அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்

.
இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்.அவருக்கு வயது 82.


அமிர்தலிங்கம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து லண்டனில் வசித்து வந்த அவரது மனைவி, மங்கையர்க்கரசி நேற்று கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று , புதன்கிழமை மாலை அவர் காலமானார் என்று அவரது மகன்களில் ஒருவரான, டாக்டர் ஏ.ஆர்.பகீரதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மங்கையர்க்கரசி 1933ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி, இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அருகிலிலுள்ள மூளாய் என்ற இடத்தில் பிறந்தார். ராமனாதன் கல்லூரியில் இசை பயின்ற அவர், பின்னர் 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான, அமிர்தலிங்கத்தை மணந்தார்.


அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பெற்ற மங்கையர்க்கரசி, 1960 ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார்.
இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணை நின்ற மங்கையர்க்கரசி, தமிழ் அரசியல் மேடைகளில் பாடல்களைப் பாடியும், உரை நிகழ்த்தியும் தமிழர்களை அணி திரட்ட உதவியாக இருந்தார்.
இந்திய அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோருடன் மங்கையர்க்கரசி உறவுகளைப் பேணி வந்தார்.
காலஞ்சென்ற மங்கையர்க்கரசியின் இறுதிச் சடங்குகள் லண்டனில் எதிர்வரும் 20ம் தேதி நடைபெறும் என்று டாக்டர் பகீரதன் தெரிவித்தார்.
பகீரதன் தவிர, மங்கையர்க்கரசி-அமிர்தலிங்கம் தம்பதியருக்கு காண்டீபன் என்ற ஒரு மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.