செங்கை ஆழியான் பயணம் போகிறார்




ஈழத்து எழுத்துலக ஆளுமை செங்கை ஆழியான் அவர்கள் கடந்த பெப்ரவரி 28, 2016 காலமானதும் என் போன்ற அவரின் தீவிர வாசகர்களிடமிருந்தும், அவரின் காலத்தில் வாழும் இலக்கியவாதிகளிடமிருந்தும் பரவலாக வெளிப்பட்ட துயர் பகிர்வுகளால் மீளவும் நினைவூட்டப்பட்டார் ஈழத்து வாசகப் பரப்பு கடல் கடந்தும் செங்கை ஆழியானின் எழுத்துகளை மறவாது போற்றும் என்று.

செங்கை ஆழியானை வாசித்து வளர்ந்த சமூகம் அவரின் பன்முகப்பட்ட எழுத்தை ஈடு செய்யக் கூடியவரைத் தேடிக் கொண்டேயிருக்கும். அவரின் அடியொற்றி இலக்கியம் படைப்போருக்கு அவரே பிதாமகன்.

என்னுடைய வாசிப்புத் தீனி சத்துணவு தேடிய போது கிட்டியவை செங்கை ஆழியான் எழுத்துகள்.
என் வாழ்க்கையில் இதுவெல்லாம் நடக்குமா என்று நினைத்தேயிராத ஊடகப் பணி, அந்த ஊடகப் பணி வழியாக நான் நேசித்துப் போற்றிய ஆளுமைகளோடு பேசவும் பேட்டி காணவும் வாய்ப்புக் கிடைத்ததெல்லாம் வாழ் நாள் பெறுமதிகள். அப்படியாகத்தான் செங்கை ஆழியான் அவர்களின் எழுத்துலகத்தை ஆதி முதற் தொட்டுப் பதிவாக்கிய 45 நிமிட வானொலிப் பேட்டியைப் பத்து வருடங்களுக்கு முன்னர் தாயகத்துக்கு அழைத்து எடுத்துக் கொண்டேன். 

"எனக்கு நீங்கள் இன்னொரு வாய்ப்புக் தர வேண்டும்" என்று பேட்டியின் முடிவில் அவர் கேட்டதும் அதற்கான சூழல் வாய்க்காததும் ஒரு புறமிருக்க, எனக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைத்தது. எதிர்பாராத தாயகப் பயணம் கிடைத்த ஐந்து நாட்களுக்குள் தனிப்பட்ட வேலைகளுக்கும் மத்தியில் ஒரு நாள் செங்கை ஆழியான் வீடு தேடி இழுத்துச் செல்கிறது என் கால்கள். அன்று தான் அவரின் 75 வது பிறந்த தினம் என்பதை அவருக்கு முன்னால் கிடத்திய பெரியதொரு கேக் பறை சாற்ற, அவரின் குடும்பத்தினர் மட்டும் பங்கு கொண்ட விழாவில் அவரின் ஆயுள் கால வாசகனாகிய நான் திடீர் விருந்தாளியாக.
"அவரின் இறுதி நாட்களிலாவது நீர் மீண்டும் அவரைச் சந்திக்க ஒரு பேறு கிடைத்திருக்கிறது" என்று செங்கை ஆழியான் இறப்பின் பின் என் மனதுக்குச் சமாதானம் சொன்னார் அன்பர் ஒருவர்.

என்னைப் போலவே செங்கை ஆழியான் எழுத்துகளில் ஊறிப் போன அடுத்த தலைமுறை வாசகன், சகோதரன் ஜே.கே என்ற ஜெயக்குமாரன் சந்திரசேகரம். செங்கை ஆழியானின் இறுதி நூலான "யாழ்ப்பாணம் பாரீர்" நூலின் பின் அட்டையில் அவரின் வாசகனின் சிலாகிப்பைப் பகிர்ந்து சிறப்பித்த பேறு ஜே.கே இற்குக் கிட்டியிருக்கிறது. செங்கை ஆழியான் குறித்த நினைவுப் பகிர்வை வானொலிக்காகச் செய்ய இருக்கிறேன் என்று நான் சொன்ன போது தாமதியாது தன்னுடைய பகிர்வைத் தந்து இந்த இடத்தில் தன் கடமையைக் காட்டினார்.

எங்களுக்கு வழிகாட்டியாக விளக்கும், ஈழத்து எழுத்துலக ஆளுமைகளை அவர்கள் வாழும் காலத்திலும், மறைந்த போதும் உடனேயே ஊடகப் பரப்புக்கு எடுத்துச் செல்லும் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள். இவரும் இந்த நினைவுப் பகிர்வில் எங்களோடு இணைந்து கொண்டார்.

செங்கை ஆழியானை வானலை வழியாக வழியனுப்பி வைத்தோம். ஆனால் அவர் எங்களுடனேயே இருக்கிறார்.

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலையில் நிகழ்த்திய ஈழத்து செங்கை ஆழியான் நினைவுப் பகிர்வில் இருந்து 


செங்கை ஆழியானின் கண்ட நேர்காணலைக் கேட்க
http://radio.kanapraba.com/interview/sengai.mp3

எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் வழங்கிய அஞ்சலிப் பகிர்வு


எழுத்தாளர் ஜே.கே வழங்கிய அஞ்சலிப் பகிர்வு