.
மெல்பனில் கடந்தவாரம் நடந்த அனைத்துலகப்பெண்கள் தினவிழாவில் இடம்பெற்ற
நினைவரங்கில் திருமதி அருண்.விஜயராணிக்காக நிகழ்த்தப்பட்ட நினைவுரை.
அகில உலக பெண்கள் தின விழாவை ஏற்பாடு செய்துள்ள அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கும் இந்த அமைப்பின் தலைவர் , விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.
அருண். விஜயராணி அவர்களின் திருமண நிறைவு வெள்ளிவிழாக்காலத்தில் வாழ்த்திப்பேசியிருக்கும் நான், எதிர்பாரதவிதமாக இன்று அவருக்கான நினைவுரையை சமர்ப்பிக்க வந்துள்ளதை நினைக்கும்பொழுது மனதில் ஆழ்ந்த துயரம் வருகிறது.
இந்த பூவுலகிற்கு வந்தவர்கள் அனைவரும் என்றாவது ஒரு நாள் விடைபெறவேண்டும் என்பதுதான் வாழ்வின் விதியாகும். ஆனால், குறைந்த வயதில் எமக்கு நான்கு தெரிந்தவர்,
நெருக்கமாக உறவாடியவர் பிரியும்பொழுது அந்தத்துயரை எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை.
என்றாலும் அத்தகைய ஒருவரினால் ஏற்பட்டுவிடும் வெற்றிடம் என்றும் வெற்றிடமாகத்தான் இருக்கவேண்டுமா.... ? என்பதற்காகத்தான் நினைவு நிகழ்ச்சிகள், அஞ்சலிப் பிரார்த்தனைகள் எம்மக்கள் மத்தியில் நடக்கின்றன.
ஒருவரினால் ஏற்படும் வெற்றிடத்தை பல வழிகளில் நாம் நிரப்ப முடியும். அதற்கு முன்னர் மறைந்தவரின் சமூகப்பயன்பாடு பற்றி நாம் ஆழ்ந்து பார்க்கவேண்டும்.
மறைந்த திருமதி அருண். விஜயராணி அவர்கள்,
ஒரு குடும்பத்தலைவி மாத்திரமல்ல. எழுத்தாளர்,
வானொலி நிகழ்ச்சி உரையாளர்,
சமூகப்பணியாளர், இதழ் ஆசிரியர்,
இரண்டு அல்லது மூன்று தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவர். அத்துடன் அவற்றில் பொறுப்பான பதவிகளிலும் அமர்ந்திருந்தவர்.
இன்று அவருக்காகவும் நினைவுரை நடத்த ஒழுங்குசெய்துள்ள அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திலும் அவர் அங்கம் வகித்து சில ஆண்டுகள் தலைவராகவும் இருந்தவர். அத்துடன் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தொண்டு அமைப்பிலும் அங்கம் வகித்து தலைவராக இருந்து அதன் வெள்ளிவிழாவையும் கண்டு களித்தவர்.
இவை இரண்டுக்கும் அப்பால் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலிய முரசு இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்த அமைப்புகளின் பல விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உற்றதுணையாக விளங்கியிருக்கிறார்.
இவையாவும் தமிழ் சமூகம் சார்ந்த பணியென்றால், மறுபக்கத்தில் தனது ஆன்மீக சிந்தனையையும் வளர்த்துக்கொண்டு சாயி பக்தராகவும் வாழ்ந்தவர்.
அருண். விஜயராணியின் மறைவையடுத்து வெளியான தகவல் கட்டுரைகள், கவிதைகள், ஒலிபரப்பான வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் அவரது மறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விஜயதாரகை மற்றும் கல்வெட்டு என அழைக்கப்படும் நினைவு மலர் முதலானவற்றில் அருண். விஜயராணியின் வாழ்க்கை எத்தகையது அவர் மேற்கொண்ட பணிகள் எவ்வளவு பெறுமதியானது என்பதை நாமெல்லோரும் அறிந்துகொண்டுள்ளோம்.
இதிலிருந்து அவரால் ஏற்பட்டுள்ள பெரிய வெற்றிடம்தான் எம்மை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
அவரது நினைவாக நாம் என்ன செய்யப்போகின்றோம்..... ?
அவரால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம்தான். ஆனாலும் எம்மால் முடிந்ததை நாம் செய்யமுடியும். அவ்வாறு செய்தால்தான் நாம் நடத்துகின்ற நினைவரங்குகள் பூரண அர்த்தம் பெறும் என நம்புகின்றேன்.
நாம் அவுஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிய எழுத்தாளரை இழந்துள்ளோம்.
ஒரு சமூகப்பணியாளரை இழந்திருக்கின்றோம்.
ஒரு குடும்ப சிநேகிதியை இழந்துள்ளோம்.
இவற்றுக்கும் மேலாக அவரால் அவர் ஆழமாக நேசித்த குடும்பத்தில் மிகப்பெரிய வெற்றிடம் தோன்றியுள்ளது. அவருடைய குடும்பத்தினர் என்றும் --- ஏன் தினம் தினம், கணங்கள்தோறும் அவரை நினைத்து தம்மைத்தாமே தேற்றிக்கொள்வார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஆனால் , அவருடன் இணைந்து சமூகப்பணியாற்றியவர்கள்,
மற்றும் அவருடைய இலக்கியம் சென்ற திசையில் பயணித்தவர்கள், அவருடைய வானொலி நிகழ்ச்சிகளில் லயித்திருந்தவர்கள் அனைவருக்கும் அவருடைய நினைவாக ஆற்றவேண்டிய பல கடமைகள் இருப்பதாகவே கருதுகின்றோம்.
விஜயராணியின் சிறுகதைகள் எமது வாழ்வை பிரதிபலித்தவை. முக்கியமாக புகலிட வாழ்வின் கோலங்களை சித்திரித்திருப்பவை.
வானொலி நிகழ்ச்சிகளில் திரை இசைப்பாடல்களில் இழையோடியிருக்கும் பாசம், கருணை,
நம்பிக்கை, மனிதப்பெறுமதி, வாழ்வின் தத்துவம் யாவற்றையும் நேயர்களுக்கு இலகு தமிழில் பொழிப்புரையாக வழங்கியவர்.
ஒரு பொறுப்புவாய்ந்த எழுத்தாளரின் சமூகக் கடமைகளை அவர் ஆற்றியிருக்கிறார். ஆனால், அதனைத் தொடரவிடாமல் காலன் தன்னுடன் அழைத்துச்
சென்றுவிட்டான்.
அருண். விஜயராணி இயல்பிலேயே கருணை வடிவானவர். துன்பப்படுபவர்கள் பக்கம் நின்றவர்.
அதனை அவர் எழுதியிருக்கும் கதைகளிலும் அவர் சில இதழ்களுக்கு வழங்கியிருக்கும் நேர்காணல்களிலும் பார்க்கமுடிகிறது.
அவரது கதைகள் உலகத்திற்கே பொதுவானவை. பெண்களின் உரிமைகள்,
பெண்களிற்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளின் நலன்கள் என்பனவற்றை அழுத்தமாகப்பேசியவை.
இலங்கையில் மலையகத்தில் காலம் காலமாக அல்லல்படும் தோட்டத்
தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியின் எதிர்காலம் பற்றியும் கேள்வி எழுப்பி கதை எழுதியவர்.
அத்துடன் புகலிடத்தில் வஞ்சிக்கப்படும் பெண்பேதைகளின் உள்ளக் குமுறல்களையும் இலக்கியமாக்கியவர். இத்தகைய அவருடைய எழுத்து முயற்சிகள் உலகத்திற்கே பொதுவான கருப்பொருட்கள் அல்லவா....?
அதனால்தான் அவருடைய மறைவு பெரிய வெற்றிடத்தை எம்மிடம் தோற்றுவித்துள்ளது.
அவர் விட்டுச்சென்ற பணிகளை ஒவ்வொருவரும் தத்தம் அளவிலாவது தொடர்வதன்மூலம் அவருடைய ஆத்மா சாந்தியடையும் என நம்புகின்றேன்.
எனக்கு இச்சந்தர்ப்பத்தை வழங்கிய அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
----0---