அழைத்தாலே போதும்…………. ஆறிரு கரம்நீளும் திருமலை மூர்த்தி

.


 ஆறுபடை வீடுகண்டும் அகிலமெங்கும் கோயில் கொண்டும்
அருள்பொழிய முருகனிங்கு சிட்னிவந்தான்
மாறுபடு  சூரர்குலம் வேரறுத்த ஆறுமுகன்
வைகாசிக் குன்றினிலே கோயில் கொண்டான்


அழைத்தாலே  போதும்
ஆறிரு கரம்நீளும்


அப்பனே முருகா என்று
அழைத்தாலே  போதும்
அபயம் நானென்றே
ஆறிரு கரம்நீளும்


எப்பொழுதும் நினைந்தே இருகரம் கூப்பும்
எண்ணிய  யாவும்  இனிதாய் நிறைவேறும்நீர்த்திரை  விழிகளை  நிறைத்திடும் போதும்
நெஞ்சினைக்  கவலைகள்  அரித்திடும் போதும்
யார்துணை  என்று  தவித்திடும்  போதும்
சீர்தரும் வள்ளலைச் சிட்னியின் முருகனை

அழைத்தாலே  போதும்
ஆறிரு கரம்நீளும்

கிரகங்கள் நிலைமாறிப்  பகைத்திடும்  காலம்
கெடுவலி  நோய்பிணி  வதைத்திடும் நேரம்
அரவொடு  பிறையணி  பரமனின்  பாலனை
திருவருள் பொழிந்திடும்  சிட்னியின் வேலனை

அப்பனே முருகாவென்று அழைத்தாலே போதும்
அபயம் நானென்றே ஆறிரு கரம்நீளும்