படித்தோம் சொல்கின்றோம் :செங்கைஆழியானின் யாழ்ப்பாணம் பாரீர் - முருகபூபதி

.  
ஊர்சுற்றி  சேகரித்த  அரிய தகவல்களை  வரலாற்று ஆதாரங்களுடன்  ஆவணப்பதிவுசெய்து விட்டுச்சென்ற எங்கள்   சீதக்காதி
நூலகம்  நிறுவனத்தின்  டிஜிட்டல்  பதிவுகளுக்கு உதவுவோம்
  

இளம் வயதில்  பாடசாலை  விடுமுறைநாட்களில்  நண்பர்களுடன் ஊர்சுற்றுவது   எம்மவர்களின்  வாழ்வில்  மறக்கமுடியாத  வசந்தகாலங்கள்.   அந்நாட்களில்  நண்பர்களிடம்  துவிச்சக்கரவண்டியிருப்பின்  ஊர்சுற்றலுக்கு  வசதியாக  இருக்கும். இல்iலையென்றால்,  துவிச்சக்கரவண்டி  திருத்துநரிடம்  வாடகைக்கும் பெற்றுக்கொள்ளமுடியும்.

அதற்காக  காப்புறுதி  ஆவணங்கள்,  வாகன  அனுமதிப்பத்திரங்கள்  அவசியம் இல்லை.
யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரையில்  அக்கால  மாணவர்களிடம்  ஊர் சுற்றல்  என்றால்  கீரிமலை,  கசூர்னா  கடற்கரை  கோட்டை  முனியப்பர் கோயிலடி  முதலான  பல  இடங்கள்தான்  முதலில்  பயண  நிகழ்ச்சி நிரலில்  இடம்பெறும்.
திருட்டுத்தனமாக  மாதகல்  வரையில்  சென்று  கூவில்  பனங்கள்ளை ருசித்து  ஏப்பமிட்டு  வந்தவர்களிடம்  அந்த  சுகானுபவத்தையும்  கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

அவ்வாறு  பயணிக்கும்  மாணவர்கள்  திரும்புகையில்  மறக்கமுடியாத சுவாரஸ்யமான  சம்பவங்களை  நெடுங்காலத்திற்கு  நினைவில் சுமந்துகொண்டிருப்பார்கள்.
பின்னாளில்  எழுத்தாளர்களாகிவிட்டால்  அந்த  வசந்த  காலத்தை நனவிடைதோய்ந்து  இலக்கியங்களும்  படைப்பார்கள்.
இவ்வாறு  தத்தம்மளவில்  தமது  நினைவுச்சிறையில் நிரந்தரமாகத்தங்கிவிட்ட   சித்திரங்களை  எத்தனைபேர்  ஆவணப்படுத்தி மற்றவர்களுக்கும்   குறிப்பாக  வரலாற்று  ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்  எழுதவிருக்கும்  கதைக்களன்  பற்றி  முற்கூட்டியே  தெரிந்துகொள்ள   முனையும்  படைப்பாளிகளுக்கும்  சாதாராண வாசகர்களுக்கும்    வழங்குவார்கள்  ?
வடக்கில்   ஒரு  காலப்பகுதியில்  நீடித்த  போர்  மாணவர்களின்  இந்த ஊர்சுற்றலுக்கு   முற்றுப்புள்ளியைத்தந்தாலும்,   போருக்குள்  அவர்களையும் உள்வாங்கியது   என்பது  வரலாறு.


1963 ஆம்  ஆண்டு  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த   மாணவர்  குணராசா  என்ற  பின்னாளில் செங்கைஆழியான்  னப்   புகழ்பெற்றவர்,   ஒரு  விடுமுறைக்காலத்தில் தனது   நண்பர்கள்  . பரமேஸ்வரன்,   . பரராஜசேகரன்,   எஸ். பத்மநாதன் ஆகியோரை  அழைத்துக்கொண்டு  யாழ்ப்பாணம்  குடாநாட்டை சுற்றிப்பார்க்கப்புறப்பட்டார்.

அவர்,  அழைக்கும்பொழுது  " யாழ்ப்பாணத்தில்  பார்க்கிறதுக்கு  என்ன இருக்கிறது ?  " என்றுதான்  அந்த  மாணவப்பராயத்து  நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணம்,   இயக்கச்சி,  தழையடி,  மணல்காடு,  வல்லிபுரம்,  பருத்தித்துறை,   கீரிமலை,   காங்கேசன்துறை,  கந்தரோடை  மற்றும் குடாநாட்டின்  தீவுகள்  என்று  அலைந்து  திரிந்தனர்.   நான்கு  நாட்கள் இவ்வாறு  துவிச்சக்கரவண்டியில்  அலைந்து  பார்ப்பதற்கு  என்ன இருக்கிறது   என்ற  கேள்விக்கு  விரிவான  பதிவையே  தந்துள்ளார் செங்கைஆழியான்.இந்த   நூல்  கடந்த  2015  ஆம்   ஆண்டு  செங்கைஆழியான்,  மௌனமே மொழியாக   வாழ்ந்த  காலப்பகுதியில்  அவர்  மறைவதற்கு  சில மாதங்களுக்கு  முன்னர்  வெளிவந்துள்ளது.
1963 ஆம்  ஆண்டில்  கீரிமலையை  சுற்றிப்பார்த்து  குறிப்புகள்  சேகரித்த செங்கைஆழியானின்  அஸ்தி -  எதிர்வரும்  29-03-2016  ஆம்  திகதி  அதே கீரிமலையில்   கடலுடன்  கரையப்போகும்  காலப்பகுதியில்  அவர் விட்டுச்சென்றுள்ள  யாழ்ப்பாணம்  பாரீர்   நூலுக்குள்   நாமும் பிரவேசித்து   மீண்டும்  யாழ்.  குடாநாட்டை  தரிசிக்கின்றோம்.
---------------------------
செங்கை ஆழியான்  தமது  வாழ்நாளில்  48   நாவல்கள்,   எட்டு சிறுகதைத்தொகுதிகள்,  ஆறு  பல்சுவை  நூல்கள்,  13  வரலாற்று  நூல்கள் மற்றும்    எண்ணிறைந்த  கட்டுரைகளையும்  எழுதியிருப்பவர். இதுவரையில்   நூலுருவில்  வெளிவராத  பல  படைப்புகளும்  இருக்கின்றன. படைப்பு   இலக்கியத்திற்காக  எட்டுத்தடவைகள்  தேசிய  சாகித்திய விருதுகளும்   பெற்றவர்.   அத்துடன்  மேலும்  சில  பரிசில்களும் பாராட்டுவிருதுகளும்   பெற்றிருப்பவர்.    இந்த  அயராத  உழைப்பாளியின் மற்றும்  ஒரு  ஆவணப்பதிவுதான்  யாழ்ப்பாணம்  பாரீர்.அவருடைய  கமலம் பதிப்பகமே  இந்நூலையும்   வெளியிட்டுள்ளது.
"  ஈழத்தின்  எந்த  வாசகனும்  செங்கைஆழியானைக் கடக்காமல்  வந்திருக்க முடியாதுஎன்னைப்போல  ஆட்களுக்கு  சிறுவயதிலேயே  ஆர்வத்தை உண்டுபண்ணியதிலும்   அவருக்கு  நிறையப் பங்குண்டு.   சின்ன  வயதில் தமிழ்பேச்சுப்போட்டியில்  முதலிடம்  பெற்றமைக்கு  மூன்று  புத்தகங்கள் பரிசாகக்கிடைத்தது.   அதிலொன்று  கடற்கோட்டை.   என்னுடைய  வாசிப்பு அனுபவத்தை  பதின்மத்தில்  நாவல்களாலும்  பின்னாளில்  வரலாற்று நூல்களாலும்  நிரப்பியவர்  செங்கைஆழியானாவார் "  -  என்று   அவுஸ்திரேலியாவில்   வதியும்   இளம் எழுத்தாளர்   ஜே.கே.  - முன்னர்   எழுதியிருக்கும்  குறிப்புகளையே செங்கைஆழியான்   இந்நூலின்  பின்புற  அட்டையில்  பதிவுசெய்துள்ளார்.

ஈழத்து  இலக்கிய  வளர்ச்சியில்  மூன்றாவது  தலைமுறையைச்சேர்ந்த செங்கைஆழியான் -  தமது  இறுதிக்காலத்தில்  ஆறாவது  தலைமுறை இளம் படைப்பாளி   ஜே.கே. என்ற   ஜெயக்குமாரனை  இவ்வாறு  கவனத்தில் கொண்டிருந்திருக்கிறார்   என்பதும்  முக்கிய  செய்தி.
------------------
நமது   பிரதேசம்  (யாழ்ப்பாணம்)   ஒரு  குடாநாடு  அல்ல.   சுண்டிக்குள மணல்தடை  மூலம்  பெருநிலத்துடன்  ஏற்பட்டிருக்கும்  நில  இணைப்பு மூன்று   பாகங்களும்  கடலால்  சூழப்பட்ட  ஒரு  நிலப்பகுதி  என இதனைக்கருதவைத்து  குடாநாடாகவும்  எண்ணவைத்துள்ளது. உண்மையில்  நமது  தேசம்  (யாழ்ப்பாணம்)  வலிகாமம்  தீவு, வடமராட்சித்தீவு,    தென்மராட்சித்தீவு,   என்ற  மூன்று  பெருந்தீவுகளையும் காரைதீவு,    எழுவைதீவு,   அனலைதீவு,   வேலணைத்தீவு,   மண்டைதீவு, நயினாதீவு,    புங்குடுதீவு,  நெடுந்தீவு,  பாலதீவு,  கச்சதீவு  முதலான சிறுதீவுகளையும்   மற்றும்  எண்ணிறைந்த  குட்டித்தீவுகளையும் கொண்டமைந்த    நிலப்பரப்பாகும்.

பண்ணைப்பாலம்,    பொன்னாலைப்பாலம்,  வாணர்  பாலம், சங்குப்பிட்டிப்பாலம்,   ஆனையிறவுப்பாலம்  மற்றும்  சுண்டிக்குளம்  மணல் இணைப்பு   என்பனவற்றினை   அகற்றிவிட்டு  நோக்கில்  நமது  தேசம் தனித்தனி   தீவுகளாக  எஞ்சி  நிற்பதைக்காணலாம்.   அக்காலத்தில் ஊர்காவற்றுறையில்   பிரவேசிக்கும்  பாய்க்கப்பல்கள் யாழ்ப்பாணக் கடனீரேரியூடாக   ஆனையிறவுக்  கடனீரேரியைக் கடந்து  தடையற்ற சுண்டிக்குளமூடாக  இந்து  சமுத்திரத்தில்  பிரவேசித்துள்ளன. "   என்று பதிவுசெய்து,   யாழ்ப்பாணம்  நிலப்பரப்பினை   ஆய்வுக்குட்படுத்தினால்  அது குடாநாடு   அல்ல  என்று  குறிப்பிடுகிறார்  செங்கைஆழியான். ( பக்கம் - 4)


அவர்  புவியியல்  பட்டதாரியாக  இருந்தவர்  மட்டுமல்ல,   இலங்கையினதும் உலக வரைபடத்தினதும்   நுட்பங்களை   துல்லியமாக அறிந்துவைத்திருந்தவர்.  யாழ்ப்பாணத்தில்  நிலப்பரப்பு,   நீர்நிலைகள், நெற்பயிர்,   பனை,    தென்னைப்பயிர்,   வீட்டுத்தோட்டப்பயிர்  முதலானவற்றின்   நிலப்பரப்பு,   தரிசாக  கிடக்கும்  நிலப்பரப்புகட்டிடங்களில்   நிலப்பரப்பளவு  முதலான  தகவல்கள்  அனைத்தையும் புள்ளிவிபரத்துடன்   தருகிறார்.

மொத்தத்தில்   சமதரையாக  அமைந்துள்ள  யாழ்ப்பாணப்  பிரதேசத்தில் பெயருக்கு  ஒரு  மலையாக  இருப்பது  கீரிமலைதான்  என்றும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்.
அங்கு  ஓடும்  வழுக்கியாறு  மட்டும்தான்  இரசிகமணி  கனகசெந்திநாதன் குறிப்பிடுவதுபோல்   யாழ்ப்பாணம்  மாதா  மலடி   என்ற வசைச்சொல்லுக்குள்ளாகாமல்   இருப்பதற்காக  பெற்றெடுத்த  ஒரே  ஒரு ஆறாகும்   என்ற  அங்கதக் கருத்தையும்  குறிப்பிடுகிறார்.
A 9  பாதையில்  கண்டிவீதியில்,  யாழ்ப்பாணத்திற்குள்  வருபவர்களை வரவேற்பதற்காக    செம்மணியில்  அமைந்துள்ள  அலங்கார வளைவிலிருந்து,   தொடங்கி  தகவல்  களஞ்சியமாக  யாழ்.கோட்டை, பொதுசனநூல்  நிலையம்,   துரையப்பா  விளையாட்டரங்கு,   முற்றவெளி, நினைவுக்கற்கள்  முதலான  வரிசையில்  நெடுந்தீவு  சாராப்பிட்டி  வரையில் மொத்தம்  64   தலைப்புகளில்   யாழ்ப்பாணத்தின்  அழகுக்கோலத்தின் புள்ளிகளை   விபரமாகச்சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு   தலைப்பின்  கீழும்  அதன்  பின்னணிவரலாற்றை சுருக்கமாகவும்  சில  புள்ளிகளின்  முக்கியத்துவத்திற்காக  விரிவாகவும் தந்துள்ளார்.யாழ்ப்பாண   வீதித்தர்மம்   என்ற  பதிவு  அங்கு  ஒரு  காலகட்டத்தில்  வாழ்ந்த  மக்களின்  இரக்க  சிந்தனையை   சுட்டிக்காட்டுகிறது.
பண்டைய  யாழ்ப்பாண   மக்களின்  தர்மசிந்தை  பெரியது.   சத்திரங்கள், தெருமூடிமடங்கள்,   பொது  நன்னீர்க்கிணறுகள்,   தங்குமடங்கள், கால்நடைகளுக்கான   துரவுகள்,   ஆவுரோஞ்சிக்கற்கள்,   நீர்த்தொட்டிகள், நீர்க்குண்டுகள்,   தலைச் சுமைப்பயணிகளுக்கான தெருவோரச்சுமைதாங்கிகள்,    தெருவோர  நிழல்  மரங்கள், தனிவழிப்பயணத்தில்  பயத்தினைப்போக்கத்  தெருவோரச்சிறு தெய்வச்சின்னங்கள்,   சங்கட படலைக் கொட்டில்களில் தெருவழிப்பயணிகளின்  தாகத்தைத் தீர்க்கப்பானைகளில்  நிறைந்த  குளிர்நீர்    அல்லது  மோர்  என  ஊர்தோறும்,   தெருத்தோறும்  தர்மம்  விரிந்து   கிடந்தது    என்று எழுதுகிறார்.  (பக்கம் - 41)
என்றைக்கும்  வற்றாத  பல  மர்மங்கள் பொதிந்த  நிலாவறைக்கிணறு ஐதீகக்கதைகளுடன்   கொண்டாடப்படும்  கீரிமலை,   இந்து,   கிறிஸ்தவ கோயில்கள்,   கந்தரோடை   வரலாற்றுச்சின்னங்கள்,   காரைநகர் கடற்கோட்டை,   யாழ்ப்பாண   நிலப்பரப்பு  ஆலயங்கள்  உட்பட  கடல்சூழ்ந்த தீவுகளுக்குட்பட்ட   ஆலயங்கள்  பற்றியும்  இறுதியில்  முஸ்லிம்கள் வாழ்விடங்கள்   பற்றியும்  விவரித்துக்கொண்டு  செல்கிறது யாழ்பாணம்பாரீர்.

பல   ஒளிப்படங்களும்  ஒவ்வொரு  பக்கத்திலும்  காரணகாரியம்  நிமித்தம் பதிவாகியிருக்கிறது.
புதிதாக  யாழ்ப்பாணத்தை   தரிசிக்கவிரும்பும்  வெளியூர்  வாசிகளுக்கு வழிகாட்டிக் கைநூலாகவும்   விளங்குகிறது.
செங்கைஆழியானிடம்    இலக்கியப்படைப்பாளுமையும்  புவியியல்  மற்றும் வரலாறு    தொடர்பாக  துல்லியமான  அறிவும்  நினைவாற்றலும் இருந்தமையால்   இந்த  நூலை  சாதாரண  வாசகர்களுக்கும்  பயனுள்ளதாக   எழுதியிருக்கிறார்.
அவருடைய   தொடர்ச்சியான  தேடல்  இந்நூலில்  துலக்கமாகத் தெரிகிறது.
யாழ்ப்பாணம்  பாரீர்  நூலைப்படிக்கும்பொழுது "  இறந்தும்  கொடுத்தான் சீதக்காதி "  என்ற  பேசுபொருள்தான்  நினைவுக்கு  வருகிறது.
தமது   இறுதிக்காலத்திலும்  எம்மவருக்கு  பயனுள்ளவாறு  வாழ்ந்து மறைந்துள்ள  செங்கைஆழியான்  அவர்களினால்  ஏற்பட்டுள்ள  வெற்றிடம் ஆழ  அகலமானது.   அதனால்தான்  அவருடைய  இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது    என்று  தொடர்ச்சியாக  வலியுறுத்துகின்றோம்.
யாழ்ப்பாணம்  பாரீர் :  கமலம் பதிப்பகம் - 75 / 10 A ,  பிறவுண் வீதி,   யாழ்ப்பாணம்.   இலங்கை.


---------------------------
பிற்குறிப்பு:   யாழ்ப்பாணம்  பாரீர்  நூலின்  பிரதிகளுக்கு  மெல்பனில் வதியும்   எழுத்தாளர்   ஜே.கே. அவர்களை ( jkpadalai@gmail.com) தொடர்புகொள்ளலாம்.   இந்நூலின் மூலம்   கிடைக்கப்பெறும்  நன்கொடைகள்  இலங்கையில்  செங்கை ஆழியானின்  நூல்களை  நவீன  டிஜிட்டல்  முறையில்  பதிவுசெய்துகொண்டிருக்கும்  நூலகம்  அமைப்பினர்  எதிர்நோக்கும்  டிஜிட்டல்  முறை  செலவீனங்களுக்கு  வழங்கப்படுகிறது.
நூலகம் (Noolaham Foundation)  அமைப்பின்  சேவைகள்  பற்றித் தெரிந்துகொள்ளவிரும்புவோர்  கோபி  (kopinath@gmail.com)  அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்,
---0---