செங்கைஆழியான் பார்வையில் முருகபூபதியின் சமாந்தரங்கள் சிறுகதைத்தொகுதி

.
" சமூகம்  இப்படித்தான்  இருக்கும்.  எப்படி இருக்கவேண்டும்    என்பதை  சித்திரிப்பதே  எழுத்தாளன் கடமை "


(தமிழ்நாடு  தமிழ்ப்புத்தகாலயம்  வெளியீடான  முருகபூபதியின் இரண்டாவது  கதைத்தொகுதி  சமாந்தரங்கள்   குறித்து செங்கைஆழியான்  1988  ஒக்டோபர்   மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து  வெளியான  மல்லிகையில்   எழுதிய விமர்சனம்.
குறிப்பிட்ட  மல்லிகை  இதழின்  முகப்பை  அலங்கரித்தவரும் செங்கைஆழியான்தான்.   " எழுதுவதில்  இன்பம் காண்பவர்  " என்ற தலைப்பில்  நா.சுப்பிரமணியன்  செங்கைஆழியான்  பற்றிய குறிப்புகளை   இவ்விதழில்  எழுதியிருந்தார்.   சுப்பிரமணியன் தற்பொழுது   கனடாவில்  வசிக்கிறார்.  முருகபூபதி அவுஸ்திரேலியாவில். செங்கைஆழியான்  விடைபெற்றார்.
அன்னாரின்   நினைவாக  சுமார்  18   ஆண்டுகளுக்கு   முன்னர்  அவர்   எழுதிய   விமர்சனம்  இங்கு  பதிவாகிறது )


 ஈழத்து  ஆக்கவிலக்கியத் தடத்தில்  கடந்த  பதினைந்தாண்டுகளாக பயணம்செய்து,  இன்று  தன்னை  தக்கதோர்  சிறுகதை  ஆசிரியராக இனங்காட்டி,   இலக்கிய  இலக்கினை   நோக்கிச்சோர்வடையாது தொடர்ந்து   பயணம்  செய்துவருபவர்  லெ. முருகபூபதி எனக்கருதுகின்றேன்.
இடைநடுவில்   தம்  ஆக்கவிலக்கியப்பணியை  முடித்துக்கொண்டு ஒதுங்கியவர்களும்,   தடம்மாறிப் போனவர்களும்,  உள்ளார்ந்த ஆற்றல்   வற்றிப்போனவர்களும்   முருகபூபதியின் தொடர் யாத்திரையின்  இளைப்பாறு   மடங்;களாயினர்.
மல்லிகை   கண்டெடுத்த   இலக்கிய  முத்து  முருகபூபதி.
1972   ஆம்  ஆண்டு  முருகபூபதியின்  முதலாவது  சிறுகதையை வெளியிட்டதன்  மூலம்,   மல்லிகை   ஆரோக்கியமான  இலக்கிய கர்த்தா   ஒருவனின்  உருவாக்கத்திற்கு  காரணமாகியது.   கடந்த ஒன்றரை   தசாப்தங்களாக  எழுதிவரும்  முருகபூபதி,  எல்லாமாக இதுவரையில்   இருபத்தியைந்து  சிறுகதைகள்  வரையில்தான் படைத்துள்ளார்.
பத்துச்சிறுகதைகள்  சுமையின்  பங்காளிகள்  என்ற   தலைப்பில் 1975 இல்   வெளிவந்து,   அவ்வாண்டின்  சிறந்த  சிறுகதைத்தொகுதிகளில் ஒன்றிற்கான  சாகித்திய  மண்டலப்பரிசைப் பெற்றுக்கொண்டது.
இலங்கையில்  பிரபல  தமிழ்த் தினசரியான  வீரகேசரியின்  ஆசிரியர் குழுவில்   லெ.முருகபூபதி  சேர்ந்து  பணியாற்றினார். அக்காலவேளையில்   ரஸஞானி   என்ற  புனைபெயரில்  மறைந்து நின்று   இலக்கியத்தகவல்களையும்  இலக்கிய  நெருடல்களையும் எழுதிவந்தார்.
1987  ஆம்  ஆண்டு  ஈழத்து  அரசியல்  நிலைமைகள்  அடித்தளத்தோடு  ஆட்டம்கண்டபோது,   அழிவுகளே  நிதர்சனமாக எஞ்சிக்கொண்டிருந்தன.   இத்தாங்கொணாத் துயரத்திலிருந்து விடுபட்டு   அந்நிய  நாடொன்றுக்குத்  தப்பிச்சென்றுவிட  விழைந்த ஆயிரமாயிரம்   இளைஞர்களில்    ஒருவராக   முருகபூபதி அவுஸ்திரேலியாவுக்கு   இடம்பெயர்ந்து  சென்றார்.
வெளிநாட்டுப்பயணம்   முருகபூபதிக்கு  புதியதன்று.   ஏற்கனவே இந்தியா,   சோவியத்யூனியன்  ஆகிய  நாடுகளுக்குப்பயணம்  செய்து பயணக்கட்டுரைகளும்   எழுதியுள்ளார்.
அவரின்   இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சமாந்தரங்களை  இன்று சென்னை  தமிழ்ப்புத்தகாலயம்  வெளியிட்டுள்ளது.   மல்லிகை, வீரகேசரி   ஆகிய  பத்திரிகைகளில்  வெளிவந்த  பத்துச்சிறுகதைகள் இச்சிறுகதைத்தொகுதியில்   அடங்கியுள்ளன.
இலக்கிய  இலக்கு
பொதுவாக  இன்று  ஈழத்தில்  எழுதுகின்ற  ஆக்கவிலக்கிய கர்த்தாக்களின்   படைப்பிலக்கியங்களில்  இரு  தெளிவான போக்குகளைக் காணமுடியும்.  ஒருவகை  ஆக்கங்கள்,  "  சமூகம் இப்படி இருக்கிறது."   என்று    சித்திரிப்பனவாகவும்,    இன்னொருவகை ஆக்கங்கள், "  சமூகம்  எப்படி    இருக்கவேண்டும்"   என்று சித்திரிப்பனவாகவும்   உள்ளன.
முன்னவை,  சமகாலச் சமூகத்தின்  படப்பிடிப்பு  நிகழ்வுகளாகவும், பின்னவை,   சமூக  விழுமியங்களைப்பேணும்  உன்னதமான  ஒரு மானிட  சமூகத்தைக்கட்டியெழுப்ப  அவாவுறுவனவாகவும்  உள்ளன. பழந்தமிழ்    இலக்கியங்களும்  இதற்கு  விதிவிலக்கானவையல்ல.
சிலப்பதிகாரம்   அக்காலச்சமூகம்  இப்படித்தான்  இருந்தது எனச்சித்திரிக்க,    கம்பராமாயணம்  சோழர்  காலச்சமூகம்  எப்படி இருக்கவேண்டும்  என்ற  கம்பரின்  வேணாவினை  வெளியிடுவதாக அமைந்தது.
தந்தையை   பேணாத  தனயர்கள்,  தமையன்மார்களை   மதிக்காத தம்பிகள்,   குருவை  வணங்காத  சீடர்கள்  வாழ்ந்த  சோழநாட்டின் இளையதலைமுறை   எப்படி  இருக்கவேண்டும்  என்ற  அவாவினைக் கம்பர்,    ராமாயணத்தில்  சித்திரித்துக்காட்டினார்.
கம்பர்   காலச்சமூகத்தில்  காண  அரிதாகிவிட்ட சமூகவிழுமியங்களைக்  கம்பர்,   தன்  ஆக்கத்தில்  அடங்கா ஆசையோடு   கொண்டுவந்தார்.   ஆனால்,   ராமராச்சியம் வரவேயில்லை.


" ஒரு  சமூகம்  சிக்கலான  ஒரு  காலகட்டத்தில்  வாழும்பொழுது, அது   அச்சிக்கலின்  தெளிவிற்கும்,   தீர்விற்கும்  இலக்கியத்தை எதிர்நோக்கி  நிற்பது  வழக்கம்.   இலக்கியங்களும்  பதில்களை வழங்குவதுண்டு "   எனப்பேராசிரியர்   கார்த்திகேசு  சிவத்தம்பி  எனது   வெளிவரவிருக்கும்  நாவலுக்கு  எழுதியுள்ள  முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.   அந்தப்பதில்தான்  "  சமூகம்  எப்படி இருக்கவேண்டும்"   என்பது.
முருகபூபதியின்  சிறுகதைகள்  எனக்குப் பிடித்தமானவை.  என்  மகள் ரேணுகா  சொல்வதுபோல,  " வித்தியாசமானவை."
ஏன்---?
முருகபூபதி,   பல  சிறுகதை  ஆசிரியர்களைப்போல  சமூகத்தினை உள்ளவாறு   சித்திரிக்கவில்லை.   உணர்ந்தவாறு  சித்திரிப்பதோடு, ' இப்படி   இருக்கும்  சமூகம், " எப்படி  இருக்கவேண்டும் " எனக்காட்டிச்செல்கிறார்.    அதனால்தான்,  புதிய  தலைமுறை எழுத்தாளர்களில்  முருகபூபதிக்குரிய  இடம்  முதல்  ஐந்துக்குள் அமைந்துவிடுவது   வித்தியாசமாகிறது.
மனப்புண்கள்,   வேகம்,   திருப்பம்,  புதர்க்காடுகளில்  ஆகிய சிறுகதைகள்   நான்   இங்கு  கூறிய  கருத்துக்குச்சான்றாவன.
மனப்புண்கள்
பல  சிங்களக்குடும்பங்களோடு  ஒரிரு  தமிழ்க்குடும்பங்கள்  சேர்ந்து வாழும்   கிராமம்.   மடுவுக்குப்போன  சிங்கள  இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள்.   அதனால்,    இனக்கலவரம்  ஏற்பட்டு  நிலைமை   மோசமாகலாம்  எனத் தமிழ்க்குடும்பம்  ஒன்று அச்சப்படுகின்றது.    எதிர்வீட்டுச் சிங்களக்குடும்பத்துடனான உறவைப்பயத்துடன்  முறித்து  ஒதுங்கிவாழத்தலைப்படுகிறது.
" சுகத், இங்கே  விளையாட  வருவதில்லையா ? "
" இல்லையப்பா,  அவுங்கட  அப்பாவைக் காணவில்லையாம்.   இப்ப சுகத்தும்  இங்க  விளையாட  வாறதில்லை.   அம்மாவும்  எங்களை முற்றத்திலை  விளையாட  விடுவதில்லை."
இனக்கலவரம்  வந்துவிடலாம்  என  நினைத்து  அக்குடும்பம்  படும் மனஅவஸ்தைகள்  வெகு  அற்புதமான  படிமமாக  முருகபூபதியால் மனப்புண்கள்  என்ற  சிறுகதையில்    சுட்டப்படுகின்றன.   ஒருவருட மன   அவஸ்தைகளின்   விபரணமாக  இச்சிறுகதை  அமைந்திருக்கில், "இப்படித்தான்   சமூகம் உள்ளது "  என்ற  முடிவுடன்   கதையை  படித்து   முடித்துவிடலாம்.
ஆனால்,   முருகபூபதியின்  இலக்கிய  இலக்கு  அதுவன்று. "எப்படிச்சமூகம்   அமையவேண்டும் "   என்ற   வேணவா.   எனவே தொடருகிறது.
வீட்டு   வாசலில்  சுகத்.  கையில்  வெள்ளைத்துணியால்  மூடப்பட்ட தட்டு.
"  என்ட  புத்தே  (வா  மகனே) "
"  எங்கட   அப்பா  போய்  ஒரு வருடமாகிவிட்டது.   இன்று  நாங்கள் தானம்  கொடுத்தோம்.   அம்மா,  உங்களுக்கும்  பாற்சோறு கொடுத்துவிட்டாங்க."   என்கிறான்   சுகத்.
இவ்விடத்தில்தான்  முருகபூபதி  எதிர்பார்க்கின்ற  சமூகம்  எழுந்து நிற்கின்றது.   இப்படி  நடந்திருக்கமுடியாது.   ஆனால்,  அப்படித்தான் நடக்கவேண்டும்.   முருகபூபதி  என்ற  படைப்பாளி  ஏனைய  சிறுகதை ஆசிரியர்களிலிருந்து   இங்குதான்  தனித்துவமாகிறார்.
கதைகளின்  ஆத்மா
" என்  வாழ்வின்  தரிசனங்களே  நான்  எழுதும்  கதைகள்."  என முருகபூபதி  கூறியுள்ளமையை   அளவீடாகக்கொண்டு,  அவரது சிறுகதைகளை   மதிப்பீடு  செய்யில்,  அது  சமாந்தரங்கள்  என்ற சிறுகதைத்தொகுதிக்குப்  பொருத்தமான  கூற்றாகவில்லை. சிலவேளைகளில்   அவரது  முதற்தொகுதியான  சுமையின் பங்காளிகள்  கதைகளுக்கு  பொருத்தமாக  அமையலாம்.
தரிசனங்கள்  ஜடப்பிம்பங்களாக  அவரது  கதாமாந்தரும் சம்பவங்களும்   அமையவில்லை.   கதா  மாந்தரையும் சம்பவங்களையும்   குறியீடுகளாகக்கொண்டு,   முருகபூபதி  சொல்லும் சமூகச்செய்தி   ஜடப்பிம்பமான  தரிசனங்களன்று.   உன்னதமானதும், சமாதானம்   நிறைந்ததுமான  உயர்  சமூக அமைவினை   அவாவும் வெளிப்பாடுகளாகவே   அவை  விளங்குகின்றன.
சமாந்தரங்கள்,   வேகம்,  அந்நியமற்ற  உறவுகள்  ஆகிய  கதைகள் வெறும்  காதல் பேசும்  குடும்பக்கதைகள்.   தேர்முட்டி,  தவிப்பு, ஆண்மை   என்பன  சமகாலப்பிரச்சினைகளின்  போராட்ட  வடிவையும்  அழிவையும்  சித்திரிப்பன.
திருப்பம்,   புதர்க்காடுகளில்  ஆகிய  சிறுகதைகள்  வெளிநாட்டு  காதல் அனுபவங்களை  விபரிப்பன -  என்று  முருகபூபதியின்  கதைகளை ஒரேயடியாக   குத்து  மதிப்பீடு  செய்தால்,  -  (அப்படித்தான் செய்கிறார்கள்.) -  இக்கதைகளின்  ஆத்மாவை இனங்காணதவர்களாகிவிடுவோம்.
வெறும்   கதைகள்,  கதைகளாவதில்லை.  அதேபோன்று  வெறும் சிந்தனைக்கருத்துக்களும்  கதைகளாவதில்லை.   இவையிரண்டும் இணைந்து    கலாபூர்வமாகப்  பரிமளிக்கும்போதுதான்,   ஆக்கபூர்வமான படைப்பு   உருவாகிறது.   முருகபூபதிக்கு   இயல்பாகவே   அத்திறன் கைவந்திருக்கிறது.   கலைஞனுக்கேயுரிய  ராமராச்சிய  சமூகத்தை இந்தப்பாவப்பட்ட   மண்ணில்  உருவாக்கவிரும்பும்  கனவு  தெரிகிறது.
கதைக்களப்பரப்பு
சமாந்தரங்கள்  சிறுகதைத் தொகுதியை   வெளியிட்டுள்ள தமிழ்ப்புத்தகாலயத்தின்  நிர்வாகி,   தனது  வெளியீட்டுரையில் பின்வருமாறு    குறிப்பிடுகிறார்:-
"  தான்,  தன்  குடும்பம்,   தன் சுற்றம்,  தன்  நட்பு,  தன்  நாடு  என்ற அளவில்   படிப்படியாய்  மனப்போக்கு  விரிவடைந்து  வளர்வதை இக்கதைகள்   தொகுக்கப்பட்டுள்ள  அமைப்பு  முறை  சித்திரிக்கிறது"
உண்மையில்   முருகபூபதியின்  கதைப்பரப்பு,  மிக விரிவானது. சர்வதேசக்கதைக்கள  விரிவைக்கொண்டது.  "  தான்,  தன்  குடும்பம், தன்  சமூகம்,  தன்நாடு  என்ற  கதைப்பொருளின்  விரிவு,  தன்  உலகம் என்ற  விரிவினைப்பெற்றிருப்பதாகக்  கருதுகின்றேன்.
மரணங்கள்  மலிந்த  இந்த  மண்ணிலிருந்து  விடுபட்டு  விலகிச்சென்ற   முருகபூபதிக்கு, " தன் உலகம்"  என்ற  சிந்தனை விரிவைத்  தன்  ஆக்கங்களில்  கொண்டுவர  நம்  தாயக  இழிநிலை உதவியிருக்கிறது.   திருப்பம்,   தவிப்பு,   மொழி,  புதர்க்காடுகளில்  ஆகிய   சிறுகதைகளின்  களப்பரப்பும்   பகைப்புலமும்  மிக  மிக விரிவானது.   குறிப்பாகப்,  புதர்க்காடுகளில்  வோல்கா  என்ற வடவியட்னாமியப்பெண்    கூறுகிறார்:
"  வியட்னாம்,  பங்களாதேஷ்,  கம்பூச்சியா,  இலங்கை  இப்படியே ஆசியாவின்  சோகம்  தொடருகிறதல்லவா?  உங்கள்  நாட்டில்  என்ன நடக்கிறதென்பதை  அறிகின்றேன்.   ரஷ்யாவின்  துணையால் வியட்னாமில்  நிம்மதிப்பெருமூச்சு   எழுந்தது."
இலங்கையின்  கதைக்கருப்பரப்பு,  ஒடுக்கத்திலிருந்து,  விரிவான கதைக்கருப்பரப்பினைக் கையாள  முருகபூபதிக்கு  முடிகிறது. ஏனெனில்  படைப்பாளியாக   இருப்பதனால்.
சாகாவரம்
முருகபூபதியின்  சிறுகதைகளில்   காணக்கூடிய  சகல பண்புநலன்களையும்  இங்கு  ஆராயவில்லை.   ஏனைய  சிறுகதை ஆசிரியர்களிடமிருந்து,   முருகபூபதி  எவ்வாறு  வேறுபட்டு, தனித்துவம்   கொண்டுள்ளார்  என்பதையே   இங்கு எடுத்துக்கூறியுள்ளேன்.
சமாந்தரங்களில்  இடம்பெற்றுள்ள  பெரும்பாலான  சிறுகதைகள் ஈழத்தின்   சமகாலப்பிரச்சினைகளை   உள்ளீடாகக்கொண்டு ஆக்கப்பட்டவை.    ஈழத்துப்பிரச்சினைகளின் மெய்வடிவத்தைப் புரிந்துகொண்டவர்களால்தாம்,    முருகபூபதியின் இச்சிறுகதைகளைப் பரிபூரணமாகச்  சுவைக்கமுடியும்  என்பதை  மறுப்பதற்கில்லை.
ஈழத்துப்பிரச்சினைகளைத்  தெரிந்திராத   ஒருவரிடம்,   ஐம்பது  அறுபது   ஆண்டுகளின்  பின்  இந்த  மண்ணில்  வாழப்போகின்ற ஒருவரிடம்   முருகபூபதியின்  இக்கதைகளை வாங்கிப்படிக்கச்செய்தால்,  அவரால்  அக்கதைகளின்  ஜீவனை அணுகமுடியுமா?  புரியமுடியுமா ? என்பது  ஐயத்திற்குரியது.
ஆம்,  முருகபூபதியின்  கதைகளை  ஈழத்துப் பிரச்சினைகளை சரிவரத் தெரிந்துகொண்டவரால்தான்   நன்கு  தரிசிக்கமுடியும்.   அதனை முருகபூபதி  புரிந்திருக்கிறார்.   அதனால்தான், இச்சிறுகதைத்தாகுதியின்   முன்னுரையில்,  தன்  கதைகளின் பின்னாலுள்ள  கதைகளை  விவரித்துள்ளார்.   இச்சிறுகதைகளின் பின்னணியைத் தந்துள்ளார்.
இந்த  முன்னுரை  இல்லாதிருப்பின்  எல்லோராலும்  முருகபூபதியின் கதைகளைப் புரிந்துணர்வது   கடினமாயிருக்கும்.
இந்தவிடத்தில்தான்  முருகபூபதியின்  கதைகள்  நம் முழுமையிலிருந்து  ஊறுபடுகின்றன.   ஒரு  சிறுகதை  தன்னளவில் கருவை   விபரிக்கும்போது,  கதைக் களப்பின்னணியைச் சுருக்கமாகவேணும்  சுட்டினால்தான்  முழுமையான  படைப்பாக அமையும்.
வேறும்  சில
முருபூபதியின்   சிறுகதைகளில்  காணக்கூடிய  வேறு  சில குறைகளைச் சுட்டத்தான்  வேண்டும்.   கதைக்கருவைச்  சில கதைகளில்   இறுதியில்  கொடுத்துவிடுகிறார்.   உதாரணம்: சமாந்தரங்கள்  பேச்சுவழக்கும்  செந்தமிழ்  வழக்கும்  ஆசிரியர் கூற்றாக  கலந்து  செறிந்துள்ளன.   குறியீடுகள்  சரிவர இடப்படவில்லை  என்ற  குறைபாடுகள்  தெரிந்தாலும், முருகபூபதியின்  சிறுகதைகள்  ஈழத்து  இலக்கியத்திற்குப்பெருமையும்  வலிமையும்   சேர்ப்பன   என்பதில் இருபார்வையில்லை.
( நன்றி:  மல்லிகை  ஓகஸ்ட்  1988)