திரும்பிப்பார்க்கின்றேன் -திருமதி சிவமணி நற்குணசிங்கம் - முருகபூபதி

.

அதிபர் பணியிலிருந்து ஓய்வுபெறும் மணிவிழா நாயகி
   ஆசிரியப்பணியில்  தாயாகவும்  சகோதரியாகவும்  வாழ்ந்த
 கிழக்கிலங்கை பெரிய நீலாவணை   திருமதி  சிவமணி  நற்குணசிங்கம்
    
                                     முப்பத்தியைந்து  வருடங்களுக்கு  முன்னர்,  அதாவது  1980 ஆம்  ஆண்டு    டிசம்பர்  மாதம்  17  ஆம்   திகதி  எமது  குடும்பத்திற்கு  ஒரு புதியவிருந்தினர்   பெண் குழந்தைவடிவில்  வந்தாள்.   அவளுக்கு  பாரதி என்று  பெயர்சூட்டினோம்.
அவள்   பிறந்து  சில  நாட்களில்,    இரண்டு  இளம்  யுவதிகள் இயற்கை  எழில்கொஞ்சும்  மலையகம்  பதுளையிலிருந்து  விருந்தினர்களாக   எமதில்லம்  வந்தார்கள்.   அந்த  இரண்டு விருந்தினர்களினதும்    கரங்களில்  எமது  குழந்தை  தவழ்ந்தாள்.
வந்த  யுவதிகள்  இருவரும்  பதுளையில்  ஒன்றாக  ஆசிரியப்பணியில் ஈடுபட்ட  உடன்பிறவாச்சகோதரிகள்.   அவர்கள்தான்  செல்வி  சிவமணி, செல்வி. சரோஜினி.   எனது  குடும்பவாழ்விலும்  பொதுவாழ்விலும்  எனக்கு ஏராளமான   பாசமலர்கள்.  அந்த   பாசமலர்களின்  பட்டியலில்  இந்த  இரண்டு   ஆசிரியைகளும்  எமது    குடும்பத்தில்  இணைந்தனர்.
காலம்  சக்கரம் பூட்டிக்கொண்டு  ஓடும்.   இடையில்  1983  வன்செயல், இடப்பெயர்வு,   புலப்பெயர்வுயார்  யார்  எங்கே ?  என்பது  தெரியாமல் ஒவ்வொருவரும்   நினைவுகளை  மனதில்  தேக்கிவைத்துக்கொண்டு அலைந்திருக்கிறோம்.    வாழ்ந்திருக்கிறோம்.



        " சொந்தம்   எப்போதும்   தொடர்கதைதான்.  முடிவே   இல்லாதது  " என்பார்கள்.   இந்த  உலகம்  நவீன  தொழில் நுட்பங்களினாலும்  மக்களின் அன்றாட   வாழ்க்கை   முறைகளில்  ஏற்பட்ட  மாற்றங்களினாலும் சுருங்கிக்கொண்டிருக்கிறது.
ஆனால்,  எனது  பாசமலர்களின்  மனங்கள்  சுருங்கவில்லை. தொலைந்துபோன   உறவுகளைத் தேடிக்கொண்டே   இருந்தன.
அவ்வாறுதான்    கனடாவில்    புலம் பெயர்ந்துவாழும் தங்கை   சரோஜினியுடனும்,  தாயகத்தையேவிட்டு  வெளியேறாமல்,   தான்  பிறந்த  ஊருக்கு  தனது  கல்விப்பணியின்  ஊடாக சமூகப்பணியை   மேற்கொள்ளும்  தங்கை   சிவமணியுடனும்  தொடர்பு ஏற்பட்டது.
அன்று  1980  இல்    செல்விகளாக  இருந்தவர்கள்,  காலம்  கடந்து திருமதிகளாக    தொடர்புகொண்டனர்.
திருமதி  சிவமணி நற்குணசிங்கம்   இன்று   மூன்று   செல்வங்களின்  தாய். திருமதி  சரோஜினி  வர்ணன்  இரண்டு   செல்வங்களின்  தாய்இந்த பாசமலர்களைத்தேடி   கனடாவுக்கும்  பெரிய நீலாவணைக்கும் ஓடியிருக்கின்றேன்.
இனிச்சொல்லுங்கள்,    சொந்தம்  எப்பொழுதும்  தொடர்கதைதானே...!!!!
கடந்த 6 ஆம் திகதி பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திலிருந்து அதிபர் திருமதி  சிவமணி  பிரியாவிடைபெற்றார். அன்றுதான் இவருக்கு 60 வயது. வித்தியாலயம் விரைவில் இவருக்கான விழாவை நடத்தவிருக்கிறது. 
60  வயது  பிறக்கிறது  என்று  அறிந்ததும்  தொலைபேசி  எடுத்து " என்றும்   பதினாறு "  என்றுதான்  வாழ்த்தினேன்.
அவர்  தமது  ஆசிரியப் பணியிலிருந்து  விடைபெறும்  தருணத்தில், ஏன் அவசரம்...? "  என்றுதான்  கேட்டேன்தன்னால்  ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு   மற்றும்  ஒருவர்  வருவார்  அண்ணா  என்றுதான் பெருந்தன்மையுடன்  சொன்னார்.
ஆமாம் --- எந்தவொரு  துறையும்  அஞ்சல்  ஓட்டத்திற்கு  ஒப்பானதுதான். ஒருவரால்   தொடக்கிவைக்கப்படுவது  மற்றும்  ஒருவரால் தொடரப்படுவது.
இந்த   வாழ்க்கைச்சக்கரமும்  அப்படித்தான்.
-----  ------    -----    -------  ------   
அன்புத்தங்கை   சிவமணியுடன்  நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்,   ஒரு  நாள் தொலைபேசியில்   தொடர்பு கொண்டபொழுது,  எனது  குரலை  இனம்  கண்டு " அண்ணா..."  என்று   உரத்து  குரல்  எடுத்து  " எப்படி  அண்ணா கண்டுபிடித்தீர்கள்...?"   என்றார்.
அப்பொழுதும், "  சொந்தம்  எப்போதும்  தொடர்கதைதான் "  என்றுதான் சொன்னேன்.
அன்றைய  தொலைபேசி  உரையாடலில்  " தங்கையே   நீங்கள்  அதிபராக பணிபுரியும்   பெரிய நீலாவணை   விஷ்ணு  மகா  வித்தியாலயத்திற்கு,  நான் அவுஸ்திரேலியாவில்   அங்கம்  வகிக்கும்  இலங்கை  மாணவர்  கல்வி நிதியம்   ஊடாக  ஆக்கபூர்வமான   உதவிசெய்ய விரும்புகின்றேன் " எனச்சொன்னேன்.    அதுவரையில்  எமது  தொண்டு  நிறுவனம்  பற்றி  அவர் அறிந்திருக்கவில்லை.
சில   தந்தையை  இழந்த  நலிவுற்ற  மாணவர்களின்  பெயர் விபரங்களை அனுப்பிவைக்குமாறு   எமது  அமைப்பின்  முகவரியை   கொடுத்தேன்.   அன்று   முதல்  அவருடைய  பாடசாலையில்  கற்கும்  சில  மாணவர்களுக்கு    உதவி வருகின்றோம்.   அவர்களில்  சிலர் பல்கலைக்கழகத்திற்கும்    சென்றுவிட்டனர்.
எனினும்   எனது  பாசமலரை  நீண்ட  இடைவெளிக்குப் பின்னர்  சந்திப்பதற்கு    இலங்கையில்  போர்  முடியும்வரையில் காத்திருக்க நேரிட்டது.
2010   ஜனவரியில்  பெரிய நீலாவணைக்கு  எமது  நிதியத்தின்  உறுப்பினரும்   எழுத்தாளருமான  டொக்டர்  நடேசனுடன்  சென்றேன்.
மாணவர்களை   நேரில்  சந்தித்து  கலந்துரையாடும்  எண்ணத்துடன்  சென்ற   எமக்கு,  அவர்  தலைமையில்  பெரியவரவேற்பையே   பாடசாலை ஆசிரியர்கள்    மாணவர்கள்  மத்தியில்  வழங்கினார்.
அதன்பின்னர்    வருடம்தோறும்  அவர்  அதிபராக  பணியாற்றிய பெரியநீலாவணை   விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு  சென்று  வருகின்றேன். தமது    இல்லத்திலேயே   தங்கியிருந்து  புறப்படுவதற்கு  ஏற்றவாறு  அவர்  நிகழ்ச்சிகளை   ஒழுங்குசெய்து தருவார்.
அவருடைய துணைவர்  திரு. நற்குணசிங்கம்  அவர்களும்   எனது உடன் பிறவாச்சகோதரர்.   அவர்களுடைய  பிள்ளைகள்  எனது நேசத்துக்குரிய   மருமக்கள்.   அவருடைய   ஆசிரியர்களும்  எனது நேசத்துக்குரியவர்களே.   நான்  ஒவ்வொருதடவை   வரும்பொழுதும்  எனது தங்கையின்   வீட்டுக்கு  வந்திருக்கும்  உணர்வுடன்தான்  இருப்பேன்.   திருமதி  சிவமணி   நற்குணசிங்கம்  எனது    இலக்கிய நண்பர்   எழில்வேந்தனின்  உறவினர்.    இவர்  கிழக்கிழங்கையின்  மூத்த கவிஞர்   நீலாவணனின்  புதல்வர்.    இளம்வயதில்  தான் பாடசாலை    நாடகங்களில்  எழில்வேந்தனுடன்  இணைந்து  நடித்திருப்பதாகவும்    சிவமணி   சொல்லியிருக்கிறார்.
நாம்  கொழும்பில்  நடத்திய  முதலாவது  சர்வதேச  தமிழ்  எழுத்தாளர்  மாநாட்டிற்காக  (2011 ) இலங்கை சென்று,  2010  டிசம்பரில்   கிழக்கு  மாகாணத்தில்  பிரசாரக் கூட்டங்கள்  நடத்தினோம்.
பூபாலசிங்கம்  ஸ்ரீதரசிங்,   செங்கதிர் பாலகிருஷ்ணன்,    கவிஞர்  அஷ்ரப்சிகாப்தீன்  ஆகியோர் என்னுடன்   வந்தவர்கள்  
கல்முனை   சாய்ந்த மருதுக்குச் செல்லும்  வழியில்  எனக்கு அந்தப்பாதையில்  ஒரு  அலுவல்  இருக்கிறது  என்று  சொல்லி, விஷ்ணு மகா  வித்தியாலயத்தின்  வாயிலில்  இறங்கியபொழுது,  நண்பர்களும்  உடன்   இறங்கினர்.   அச்சமயம்  அதிபர்  சிவமணி  நற்குணசிங்கம் கல்வித்திணைக்களத்திற்கு  சென்றிருந்தார்.    துணை  அதிபரும்  இதர ஆசிரியர்களும்    எமது  அவுஸ்திரேலிய -  இலங்கை   மாணவர்  கல்வி  நிதியம்  உதவும்  மாணவர்களை,  அதிபரின்  அறையில்  சந்திப்பதற்கு ஏற்பாடு   செய்தனர்.
அதுவரையில்   நான்  ஏன்  அங்கு  வந்தேன்---?  என்பது  எனது  இலக்கிய நண்பர்களுக்குத்  தெரியாது.  நாம்  உதவும்  மாணவ  மாணவிகள்  ஆளுக்கு ஒரு   ஆசனம்  எடுத்துவந்து  எம்முன்னால்  வட்டமாக  அமர்ந்தனர்.
அவர்களுடன்   நான்  அக்கறையுடன்  கலந்துரையாடியதையும்  அவர்களின் கல்வி தொடர்பாக  விசாரித்ததையும்  அவதானித்துவிட்டு,  விடைபெறும் பொழுது,  நண்பர்  பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்கின்  கண்களிலிருந்து   கண்ணீர் தாரை  தாரையாக  உதிர்ந்தது.    அவர்  அம்மாணவர்களைக்கண்டு நெகிழ்ந்துபோனார்.
சில நாட்கள்  கழிந்தன.   கொழும்பிலிருந்து  வெளியாகும்  இருக்கிறம்  என்ற   இதழிலும்  தினக்குரல்  வாரமலரிலும்    நண்பர்  கவிஞர்  அஷ்ரப் சிகாப்தீன்,    அன்று  பெரியநீலாவணை   விஷ்ணு  மகா  வித்தியாலயத்தில் கண்ட  தரிசனம்  பற்றி  ஒரு  விரிவான  கட்டுரையை   எழுதியிருந்தார்.
அதனைப்பார்த்த   உள்நாட்டிலும்  வெளிநாடுகளிலுமிருந்து  பல  நண்பர்கள் எமது   கல்வி  நிதியத்திற்கும்  குறிப்பிட்ட  மாணவ மணிகளுக்கும் ஆசிரியர்களுக்கும்   விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கும்  தமது வாழ்த்துக்ளை   தெரிவித்து  எனது  மின்னஞ்சலுக்கு  எழுதியிருந்தனர்.
இவ்வாறு   குறிப்பிட்ட  பாடசாலை    ஊடகங்களிலும்  வெளிவருவதற்கு காரணமாக    இருந்த  திருமதி  சிவமணி  நற்குணசிங்கம்  பல்லாண்டு வாழவேண்டும்   என்று  உள்ளன்போடு  வாழ்த்துகின்றேன்.
அவர்  தமது  அதிபர்  பணியிலிருந்து  ஓய்வு பெறவிருக்கிறார்  என்பது அறிந்து  மனம்  கலங்குகிறது.   அவர்  ஆசிரியர்,   அதிபர்  என்ற பதவிகளுக்கும்  அப்பால்,  மாணவர்  சமுதாயத்தின்  தாயாக விளங்கியிருப்பவர்அந்தத்தாய்மை  உணர்வை  நான்  அந்தப்பாடசாலைக்குச்  செல்லும்  வேளைகளிலெல்லாம் உணர்ந்திருக்கின்றேன்.
இறுதியாக  கடந்த  2015  பெப்ரவரி   மாதம்  அங்கு சென்று  மாணவர்களின் நிதிக்கொடுப்பனவுகளை   வழங்கி,  சிறிய  ஒன்றுகூடலை  நடத்தியபொழுதும்   அவருடைய  தாய்மைப்பண்பை  அவதானித்தேன்.
மாணவர் - ஆசிரியர் - அதிபர் உறவு  அன்பிலும்  அறிவிலும்  உணர்விலும் தங்கியிருப்பது.  இலங்கையில்  நீடித்த யுத்தமும்  அவப்பொழுது தோன்றும் இயற்கை  அநர்த்தங்களும்  குழந்தைகளையே  பெரிதும்  பாதிக்கின்றன.
பொருளாதார  காரணங்களுக்காக  மத்திய  கிழக்கிற்கு  செல்லும் தாய்மாரின் அன்பையும்  அரவணைப்பையும்  இழக்கும்  பிள்ளைகள், தொழில் தேடி, வளமான  வாழ்வுக்காக  அந்நியம்  செல்லும்  தந்தையின்  பாசத்தை தவறவிடும்  பிள்ளைகள்  யாவருமே  தினசரி  வாழ்வில்  சந்திக்கும் ஆசிரியர்கள், அதிபர்களிடம்  அவற்றைப்பெறுவதற்கே  ஆசைப்படுவது இயல்பு.
ஆனால்,  எமது  சமூகத்தில்  கண்டிப்பு  என்ற  தலைமுறை  இடைவெளி அச்சுறுத்தல்  இரண்டு  தரப்புக்கும்  மத்தியில்  பாரிய  இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது.
கல்விக்காக  மாத்திரம்தான் ஆசிரியர் - மாணவர் உரையாடல்  என்ற  எல்லை வகுக்கப்படுவது  எழுதப்படாத  விதியாகியிருப்பதனால்,  மாணவர்கள்  தமது தனிப்பட்ட  பிரச்சினைகளை  அதிபர்,  ஆசிரியர்களிடம் மனம்விட்டுப்பேசுவதற்கு  தயங்குகின்றனர்.
இந்நிலையை  கவனத்தில்கொண்டிருக்கும்  இலங்கை  கல்வி  அமைச்சு சீர்மிய  ஆசிரியர்களையும் (Counselling Teachers)   நியமித்துள்ளது.  அவ்வாறு ஒரு  ஆசிரியை  பெரியநீலாவணையிலும்  பணியாற்றுகிறார்.   அவரை எனக்கு  சிவமணி  அறிமுகப்படுத்தினார்.   இருவருமே  அங்கு  பயிலும் மாணவர்களிடத்தில்  சகோதரிகளாக   தாய்மார்களாக  உறவாடியதை காணமுடிந்தது.
எமது  நிதியம்  ஊடாக  உதவிபெறும் சில மாணவிகளும்  அன்புக்காக ஏங்கியிருந்தனர்.  அவர்களையெல்லாம்  தனித்தனியாக  அறிமுகப்படுத்தி அவர்களின்   பிரச்சினைகளை   சிவமணி  சொன்னார்.  அவர்களுக்கு  நம்பிக்கை  ஊட்டினார்.   இந்த  யுகம்  மட்டுமல்ல  எந்த யுகமும் குழந்தைகளுக்கானதுதான்.    அவர்களின்   நம்பிக்கை   நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள்  ஆசிரியர்களும்   அதிபர்களும்தான்.   அவ்வாறு  ஒரு நட்சத்திரமாக   வாழ்ந்தவர்   திருமதி சிவமணி நற்குணசிங்கம்.
அன்று    அவர்கள்  வீட்டில்  தங்கியிருந்து,  மறுநாள்  அதிகாலை  4  மணிக்கு எழுந்து,  திருகோணமலை  மாவட்ட  மாணவர்களை   நான்  சென்று சந்திக்கவேண்டியிருந்தது.
எனக்கு   முன்பே  துயில்  எழுந்துவிட்ட  தம்பதியர்,  எனக்குரிய  காலை உணவையும்   தயாரித்து    தந்துவிட்டனர்.
எப்பொழுதும்   இன்சுலின்  ஊசியுடனும்,  மருந்து  மாத்திரைகளுடனும் அலையும்   நான்,  வெளியே  வித்தியாசமான  உணவுகளை  உட்கொண்டு சிரமப்பட்டுவிடக்கூடாது   என்ற  சகோதரவாஞ்சை  அவரிடம்  அந்த அதிகாலை   வேளையிலும்  இருந்திருக்கிறது.
திருகோணமலையில்   இறங்கி  குறிப்பிட்டதொரு  தொண்டு  நிறுவனத்தில் அந்த   காலை  உணவை  உண்டபொழுது,   அருகில்  நின்ற  அங்கு பணியாற்றும்  ஒரு  முதிய  ஊழியர், " சாப்பாட்டுடன்தான்  வந்திருக்கிறீர்களா ..?" என்று   கேட்டார்.
இது  எனது  கிழக்கிலங்கை  பாசமலர்  தங்கை   தந்துவிட்ட  உணவு  என்று பெருமிதம்  பொங்கச்சொன்னேன்.
எமது   கிழக்கு  மாகாணத்தில்  வருடம்தோறும்  சுமார்  இரண்டாயிரம் மாணவர்கள்   தமது  கல்வியை   இடைநிறுத்திக்கொள்வதாக  அண்மையில் லண்டன்   பி.பி.சி.யில்  ஒரு  தகவலை  கிழக்குப் பிராந்திய கல்விப்பணிப்பாளர்   தெரிவித்துள்ளார்.
அத்துடன்   ஐந்தாம்  தரபுலமைப்பரிசில்  பரீட்சையிலும்  வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக    செய்திகள்  வெளியாகின்றன.   இந்த  நிலை மாறவேண்டும்.    ஓய்வுபெற்ற  ஆசிரிய  பெருந்தகைகள்,  அங்கு வாழும் கலை,   இலக்கிய  படைப்பாளிகள்,   பேராசிரியர்கள்  மற்றும்  கல்விமான்கள் இந்தத்துயரத்தை   களைவதற்கு  ஆக்கபூர்வமாக  உழைக்க  முன்வரல் வேண்டும்.   ஏற்கனவே  பல  துறைகளில்  பின்தங்கியிருக்கும் கிழக்குப்பிரதேசம்   கல்வியில்  மேம்படல்  வேண்டும்.
அன்புத்தங்கை   திருமதி  சிவமணி  நற்குணசிங்கம்,  தமது  அறுபது  வயதில் ஓய்வுபெறும்   இக்காலப்பகுதியில்  எமது  மாணவர்  சமுதாயத்திற்காக  தமது   ஓய்வு காலத்திலும்  ஏதேனும்  வழியில்  உதவமுன்வரல்  வேண்டும்.
கல்விக்கு   அழிவில்லை.   மாணவர்கள்தான்  எமது  எதிர்காலம். ஆசிரியர்களும்   அதிபர்களும்தான்  அவர்களுடன்  அதிகநேரத்தை செலவிடுபவர்கள்.    எனவே  கல்வியும்  சொந்தம் போன்றது.
சொந்தம்  எப்பொழுதும்  தொடர்கதைதான்.
திருமதி   சிவமணி  நற்குணசிங்கம்  அவர்களுக்கும்  பெரிய நீலாவணை விஷ்ணு   மகா  வித்தியாலயத்திற்கும்  எனது  மனமார்ந்த  வாழ்த்துக்கள்.

---0---