அஞ்சலிக்குறிப்பு - புன்னியாமீன் என்ற புண்ணியவான் - முருகபூபதி

.
புன்னியாமீன்  என்ற  புண்ணியவான்  அயராமல் மேற்கொண்ட ஆவணப்பணிகள்புறக்கணிப்புகளுக்கு  மத்தியிலும்   சோர்வடையாமல் இயங்கிய   பேராளுமை
  

கடந்த  சில  ஆண்டுகளாகவே  பல  ஆளுமைகள்  எம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டிருக்கும்   துயரம்  கப்பிய  காலத்தை  நாம் கடந்துகொண்டிருக்கின்றோம்.
அண்மைக்காலத்தில்  யாழ்ப்பாணத்தில்  பாடலாசிரியர்  கமலநாதன், நாடகக்கலைஞர்  அரசையா,  ஊடகவியலாளர்கள்  சிவராஜா  கேசவன், நவரட்ணராஜா,   அவுஸ்திரேலியாவில்  அருண். விஜயராணி என்ற வரிசையில் கடந்த 10 ஆம் திகதி  கண்டியில்  கலாபூஷணம் பி.எம். புன்னியாமீன்    அவர்களும்  விடைபெற்றுவிட்டார்.
அன்னாரின்  ஜனாசா அன்றையதினமே  இலங்கை  நேரப்படி  இரவு 8   மணிக்கு  அடக்கம்  செய்யப்பட்டது.
புன்னியாமீன்  அவர்களின்  மருமகனுடன்  உரையாடி  ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துவிடடே  இந்த  அஞ்சலிக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன்.



------------
பொதுவாழ்க்கையில்   சுயநலம்  பார்க்காமல்  அர்ப்பணிப்புடன் இயங்குபவர்களுக்கு   சோதனைகளும்  வேதனைகளும்தான் தொடர்ச்சியான  சன்மானமாக  கிடைத்துவந்திருக்கிறது.
அத்தகையோர்  விருட்சங்களை   நடுவதற்கு,  விதைகளை  நட்டு உழைப்பு  நீர்  பாய்ச்சி  வளர்த்துவிட்டால்,  அதன்  கிளையில்  ஏறி ஒய்யாரமாக   அமர்ந்து  அடிமரம்  வெட்டுவதற்கும்  பலர் இருக்கிறார்கள்.
குருவி   சிறுகச் சிறுக  குச்சிகளை   சேகரித்து  மரத்தில்  கூடுகட்டினால்,  அதன்  உழைப்புத்தெரியாமல்  கல்லெறிந்து கூட்டைக்கலைத்தாலும்  - குருவி  பிறிதொரு  மரம்  ஏறி  புதிய  கூடு கட்டி  தனது  குஞ்சுகளை  பராமரிக்கும்.
-------------------------


கண்டி  உடதலவின்னவில் எம்மைவிட்டுப்பிரிந்த   இனிய  நண்பர்  கலாபூஷணம்  புன்னியாமீன்    உடல் ரீதியாகவும்  உளரீதியாகவும் இனிமையானவர்தான்.   இறுதிவரையில்  இனிப்புத்தான்  அவருடன் இணைந்திருந்து  விடுதலைகொடுத்து  அனுப்பியிருக்கிறது.
நீரிழிவு உபாதையினால்  பாதிப்புற்று  54  வயது  நிறைவுபெறுவதற்கு முன்பே  விடைபெற்றுவிட்டார்.  இவருடைய  பெயர்   பீர்முகம்மது  புன்னியாமீன்.   அதனைச்சுருக்கி  பீ.எம். புன்னியாமீன்   என்று எழுத்துலகில்   பதிவுசெய்துகொண்டவர்.  1960  ஆம்  ஆண்டு  கண்டி கட்டுக்கஸ்தோட்ட   பிரதேசத்தில்   உடதலவின்ன    என்ற கிராமத்தில் பிறந்தவர்.
இந்த   ஊருக்கு  ஒருநாள்  வரவேண்டும்  என்று  அவருடன் தொலைபேசியில்   உரையாடிய  சந்தர்ப்பங்களில்  பேசியிருக்கின்றேன்.   ஆனால்,  அதற்கான  சந்தர்ப்பமும்  நேரமும் எனக்கு   கிட்டாமலேயே  போய்விட்டது.
அவருடைய  வாழ்க்கைத்துணைவியார்  மஸீதா  அவர்களும்  அவருடைய   அயராத  பணிகளில்  உற்றதுணையாக  இருந்தவர்.
நண்பர்   புன்னியாமீன்  ஏன்  எமது  தமிழ் சமூகத்திற்கு  முக்கியமானவர் ?   இதுபற்றிச் சொல்வதற்கு  முன்னர்  சுமார்  33 ஆண்டுகளுக்கு  முன்னர்  என்ன  நடந்தது  என்பதை  பின்னோக்கி பார்க்கின்றேன்.
1983  ஆம்  ஆண்டு  முற்பகுதியில்  எமது  இலங்கை   முற்போக்கு எழுத்தாளர்  சங்கம்,  கொழும்பில்  நடத்திய  பாரதி  நூற்றாண்டு விழாவில்   இலங்கை   எழுத்தாளர்கள்  பற்றிய   குறிப்புகள்  அடங்கிய  ஒளிப்படக்கண்காட்சியும்   நடத்தினோம்.   பம்பலப்பிட்டி  சரஸ்வதி மண்டபத்தில்   நடந்தது.
பின்னர்   அதனை  அதே   காலப்பகுதியில்  கல்முனையிலும் மட்டக்களப்பிலும்  நடத்தியிருந்தோம்.
கொழும்பில்   நடந்தபொழுது  அச்சமயம்  எதிர்க்கட்சித்தலைவராக இருந்த  அமிர்தலிங்கமும்  சபாநாயகர்  பக்கீர்மாக்காரும்  அவருடைய  செயலாளர்   அஸ்வரும்  ( பின்னாளில்  அமைச்சரானவர்)   நீதிபதி  அப்துல்காதரும்  வருகைதந்து பாராட்டியதுடன்   அதன்  பின்னாலிருந்த  கடும்  உழைப்பையும் மெச்சினார்கள்.


தவறவிடப்பட்டவர்களின்   படங்கள்  மற்றும்  அவர்தம் விபரங்களையும்   சேகரித்து  ஆவணப்படுத்துமாறு   அமிர்தலிங்கம் சொல்லிச்சென்றார்.
ஆனால்,  அந்த  ஆண்டு  ஆடி  மாதம்  நிகழ்ந்த  வன்செயலில் அனைத்தையும்  நாம்  இழந்தோம்.
என்வசம்   எழுத்தாளர்களின்  பெயர் -  விபரங்கள் -  அவர்கள்  எழுதிய நூல்களின்   விபரம் -  விசேட  குறிப்புகள்  பூரணப்படுத்தப்பட்ட படிவங்கள்   அடங்கியிருந்த  பெரிய  கோவை   (File ) மாத்திரமே எஞ்சியிருந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு  புறப்படும்  தருணத்தில்  அதனை   நண்பர் தெளிவத்தை   ஜோசப்பிடம்  ஒப்படைத்துவிட்டேன்.
தகவல்   திரட்டும்  பணிக்காக  நாம்  செலவிட்ட  நேரம்  அதிகம். அவற்றையெல்லாம்   வெள்ளை  அட்டையில்  அழகான  எழுத்தில் பதிவுசெய்து  காட்சிக்கு  வைப்பதற்குப்பின்னாலிருந்த  உழைப்பின் பெறுமதியை   கணிக்கமுடியாது.
ஆனால்,  தீய சக்திகள்  கலவரத்தில்   சில  நிமிட  நேரத்தில் அவற்றையெல்லாம்  தீயிட்டு  துவம்சம்  செய்துவிட்டன.
------------
கண்டியில்  உடத்தலவின்ன    கிராமத்திலிருந்துகொண்டு சிந்தனைவட்டம்  என்ற   தன்னார்வ  அமைப்பை  உருவாக்கி இலங்கை   தமிழ், முஸ்லிம்  எழுத்தாளர்களின்    விபரங்களையும் தாயகம்  விட்டு  புலம்பெயர்ந்துசென்ற  எழுத்தாளர்களைப்பற்றியும் பகுதி   பகுதியாக  நூல்களில்  தொகுத்து  வெளியிட்ட  புன்னியாமீன் என்ற   புண்ணியவானின்  பணிகள்,  இலங்கை  தமிழ் -  முஸ்லிம் சமூகத்திற்கு   எத்தகைய  பயனைத்தந்திருக்கிறது  என்பது  அந்த ஆவணங்களை   பயன்படுத்தியவர்களுக்கு  நன்கு  தெரியும்.
இலங்கை  எழுத்தாளர்கள்,   ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டு  என்ற  வரிசையில்  புன்னியாமீன்  பல  தொகுதிகளை எமக்காக   விட்டுச்சென்றுள்ளார்.
அரசாங்கத்தின்  உதவியை  நம்பி  இந்த  அரியபணியை  அவர் தொடரவில்லை.   எனினும்  சிலரது  ஆலோசனைப்பிரகாரம்  இதன் பாகங்களை  வெளியிடுவதற்காக , இலங்கை  தேசிய  நூலக ஆவணவாக்கல்  சேவைகள்  சபைக்கு  அனுப்பிவைத்தார்.

ஆனால்,   வந்த  பதில்  என்ன  தெரியுமா ?
A Poor quality work ( தரக்குறைவான  வேலை )
தமது  விண்ணப்பத்திற்கு  என்ன  பதில்  வந்தது  என்பதை  ஆதாரம் காண்பித்து   விரிவான  முன்னுரையுடன்  இலங்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள்   விபரத்திரட்டின் எட்டாவது தொகுதியை  2007 இல்  வெளியிட்டிருந்தார்.

அவர்  பல்கலைக்கழகப்பட்டதாரி.  ஆசிரியராகப் பணியாற்றியவர். மத்திய  மாகாண  சபையின்  கல்வி  கலாசார  அமைச்சின் இணைப்பதிகாரியாகவும்  உதவிப்பணிப்பாளராகவும்  பணியாற்றிய காலத்தில்  ஏனைய  அதிகாரிகள்  போன்று  ஆசனத்தை சூடாக்கிவிட்டுச்செல்லாமல்,   பல  ஆக்கபூர்வமான  செயற்பாடுகளை முன்னெடுத்தவர்.   இச்சந்தர்ப்பத்தில்  ஒரு  தகவலையும் குறிப்பிடவேண்டும்.

பல   வருடங்களுக்கு  முன்னர்  யாழ்ப்பாணத்தில்  மாநாகராட்சியின் நிர்வாகத்தினால்  மூத்த  எழுத்தாளர்  .செ. முருகானந்தனின்  மனித மாடுகள்   என்ற   கதைத்தொகுதி  வெளியிடப்பட்டது.   அதன் அறிமுகவிழாவும்  சம்பிரதாய  சடங்காக  நடந்தேறியது.
ஆனால்,  அச்சிடப்பட்ட  நூலின்  பிரதிகள்  விநியோகத்திற்கு உரியமுறையில்   செல்லாமல்,  நிருவாகச்சீர்கேட்டால் போர்க்காலத்தில்   அழிந்து  போய்விட்டது.    இதுபற்றி முன்பொருதடவை   செங்கை ஆழியான்   மிகுந்த   வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்.
அதிகாரிகள்  மட்டத்தில்  இருப்பவர்களின்  பொறுப்பற்ற செயல்களினால்  இவ்வாறு  எத்தனையோ   சேதாரங்கள் நடந்திருக்கின்றன.   ஆனால்,  எவ்வாறோ  மூடிமறைக்கப்பட்டுவிடும்.
அதனால்தான்   " சில  பெறுப்புள்ள  மனிதர்களின்  தூக்கத்தினால்  பல பொன்னான   வேலையெல்லாம்    துங்குதப்பா  " என்று பட்டுக்கோட்டை   கல்யாணசுந்தரம்  எழுதினார்:


புன்னியாமீன்  இலங்கை  தேசிய  நூலக  ஆவணவாக்கல்  சேவைகள் சபையின்  புறக்கணிப்பையும்  பொருட்படுத்தாமல்  தொடர்ந்து நூல்களை   தொகுத்து  எமது  தமிழ்சமூகத்திற்கு  வரவாக்கினார்.
அவர்   ஆசிரியராக,   இலக்கியவாதியாக,   பத்திரிகையாளராக, ஆய்வாளராக,   பதிப்பாளராக,  அரச  அதிகாரியாக,   கல்வி  சார்ந்த பொது  அறிவு  நூல்களையும்  பாட  வழிகாட்டி  நூல்களையும் எழுதிவெளியிட்டவராக    பன்முக  ஆளுமையுடன்  அயர்ச்சியின்றி இயங்கியவர்.
புன்னியாமீன்  எழுதிய  நூல்கள்,   பதிப்பித்தவை,  தொகுத்தவை என்பனவற்றின்    பட்டியலே  நீளமானது.
புன்னியாமீன்,    விபரத்திரட்டுகளை   தொகுக்கும்பொழுது படிமுறையொன்றை   பின்பற்றிவந்தவர்.
அவருடைய   ஆய்வுப்படிமுறையை  பாருங்கள்:
எழுத்தாளர்கள் - ஊடகவியலாளர்கள் - கலைஞர்கள்.
எழுத்தாளர்கள்:  இலக்கியவாதிகள்.
இலக்கியவாதிகளின்  துறைகள்:   படைப்பிலக்கியம் - கட்டுரை.
ஊடகவியலாளர்கள்:    செய்திப்பத்திரிகை - சஞ்சிகை - இலத்திரனவியல் ஊடகம்
செய்திப்பத்திரிகை: - ஆசிரியர்கள்,  செய்தி ஆசிரியர்கள், ஒளிப்படப்பிடிப்பாளர்கள்,  ஏனையவை.
சஞ்சிகை:   ஆசிரியர்கள்,    செய்தியாளர்கள்,    செய்திக்கட்டுரையாளர்கள்,   ஏனையவை.
கலைஞர்கள்
ஓவியம்,  நாடகம்,   திரைப்படம்,   ஏனையவை.
இவ்வாறு   ஒவ்வொரு  துறையிலும்  ஈடுபட்டவர்கள்  பற்றிய விபரங்களை  தொடர்ச்சியான  தொடர்புகளை  மேற்கொண்டு சேகரித்து   பதிவுசெய்திருக்கும்  புன்னியாமீன்,  அத்துடன்  நில்லாமல் உலகெங்கும்  வாழும்  தமிழ்  மக்களின்  தேவையின்  பொருட்டு தமிழ்  விக்கிபீடியாவிலும்   பதிவேற்றியிருக்கிறார்.
புன்னியாமீன்   அவர்களின்  தன்னலமற்ற  சேவைகளுக்காக பலதடவைகள்  பாராட்டி  விருதுகள்  வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளார்.   இவருடைய  சேவை  கடல் கடந்தும் பேசப்பட்டிருக்கிறது.
-----------
இவர்   மறைவு  பற்றி  லண்டனிலிருந்து  நண்பர்  நூலகர்  செல்வராஜா  தகவல்  அனுப்பியதும்,   சில  இணைய  இதழ்களுக்கு இந்ததுயரச்செய்தியை  பகிர்ந்துகொண்டேன்.
நூலகர்   செல்வராஜாவின்  பணிகளுக்கும்  புன்னியாமீன் உற்றதுணையாக  விளங்கியவர்.  செல்வராஜாவுக்கு  புன்னியாமீனின் மறைவு   பாரிய  இழப்பு  என்றுதான்  கருதுகின்றேன்.
இருவரும்  இணைபிரியாமல்  இணைந்திருந்து  எமது  சமூகத்திற்கு பயன்பட்டவர்கள்.
நூலகர்   செல்வராஜா  அவர்கள்  புன்னியாமீன்  பற்றி  முன்னர் எழுதியிருக்கும்  ஒரு  குறிப்பில்,  "  எம்மவரது  பணிகள்  வரலாற்றில் அழியாது   நினைவுகூரப்பட  இவர்  ஆற்றியுள்ள  சுயநலநோக்கற்ற உதவி   எம்மவரால்  மறக்கப்படக்கூடாததாகும்.   எதிர்காலத்தில் பீ.எம். புன்னியாமீன்  அவர்களது  பெயரை  அவர்  நல்நோக்கத்துடன் வெளியிட்டுவரும்  இவ்வாவணங்கள்  தமிழ்படைப்புலக  வரலாற்றில் அழிக்கப்பட முடியாதவாறு  பொறித்துவைக்கும்  என்பதில்  எவ்வித சந்தேகமுமில்லை."
நண்பர்  புன்னியாமீன்  பற்றி  அவுஸ்திரேலியா   மெல்பனிலிருந்து   வெளியான  உதயம்   இதழில் 2007 ஆம்  ஆண்டு  பின்வரும் குறிப்புகளை  எழுதியிருந்தேன்.
ஒருபக்க  கடிதம்  எழுதுவதற்கே  சோம்பல்பட்டுக்கொண்டிருக்கும் எம்மவர்களுக்கு  மத்தியில்  அதுவும் -  இலங்கையில்  ஒரு  மனிதர் நூறுக்கும்   மேல்  புத்தகங்கள்  எழுதியிருக்கின்றார்  என்றால் இத்தகவல்  அதிசயம்  மாத்திரமல்ல  உண்மையும்தான்."
புன்னியாமீன்  என்ற  புண்ணியவாளன்  ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை   நிரப்புவதற்கு  ஆட்களைத் தேடாமல்,  இத்துறையில் ஆர்வமுள்ளவர்கள்  தம்பங்கிற்கு  ஏதாவது  உருப்படியாகச் செய்தலே புன்னியாமீனுக்கு  செய்யும்  மிகச்சிறந்த  அஞ்சலியாக  இருக்கும்.
----0----