உலகச் செய்திகள்


துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டுவெடிப்பு (வீடியோ இணைப்பு )

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 25 பேர் பலி
துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டுவெடிப்பு 

14/03/2016 துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாகவும்  கிட்டதட்ட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிளிலே சதுக்கம் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. வெடிகுண்டுகள் நிரம்பிய காரினை வெடிக்க செய்யப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் பேருந்து உட்பட பல்வேறு வாகனங்கள் சிக்கிக் கொண்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புக்களின்  எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகின்றது. 
தாக்குதல் நடைபெற்ற பகுதியானது அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் அஹ்மெத் தாவுதோக்ளு அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 

நன்றி வீரகேசரி 

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்


16/03/2016 அன்னை தெரசாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி “புனிதர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக, ரோமானிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் முறைப்படி நேற்று அறிவித்தார். 
அன்னை தெரசா இறந்து 19 ஆண்டுகள் கழித்து, தற்போது அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, ரோம் நகரில் நடைபெறவுள்ள (செப்.4) விழாவில், மிஷனரி ஆஃப் சாரிட்டியின் சகோதரி பிரேமா, பேராயர் டிசோசா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தனது வாழ்நாள் முழுவதையும் ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்காக அர்ப்பணித்தவரான அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதல்படியாக, “அவர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என, போப் இரண்டாம் ஜான் பால், கடந்த 2003ஆம் ஆண்டு அறிவித்தார்.
“மேற்கு வங்கத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மறைந்த அன்னை தெரசாவின் அருளால் உடல் நலம் பெற்ற அற்புத நிகழ்வு நடந்துள்ளது. இதனால் தெரசாவை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று அறிவிப்பதாக போப் இரண்டாம் ஜான் பால் தெரிவித்தார்.
இதேபோன்று, கடந்த 2008ஆம் ஆண்டு, மூளைக் கட்டி நோயால் (பிரைன் ட்யூமர்) பாதிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அன்னை தெரசாவின் இறையருளால் நோயிலிருந்து மீண்ட அற்புதமும் நிகழ்ந்துள்ளதாக, வாட்டிகன் கத்தோலிக்க திருச்சபை, கடந்த ஆண்டு அறிவித்தது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மாசிடோனியாவில், கடந்த 1910ஆம் ஆண்டு பிறந்த அன்னை தெரசா, தனது 18 வயது வரை அங்கு வாழ்ந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் அயர்லாந்தில் தங்கியிருந்த அவர், 1929ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்.
1950ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் “மிஷனரி ஆஃப் சாரிட்டி’ எனும் தொண்டு அமைப்பை நிறுவிய அன்னை தெரசா, அதன் வாயிலாக கிறிஸ்தவ மதப்பணியுடன், கொல்கத்தாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழைகள் மற்றும் நோயாளிகளின் துயர்துடைக்க 45 ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றினார்.
கடந்த 1979இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, 1997ஆம் ஆண்டு, தனது 87ஆவது வயதில், கொல்கத்தாவில் காலமானார்.
மேலும், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மிஷனரி ஆஃப் சாரிட்டி மற்றும் பிற கிறிஸ்தவ அமைப்புகளின் சார்பில், வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் விழா நடத்தப்படவுள்ளது.   நன்றி வீரகேசரி பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 25 பேர் பலி

16/03/2016 பாகிஸ்தானின் பெஷாவரில் அரச ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் தலைமை செயலக ஊழியர்கள் 25 பேர் பலியாகி உள்ளனர். 
பாகிஸ்தானின் மர்தான் பகுதியில் இருந்து அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ், பெஷாவரில் குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளது. 
இதில் பஸ்ஸில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர்கள் 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்களை குறிவைத்தே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பொலிஸ் உயரதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,
 பஸ்ஸின் உள்ளே வெடி பொருட்களை மறைத்து வைத்து வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த போது பஸ்ஸில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி