" இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்தன. "‏ லெ.முருகபூபதி

.
பிரான்ஸில் வதியும் படைப்பாளி திரு. கோமகன் முருகபூபதியுடன்   நடத்திய  நேர்காணல்  எதுவரை  இணைய  இதழில்  இம்மாதம் வெளியாது அதனை  தமிழ்முரசு  பகிர்ந்துகொள்கிறது. ஈழத்து இபுகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited)  நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி  சமூகஇ கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும் , பின்னர் . 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கு தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைப்பதும், 2011 ஆம் ஆண்டில் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கன.

இதுவரை – சுமையின் பங்காளிகள் (சிறுகதைகள், 1975) ,சமாந்தரங்கள் (சிறுகதைகள், 1986)இ சமதர்ம பூங்காவில் (பயண இலக்கியம்,1990)இநெஞ்சில் நிலைத்த Murugapoopathyநெஞ்சங்கள் (நினைவுகள், 1995)இவெளிச்சம் (சிறுகதைகள்),எங்கள் தேசம் (சிறுகதைகள்),பறவைகள் (நாவல்) , பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்) ,இலக்கிய மடல் (கட்டுரைகள்), சந்திப்பு (நேர்காணல்), கடிதங்கள் (கடிதங்கள்), மல்லிகை ஜீவா நினைவுகள் (நினைவுகள், 2001), ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் (நினைவுகள்) என்று பல நூல்களை எமக்குத் தந்து இருக்கின்றார். நூறுக்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் பத்தி எழுத்துக்களை தொடர்ந்து எழுதிவருகின்றார். இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகியுள்ளன. இதுவரையில் 20 நூல்களை வெளியிட்டுள்ளார்.அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பவற்றை உருவாக்குவதிலும் முன்னின்று உழைத்தவர்.இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஸ்தாபகர் .மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் ,  எதுவரை இதழுக்காக கோமகன் நடாத்திய நேர்காணல் இது …………..


லெ.முருகபூபதி என்பவரின் முகவரிதான் என்ன ?

உலகில் பிறந்த அனைவருக்கும் முகவரி இருக்கிறது. ஆனால், எழுத்தாளன் என்றவுடன் முகவரியின் அர்த்தம் வேறுபடுகிறது. இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. முன்பொருதடவை ஜெயகாந்தனுக்கு ஏதோ ஒரு முக்கிய விருது கிடைத்தபொழுது முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, அவருக்கு வாழ்த்து மடல் அனுப்புவதற்காக அவருடைய முகவரியை கேட்டார்களாம். வழக்கமாக தமது ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு அவரே குரல் கொடுப்பவர். அன்று அவருடைய முகவரியை கேட்டபொழுது, ” உங்கள் தலைவருக்கு முகவரி இருக்கிறதா …? ” என்று எகத்தாளமாக அவர் கேட்டார்.” எழுத்தாளன்” என்ற அடையாளம்தான் எனது முகவரியென்றால், அதனை தக்கவைத்துக் கொள்ளவேண்டியதும் எனது பொறுப்பு. என்னை இந்த உலகிற்குத்தந்த என்னைப்பெற்றவர்கள் .எனது அப்பா லெட்சுமணன் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் பாளையங்கோட்டையிலிருந்து இலங்கைக்கு 1940 களில் வந்துவிட்டார். அம்மா நீர்கொழும்பைச் சேர்ந்தவர். அதனால் நீர்கொழும்பில் தமிழர்கள் முன்னர் இருந்தார்களா…? எனக்கேட்பவர்களும் இன்றும் இருக்கிறார்கள்.அப்பாவின் பூர்வீகம் இந்தியா என்பதால் நான் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானதன் பின்னர், அய்ரோப்பிய நாடொன்றிலிருந்து ஒரு அன்பர்  என்னை “இந்தியாக்காரன்”, ” வடக்கத்தியான்” என்று முகவரி தந்தார்.நீர்கொழும்பிலிருந்தவன் என்ற காரணத்தினாலும் ” நீர்கொழும்பான்” என்றும் மற்றும் ஒரு முகவரி தந்தார்கள்.ஆயினும் நான் நேசிக்கின்ற – என்னை நேசிக்கின்ற இலக்கியவாதிகள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழ்ந்து,” மனிதன் ” என்ற முகவரியைத் தந்திருக்கிறார்கள். அதனை தக்கவைத்துக்கொள்வதுதான் எனது வாழ்வும் பணிகளும்.நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு நான் பிறந்த காலத்தில் அங்கு பெரும்பாலும் கத்தோலிக்க பாடசாலைகள்தான் இருந்தன. அதனால் எங்கள் ஊர் தமிழ் மக்களும் சைவர்களும் செறிந்து வாழ்ந்த கடற்கரைத் தெருவில் பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக அரச மரநிழலில் அமைந்திருந்த இந்து வாலிபர் சங்கத்தின் மண்டபத்தில் 1954 ஆம் ஆண்டு 32 தமிழ்க்குழந்தைகளுக்கு ஒரு விஜயதசமி காலத்தில் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்துஇ விவேகானந்தா வித்தியாலயம் என்ற பாடசாலையை உருவாக்கினார்கள். அந்தப்பாடசாலையின் பதிவேட்டில் எனது பெயர் முதலாவதாக இடம்பெற்றுஇ எனது சேர்விலக்கம் ஒன்று எனக்குறிப்பிடப்பட்டது. அந்தப்பாடசலைக்கு தற்பொழுது வயது 61 வருடம். அந்தப்பாடசாலை இன்றும் எனக்குத்தரும் முகவரி தங்கள் முதல் மாணவன்.அன்று முகாமைத்துவப் பாடசாலைகள்தான் இருந்தன.பாடசாலைகள் அரசுடைமையானதன் பின்னர் ஆறாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தபொழுது எங்கள் ஊரில் மகாவித்தியாலயங்களோ மத்திய மகா வித்தியாலயங்களோ இல்லை. அதனால் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியில் அனுமதி கிடைத்தது.
அப்பா என்னையும் என்னுடன் குறிப்பிட்ட பரீட்சையில் சித்தியடைந்த எனது தாய் மாமா மகன் முருகானந்தனையும் யாழ்ப்பாணம் அழைத்துச்சென்றார். அதுவரையில் நான் பனைமரத்தை படங்களில்தான் பார்த்திருந்தேன். சொந்த பந்தங்கள் இல்லாத அந்த ஊரில் கல்லூரி விடுதி வாழ்க்கை எனக்கு சிறையாகத்தான் இருந்தது. வீட்டுக்கவலையில்(HOME SICK) நாட்கள் மெதுவாக நகர்வதாகத் தெரிந்தது.நீர்கொழும்பில் உயர்தரப்பாடசாலையாக அல். ஹிலால் மகாவித்தியாலயம் தரமுயர்த்தப்பட்டதும் பெற்றவர்களிடம் கண்ணீருடன் மன்றாடி நீர்கொழும்புக்கு மாற்றம் பெற்று வந்துவிட்டோம்.யாழ்ப்பாணத்திலிருந்த அந்த பால்யகாலத்தில்தான் எனக்கு சாதி அமைப்பு பற்றி தெரியவந்தது.ஆனால்இ பின்னாளில் 1970 இற்குப்பிறகு டானியல்இ டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன் ஆகியோரின் படைப்புகளைப்படித்த பின்னர், சாதி அமைப்பு பற்றிய தெளிவு எனக்குள் பிறந்தது. அக்காலப்பகுதியில் நானும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். அப்பொழுது எழுத்தாளன் என்ற முகவரி கிடைத்தது.

ஓர் கடற்கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த உங்களை எழுத்து எப்படி வசீகரித்துக்கொண்டது ?

எனது வீட்டிலிருந்து பார்த்தால் கடல் தெரியும். அலையோசை வீட்டுக்கும் கேட்கும். எனது பால்யகாலம் அந்தக் கடற்கரையில்தான் கழிந்தது. எனதும்இ அயல்வீடுகளின் கடற்தொழிலாளர் குடும்பத்துச் சிறுவர்களினதும் விளையாட்டு மைதானம் அந்தக்கடற்கரைதான். அதனால் அந்த மக்களின் பேச்சுமொழியும் எனக்கு பரிச்சயமானது. இன்று ஊருக்குச் சென்றாலும் எனது பால்யகால நண்பர்களைத் தேடுவேன். சிலர் இறந்துவிட்டார்கள். சிலர் இத்தாலிக்குச்சென்றுவிட்டனர். சிலர் குடும்பஸ்தர்களாகிவிட்டனர்.அம்மக்களின் வாழ்வை அருகிருந்து பார்த்து வளர்ந்திருக்கின்றேன். நடுஇரவில் தாய்மாரும் மனைவிமாரும் அந்த கடற்தொழிலாளர்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு, ஆசிர்வதித்து தொழிலுக்கு அனுப்பும்பொழுது மறுநாள் காலையில் அவர்களின் வள்ளங்களில் மீன் வந்து இறங்கினால் என்ன, இல்லையென்றால் என்ன, அவர்கள் உயிரோடு திரும்பிவிடவேண்டும் என்ற ஆழ்ந்த பிரார்த்தனையுடன் அந்தத் தாய்மாரும் மனைவிமாரும் உறங்குவார்கள். அவர்களின் கண்கள்தான் மூடியிருக்கும். துயில் தொலைந்திருக்கும்.அம்மக்களின் கனவுகள், ஆசைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், பெருமூச்சுக்கள், தோல்விகள், நட்டங்கள், இலாபங்கள், இன்பங்கள் அனைத்தையும் அருகிருந்து பார்த்து வளர்ந்தவன்.எங்கள் வீடும் வறுமைக்கோட்டில் இருந்தமையால், அதிகாலையே எனது அம்மா எழுந்து தோசை, இடியப்பம் தயாரித்து சட்ணி – சம்பலும் வைத்த கடகங்களுடன் பாட்டியையும் அக்காவையும் என்னையும் அனுப்பிவைப்பார். அந்த நெடிய கடற்கரையில் வந்து குவியும் கடற்றொழிலாளர்களின் காலைப்பசி போக்குவதற்காக ஏழு – எட்டு வயதில் அந்தத்தொழில் செய்துவிட்டு வந்துதான் பாடசாலைக்குச்சென்று வந்தேன்.ஒரு தடவை  கொப்பி புத்தகங்கள் வாங்குவதற்கு தவித்தபொழுதுஇ அருகிலிருந்த செபஸ்தியார் தேவாலயத்தின் முன்றலில் எனது பாட்டி எனக்காக கடலை விற்றார்கள். அவ்வாறு படித்து புலமைப்பரிசில் பெற்றுஇ யாழ்.மண்ணுக்கு சென்றாலும் வீட்டின் மீதான நேசத்தால் — எங்கள் ஊரின் பாசத்தால் ஓடிவந்துவிட்டேன்.எங்கள் நெய்தல் மண்ணின் மக்களின் வாழ்வை சித்திரித்த எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் 1972 இல் மல்லிகையில் வெளியானது.அதன்பின்னர் தொடர்ந்து மல்லிகையிலும் பூரணி, புதுயுகம் முதலானவற்றிலும் எழுதினேன். முதல் தொகுதி சுமையின் பங்காளிகள் 1975 இல் வெளியானபொழுது, அந்த நூலின்வெளியீட்டுவிழாவை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஒழுங்குசெய்துவிட்டு, என்னை யாழ்ப்பாணம் அழைத்தார் நண்பர் மல்லிகை ஜீவா. சுமையின்பங்காளிகள் தொகுப்பில் ஏழு கதைகள் அம்மக்களைப்பற்றியது.1964 இல் ஒரு கல்லூரி மாணவனாக எனது ஊரைவிட்டு யாழ்ப்பாணம் சென்றுஇ இரண்டு வருடத்தில் திரும்பி வந்து, சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் அந்த மண்ணுக்கு (1975) ஒரு எழுத்தாளன் என்ற அடையாளத்துடன் – முகவரியுடன் சென்றேன்.சுமையின் பங்காளிகள் தொகுதிக்கு 1976 இல் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.நீங்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்ததின் பின்னர் உங்களுடைய இலக்கியப்பணிகள் மற்றும் சமூகப்பணிகள் எப்படியாக இருந்தன ?


எனக்கு எங்கள் தாயகத்தை விட்டுச்செல்லும் எண்ணம் ஒருபோதும் இருக்கவில்லை. 1983 வன்செயலுக்குப்பின்னர் தமிழ்நாட்டிலிருந்த எமது உறவினர் மூத்த படைப்பாளிஇ பாரதி இயல்ஆய்வாளர் (அமரர்) தொ.மு.சி. ரகுநாதன் உட்பட பலர் எம்மை அங்கு வந்துவிடுமாறுதான் அழைத்தார்கள். அவர்களின் அழைப்பை மதித்து அங்குள்ள நிலைமைகளையும் அறிவதற்காக தமிழ்நாடு சென்றேன். ஏற்கனவே ரகுநாதனும் (புதுமைப்பித்தனின் நண்பர் ) அவருடைய அண்ணன் பாஸ்கரத் தொண்டமானும் ( கல்கி கிருஷ்ணமூர்த்தி, இரசிகமணி டி.கே.சி ஆகியோரின் நெருங்கிய நண்பர்) இலங்கையில் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றவர்கள்தான்.இலங்கையில் இனக்கலவரம் என்பது கலையும் மேகங்கள் (Passing Clouds) போன்றவைதான் என்ற தெளிவு வந்தவேளையில் நான் எழுத்தாளனாகவும் ஊடகவியலாளனாகவும் இருந்தேன்.ஆயினும் , இடதுசாரிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து இயங்கியமையாலும், 1971 இல் கைதான சிங்கள இளைஞர்களை விடுவிக்கும் அரசியல் கைதிகளை விடுலை செய்யக்கோரும் அறப்போராட்டங்களில் கலந்துகொண்டதாலும்இ யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதைக் கண்டித்து தென்னிலங்கையில் சில இயக்கங்களில் ஈடுபட்டதாலும், வீரகேசரியில் ஒரு செய்தியை எழுதியதனால் நேர்ந்த நெருக்கடிகளினாலும் சில தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாலும் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தமையாலும் நாட்டைவிட்டு வெளியேறினேன்.

1_murugapoopathy554 ஏன் அவ்வாறு வெளியேறினேன் என்பதை ஏற்கனவே எழுதியிருக்கும் பத்திகளிலும் எனது சொல்ல மறந்த கதை நூலிலும் விரிவாகச் சொல்லியிருக்கின்றேன்.
வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்தில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் சம்பந்தமான செய்திகளையே தொடர்ந்து எழுதியமையால் தினமும் அழுத்தங்களையும் எதிர்நோக்க நேரிட்டது. அந்தப்போரின் இறுதியில் பெரிதும் பாதிக்கப்படப்போகிறவர்கள் குழந்தைகளும் பெண்களும்தான் என்ற தெளிவும் வந்துவிட்டது. இயக்கங்களுக்கிடையில் மோதல். டெலோ தலைவர் ஸ்ரீசபாரத்தினமும் அந்த இயக்கமும் அழிக்கப்பட்ட செய்திகள், வி. தருமலிங்கம், ஆலாலசுந்தரம் , யாழ். அரச அதிபர் பஞ்சலிங்கம், மட்டக்களப்பு அரச அதிபர் அந்தோனி முத்து உட்பட பலர் கொல்லப்பட்ட செய்திகளையெல்லாம் எழுதியிருக்கின்றேன்.புலிகள் கண்ணி வெடித்தாக்குதலை நடத்திவிட்டு மறைந்துவிடுவார்கள். இராணுவம் திரண்டு வந்து அப்பாவி மக்களின் உயிரைக்குடிக்கும். இந்த விளையாட்டுச் செய்திகள்தான் (?) எங்கள் பத்திரிகையின் தலைப்பிலும் இதர பக்கங்களிலும் ஆக்கிரமித்திருக்கும்.

அந்தப்போரில் எந்தத்தரப்பும் என்றைக்கும் வெற்றிபெறமாட்டாது என்பதை 1987 இற்கு முன்னரே தெரிந்துகொண்ட தீர்க்கதரிசனம் இருந்தது.
2009 மே மாதத்துடன் புலிகள் தோற்று, அரசு வென்றுவிட்டதாகத்தான் சொல்வார்கள். அரசும் வெல்லவில்லை. அந்த அரசு மக்களின் மனங்களை வென்றதா….?
அவுஸ்திரேலியாவுக்கு தனித்துத்தான் வந்தேன். அப்பொழுது எனது மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. அவள் வயிற்றில் மூன்றாவது குழந்தை. அப்பொழுது அங்கு சில இயக்கங்களுடன் இணைந்திருந்தேன்.” ஊருக்குச்செய்தது போதும். எங்காவது தப்பிச்சென்று பிள்ளைகளின் தந்தையாகவாவது இருக்கப்பார் ” என்றுதான் அம்மா கண்ணீருடன் விடைகொடுத்தார்.எனது அம்மாவைப்போன்று ஆயிரக்கணக்கான அம்மாமார் வடக்கிலும் கிழக்கிலும் இ ஏன் தென்னிலங்கையிலும் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்கள். அன்று எனது பால்யகாலத்தில் கொப்பி, புத்தகங்கள் வாங்குவதற்காக எனது பாட்டி கடலை விற்றதுதான் நினைவுக்கு வந்தது.

நீடித்த போரில் தந்தைமாரை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்கி அதில் நண்பர்களையும் இணைத்தேன். வவுனியாவில் எனக்கு நன்கு தெரிந்த ஒரு மாணவிக்கு உதவும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு மேலும் பல மாணவர்களின் விபரங்களை சேகரித்து உதவும் அன்பர்களையும் திரட்டிக்கொண்டுஇ இலங்கை மாணவர் கல்வி நிதியம் (CEYLON STUDENTS EDUCATIONAL FUND)  என்ற அமைப்பை ஸ்தாபித்தேன். இந்த அமைப்பு தனது பணியில் 27 ஆண்டுகளை நிறைவுசெய்து தொடர்ந்தும் இயங்குகிறது.அன்று நான் உதவி செய்த தந்தையற்ற மாணவிஇ இன்று வவுனியாவில் ஒரு பாடசாலையின் அதிபர். சிறந்த அதிபருக்கான அரச விருதையும் பெற்றுள்ளார்.அதுபோன்று எம்முடன் இணைந்த நூற்றுக்கணக்கான அன்பர்களினால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தார்கள். இன்றும் எமது அமைப்பின் ஊடாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் உதவிவருகின்றோம். போர் முடிவுக்கு வந்ததும் வருடம்தோறும் அங்கு சென்று எமது மாணவர்களை நேருக்கு நேர் சந்தித்து வருகின்றேன். இந்தப்பணியில் பலரும் இணைந்துள்ளார்கள்.1988 – 89 காலகட்டத்தில் இதனையும் விமர்சித்துஇ விரைவில் தமிழ் ஈழம் மலர்ந்துவிடும்இ அதனால் இந்தப்பணி வீண் முயற்சி எனச்சொன்னவர்களையும் நான் மறக்கவில்லை.

எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி சமாந்தரங்கள் 1989 இல் தமிழ்நாடு தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது. அதற்கு மெல்பனில் வெளியீட்டு விழா நடத்தி, அதில் கிடைத்த நிதியையும் எமது கல்வி நிதியத்திற்கே வழங்கினேன். அந்த விழாவில்தான் மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை முதல் முதலில் அவுஸ்திரேலியா மேடையில் தோன்றினார். அன்றுதான் அவர் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற வார்த்தையை முன்மொழிந்தார். அந்த நிகழ்வே அவுஸ்திரேலியாவில் நடந்த முதலாவது தமிழ் நூல் வெளியீட்டு இலக்கிய விழாவாகும்.தனிமரம் தோப்பாகாது என்பார்கள். அதன்பின்னர் இங்கு வருகைதந்த இலக்கியவாதிகளுக்கும் முன்மாதிரியாக இயங்கநேர்ந்தது.

அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பவற்றை உருவாக்குவதிலும் முன்னின்று உழைத்தேன். இலக்கிய கலைச்சங்கம் 2001 முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் தங்கு தடையின்றி நடத்திவருகிறது.கடந்த 2015 நவம்பர் மாதம் 15 ஆவது எழுத்தாளர் விழா நடந்தது. இலக்கியப்பணியும் இலங்கை மாணவர்களுக்கான கல்விப்பணியும் எனது இரண்டு கண்கள். எனது இலக்கிய சமூகப்பணிகளுக்காக அவுஸ்திரேலியா அரசின் சிறந்த பிரஜைக்கான (Best Citizen Award) விருதும் விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருதும்இ வேறும் சில தமிழ் அமைப்புகளின் விருதுகளும் தரப்பட்டது. இந்த விருதுகளுக்காக நான் இயங்கவில்லை. படைப்பாளியும் பத்திரிகையாளனும் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் நிற்கவேண்டும். இவர்கள் சமூகத்திற்காக பேசவேண்டியவர்கள். அத்துடன் சமூகத்தையும் பேசவைப்பவர்கள்.நீங்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தேசியசபைஉறுப்பினராக இருந்திருக்கின்றீர்கள் அந்தக் காலகட்ட உங்கள் பணி எப்படியாக இருந்தது ?

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கென நீண்ட வரலாறு இருக்கிறது. மூத்த படைப்பாளிஇ எனது இனிய நண்பர் இளங்கீரன் சங்கத்தின் வரலாறையே எழுதியவர்.
அதன் ஸ்தாபகர் தலாத்து ஓயா கணேஷ் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கைலாசபதிஇ சிவத்தம்பிஇ சோமகாந்தன், சமீம், இளங்கீரன், நீர்வை பொன்னையன், டொமினிக்ஜீவா கவிஞர் முருகையன், காவலூர் ராஜதுரை மற்றும் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன். சர்வதேச செயலாளர் ராஜஸ்ரீகாந்தன் உட்பட சங்கத்தில் இணைந்திருந்த தெணியான், திக்குவல்லை கமால், சாந்தன், நுஃமான், மௌனகுரு, மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மேமன் கவி உட்பட பலரும் எனது இனிய நண்பர்கள். அதிலிருந்து முன்னரே வெளியேறிய டானியல்,ரகுநாதன், சில்லையூர் செல்வராசன் — நற்போக்கு இலக்கிய முகாம் என்று வீம்புக்கு ஏதோ அமைத்த எஸ்.பொ. அனைவரும் எனது நண்பர்கள்தான். இவர்களில் சிலர் இன்றில்லை. இவர்கள் பற்றியெல்லாம் தனித்தனிக்கட்டுரைகளும் ஏற்கனவே எழுதிவிட்டேன். அவர்களின் பணிகள் போற்றுதலுக்குரியவை.

ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரமாகத் திகழ்ந்தவர்கள். சித்தாந்த முரண்பாடுகளும் — வழக்கமாக எமது எழுத்தாளர்களுக்குள்ள தன்முனைப்பு ஆணவமும் இருந்தபோதிலும் பொதுவாகவே அவர்கள் அனைவரும் பெறுமதியானவர்கள்.தேசிய ஒருமைப்பாடு மாநாடு , வெள்ளிவிழா கருத்தரங்கு, பாரதி நூற்றாண்டுவிழா, எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், சிங்களப்பிரதேசங்களில் தமிழ் – முஸ்லிம் சிறுபான்மை மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட கருத்தரங்குகள் – கூட்டங்கள்இ மொழிபெயர்ப்பு பணிகள் கொழும்பில் மாதாந்தக் கருத்தரங்குஇ யாழ்ப்பாணத்தில்  1986 ஆம் ஆண்டில்இ நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்திய மாநாடு உட்பட யாவற்றிலும் சங்கத்துடன் இணைந்தே பயணித்தேன். வேலை தேடும் படலத்திலிருந்த 1975 – 1977 காலகட்டத்தில் சங்கத்தின் முழுநேர ஊழியராகவும் இருந்தேன். எனது பஸ் போக்குவரத்து செலவுக்கு சங்கம் மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தது.

எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் மூன்று நூல்களும் வெளியிட்டோம். பாரதி நூற்றாண்டு (1982-1983) காலத்தில் பாரதியின் சில கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்க்கச்செய்து வெளியிட்டோம். அவ்வேளையில் கொழும்பில் இலங்கை எழுத்தாளர்களின் ஒளிப்படக் கண்காட்சியும் பாரதி நூல்களின் கண்காட்சியும் இ நாடு தழுவிய ரீதியில் பாரதி விழாக்களையும் நடத்திஇ தமிழ் நாட்டிலிருந்து பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன்இ சிதம்பர ரகுநாதன்இ ராஜம்கிருஷ்ணன் ஆகியோரையும் அழைத்தோம். யாழ். பல்கலைக்கழகத்திலும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திலும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திலும் நூல் நிலைய மண்டபத்திலும் ஆசிரியப் பயிற்சிக்கலாசாலையிலும் கல்முனையிலும் அட்டாளைச்சேனையிலும் கண்டியிலும் நிகழ்ச்சிகளை நடத்தினோம். இந்தப்பயணங்களில் தமிழக எழுத்தாளர்களுடன் இணைந்திருந்து வழிகாட்டியாகவும் இயங்கினேன்.அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் வரும்வரையில் சங்கத்தின் கொழும்புக்கிளையின் செயலாளராகவும் இருந்தேன்.
சுருக்கமாகச்சொன்னால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனது மற்றும் ஒரு தாய்வீடு.

இலக்கியத்தில் “துடக்கு ” பார்ப்பவர்கள் பற்றிய உங்கள் அவதானம் எப்படியாக இருக்கின்றது ?

இது சுவாரஸ்யமான கேள்வி. துடக்கு என்ற சொல்லை எனது பால்யகாலத்தில்தான் அறிந்தேன். வீட்டில் நல்லது நடந்தாலும் துடக்கு. துயரம் நிகழ்ந்தாலும் துடக்கு. அதாவது தாத்தா இறந்தபொழுது சில நாட்கள் பாட்டியும் அம்மாவும் கோயில்பக்கம் செல்லவில்லை. எங்களையும் தடுத்தார்கள். பின்னர் அம்மாவுக்கு தம்பி பிறந்தபொழுதும் பாட்டி என்னை கோயில்பக்கம் அனுப்பவில்லை. அக்கா சடங்கானபொழுதும் இதுதான் நடந்தது. நானும் கோயில் பக்கம் செல்லவிரும்பியது பக்தியினால் அல்ல. அங்கு கிடைக்கும் கடலைஇ வடைஇ மோதகத்திற்காகத்தான். இலக்கியப்பிரவேசம் செய்தபின்னர் அங்கும் இவ்வாறு துடக்கு பார்க்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது. இலக்கியத்திலும் நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் அந்த மரபு இரண்டிலும் இருக்கிறது. தம்மை சார்ந்தவர் என்பதற்காக அவர் எழுதியது தரமற்றதாயிருந்தாலும் ஏற்று அங்கீகரித்து உச்சாணிக்கொம்பில் ஏற்றுவார்கள். தரமாயிருந்தாலும் தம்மைச்சாராதவர் என்பதற்காக புறக்கணிப்பு நாடகம் நடத்துபவர்களும் இருந்தார்கள். இலங்கையில் மறுமலர்ச்சி காலம் முதல் பண்டிதத் தமிழ் – இழிசனர் வழக்கு மோதல்காலத்திலும்இ பின்னாளில் முற்போக்கு – நற்போக்கு – உட்பட மாஸ்கோ – பீக்கிங் என்று அணிதிரட்டிய காலத்திலும் இந்தத் துடக்கு பார்க்கும் மரபு நீடித்திருந்தது. ஈழ இயக்கங்கள் ஆயுதம் ஏந்தியதும் அனைவரும் மௌனித்துவிட்டு துடக்கு பார்க்கும் மரபில் மாற்றத்தை கொண்டுவந்தனர்.

L.Murugapoopathy2014

சுந்தரராமசாமி மறைந்தபொழுது அவருக்காக அஞ்சலிக்கட்டுரை வெளியிடுவதற்கு மல்லிகை ஜீவா மறுத்தார். செங்கைஆழியானும் அதனை ஆமோதித்தார். காரணம் சு.ரா. இவர்களை கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான். சு.ரா. சென்னையில் நடத்திய தமிழ் இனி மாநாட்டில் ஜீவாவை கண்டுகொள்ளவில்லை என்பதும் பிரதான காரணம். எஸ்.பொஇஇ மகாகவி உருத்திரமூர்த்தி முதலானோரை சாகித்திய மண்டலக்குழு கவனத்தில் கொள்ளவில்லை. முற்போக்கிற்கும் நற்போக்கிற்கும் இடையே மு.தளையசிங்கம் தெளிவைத்தேடினார். அவர் புதிய போக்கினை அறிமுகப்படுத்தினார்.இந்தத்துடக்கு பார்க்கும் இயல்புதான் இறுதியில் குழுவாதங்களாக மாறியது. அனைத்துக்குழுக்களில் இருந்தவர்களுடனும் எனக்கு சிநேகபூர்வமான உறவு நீடித்தது. இவர்கள் அனைவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் இலக்கிய இயக்கத்தில் இயங்குகின்றேன். முரண்பாடுகள் மனிதர்களின் மேன்மையை இனம்காண்பதில் தவறிழைத்துவிடக்கூடாது என்பதும் எனது வாதம்.

நையாண்டி எழுத்துக்கள் அல்லது பத்திகள் ஏன் இன்னும் ஓர் இலக்கிய வகையினுள் அடக்கப்படவில்லை ?

நையாண்டி எழுத்துக்களை அங்கதச்சுவையூட்டும் எழுத்து எனவும் பத்தியை அதனை எழுதுபவரின் கருத்தியல் சார்ந்த எழுத்து எனவும் வகைப்படுத்தலாம்.அரசியல்இ சமூகம்இ பொருளாதாரத்தையும் உலக விவகாரங்களையும் விஞ்ஞானத்தையும் இயற்கையையும் கூட கேலிச்சித்திரத்தில் நையாண்டி செய்யமுடிகிறது. அந்தநையாண்டிச்சித்திரங்கள் கருத்தையும் கண்ணையும் கவரும். பத்திகளை எழுதி அதிலும் எமக்கு முன்னுதாரணமாகத்திகழ்ந்தவர் பாரதி.அவர் மீது அடக்குமுறை நிபந்தனைகளை விதித்தபொழுது பத்திகளை சுதேசமித்திரனில் அவர் எழுதியிருப்பதாக பாரதி இயல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கூர்ந்து கவனித்தால் பத்தி எழுத்துக்களும் ஒருவகை இலக்கியம்தான்.
இன்று பலரும் இவ்வாறு எழுதுகின்றனர். பத்திகளுக்கு புனைவுக்கட்டுரை என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நண்பர் கே.எஸ். சிவகுமாரன்தான் இந்த பத்தி என்ற சொல்லை ஊடகங்களில் அறிமுகப்படுத்தினார். தமிழில் பாரதி முதல் இன்று எழுதும் பலர்வரையில் பத்தி எழுத்துக்களும் எழுதிவருகின்றனர். சிறுகதைகளை படிக்கும் ஆர்வத்திலும் பார்க்க பத்தி எழுத்துக்களில் ஆர்வம் வாசகர்களுக்கு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்வேன். பலரிடமிருக்கும் வலைப்பதிவுகள் பத்திகளைத்தான் தருகின்றன. அவற்றிலும் நையாண்டி என்ற அங்கதம் இருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக உடல் ,உள ரீதியாக சித்திரவதைக்குள்ளான ஒரு இனம்,   சித்திரவதைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசியல் அதிகாரத்தினை வைத்துள்ள  ஓரு  இனத்துடன்  எப்படி சமாதானமாக வாழ முடியும் என சிலர் வாதிடுகின்றனரே?

இலங்கையில் தமிழர் சரித்திரத்தை திரும்பிப்பார்த்தால்இ நீண்ட காலமாக தமிழ் இனத்துக்குள்ளேயே மேட்டுக்குடியினரால் சித்திரவதைக்குள்ளான தமிழ்மக்கள் பற்றி நான் புதிதாக ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. வடபுலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடந்த சித்திரவதைகள்இ உடல் உளவியல் ரீதியான தாக்குதல்கள்இ மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாகச்சொல்லமுடியும். சங்கிலியன் காலத்திலிருந்தே எத்தனையோ சித்திரவதைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்தார்கள். இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. காதல் திருமணங்கள்இ சிந்தனை மாற்றங்கள் இனம்இ மொழி மாறி நிகழும் திருமண பந்தங்கள் தொடருகின்றன.
அப்படியிருக்கும்பொழுது சிங்கள பெரும்பான்மை இனம்தான் தமிழினத்தை சித்திரவதைசெய்தது என்று மேம்போக்காக சொல்லிவிடத்தான் முடியுமா…? கலவர காலத்தில் தமிழர்களை காப்பாற்றிய சிங்களவர்களும் இருக்கிறார்கள். புலிகள் டெலோ இயக்கத்தை அழித்தபோது புலிகளுக்கு கொக்காகோலா கொடுத்து உபசரித்த தமிழர்களும் இருக்கிறார்கள்.இலங்கையையும் இந்தியாவையும் அடிமைப்படுத்திவைத்திருந்த பிரிட்டிஷ் தேசத்தின் பிரஜைகளுடன் எம்மவர்கள் இணைந்து வாழ்கிறார்கள். இனங்களை பிரித்தாண்டவர்கள் யார்… அதன்மூலம் ஆதாயம் பெற்றவர்கள் யார் என்ற தெளிவுள்ளவர்கள் சமாதானத்தை சார்ந்துதான் சிந்திப்பார்கள். இயங்குவார்கள்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் எல்லாத்தரப்பு படைப்புகளையும் அதிகளவு வாசித்துப் பரந்துபட்ட வாசிப்பனுபவத்தில் இருந்தவர்களை இலக்கியத்தைத் தரம் பிரிக்கின்றோம்  என்று ஒரு சிலர் முற்றுமுழுதாக மாற்றியமைத்து விட்டார்கள் என்ற பலத்த குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. இதுபற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது ?

இங்கும் விமர்சகர்கள்தான் அந்தக்குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். சமீபகாலமாக இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் சிலர் தமக்குப்பிடித்தமான சிறுகதைஇ நாவல்இ பிடித்தமான படைப்பாளி என்று தரம்பிரித்து இனம்காட்டிவருகின்றனர்.பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் தெளிவத்தை ஜோசப் நல்லதொரு பணியைச்செய்தார். பழைய தரமான சிறுகதைகளைத் தெரிவுசெய்து அதனை எழுதிய படைப்பாளிபற்றிய அறிமுகத்துடன் மறுபிரசுரம் செய்வித்தார். மூத்த இலக்கிய விமர்சகர். க.நா.சுப்பிரமணியம் (க.நா.சு.) படித்திருக்கிறீர்களா…? என்ற தலைப்பில் சிறந்த சிறுகதைகளை நாவல்களையெல்லாம் வாசித்து தனது வாசிப்பு அனுபவத்தை பதிவுசெய்தார். அதில் அவர் காய்தல் உவத்தல் பார்க்கவில்லை. வாசிப்பும் அனுபவம் சார்ந்தது. ஒரு காலகட்டத்தில் விரும்பிப்படிக்கப்பட்டவரின் இடத்துக்கு மற்றுமொருவர் வந்துவிடுவார். இலக்கியத்தில் ருசிபேதம் தவிர்க்கமுடியாதது. தேர்ந்த வாசகனை விமர்சகர்களின் முன்தீர்மானங்கள் எதுவும் செய்துவிடாது. ஒரு படைப்பு குறித்து ஜெயமோகன் மதிப்பீட்டுக்கும் அதே படைப்பு குறித்து சாருநிவேதிதாவின் மதிப்பீட்டுக்கும் வித்தியாசம் இருக்கும். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறிக்குறிப்பு பற்றி நான் எனது வாசிப்பு அனுபவத்தை பதிவுசெய்தபொழுது மற்றும் ஒருவர் அதற்கு மாறாக கருத்துச்சொன்னார். அவ்வாறே சமீபத்தில் நான் படித்த ஷோபா சக்தியின் பொக்ஸ் பற்றி அவுஸ்திரேலியாவுக்கு தற்காலிக பயணம் வந்த ஒரு ஈழத்து திறனாய்வாளர் மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருந்தார். எனவே தரம்பிரித்தல் என்பது வாசிப்பு அனுபவம் சார்ந்தது. இதுகுறித்து நாம் அலட்டிக்கொள்வது அவசியமற்றது.

ஓர் இலக்கியப் பிரபலத்தின் முன்னுரையுடன் தங்கள் படைப்புகளை பொதுவெளிக்குக் கொண்டுவரும்  போக்கு ஓர் ஆரோக்கியமான சூழல் என்று எண்ணுகின்றீர்களா ?

பிரபலங்களின் முன்னுரையுடன் தமது நூல்களை வெளியிட்டவர்கள் இன்று நேற்றல்லஇ முன்னரும் இருந்தார்கள். இந்த மரபு இலக்கிய உலகில் நீடித்திருந்தது. ஜெயகாந்தனின் ஒருபிடி சோறு சிறுகதைத்தொகுதி மாத்திரமே தி.ஜ.ர.வின் முன்னுரையுடன் வந்தது. தி.ஜ.ர. தேர்ந்த இலக்கியவிமர்சகர். ஜெயகாந்தன் அதற்கு முன்னும் பின்னரும் தமது அனைத்து நூல்களுக்கும் தாமே முன்னுரை எழுதினார். எஸ்.பொ. தமது முன்னுரையை முன்னீடு என்ற தலைப்பில் எழுதினார். ஆனால்இ அவரும் தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு தமிழக முன்னணி படைப்பாளிகளின் முன்னுரைகளை கேட்டுப்பெற்றார்.செ.கணேசலிங்கனின் சடங்கு நாவலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி முன்னுரை எழுதினார். அவருடைய மற்றும் ஒரு பெரிய நாவல் செவ்வானம். அதற்கு பேராசிரியர் க. கைலாசபதி நீண்ட முன்னுரை எழுதினார். அதுவே பின்னர் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிந்த நூலாகியது. ஆனால்இ அந்த நூல் வெங்கட்சாமிநாதனால் ” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து ஒரு குரல் ” என்று பரிகசிக்கப்பட்டது.
முன்னர் சாகித்திய விருது கிடைக்கவேண்டும் என்பதற்காக பிரபலங்களிடம் முன்னுரை கேட்டவர்கள் இருந்தார்கள். பொதுவாக ஆரம்ப கட்டத்திலிருப்பவர்களுக்கு அத்தகைய அங்கீகாரம் தேவைதான்இஅதனால் தவறில்லை. முன்னுரைகள் இலக்கிய ஆரோக்கியத்திற்கு பாதகம் செய்யாது. இதுவரையில் எனது நூல்கள் வேறு எவரினதும் முன்னுரைகளுடன் வெளியாகவில்லை. சிலருடைய கருத்துக்களைத்தொகுத்து பதிவுசெய்துள்ளேன்.

தமிழ் இலக்கியப்பரப்பில் அன்றில் இருந்து இன்றுவரை குழுமச்செயற்பாடுகள் இருந்துவந்து இருக்கின்றன. அதன் தொடராக இலக்கிய சண்டித்தனங்களும் இருந்திருக்கின்றன. இந்த இலக்கிய சண்டியர்கள் படைப்புகளை தரம் பிரிக்கின்றார்கள். இப்படியான செயல்பாடுகள் தமிழ் இலக்கியப்பரப்பை முன்நோக்கி நகர்த்தி இருக்கின்றனவா?

தற்காலத்தில் முகநூல் சண்டியர்களும் பெருகியிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. குழுமச்செயற்பாடுகள் இலக்கியத்தில் மட்டுமல்லஇ அரசியல் கட்சிகளில் அரசாங்கங்களில்இ வெகுஜன அமைப்புகளில் எல்லாம் விசாலித்திருக்கிறது. சமூகத்தில் இது தவிர்க்கமுடியாதது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்களேஇஅவ்வாறுதான். சண்டித்தனம் நிரந்தரமற்றது என்பதற்கு இலங்கை அரசியல் களம் சிறந்த சான்று. அவ்வாறே இலக்கியச்சண்டித்தனங்களும் கலையும் மேகங்கள்தான். முன்னர் இலங்கையில் எமது எழுத்தாளர்கள் கூழ்முட்டை எறிந்தும் சண்டித்தனம் காட்டியவர்கள்தான். தொழில்புரியும் இடத்தில் சகஊழியரைத்தாக்கிய இலக்கியவாதிஇ பிறிதொருசந்தர்ப்பத்தில் இலக்கியச்சண்டித்தனத்தை கண்டித்து எழுதிய கதைகளும் அறிவேன்.இலக்கிய நிகழ்வுகளுக்கு அன்பர்களை செல்லவிடாமல் தடுக்கும் நபுஞ்சகர்கள் இ தெரிவுசெய்த மண்டபத்தை அழுத்தங்கள் பிரயோகித்து சந்திப்பு நடத்த அனுமதிக்கவேண்டாம் என வலியுறுத்தும் சண்டியர்கள்இ பொய் அவதூறுகள் பரப்பி மக்களை குழப்பும் புளுகர்கள் பெருகியிருக்கிறார்கள். அவ்வாறு செய்பவர்கள் மீது அனுதாபம் கொள்ளமுடியும். மனநோயாளர் மீது கோபிக்கமுடியுமா…?அய்ரோப்பாவில் சந்திப்புகளிலும் சண்டித்தனங்கள் தலைதூக்கியதாக அறிகின்றேன். சண்டித்தனத்தில் நேரடியாக ஈடுபடாமல் புனைபெயர்களில் மறைந்திருந்து எழுத்தின் ஊடாக சண்டித்தனம் காட்டும் அவலமும் தொடர்கிறது. விரக்தியின் விளிம்பிற்குச்செல்லும் இயலாமைதான் சண்டித்தனம். ஆனால் நிலைத்து நிற்காது. காலம் அவர்களை புறக்கணித்துவிடும். சண்டியர்களினால் தமிழ் இலக்கியப்பரப்பை முன்னோக்கி நகர்த்த முடியாது. அத்தகையோர்தான் நகரமுடியாமல் முடங்கிப்போவார்கள். தரமான படைப்பு காலத்தையும் வென்று வாழும்.

 மறைந்த எஸ் பொ அவர்களுடனான உங்களுடைய தொடர்பு எப்படியாக இருந்தது ?

எஸ்.பொ. அவர்கள் 1960 களில் எமது நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் நடந்த தமிழ் விழாவுக்கு வரும்பொழுது நான் சிறுவன். அவருடன் கனகசெந்திநாதன்இ இளம்பிறை ரஹ்மான்இ ஏ.ரி. பொன்னுத்துரைஇ வி. கந்தவனம் ஆகியோர் வந்தார்கள். நான் வேடிக்கை பார்க்கச்சென்றேன். ஆனால்இ பிற்காலத்தில் அவர்கள் எனது நண்பர்களாவார்கள் என்றுஇஅன்று கனவிலும் நினைத்திருக்கமாட்டேன். 1970 இற்குப்பின்னர் இலக்கியப்பிரதிகளை படிக்கத் தொடங்கியதும்இ எனது வீட்டில் வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களை இணைத்தேன். அதற்கு நூல்கள் வாங்குவதற்காக கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் அமைந்த இளம்பிறை இதழ் வெளியாகும்இ மற்றும் அரசு வெளியீட்டகம் அமைந்த ரெயின்போ அச்சகத்திலிருந்து அரசு வெளியீடுகளான மு.தளையசிங்கத்தின் புதுயுகம் பிறக்கிறதுஇ இரசிகமணி கனகசெந்திநாதனின் வெண்சங்குஇ ஈழத்து இலக்கிய வளர்ச்சிஇ எஸ்.பொ.வின் சடங்குஇ தீ நாவல்கள் – அகஸ்தியரின் நீ உணர்வூற்று உருவகச்சித்திரம்இ ரஹ்மானின் நூல்கள் முதலானவற்றை வாங்கினேன். அங்குதான் எஸ்.பொ.வும் இருக்கிறார் என்பது அறிந்துஇ 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்று அவரைச்சந்தித்தேன். அன்று அவர் அறிமுகமான காட்சி இன்றும் எனது மனக்கண்ணில் வாழ்கிறது.

அச்சிடவந்த காகிதக் கட்டுக்களின் மீதமர்ந்து பீடி புகைத்தவாறுஇ தலைகவிழ்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் மப்பில் இருந்தாலும் மிகவும் தெளிவாகவும் பேசினார். அவரை நாம் மாஸ்டர் என்றுதான் அழைப்போம். அப்பொழுது தகழி சிவசங்கரன் பிள்ளையும் பீடிதான் புகைப்பார் என்று சொன்னார். அன்று தொடங்கிய அவருடனான நட்புறவு 2010 நடுப்பகுதிவரையில்தான் தொடர்ந்தது.அவரை அந்த அச்சகத்திலும்இ கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அமைந்த வீதியில் இருந்த கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் சந்திப்பேன். நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்தாலும் என்னுடன் நேசமாகத்தான் பழகுவார். எச்சந்தர்ப்பத்திலும் முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றி அக்காலத்தில் என்னிடம் அவர் குறைசொல்லவில்லை. நான் இளம் தலைமுறையென்பதனால் அந்தப்பிரச்சினைகளில் நான் சிக்கிவிடக்கூடாது என்ற அவதானம் அப்பொழுது அவரிடம் இருந்தது.

அவர் நைஜீரியாவுக்கு செல்வதற்கு தயாரானபொழுது ஜம்பட்டா வீதியில் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் பிரிவுபசார தேநீர் விருந்து நடந்தது. நானும் நண்பர்கள் மு.கனகராஜன்இ தெளிவத்தை ஜோசப் ஆகியோர் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினோம்.பின்னர் ஒரு விடுமுறை காலத்தில் கொழும்புக்கு அவர் வந்தபொழுது என்னையும் சந்திக்க வீரகேசரிக்கு வந்தார். எனக்கு பேட்டியும் தந்தார். ஆபிரிக்காவில் தவம் என்ற கட்டுரையின் முதல் அத்தியாயமும் தந்தார். நானும் 1987 இல் அவுஸ்திரேலியா வந்துவிட்டேன். ஆனால்இ அவருக்குத்தெரியாது.நைஜீரியாவுக்கு நிரந்தரமாக விடைகொடுத்த பின்னர் ( அவர் மொழியில் நைஜீரியாவுக்கு லாலி பாடியபின்னர் ) வீரகேசரிக்குச் சென்று என்னைத்தேடியுள்ளார். நான் அவுஸ்திரேலியாவில் என்பது அறிந்துஇ எமது வாரவெளியீட்டு ஆசிரியர் பொன். ராஜகோபாலிடம் எனது முகவரியை பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியாவில் சிட்னிக்கு வந்ததும் கடிதம் எழுதினார். அந்தக்கடிதம் இன்றும் என்னிடம் இருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் வாழ்க்கை அவருக்கு சிறைக்கூடம்தான். நைஜீரியாவில் தனது சுதந்திரம் பற்றி எழுதியிருந்தார். எதிர்காலம் குறித்து அவருக்கு கவலைகள் இருந்தன. அவருடைய மகன் மித்ரவும் கொல்லப்பட்டதன் பின்னர் அந்தத்தாக்கமும் அவருக்கு இருந்தது. எழுத்திலும் நாட்டம் குறைந்திருந்தது.அப்பொழுது 1989 ஆம் ஆண்டு எனது சமாந்தரங்கள் நூல் வெளியீட்டுக்கு அவரை அழைத்துப்பேசவைத்து உற்சாகமூட்டினேன். அந்த நூலுக்கு விமர்சனமும் எழுதினார். அது அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளியான நண்பர் மு.பொன்னம்பலம் ஆசிரியராக இருந்த திசைகள் இதழில் வெளியானது. அவர் மெல்பனிலிருந்து வெளியான இரண்டு இலக்கிய இதழ்களுக்கு பெயர் சூட்டினார்.ஒன்று மரபு. மற்றது அக்கினிக்குஞ்சு. அக்கினிக்குஞ்சு இதழில் அவர் ஆலோசகர். மரபு இதழில் நனவிடை தோய்தல் தொடர் எழுதினார்.அவர் மகன் மித்ரவும் இயக்கத்திலிருந்து பலியானவர் என்ற தகவல் அறிந்த மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் அவரையும் மாவீரர் குடும்பத்தவராக்கினர். மறுவருடம் அவரை மாவீரர் நாளுக்கு அழைத்துப்பேசவைத்தனர். அன்றுடன் அவருடைய வாழ்க்கை வேறு திசைக்குத்திரும்பியது.

எனினும் என்னுடன் தொடர்பில் இருந்தார்.எமது பாரதி விழாவிலும் வந்து பேசினார். அக்கினிக்குஞ்சு இதழ் வெளியீட்டிலும் கலந்துகொண்டார்.
அவ்வேளையில் அவருக்கு ஈழத்து இலக்கியவாதிகளை நான்கு தலைமுறைகளாக வகுத்துஇ அவர்களின் சிறுகதைகள் அடங்கிய பெரிய தொகுப்பை நான்கு பாகங்களில் வேரும் வாழ்வும் என்ற தலைப்பில் வெளியிடும் எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை ஈடேற்ற சிட்னியில் வசித்த மாத்தளை சோமுவுடனும் மெல்பனில் வசித்த என்னுடனும் தொடர்புகொண்டார். சிட்னியில் அவர்கள் இருவரும் தற்காலிக முகவரிகளில் இருந்தமையால்இ ” முருகு ( இப்படித்தான் என்னை அழைப்பார்) உமது மெல்பன் முகவரிக்கு கதைகளை அனுப்புமாறு கேட்டு இலங்கைஇ மற்றும் தமிழர் புகலிட நாடுகளில் வெளியான இதழ்களுக்கு செய்திகளை அனுப்பச்சொன்னார்.அவ்வாறே நானும் செய்தேன்.ஆனால்இ இலங்கையில் போர்க்காலம் என்பதனால் கதைகளைப்பெறுவதில் தாமதம் நீடித்தது. பின்னர் அவரே முடிவை மாற்றிஇ புகலிட நாடுகளில் வதியும் எம்மவர்களின் கதைகளை தொகுப்போம் என்றார். பின்னர் அந்த முயற்சியில் இறங்கினேன். இன்றுபோல் அன்று மின்னஞ்சல் வசதிகள் இல்லை. தொடர்ந்து கனடாஇ அய்ரோப்பிய நாடுகளுக்கெல்லாம் கடிதங்கள் எழுதிஇ கதைகளை சேகரித்தேன். இதுவிடயத்தில் லண்டனிலிருந்த நண்பர் மு. நித்தியானந்தனும் உதவினார். முதலில் குறிப்பிட்ட கதைகளை எழுதியவர்களின் படங்ளையும் பிரசுரிக்கத் தீர்மானித்தோம். அக்காலப்பகுதியில் எழுதத்தொடங்கியிருந்த ஷோபா சக்தி பெண்ணாஇ ஆணா என்ற மயக்கமும் எமக்கு வந்தது. அதனால் படங்களை பிரசுரிக்கும் எண்ணத்தையும் கைவிட்டோம்.

எஸ்.பொ. அதற்கு பனியும் பனையும் என்ற பெயரைச் சுட்டவிருப்பதாகச் சொன்னார். தமிழகம் சென்றார். அந்த நூல் வெளியானது.ஆனால்இ அதன் தொகுப்பாசிரியர்கள் எஸ்.பொ – இந்திராபார்த்தசாரதி என்று அச்சாகியிருந்தது.இது எனக்கும் மாத்தளை சோமுவுக்கும் ஏமாற்றம்தான். இந்திரா பார்த்தாரதியும் எனது இனிய நண்பர். எனக்கு எஸ்.பொ.வின் உள்மனம் புரிந்தது. அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டது. அதனை அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் புலப்படுத்தின.
தமது முன்னைய இலங்கை – ரஹ்மானின் அரசு வெளியீடுகளையெல்லாம் மீண்டும் பதித்து அவற்றை தமிழக முன்னணி படைப்பாளிகளின் முன்னுரைகளுடன் வெளியிட்டு முதல் பதிப்பாக தமிழகத்திற்கு காண்பித்தார். அவர் மகன் டொக்டர் அநுரா அமைத்துக்கொடுத்த மித்ர பதிப்பகம் அவரை அங்கு வாழவைத்தது. அவருக்கு இனித்தேவை தமிழகம்தான் என்பது தெளிவாகியது. எழுத்தாளர்களுடன் முன்னெச்சரிக்கையாக பழகும் இயல்பு எனக்கு என்றைக்கும் இல்லை. அது எனது இயல்பு. ஆனால்இ அந்த இயல்பினால் நிறைய ஏமாற்றங்களையும் நட்டங்களையும் தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.அந்தத் தொகுப்பில் எனதும் மாத்தளை சோமுவினதும் பெயர் வரவில்லை என்ற ஏமாற்றத்தையும் அவருக்காக பொறுத்துக்கொள்ளலாம். ஆனால்இ கனடா -அய்ரோப்பிய நாடுகளிலிருந்து கதைகளைத் தந்தவர்களுக்கு அந்தத் தொகுப்பின் பிரதிகளையாவது அவர் அனுப்பியிருக்கலாம். ஆனால்இ அதுவும் நடக்கவில்லை. சிலர் என்னைத்தான் கடிந்துகொண்டனர்.

ஆயினும் எஸ்.பொ.வுடன் எனக்கிருந்த நட்புறவு சேதமாகாமல் பார்த்துக்கொண்டேன். எனது நூல்களை சென்னையில் நண்பர் ( குமரன் பதிப்பகம் ) கணேசலிங்கன்தான் அச்சிட்டுத்தந்தார். எனது நூலொன்றையும் எஸ்.பொ.தமது மித்ர ஊடாகவெளியிட விரும்பினார். ஆனால்இ நான் அதனை விரும்பவில்லை.சிட்னியிலும் மெல்பனிலும் நடந்த எமது எழுத்தாளர் விழக்களில் கலந்துகொண்டார். சிட்னியில் 2002 ஆம் நடந்தபொழுது அங்கிருந்த குழுவினருடன் அவருக்கு ஏதோ முரண்பாடு ஏற்பட்டு தாம் எழுதிய கட்டுரையையும் சமர்ப்பிக்காமல்இ வெறும் பார்வையாளராக கலந்துகொண்டார். மெல்பன் விழாவுக்கு வந்தபொழுது தமிழ்ச்சிறுகதை இலக்கியம் என்ற தலைப்பில் நீண்ட உரையாற்றினார். மெல்பன் வந்தால் எனதும் அக்கினிக்குஞ்சு யாழ்.பாஸ்கர் இல்லத்திலும் தங்குவார். அவர்வந்தால் கலகலப்புத்தான். அவர் சுவாரஸ்யமாகப் பேசுவார். அதில் எள்ளல் – அங்கதம் கலந்திருக்கும். அவர் விட்ட பகிடிகளை மறக்கமுடியாது.

எனக்கு நீண்ட பேட்டியும் தந்தார். அது பிரான்ஸில் வெளியான நண்பர் மனோகரனின் ஓசையில் வெளியானது.பின்னர் இலங்கையில் தினகரன் வாரமஞ்சரி  நான் அதற்கு அனுப்பாமலேயே எங்கோ ஓசையை தேடி எடுத்து மறுபிரசுரம் செய்தது. நண்பர் குகநாதனின் பாரிஸ் ஈழநாடும் அதனை வெளியிட்டது.எனது சந்திப்பு தொகுப்பிலும் எஸ்.பொ.தொகுத்த நூலொன்றிலும் அது வெளியானது.இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் அவருடைய கருத்துகள் அத்தகையன. எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழா காலத்திலும் மெல்பன் எழுத்தாளர் விழாவிலும் அவரை அழைத்து சிறிய மலரும் வெளியிட்டு பாராட்டி கௌரவித்தேன்.ஆனால்இ அவர் தனக்குத்தானே பகைவனாகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தன. அவர் காலில் ஒரு சிறிய கல் தடுக்கினால் அதனை சுத்தியல்கொண்டு அடித்து நொருக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் என்று அவருடைய ஆவேச எழுத்துக்கள் பற்றிச்சொல்லும் பொழுது நண்பர் நடேசன் குறிப்பிடுவார். தம்மீது வரும் விமர்சனங்களை தாங்குவதற்கு சங்கடப்பட்டுஇ முடிந்தவரையில் சகிக்கமுடியாத வார்த்தைகளையும் கொட்டுவார். தன்னை ஒரு இலக்கிய கலகக்காரன் எனக்காண்பிப்பதில்தான் தனது வாழ்நாளை செலவிட்டார்.

நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபொழுது திடீரென்று ஆவேசக்குரல் எழுப்பியதுடன் எனது நேர்மையையும் சந்தேகித்து அவதூறு பொழிந்தார். தெரிந்தோ தெரியாமலோ பிரதேசவாதமும் கக்கினார்.அவர் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி சேறடிக்கப்போகிறார் எனத்தெரிந்துகொண்டதும்இ சென்னைக்கு தொடர்புகொண்டு அவருடன் உரையாட முயன்றேன். ஆனால்இ எனது அனைத்து அழைப்புகளையும் நிராகரித்துக்கொண்டு சென்னையில் கூட்டங்கள் நடத்தி மாநாட்டுக்கு கொள்ளிவைத்தார்.நானும் பதில் அறிக்கைகள் – நேர்காணல்கள் வெளியிட நேர்ந்தது.மாநாடு திட்டமிட்டவாறு நடந்தது. அதன்பிறகு அவருடனான தொடர்புகள் எனக்கு இருக்கவில்லை. எமது மாநாட்டின் பிரசாரப்பணிகளுக்கு நாம் ஒரு சதமும் செலவிடவில்லை. ஆனால் எஸ்.பொ. தாமாகவே முன்வந்து தமிழ்நாட்டிலும் மாநாடு முடிந்த பின்னர் கனடாவிலும் எமக்காக நல்ல பிரசாரத்தை முன்னெடுத்தார் என்றுதான் சொல்வேன்.

2014 நவம்பரில் அவர் கடும் சுகவீனமுற்றார்.அதனை அறிந்து அவருடைய எழுத்தும் வாழ்வும் பற்றி விரிவான கட்டுரை எழுதத்தொடங்கினேன். அதன் முதல் அத்தியாயம் வெளியாவதற்கு முதல் தினம் அவர் உயிர்பிரிந்தது. அந்தக்கட்டுரை சுமார் 40 பக்கங்களில் தொடர்ந்து நான்கு அத்தியாயங்களாக வெளியானது.அதனை ஒரு சிறிய தொகுப்பாக பைண்ட் செய்துஇ சிட்னியில் அவருடைய குடும்பத்தினரிடம் சேர்ப்பித்ததுடன்இ இலங்கை இதழ்களிலும் சில வெளிநாட்டு இணைய இதழ்களிலும் அவருடைய நினைவுகளை எழுதினேன்.அவருடைய ஆற்றலுக்கும் எழுத்தாளுமைக்கும் பேச்சு வசீகரத்திற்கும் அவர் எங்கோ உயர்ந்திருக்கவேண்டியவர். ஆனால்இ அவருடைய இயல்புகள்தான் அவருக்கு முட்டுக்கட்டையாக இருந்தன. படைப்பு இலக்கியத்தில் செம்மைப்படுத்தலை கச்சிதமாகச் செய்தவர். அவருடைய மொழிபெயர்ப்பு ஆற்றல் வியக்கத்தக்கது.எஸ்.பொ.வின் உற்ற நண்பர் இளம்பிறை ரஹ்மான் தொடக்க காலத்தில் இல்லையேல் அவர் என்றைக்கோ இலக்கிய உலகில் மறக்கப்பட்டிருப்பார்.
அவருடைய மனைவியும் மகன் டொக்டர் அநுராவும் அவருக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம். அவர் மறைந்துவிட்டார் என்பதற்காக எனது கணிப்புகளை நான் மாற்றிக்கொள்வது அவசியமற்றது.எஸ்.பொ. நினைவுகளாக எங்கள் மத்தியில் வாழ்கிறார்.

ஓர் படைப்பாளிக்கு வழங்கப்படும் விருதுகள் என்பது அவனைப் பொதுவெளியில் அதிக கவனத்தைப்பெற ஓர் சிறந்த ஊக்கியாக அமையுமா ? இல்லை அவனைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று அவனது எழுத்தாற்றலை மழுங்கடித்து விடுமா ?

விருதுகள் பரிசுகள்இ பாராட்டுக்கள் யாவும் அனைவருக்கும் கிடைக்கின்றன. யார் பெறுகிறார்கள்இ யார் தருகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும். இந்த உலகில் படைப்பாளி மாத்திரம் விருதுபெறவில்லை. ஏதேனும் துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தரப்படுகிறது. சிலருக்கு தாமதமாகத்தரப்படுகிறது. விருது கிடைக்கவில்லையென்பதனால் அதற்குத்தகுதியான ஒருவர் அதற்குப்பொருத்தமற்றவர் என்ற முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. விருதுகள் பெறாமலேயே புகழின் உச்சிக்குச்சென்றவர் பாரதியார். ஏன் வள்ளுவர்இ இளங்கோஇ ஒளவையார்இ கம்பன் முதலானோரையும் சொல்ல முடியும். விருதுகள் வழங்கும் நாகரீகம் இருபதாம் நூற்றாண்டின் பின்னர்தான் தமிழர் தரப்பில் வளர்ந்தது என நினைக்கின்றேன்.விருதுகள் சில சமயங்களில் அடையாளமாக இருக்கலாம். ஆனால் விருதுகளைவிட ஆளுமைதான் மிகச்சிறந்த அடையாளம்இ அங்கீகாரம்.

இலக்கிய வெளியில் உள்ள தலித் இலக்கியம் பற்றிய உங்கள் அவதானிப்பு எப்படியாக இருக்கின்றது ?

தமிழில் தலித் இலக்கிய முன்னோடி எங்கள் டானியல்தான் என்றும் சொல்லப்பட்டது. ஆனால்இ அவர் பஞ்சமர் எழுதியபொழுது அதனை தலித் என்ற சொல்லாக்கத்துடன் அறிமுகப்படுத்தவில்லை. தமிழகத்திலிருந்து ஈழத்து இலக்கிய உலகிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சொல் தலித் இலக்கியம். டானியல் மறைந்தபின்னர் இலங்கை வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை நடத்தியபொழுது டானியல் பற்றிய உரையை ஒலிபரப்புவதற்கு முன்னர் தணிக்கை செய்தார்கள். அந்த உரையில் சாதி என்ற phழவழ-2சொல் வந்துவிடக்கூடாது என்ற நிபந்தனை மேலிடத்திலிருந்து வந்தது. அந்த உரையின் ஒலிப்பதிவு கூடத்திலிருந்து சாதி என்று வருமிடங்களில் அடிநிலை மக்கள் என்று திருத்தி வாசிக்கவேண்டியிருந்தது.தலித் இலக்கியம் அவசியமானது. இலங்கையில் அத்தகைய எழுத்துக்களில் பிரசார வாடை அதிகமிருந்தது. ஆனால்இ தமிழகத்தில் கலைத்துவத்தை காண முடிந்தது. பாமாவின் கருக்குஇ சங்கதிஇ கண்மணி குணசேகரனின் அஞ்சலைஇ சிவகாமியின் பழையன கழிதல்இ பாலமுருகனின் சோளகர் தொட்டிஇ கந்தர்வனின் சீவன் (கதைத்தொகுதி) முதலானவற்றின் மீதான எனது வாசிப்பு அனுபவத்தை எனது ஈழத்து நண்பர்கள் எழுதிய தலித் படைப்புகளுடன் ஒப்பிட்டுப்பார்த்துத்தான் இந்தக்கருத்தைச்சொல்கின்றேன்.

நான் பிறந்து வாழ்ந்த சூழலில் கடலை நம்பி வாழ்ந்த தொழிலாள வர்க்கம்தான் இருந்தது. அவர்கள் அடிநிலையில் தலித் என்று தம்மை அடையாளப்படுத்தவில்லை. அவர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடும் இருக்கவில்லை. உயர் வெள்ளாளர் பிராமணர் கூட ஏழைகளாக வாழ்ந்துள்ளனர். அதேசமயம் தாழ்த்தப்பட்டவர்கள் வசதிகளுடன் வாழ்ந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஏழை பிராமணர் பற்றி நண்பர் தெணியான் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலும் எழுதினார். இதில் அவர்களின் சாதியுணர்வை அவர் பேசவில்லை. அவர்களின் வர்க்கஉணர்வுதான் தென்பட்டது.எந்தவொரு பிரச்சினையையும் கலைத்துவமாக எழுதினால் வரவேற்பு இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

விமர்சகளுக்கும் படைப்பாளிக்கும் உள்ள உறவு எப்படியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் ?

ஒடுவது எப்படி என்று சொல்லும் முடவன்தான் விமர்சகன் என்று சொல்லப்படுகிறது.விமர்சகனின் வேலையுடன் ஒப்பிடும்பொழுது படைப்பாளியின் பணிகள் சிரமமானது. படைப்பாளி இல்லை என்றால் விமர்சகனுக்கும் வேலையில்லை. குழந்தையை கருவிலே சுமந்து பெற்றெடுக்கும் ஒரு தாயிடம் வந்து உன் குழந்தை கறுப்புஇ அழகில்லை. ஆரோக்கியம் குறைவு என்றெல்லாம் குறைசொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு அவள் பதில் சொல்லத்தேவையில்லை. எனது குழந்தை அப்படித்தான். அதிலிருக்கும் குறைபாடுகளை நானே படிப்படியாக நீக்குவேன் என்றுதான் அந்தத்தாய் சொல்வாள். சொல்லவேண்டும். அந்தக்குறைபாடுகளே எனது குழந்தையின் அழகுதான் என்று சொல்லும் தைரியம் அவளுக்கு வரவேண்டும். விமர்சகர்கள் படைப்பை படித்து தமது சிந்தனையின் பார்வையில் சில அளவுகோல்களை வைத்து பார்ப்பார்கள். அந்த ஃபிரேமுக்குள் வரவில்லை என்றால் புறக்கணிப்பார்கள். நான் எழுதவந்த காலத்தில் எனது கதைகளை படித்த சில பேராசிரியர்கள் அவற்றில் சோஷலிஸ யாதார்த்தப்பார்வை இல்லை என்றார்கள். சோகரஸம் தொனிக்கிறது. முடிவுகளை மாற்றவேண்டும் என்றார்கள். இன்று யார்தான் இந்த சோஷலிஸ யதார்த்தப்பார்வை பற்றி பேசுகிறார்கள். அவ்வாறு பேசினாலும் யார்தான் காதுகொடுத்து கேட்கிறார்கள்.டானியல் பஞ்சமர் முதல் பாகம் எழுதிவிட்டு இலங்கை எங்கும் சென்று அதற்கு அறிமுகக்கூட்டம் நடத்தினார். அதில் பேசிய விமர்சகர்களின் உரைகளை உள்வாங்கினார். பின்னர் பஞ்சமரின் இரண்டாம் பாகம் எழுதினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தியில்லை. தனக்கு என்ன நேர்ந்தது என்று ஆத்மபரிசோதனை நிகழ்த்தினார். பின்னர் சில மாதங்கள் விமர்சகர்கள் பக்கமே செல்லாமல் ஒதுங்கியிருந்துவிட்டு இரண்டாம் பாகம் எழுதினார். பின்னர் இரண்டு பாகங்களும் இணைந்த முழுத்தொகுப்பு வெளியானது.

உங்களது இலக்கிய அனுபவத்திலே தமிழ் இலக்கியவெளியானது உண்மையிலேயே பாரிய மாற்றங்களை அடைந்து விட்டதாக உணருகின்றீர்களா ?

ஆமாம். பாரிய மாற்றங்கள் நேர்ந்துள்ளன. முக்கியமாக படைப்பு மொழி. செய்யுள் வடிவிலிருந்த எமது மொழியில் வந்த மாற்றங்கள் பல. இன்று ஒரு சிறுகதையை நாவலை அந்த வடிவில் எழுத முடியுமா…? கவிதை நாடகம் இசை நாடகம் கூத்துக்கலை என்பனவற்றிலும் செய்யுளின் வடிவம் தென்பட்டாலும் சொல்லப்படும் வீச்சில் மக்களை வந்தடைகிறது. ஒரே சமயத்தில் இன்றைய ஈழத்து இலக்கியப்பிரதிகளையும் புகலிடத்திலிருந்து எழுதுபவர்களின் படைப்புகளையும் ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுதும் படைப்பு மொழியில் தோன்றியிருக்கும் மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.சமகாலத்தில் படைப்புமொழியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுபோன்று கதைசொல்லும் முறைமையிலும் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. யதார்த்தமாக சித்திரிக்கும்பொழுது அதில் புதிர்களையும் முடிந்துவைக்கும் படைப்பாளுமை இன்று பலரிடம் வந்துள்ளது.

உங்களது பார்வையிலே தாயகத்தில் சமகாலத்தில் உள்ள தமிழ் அறிவு ஜீவிகளின் சிந்தனைப் போக்குகள் எப்படியாக இருக்கின்றது ?

இலங்கையில் போர்க்காலத்தில் இயக்கங்களுக்கும்இ அரசாங்கத்திற்கும்  பயந்து வாழ்ந்தார்கள். இவர்களிடம் பேனைகளும்  அவர்களிடம் துப்பாக்கிகளும்  இருந்தன. அதிகாரர்களுக்கும் இந்த அறிவுஜீவிகள் வேண்டத்தகாதவர்கள்தான். அதனால் தாயகத்தை விட்டு வெளியே ஓடியவர்கள் ஏராளம்.அவ்வாறு தென்னிலங்கைக்கு வந்தவர்களும் இந்தப்பட்டியலில்தான். ஆனால்இ இன்று போர் முடிந்து ஏழு வருடங்களாகப்போகின்றன. தற்பொழுது அங்கு பல அறிவுஜீவிகள் அரசியல் ஆய்வாளர்களாக மாறிவிட்டனர்.முன்னர் புலிகளுடன் நின்ற பல இலக்கியவாதிகளும் ( இவர்களும் அறிவுஜீவிகள்தான்) இன்று புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்களாக மாறிவிட்டார்கள். துப்பாக்கி ஏந்திய புலிகள் இயக்கம் நந்திக்கடலில் சங்கமமாகியதும்இ தங்களைத்தாங்களே ஆத்மபரிசோதனை செய்துகொண்டார்கள். இன்று அங்கு என்ன தேவை….? புலிகள் பற்றிய விமர்சனமா…? அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமா…?

பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களும் அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய சக்திகளும் ஒன்றிணையவேண்டும். அறிவுஜீவிகள்இ மக்களின் வாழ்வாதாரத்தை நோக்கிய தங்கள் பணிகளில் பின்தங்கிவிட்டார்கள்.வடக்கிலும் கிழக்கிலும் கல்வி பின்தங்கியிருக்கிறது. கிழக்கில் வருடாந்தம் இரண்டாயிரம் மாணவர்கள் எட்டாம் ஒன்பதாம் வகுப்புடன் நின்று விடுகின்றனர். மாணவர்களின் தற்கொலைஇ சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்கிறது. விழிப்புக்குழுக்களில் இந்த அறிவுஜீவிகள் இணையவேண்டும். அரசியல் வாதிகளை புறம் ஒதுக்கிவிட்டுஇ மக்கள் தொண்டர்களாக அவர்கள் மாற வேண்டும். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சக்திகளாகி தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடல் வேண்டும். பன்முக வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு – கிழக்கு தமிழ் எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராயவேண்டும். மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கே செல்கிறதா என்பதையும் கவனிக்கவேண்டும். வாக்கு வங்கிகளை நிரப்புவதற்கு துணைசெல்லக்கூடாது. போர் நீடித்த எங்கள் தேசத்தில் அறிவுஜீவிகளுக்குத்தான் அதிகம் வேலை இருக்கிறது.

இனிவருங்காலங்களில் தமிழ் இலக்கியப்பரப்பு எப்படியாக இருக்கும் என்று எண்ணுகின்றீர்கள் ?

தற்காலத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் முகநூல்களுடன்தான் தமது நேரத்தை செலவிடுகின்றனர். ( என்னிடம் அது இல்லை. எனது முகமே எனக்குப்போதும்) இன்றும் இனிவரும் காலத்திலும் தமிழ் இலக்கியம் இந்த முகநூல்களின் வழியேதான் பரவும். சிலவேளை இன்னும் சில வருடங்களில் இந்த முகநூலின் வடிவமும் மாறிவிடலாம். மேலும் விரைந்து செய்திகளைத்தரக்கூடும். தும்முவதற்கு முன்னர் தும்மலின் ஒலி கேட்கலாம்.முகநூல் இலக்கியப்பரப்பு துப்பலையும் தும்மலையும்தான் வளர்த்திருக்கிறது. எழுத்தாளர்கள் இலக்கியம் படைப்பதைவிடுத்துஇ வாசிப்பதை விடுத்துஇ இந்த தும்மலையும் துப்பலையும் ரசித்துக்கொண்டிருப்பார்கள்.
இலக்கியக்கூட்டங்களுக்கு வரும் எழுத்தாளர்கள் பேச்சாளர்களின் உரையை செவிமடுக்காமல் தமது முகநூல்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். செத்தவீட்டிலும் கலியாணவீட்டிலும் அதுதான் நடக்கிறது. சக படைப்பாளியின் படைப்பைப் பார்த்து விரிவான மதிப்பீடுகளை எழுதாமல் முகநூல்களில் ஒற்றை வரியில் ஏதாவது சொல்லிவிட்டுச்செல்லும் இலக்கியப்பரப்புதான் விரிவாகிக்கொண்டிருக்கும். பிளவும் பிணக்கும் அதிகரிக்கும். இலக்கியப்பரப்பு அவசர கதியில் கடந்துகொண்டிருக்கிறது.

இப்பொழுது தமிழில் அதிகளவு மொழிபெயர்ப்பு கதைகள் வெளிவருகின்றன இதை ஓர் ஆரோக்கியமான போக்காக எடுத்துக்கொள்ளலாமா ?

பல சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்புகளின் ஊடாகவே படித்திருக்கின்றேன். அதிகளவில் இன்று மொழிபெயர்ப்பு படைப்புகள் வருவது காலத்தின் தேவை. அவற்றைப்படிக்கும்பொழுது நாம் எமது தமிழ்ப்படைப்புலகையும் சுயவிமர்சனத்திற்குள்ளாக்குகின்றோம். எம்மை நாம் மதிப்பீடுசெய்துகொள்வதற்கும் மொழிபெயர்ப்பு படைப்புகள் உதவுகின்றன.தொடர்ந்து குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தோம். மொழிபெயர்ப்புகளினால் நாம் அய்ரோப்பிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் படிக்கின்றோம். முன்னர் அம்மொழிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தே தமிழில் பெற்றோம். ஆனால்இ எம்மவர்களின் புலப்பெயர்வையடுத்து குறிப்பிட்ட மொழிகளை பயின்று தேர்ச்சிபெற்றவர்களின் நேரடிமொழிபெயர்ப்பிலிருந்தும் படிக்கின்றோம். சமீபத்தில் நான் படித்த குழந்தைப்போராளி கெய்ரெற்சி (முநவைநவளi) யின் நவீனம் அத்தகையது. அதனை தேவா என்பவர் டொச்மொழியிலிருந்து தமிழுக்குத்தந்திருந்தார். அதனை எமது ஈழப்போரில் தமது வாழ்வைத்தொலைத்த குழந்தைப்போராளிகளையும் இனம்கண்டேன். எஸ்.பொ. – பூரணி மகாலிங்கம் – மணிவேலுப்பிள்ளை – ஆழியாள் முதலானோர் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பாளர்கள்.

புலம் பெயர் இலக்கிய சூழலில் இருந்து வெளியாகின்ற படைப்புகளில் ஒரு சிலதைத்தவிர அநேகமான படைப்புகள் மலரும் நினைவுகளையொத்த படைப்புகளாகவே வெளிவருகின்றன. இவர்களால்  ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும் கதைமாந்தர்களையும்  வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது ?

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகப்போகின்றன. இன்றும் அதன் தாக்கத்திலிருந்து எமது மக்கள் விடுபடவில்லை. அதுபோன்று ஈழத்தமிழர்கள் தாமாகத்தெரிவுசெய்த வாழ்க்கையல்ல புலப்பெயர்வு. அவர்கள் அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். புகலிடத்தில் அந்நிய சூழலில் புதிய சுவாத்தியத்தில் புதிய நாகரீகத்தில் பதியப்பட்டவர்கள். பிடுங்கிவந்து நட்டமரங்கள். நினைவுகளுக்கு மரணம் இல்லை. அவர்கள் வாழ்வுவரையில்இ செல்லுமிடம் எங்கும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். போர் முடிந்தவுடன் தாயகம் செல்லநினைத்தவர்கள்தான் அநேகம். இலட்சக்கணக்கில் சென்று திரும்புகிறார்கள். இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது. அவர்களின் வாழ்வு புகலிடத்தில் பரவியிருந்தாலும் வேர் இன்னமும் தாயகத்தில்தான். அப்படியானால் படைப்பாளிகள் எப்படி விதிவிலக்காவார்கள். எஸ்.பொ. பல வருடகாலம் நைஜீரியாஇ அவுஸ்திரேலியா என்று வாழ்ந்தாலும் அவரும் நனவிடை தோய்தல்தான் எழுதினார். கருணாகரமூர்த்தி பெர்லின் இரவுகள் – நினைவுகள் எழுதினாலும் அங்கும் தாயக நினைவுகள்தான் அவ்வப்போது தலைகாட்டின. ஷோபசக்தியின் கொரில்லா முதல் பொக்ஸ் வரையில் தாயகம்தான் படர்ந்திருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களிலும் தாயக நினைவுகள் வரும். விமல் குழந்தைவேலின் கசகரணம்இ சயந்தனின் ஆறாவடுஇ அவுஸ்திரேலியா ஜே.கே.யின் கொல்லைப்புரத்து காதலிகள் யாவும் அவ்வாறுதான்.

அதேவேளையில் அவுஸ்திரேலியா நடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை என்ற 400 பக்கங்கள் கொண்ட நாவல் முற்றிலும் அவுஸ்திரேலியாவை பின்னணியாகக்கொண்டது.இவர்களால் புலம்பெயர் வாழ்வை தமது கதைக்களங்களாக கொடுக்கமுடியாது என்றில்லை. நிச்சயம் எழுதுவார்கள். புகலிடத்தில் புதிய தலைமுறையினர் எழுதுகிறார்கள். தாயகத்து வாசகர்கள் வியக்கும் வண்ணம் எழுதுவார்கள்.புலம்பெயர் படைப்புகளுக்கு இன்று தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் புதிய எல்லைகளைத்தொடும். கடக்கும்.

அதிகரித்து விட்ட தொடர்பாடல் சாதனங்களின் வரர்ச்சியினாலும்இ சமூக வலைத்தளங்களினாலும் ஓர் படைப்பாளியின் எழுத்தாற்றலும் அவனை வளர்த்து விடுகின்ற சிற்றிதழ்களின் தேவையும் நீர்த்துப் போய் விட்டதாக எண்ணுகின்றீர்களா ?

இன்று புற்றீசல்கள் போன்று இணையத்தளங்கள்இ வலைப்பூக்கள் பெருகிவிட்டன. காகிதத்தில் எழுதி தபாலில் அனுப்பி அச்சுக்கு சேர்ப்பிக்கவேண்டிய தேவையில்லை. இலங்கையில் பல ஊடகங்கள் தற்பொழுது னுழறடெழயன துரசயெடளைஅ இல் ஈடுபடுகின்றன. இணையத்தளங்களும் அவ்வழியே செல்கின்றன. வாசிப்புத்தளம் விரிவடைந்துள்ளது. நாட்டுக்கு நாடு தமிழில் இணைய இதழ்கள் வந்துவிட்டன. எதனைப்பார்ப்பது எதனைத்தவிர்ப்பது என்று தெரியாத திணறல். மின்னல்வேகத்தில் செய்திகள் கருத்துக்கள்இ படங்கள் பரவுகின்றன. யாவுமே தேவைகளின் நிமித்தம்தான். என்னை எனது பாட்டி உறங்கும் வேளையில் கதைசொன்னதுபோன்று எனது மகள் தனது குழந்தைக்கு கதை சொல்வதில்லை. நவீன கணினி சாதனங்களில் எனது பேரக்குழந்தைகளுக்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன. வள்ளுவரும் கம்பரும் பனையோலையில் எழுதியதற்காக பாரதியும் பனையோலையா தேடிச்சென்றார். எதிர்காலத்தில் கணினி வரும் என்று அன்று யார்தான் நினைத்தார்கள். ஆனால் சாதியை கண்டுபிடிக்காத ஒரு புண்ணியவான் மின்சாரத்தையும் கணினியையும் கண்டு பிடித்துவிட்டான். அதன் பலனை அனுபவிக்கின்றோம். ஆனால் மின்ஊடகத்திலும் திருமணத்திற்கு வரன் தேடுபவன் சாதியை அங்கும் விடவில்லை. சிற்றிதழ்களின் தேவையை இன்றைய இணைய இதழ்கள் பூர்த்திசெய்தாலும்சிற்றிதழ்கள்தான் தேவைப்படுகிறது. யாவும் தேவைகளின் நிமித்தம்தான். சிற்றிதழ்களின் தேவை அது இருக்கும்வரையில் நீர்த்துப்போகாது.

உங்கள் எழுத்துலக வாழ்க்கையில் உங்களுக்கென்று ஆதர்சங்கள் இருந்திருகின்றார்களா ?

ஆம். எனது பாட்டி. இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கியதும் பாரதியும் இணைந்தார். பாட்டி எனக்கு வாழ்வின் மீதான நம்பிக்கை தந்தவர். உழைத்துவாழ விரும்பியவர். பாரதி எனக்கு எழுத்தின் மீதான நம்பிக்கையை புகட்டியவர்.

தமிழ் இலக்கியப்பரப்பில் லெ முருகபூபதிக்கென்று அரசியல் ஏதாவது இருக்கின்றதா ?

மனிதநேயம்தான் எனது அரசியல். அது இல்லாத அரசியல்தான் அழிவுகளுக்கும் காரணம். உலகம் சுருங்குகிறது அதனால் மனிதநேயமும் சுருங்கவேண்டுமா….?
என்னுடனான இந்த நேர்காணலை பதிவுசெய்வதற்கு நீங்கள் முன்வந்தமைக்கும் மனிதநேயம்தான் காரணம். இதுவரையில் நாமிருவரும் தொலைபேசியிலும் பேசிக்கொண்டதில்லை. நேரில் பார்த்ததும் இல்லை. அப்படியாயின் எம்மை இணைத்த சக்தி எது….? நீடித்த போரினால் நலிவுற்ற எங்கள் தேசத்திற்கு மாத்திரமல்ல அழிவை நோக்கிச்சென்றுகொண்டிருக்கும் தேசங்களுக்கும் மனிதநேயம் என்ற அரசியல்தான் இன்று தேவைப்படுகிறது.

Nantri http://eathuvarai.net/