மாயமாகிய மலேஷிய விமானம் : இன்றுடன் (08/03/2016) இரண்டு வருடங்கள் பூர்த்தி
'@' குறியீட்டை கண்டுபிடித்த டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் காலமானார்
இ-மெயிலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா.? அய்யாதுரை ஆதங்கம்
பேஸ்புக் குறை கண்டு பிடித்தவருக்கு 22 இலட்சம் பரிசு (வீடியோ)
ஆடைகளை களைந்து வீதியில் பெண்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு )
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரான் இரு புதிய ஏவுகணைகளை ஏவி பரிசோதிப்பு
மாயமாகிய மலேஷிய விமானம் : இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி
08/03/2016 மலேஷியா கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து சீனாவின் பீஜீங் விமான நிலையம் நோக்கி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த MH370 விமானம் ரேடார் கட்டமைப்பிலிருந்து காணாமல் போய் இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் பயணித்த MH370 பயணிகள் விமானமே காணாமல் போயிருந்தது.
இந்த விமானம் காணாமல்போன முதல் பல நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், விமானம் தொடர்பில் உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்தோர் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என மலேஷியா அறிவித்திருந்தது.
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சில பாகங்கள் அண்மையில் ஆப்ரிக்கா மொசம்பிக் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
'@' குறியீட்டை கண்டுபிடித்த டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் காலமானார்
07/03/2016 மின்னஞ்சல் முகவரிகளுக்கான '@' குறியீட்டை கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார்.
அமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து இருந்து இன்னொரு கணினிக்குக் கடிதங்களை அனுப்பும் முறையை 1971ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.
பின்னர் @ குறியீட்டுடன், தொலைவிலுள்ள ஏனைய கணினிகளுக்கு அந்தத் தகவல்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார்.
இன்று மின்னஞ்சல்; என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.
அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கூகுளின் 'ஜிமெயில்' குழுமமும் ரே டொம்லின்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
இ-மெயிலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா.? அய்யாதுரை ஆதங்கம்
09/03/2016 இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன. ஆனால் அந்த அங்கீகாரம், கவுரவம் தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார்.
இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவ காரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய 14வது வயதில் மின்னஞ்சலுக்கான மென் பொருளை உருவாக்கினேன். அதற்கு இ-மெயில் என்று பெயர் சூட்டினேன். அதற்கு முன்பு ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் நேரடி இணைப்பின் மூலம் தகவல் அனுப்பும் சேவை இருந்தது. அதில் வெறும் வார்த்தை களை (டெக்ஸ்ட் மெசேஜ்) மட்டுமே அனுப்ப முடியும். அதைதான் ரேமண்ட் கண்டுபிடித்தார்.
நான்தான் முதன்முதலில் கணினி மூலம் தகவல்களை அனுப்பும் மென்பொருளை உருவாக்கினேன். நான் கண்டுபிடித்த இ-மெயில், டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. இ-மெயிலில் உள்ள இன் பாக்ஸ், அவுட்பாக்ஸ், சிசி, பிசிசி, டேட்டா, பார்வர்டு, ரீப்ளை உட்பட அனைத்தையும் நான்தான் உருவாக்கினேன். அதற்கான காப் புரிமையை 1982-ல் பெற்றேன்.
ஆனால் எனக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. அதற்கு காரணம் நான் இந்தியன், கருப்பு நிறத்தவன், புலம் பெயர்ந்தவன். இன்று சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது உண்மை, நீதியின் தினம். உண்மைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அய்யாதுரைக்கு ஆதரவாக பலர் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
சிவா அய்யாதுரையின் தந்தை ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர். தாயார் மீனாட்சி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர். நன்றி வீரகேசரி
பேஸ்புக் குறை கண்டு பிடித்தவருக்கு 22 இலட்சம் பரிசு (வீடியோ)
09/03/2016 சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற ஹேக்கருக்கு ரூ.22 இலட்சம் பரிசு வழங்க பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் பிற கணினிகளில் அனுமதியில்லாமல் நுழையும் ஒரு ஹேக்கர்.
இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.
பேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.
பேஸ்புக்கின் இந்த குறையை ஆனந்த் பிரகாஷ் பேஸ்புக் நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது பேஸ்புக் இருந்த குறையை சரி செய்துள்ளது. நன்றி வீரகேசரி
ஆடைகளை களைந்து வீதியில் பெண்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு )
10/03/2016 பெண்கள் உரிமைகள்,வீடு வன்முறை,கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் பல முன்னிலைப்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச மகளிர் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தென் அமெரிக்கா முழுவதும் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
சர்வதேச மகளிர் தினம் உலகளாவில் கொண்டாடப்படும் தினம் என்பதால் பிரேசில், சிலி, அர்ஜென்டீனா, கோஸ்டா ரிகா, வெனிசுலா பிரதேசங்களில் தமது உரிமைகளைகோரி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டன.
இவ் ஆர்ப்பாட்டத்தில் பல பெண்கள் தங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் எழுதப்பட்ட சுலோகங்கள் பயன்படுத்தி கலந்துக்கொண்டனர்.
http://video.dailymail.co.uk/video/mol/2016/03/09/1668516226993012489/640x360_1668516226993012489.mp4
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரான் இரு புதிய ஏவுகணைகளை ஏவி பரிசோதிப்பு
10/03/2016 ஈரானானது இரு புதிய ஏவுகணைகளை புதன்கிழமை ஏவியதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
அமெரிக்காவிடமிருந்து புதிதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நீண்ட தூரம் பயணிக்கும் வல்லமையைக் கொண்ட காடர்-–எச் மற்றும் காடர்- –எப் ஆகிய ஏவுகணைகளை ஈரான் ஏவிப் பரிசோதித்துள் ளது.
வட ஈரானிலிருந்து தென் கிழக்கு பிராந்தியத்திலுள்ள இலக்குகளை சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் ஏவிப் பரிசோதிக்கப்பட்டன.
மேற்படி ஏவுகணைகளானது 1400 மைலுக்கும் அதிகமான தூரம் பயணித்து உரிய இலக்கைச் சென்று தாக்கக் கூடியவையாகும். இதையொத்த ஏவுகணைகளை ஏவும் பரிசோதனை நடவடிக்கைகள் முதல்நாள் செவ்வாய்க்கிழமையும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்து அந்நாட்டு புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த பிரதித் தலைவர் ஜெனரல் ஹொஸைன் சலாமி தெரிவிக்கையில், “ஈரானின் ஏவுகணைப் பரிசோதனைகளானது அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஆதரவையும் அதிகாரத்தையும் பெற்றுத் தரும் என்று கூறினார்.
தமது நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு எந்நேரத்திலும் பதிலடி கொடுக்கத் தயாராக பெருமளவு ஏவுகணைகளின் கையிருப்பு தம்மிடமுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு முன்னர் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனைகளுக்காக அந் நாட்டின் மீது அமெரிக்கா ஒரு தொகை தடைகளை கடந்த ஜனவரி மாதம் விதித் திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி