சட்டப் பீச்சல் By எச்.ஏ. அஸீஸ்

.


ஹல்ப்ஸ்டோப்பில் 
சட்டத்தைப்  பீச்சுகின்ற
காகங்களைக் கண்டேன்
ஒன்றோடு ஒன்று
சொண்டோடு சொண்டு தட்டி
இரண்டு காகங்கள்
மேலே கதைத்திருந்தன
என்ன வழக்கோ என
வியந்து கொண்டேன்
இன்னொரு காகம்
எதையோ இழந்தது போல்
தெறித்துத் தெறித்துக்
கத்துவது கேட்டது
என்ன வழக்கோ அது
நான் அறியேன்
ஹல்ப்ஸ்டோப்பில் மட்டும்தான்
காகங்கள் நூறு நூறாய்
கூடு கட்டி வாழ்கின்றனவோ
காகம் ஒன்றின் வெள்ளைப் பீச்சல்
என் தலையில் விழுந்து தெறித்தது
கண்கள் தப்பின
என் சட்டைப் பைக்குள் 
இருந்ததை எல்லாம்
கவ்விப் பறந்தது காகம்
பறந்தது எங்கோ உயர
நான் பார்த்துக் கொண்டே இருக்க
இது காகங்களின் வர்த்தக வலயம்
எல்லாம் கறுப்பு
நண்பனிடம் சொன்னேன்
எல்லாக் காகங்களும்
பீச்சுவதில்லை இவ்வாறு
எல்லாக் காகங்களும்
கவ்வுவதுமில்லை 
நண்பனே

-----0----