)
ஏழு வருட சேவை காணும், இனி இயக்கத்தை விட்டு விலகலாம் தானே என்று கேட்டபோது “இங்கே சொகுசாகவோ, சுதந்திரமாகவே, நிம்மதியாகவோ வாழுகின்றோம் என்று நினைக்காதீர்கள்.  நாமோ நம் சந்ததிகளோ இம்மூன்றையும் பெறவேண்டும் என்பதற்காக இம்மூன்றையும் துறந்துவிட்டுப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.  நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் பார்க்கின்றீர்கள்.  நான் பரந்த வட்டத்தைப் பார்க்கின்றேன்.  இப்படிப்பட்ட வித்தியாசமான வாழ்க்கை முறையில் கடந்த ஏழு வருடங்களாக வாழ்ந்து பழகிவிட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் வந்து நிற்க முடியாதுதானே” என்று பதில் எழுதினாள்.  கடைசியில் 97 இல் பெரியமடுவில் இடம்பெற்ற மோதலில் அவளும் போய்விட்டாள்.
குகபாலிகா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து சில காலத்தில் நாமும் நாட்டு நிலை காரணமாக கொழும்புக்கு வந்துவிட்டோம்.  கிட்டத்தட்ட வீட்டை விட்டு, ஊரை விட்டு, உறவுகளை விட்டு நாடோடிகள் போலத் திரிந்தே கடையில் கொழும்பில் தஞ்சமடைந்திருந்தோம்.  இவற்றால் குடும்பமே மனம் தளர்ந்திருந்த நிலையில் 91ம் ஆண்டு எனது கணவரும் காலமானார்.  அவர் இறந்து சில மாதங்களில் நான் கனடாவிற்கு வந்தேன்.  அதன் பிறகே குகாபாலிகாவின் இழப்பு.  அந்த நேரம் நாங்கள் கனடாவிற்கு வந்துவிட்டோம்.
  1. கனடாவில் வந்த ஆரம்பநாட்களில் உங்கள் பணி என்னவாக இருந்தது?
இங்கே வந்த புதிதில் South Asian Women Centre பற்றி யாரோ சொல்லி அதில் இணைந்துகொண்டேன்.   மெல்ல மெல்ல அதில் முக்கியமான பொறுப்பிற்கு வந்தேன்.  ஆரம்பத்தில் இணைச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் இருந்தேன்.  வெவ்வேறு இடங்களுக்குப் போய் பல்வேறுபட்டவர்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது.  பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் பிரசாரம் செய்தோம்.  தவிர உளவியல் ஆலோசனைகளும் வழங்கினேன்.  எனது உடல்நலம் குன்றி ஒட்சிசன் சிலிண்டருடன் திரியவேண்டி ஏற்பட்டபின்னரும், அந்த சிலிண்டருடன் போய்க்கூட பல இடங்களில் பேசி இருக்கின்றேன்.  கிட்டத்தட்ட 75 வயதுவரையும் South Asian Women Centre இல் பணியாற்றினேன்.
  1. கனடாவிற்கு வந்தபின்னர் நிறைய எழுதினீர்கள் அல்லவா? பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் உங்கள் ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவருவதை நானும் கண்டிருக்கின்றேன்
ஓமோம்.  கனடா வந்து முதலில் திருச்செல்வம் அவர்களின் வேண்டுதலில் பேசினேன்.  தமிழர் தகவலின் முதலாவது ஆண்டுவிழாவான அதில் தமிழர் தகவலின் முதல் ஆண்டில் வெளிவந்த 12 இதழ்களைப்பற்றியும் பேசினேன்.  அதிலிருந்து தொடர்ச்சியாக நிறைய இதழ்களிலும் கட்டுரைகளையும் எதிர்வினைகளையும் புனைவுகளையும் எழுதியே வருகின்றேன்.
  1. உங்களது நூல்கள் புத்தக உருவில் இலங்கையில் இருக்கின்றபோதே வெளியாகியிருந்தன அல்லவா?
இல்லை.  அனேகமானவை கனடா வந்தபின்னரே வெளியாகின.  அங்கேயிருந்து வெளிக்கிடுவதற்கு சிறிதுகாலத்திற்கு முன்னர் எனது மகள் வாணி தனது சம்பளப்பணத்தையும் தந்து உதவியதால்  “குறமகள் கதைகள்” என்கிற ஒரு புத்தகம் மட்டும் வெளியாகியது.  ஈழத்தைப் பொறுத்தவரை புத்தகங்கள் வெளியிடுவதற்கு காசு தேவைப்படுகின்றது என்பதே உண்மை.  பதிப்புத்துறை இன்னமும் ஒழுங்காக வளர்ச்சிபெறவில்லை.  பதிப்பகங்களில் இருந்து கடைகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ புத்தகங்களை விநியோகம் செய்வதற்கான சரியான முறைகள் இல்லை.  இதனால் அங்கிருந்து புத்தகங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது என்பது குறைவாகவே இருக்கின்றது.  அதற்குப் பிறகு நான் கனடா வந்தபின்னர் “உள்ளக் கமலமடி” மித்ர வெளியீடாக வந்தது.  அதன் பின்னர் விளம்பரம் வெளியீடாக “மாலை சூட்டும் நாள்”, “கூதிர்காலக் குலாவல்கள்” என்கிற இரண்டு புத்தகங்கள் வெளியாகின.  அது தவிர “இராமபாணம்” என்கிற எனது கட்டுரைத் தொகுதியும், “யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி” என்கிற ஆய்வுநூலும் கூட கனடா வந்தபின்னரே வெளியாகின. அதற்குப் பிறகு அகணிதன், மிதுனம் என்கிற இரண்டு நாவல்களும் வெளியாகின.
அதேநேரம் கனடா வந்தபின்னர் எனது எழுத்துகளில் நான் அவதானித்த இன்னொரு எதிர்விளைவும் உண்டு.  இங்கே வந்தபின்னர் ஆங்கிலத்தில் நிறைய வாசித்ததாலோ அல்லது வயதின் காரணமாகவோ தெரியவில்லை.  தமிழில் என் சொல்லாட்சி குறைந்துள்ளது.  இதனை வெளிப்படையாகவே உணரமுடிகின்றது.  எனது பழைய கட்டுரைகளை எங்கேயாவது தேடி எடுத்து வாசிக்கின்றபோது இவையெல்லாம் நானா எழுதியது என்ற பிரமிப்பே ஏற்படுகின்றது.  ஆனால் தற்போதும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கின்றேன்.  தமிழர் தகவலிலும், விளம்பரத்திலும் தொடர்ந்து எனது ஆக்கங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.
இதுதவிர நூலாக்கவேண்டும் என்று நான் எழுதிய நிறைய கட்டுரைகளை ஒரு பெரிய பெட்டியில் சேர்த்துவைத்திருந்தேன்.  அவ்வளவும் நான் எழுதிய கட்டுரைகள்.   இடையில் நான் சுகவீனமுற்று, சுயநினைவில்லாது சிலநாட்கள் இருந்தபோது அப்போது நான் இருந்த வீட்விட்டு இடமாறினேன்.  அந்தநேரம் எனது அவ்வளவு கட்டுரைகளையும் தொலைத்துவிட்டேன்.
  1. கனடாவில் நிறைய நாடகங்களில் நடித்தும் இருக்கின்றீர்கள் அல்லவா?
ஓமோம்.  நிறைய நாடகங்களில் நடித்தும் இருக்கின்றேன்.  சிலவற்றை இயக்கியும் இருக்கின்றேன்.  அண்மையில் கூட பார்வதி கந்தசாமியுடன் சேர்ந்து பத்து வருடங்களுக்கு முன்னர் செய்த நாடகம் ஒன்றினை TVI இல் ஒளிபரப்பினார்கள்.
ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்போது இலங்கையில் நாடகம் போட்ட காலத்தில் எதிர்கொண்ட சிக்கல்கள் வேறுவிதமானவை.  பெண்கள் மேடையில் பேசுவதே அபூர்வமாக இருந்த காலம் அது.  பெண் பேசுகிறார் என்பதற்காக மகிழ்ச்சி அடைவார்கள், ஆனால் விமர்சன ரீதியாகவோ ஆணாதிக்கத்தை எதிர்த்தோ பேசினால் திட்டுவார்கள், கல்வீசுவார்கள்.  இப்படியானா காலத்தில் நாடகங்களில் நடித்தால் எப்படி இருக்கும்?  இவற்றைத் தாண்டித்தான் நாடகங்களில் நடித்தோம், மேடைகளில் பேசினோம்.  இப்ப யோசிக்கின்றபோது இவற்றையெல்லாம் நானா செய்தேன், இவ்வளவு துணிச்சலுடன் இதையெல்லாம் செய்தேனா என்கிற ஆச்சரியமே தோன்றுகின்றது. இவ்வளவு காலம் போயும் இன்னமும் நிலைமை பெரியளவு முன்னேறவில்லை என்பதே உண்மை.
  1. உங்கள் காலம் மிகமுக்கியமானது. நீங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஈழத்தில் இடம்பெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களிலும் சரி; பெண் விடுதலை, பெண்ணியச் சிந்தனைகள் தொடர்பான உரையாடல்கள், செயற்பாடுகளிலும் சரி; தேசிய விடுதலைப் போராட்டத்திலும் சரி உங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளீர்கள்.  இவற்றுக்கு ஆதரவானதாகவே உங்களது சிந்தனைப்போக்கும் இருந்திருக்கின்றது.  ஆனால் இன்றைய நிலையில், குறிப்பாக ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் பார்க்கின்றபோது இந்த ஒடுக்குமுறைகள் மீண்டும் இறுக்கமடைந்திருப்பதாகவே உணரமுடிகின்றது.  நீங்கள் இதனை எவ்விதம் பார்க்கின்றீர்கள்?
ஏமாற்றமாகத்தான் இருக்கின்றது.  (நீண்டநேரம் வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றார்).  இந்த ஒடுக்குமுறையின் வடிவங்கள் இன்று கனடாவிலும் கூட இருக்கத்தான் செய்கின்றன.  ஊடகங்களில் கூட அதனை அவதானிக்க முடிகின்றது.  சில காலங்களுக்கு முன்னர் இங்கிருக்கின்ற ஒரு பத்திரிகையில் இங்கிருந்த ஆளுமை ஒருவர் எழுதிய கட்டுரையில் ஜெயலலிதாவை “விபச்சாரி” என்ற சொல்லால் குறிப்பிட்டு ஓரு கட்டுரை வெளியாகியிருந்தது.  நான் அப்போதே அதற்குப் எதிர்வினை செய்திருந்தேன்.  ஒழுக்க மதிப்பீடுகளை பெண்களுக்கே சுமத்தி வசைபாடும் வழக்கம் இருக்கவே செய்கின்றது.  ஒழுக்க மதிப்பீடுகள் என்றால் அவை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவையாக இருக்க முடியுமே தவிர பெண்ணுக்கு மாத்திரம் என்று இருக்கமுடியாது.
இலங்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்தபுதிதில் நாம் சமத்துவம் என்று சொல்லிக்கொண்டோம்.  ஆனால் மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் இருந்த எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் இங்கும் கொண்டுவந்துவிட்டோம்.  சாதிப் பாகுபாடு என்பது இங்கும் வலுவாகவே இருக்கின்றது.  புதிய தலைமுறையினர் வேற்று இனத்தவர்களைத் திருமணம் செய்வதைவிட பிற சாதிகளில் திருமணம் செய்வதை ஆதிக்கசாதித் தமிழ்மனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.  அதேநேரம் வேற்று இனத்தவர்களைத் திருமணம் செய்கின்றபோது சாதியப் பாகுபாடு அழிந்துவிடும் என்றாலும் அத்துடன் சேர்த்து தமிழ் அடையாளமும் அழிந்துவிடும் என்பதே உண்மை.
  1. உங்கள் கணவரது ஆதரவும் ஊக்குவிப்பும் உங்களுக்கு பலமாக இருந்ததாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால் குடும்பத்தினர், உறவினர் என்று அடுத்த வட்டங்களைப் பார்க்கின்றபோது அவர்கள் அதே ஆதரவுடன் இருந்திருப்பார்கள் என்று கூறமுடியாது அல்லவா?
நிறைய கண்டனங்கள், நிராகரிக்கும் பேச்சுகள் அவதூறுகள் என்று கேட்டிருக்கின்றேன்.  அதையெல்லாம் சட்டை செய்வது கிடையாது.  (தூசு தட்டுவது போல பாவனை செய்துகாட்டுகின்றார்) என்று தட்டிவிட்டு எனது வழியில் போய்க்கொண்டிருப்பேன்.  கண்டனங்களை மட்டுமல்லா பாராட்டுகளையும் கூட கடந்துசென்றுவிடுவேன்.  இப்போது நான் சொல்வது எல்லாம் எதிர்காலத்தில் நடந்தே தீரும், அப்போது இவர்கள் என்னைப் பற்றி உணர்வார்கள் என்று சமாதானம் செய்துகொள்வேன்.
  1. கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளும் கௌரவங்களும் கலைஞர்களை மேன்மைப்படுத்துவன அல்ல. அவை அந்த சமூகம் பண்பாட்டு ரீதியில் எவ்விதம் இருக்கின்றது என்பதை வெளிக்காட்டுவது.  அந்த வகையில் உங்களுக்கு ஏதாவது விருதுகள், கௌரவங்கள் வழங்கப்பட்டனவா என்று அறிவதன் மூலம் எமது சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியை அறிய விரும்புகின்றேன்?
விருதென்றால் இலக்கியப் பணிக்காக தமிழர் தகவல் விருது இரண்டு முறை கிடைத்தது.  சுயாதீன கலைத் திரைப்பட மையத்திடமிருந்து அஃகேனம் விருது கிடைத்தது.  மற்றும்படி சிந்தனைச் செல்வி, கலைச்செல்வி என்று வெவ்வேறு கூட்டங்களில் பட்டங்களைத் தருவார்கள், பொன்னாடை போர்த்துவார்கள், கௌரவித்து மாலை சூட்டுவார்கள்.  அவ்வளவுதான்! (சிரிக்கின்றார்)
  1. நீண்டகாலமாக ஈழத்திலும் சரி, புலம்பெயர் நாட்டிலும் சரி மக்களுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணி செயற்பட்டுள்ளீர்கள். எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஓங்கி ஒலித்த குரல் உங்களுடையது.  இந்த அனுபவங்களுடன் உங்கள் கரிசனங்களாக எவற்றைக் குறிப்பிட விரும்புகின்றீர்கள்?
முக்கியமாக வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்பதைக் குறிப்பிடவேண்டும்.  இளையதலைமுறையினர் அதிகம் வாசிக்கின்றனர் என்று அடிக்கடி சொல்லப்பட்டாலும் அவர்கள் வாசிப்பது எது என்று பார்க்கவேண்டும்.  அனேகம் பேர் வாசிப்பது வெறுமே பொழுதுபோக்குக்காக மாத்திரம் என்றே சொல்லத்தக்கவையே.  வாசிப்புப் பழக்கத்தைத் தூண்ட இங்கே நூலகங்களில் நிறைய திட்டங்களைச் செயற்படுத்துகின்றார்கள்.  ஆனால் எம்மவர்கள் அவற்றில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.  வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதுடன், நாம் வாசித்தவற்றை மற்றவர்களுடன் பகிரும் பழக்கத்தையும் தூண்டவேண்டும்.  அது எமது பார்வையை விசாலப்படுத்துவதுடன் பிறரையும் வாசிக்கத் தூண்டும்.
ஒரு பதிவாக, உரையாடலாக, உங்களைப் பற்றி அறிய விரும்பினோம்.  உங்களைப் பற்றி அறிவது என்பதற்கு மேலதிகமாக எமது சமூகத்தில் 75 ஆண்டுகளாக ஏதோ ஒரு வகையில் பண்பாட்டு ரீதியாகப் பங்களித்துக்கொண்டிருக்கின்ற ஒருவரது அனுபவத்தின் சாரமாக எம்மால் நிறைய அறிய முடிந்தது.  இத்தனை உறுதியுடனும், ஆழமாகவும் பல்வேறு துறைகளிலும் பங்காற்றிய உங்களுடனான இந்தச் சந்திப்பு உங்களைப் பற்றிய கையில் அள்ளிய கடல் மாத்திரமே!  நன்றி

  1. இந்நேர்காணல் மார்ச் 2016 தாய்வீட்டின் “அனைத்துலகப் பெண்கள் நாள் சிறப்புப் பகுதிக்காக எடுக்கப்பட்டது.
  2. இப்புகைப்படம் இந்நேர்காணலுக்காக பிரத்தியேகமாக புகைப்படக் கலைஞர் ஓவியர் கருணா அவர்களால் எடுக்கப்பட்டது.  அவருக்கு நன்றி.