ஊடகவியலாளர் நவரட்ணராஜா காலமானார்
பாக். ஜனாதிபதி இலங்கை வந்தார்
தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கை வந்தார்
யோஷிதவின் பிணை மனு : மார்ச் 14இல் இறுதி முடிவு
வீட்டு வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கறுப்பு ஆடை அணிந்து பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
துபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற சாஞ்சிமலை தோட்ட பெண் மரணம்
மூழ்கிய மதஸ்தலங்கள் மீண்டும் வெளியில்
காணாமல்போனோரின் உறவுகள் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு : வங்கிக் கணக்குகள் முடக்கம்
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் விமான நிலையத்தில் கைது
ஹட்செசன்- சம்பந்தன் பேச்சுவார்த்தை
அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து 300 க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரின் பாரியார் காலமானார்
பஷில், திவிநெகும திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை
யோஷித்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
ஊடகவியலாளர் நவரட்ணராஜா காலமானார்
08/03/2016 மூத்த ஊடகவியலாளர் நாகராசா நவரட்ணராஜா (நவம் ஜி.எஸ்.) யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
வீரகேசரி இணையத்தளம் மற்றும் பத்திரிகையின் யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேச ஊடகவியலாளராக இவர் இறக்கும் வரை கடமையாற்றியிருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இவரின் கால் முறிவடைந்திருந்த நிலையில், அவர் எழுந்து நடக்க முடியாமல் இருந்த இவருக்கு, இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். நன்றி வீரகேசரி
பாக். ஜனாதிபதி இலங்கை வந்தார்
08/03/2016 பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹுசைன் இன்று பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதியுடன், அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் 12பேர் வருகை தந்துள்ளனர்.
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கை வந்தார்
08/03/2016 தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சொம்கிட் ஜட்டுஸ்ரிபிடக் இன்று காலை 11 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இவருடன், அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் 20 பேர் வருகை தந்துள்ளனர்.
இதன்போது, இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
யோஷிதவின் பிணை மனு : மார்ச் 14இல் இறுதி முடிவு
08/03/2016 சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோஷித ராஜபக்ஷ மற்றும் ஏனைய நால்வர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுத் தொடர்பான இறுதி முடிவு, மார்ச் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
வீட்டு வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
08/03/2016 தொழிலாளர்களின் நலனை முன்னிட்டு பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனம், வீட்டு வேலை தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் ஆகியன இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.
இவ்வார்ப்பாட்டம் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றதுடன் இதில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுவேலை புரியும் தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் “நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் ” , “அரச தோட்ட தொழிலாளர்களுக்கு 25 நாட்கள் வேலை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் ” , “குறைந்த பட்ச வேதனம் எமக்கும்” , “ வீட்டு வேலை தொழிலாளர்களும் தொழிலாளர்களே ” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி, வாயை சிவப்பு நிற துணியால் கட்டியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.
குறிப்பாக நாட்டின் வடக்கு, கிழக்கு, தென்பகுதி மற்றும் மலையகத்தின் தெனியாய, ஹட்டன், மஸ்கெலியா, தலவாக்கலை போன்ற பகுதிகளைச் சேர்ந்தோர் இவ் ஆர்ப்பாட்டதிலீடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
கறுப்பு ஆடை அணிந்து பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
08/03/2016 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மட்டக்களப்பில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி என்னபவற்றில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணந்திருந்ததுடன் கறுப்புக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு சூர்யா பெண்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
மகளிருக்கு எதிரான வன்முறைகள் பாலிகள் கொடுமைகள் உட்பட பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்களுக்கெதிராக பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
நன்றி வீரகேசரி
துபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற சாஞ்சிமலை தோட்ட பெண் மரணம்
08/03/2016 நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய் நாட்டில் மரணமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கடந்த இரு வருட காலமாக தமது உறவினர்களோடும் கணவரோடும் எவ்வித தொடர்புகளும் பேணி இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 04ம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக காளிமுத்து சிகப்பி என்ற பெண் துபாய் நாட்டில் இறந்துள்ளதாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். நன்றி வீரகேசரி
மூழ்கிய மதஸ்தலங்கள் மீண்டும் வெளியில்
09/03/2016 மலையகமெங்கும் தற்போது கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் மலையகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் போதியளவு நீரின்றி காணப்படுகின்றது.
மஸ்கெலியா மவுசாக்கலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள் வற்றி வருவதால், மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென அஞ்சப்படுகின்றது.
இதேவேளை மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 20 அடி வரை குறைவடைந்துள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்தில் மூழ்கி இருந்த ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம் தற்போது மீண்டும் வெளியில் தெரிகின்றது.
காணாமல்போனோரின் உறவுகள் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
09/03/2016 கடந்த 2008 ஆம் ஆண்டு கடற்படையினரால் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளையும் கணவர்களையும் மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கணவர்களையும் பிள்ளைகளையும் இழந்தவர்கள் இன்று பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்கள் பிள்ளைகளை கண்ணில் காட்டாமல் எங்கு ஒழித்துவைத்திருக்கிறார்கள். இந்த நல்லாட்சி அரசாங்கமாவது எங்களுக்கு நல்லவழியை காட்டும் என்று எண்ணி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தெஹிவளை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வெளிநாடுகளுக்கு படிப்பிற்காகவும் வேலை நிமிர்த்தமும் செல்ல இருந்தவர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை பணயக்கைதிகளாக வைத்து பணம் பறித்துமுள்ளனர்.
ஆட்கொணர்வு மனு அளித்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் எமது பிள்ளைகளை எம்மால் காணவில்லை. நாம் இறந்தபின் எங்கள் பிள்ளைகளை வெளியில் விட்டு ஏதும் பயனில்லை.
கடந்த அரசாங்கத்தில் எமக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கமாவது எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்று எண்ணுகிறோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு : வங்கிக் கணக்குகள் முடக்கம்
09/03/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்பட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதிமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ரூபா 12.5 கோடியைப் பயன்படுத்தி எயார் லங்கா நிறுவனத்துக்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தை வாங்கியமை தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நாமல் ராஜபக்ஷ தவிர ஏனைய 7 பேர் நாட்டிலிருந்து வெளியேற தடைசெய்யப்பட்டுள்ளதுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிறுவனங்களின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் விமான நிலையத்தில் கைது
09/03/2016 சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் அனுமத்திக்கப்பட்ட விமான நிலையமூடாகவோ அல்லது துறைமுகத்தினூடாகவோ செல்லாது சட்ட விரோதமான முறையில் படகொன்றில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றடைந்துள்ளதையடுத்து அந்நாட்டு அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ள வேளை கட்டுநாயக்க குற்றப்புலணாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதாகியுள்ள குறித்த நபர் யாழப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்து. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நன்றி வீரகேசரி
ஹட்செசன்- சம்பந்தன் பேச்சுவார்த்தை
09/03/2016 புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரைஸ் ஹட்செசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நன்றி வீரகேசரி
அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து 300 க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
09/03/2016 லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் கொலனியில் 300 இற்கு மேற்பட்ட மக்கள் இன்று காலை 09 மணிக்கு அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக வங்கியின் ஊடாக லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவுக்குள்ள பாமஸ்டன் கிராம பகுதி மக்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சினை நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த அரசாங்க காலப்பகுதியிலும் புதிய அரசாங்கத்திலும் உள்ள இப்பகுதி அரசியல்வாதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு குடிநீரை வழங்கும் படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடிதம் மூலமாகவும் வாய் மூலமாகவும் முன்வைக்கபட்ட கோரிக்கைகளுக்கு இணங்க மத்திய மாகாண நீர்வழங்கல் அதிகார சபையின் ஊடாக உலக வங்கியில் நிதியினை பெற்று நீர் வழங்கல் திட்டம் ஒன்றை செய்வதாக உறுதிகள் கூறப்பட்டுள்ளது.
இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாகியும் இவர்களுக்கான குடிநீர் திட்டம் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. அதேவேளை 200 மில்லியன் ரூபா உலக வங்கியின் நிதியினை கொண்டு கடந்த ஜனவரி மாதம் 2016 அன்று ஆரம்பிக்கப்பட இருந்த இந்த குடிநீர் வேலைத்திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.
உடனடியாக எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு குடிநீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா பிரதேச செயலக பிரதி செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் பொது மக்கள் மற்றும் இவர்களை வழிநடத்தும் பாமஸ்டன் விகாரையின் பௌத்த பிக்கு ஆகியோர் தங்களின் குறைபாடுகளை முன்வைத்தனர்.
இதற்கு இணங்க நானுஓயா குளிர் ஓடை (ஐஸ் பீலி) பகுதியிலிருந்து தற்காலிகமாக குடிநீர் தருவதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதற்காக கால அவகாசம் வேண்டும் எனவும் ஸ்தலத்திற்கு விரைந்த அதிகாரிகள் அறிவித்ததனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரம் அவ்வழியினூடான போக்குவரத்து பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடதக்கது. நன்றி வீரகேசரி
முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரின் பாரியார் காலமானார்
10/03/2016 தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பாரியார் மங்கையற்கரசி தனது 83 ஆவது அகவையில் இலண்டனில் காலமானார்.
இலண்டனில் தனது பிள்ளைகளுடன் வசித்துவந்த அவர் நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இன்று இயற்கை எய்தினார்.
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியலுக்கு துணையாக நின்று செயற்பட்ட மங்கையற்கரசி, அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திலும், பின்னர் இலண்டனிலும் வசித்து வந்தார்.
மங்கையற்கரசி 1933 ஈம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் திகதி யாழ்ப்பாணம் மூளாய் என்ற கிராமத்தில் பிறந்தார்.
காலஞ்சென்ற மங்கையற்கரசியின் இறுதிச் சடங்குகள் இலண்டனில் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழரசுக்கட்சியில் முக்கிய தலைவராக இருந்து அமிர்தலிங்கம் செயற்பட்டு வந்த காலம் முதல் அவரின் அரசியல் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டி அவருடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் மங்கையற்கரசி என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பஷில், திவிநெகும திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை
10/03/2016 முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.ரணவக்க ஆகியோர் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று காலை நீதிமன்றத்திற்கு வருகைதந்திருந்தார்.
அந்த திணைக்களத்தில் ரூபா 26 மல்லியனுக்கும் அதிகமான நிதியினை தவறான முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, சட்டமா அதிபர், அமைச்சருக்கும் அந்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.ரணவக்கவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இருவருக்கும் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யோஷித்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
10/03/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை தொடர்ந்தும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவு பிறப்பித்துள்ளார். நன்றி வீரகேசரி